எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, September 02, 2012

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் 9


சுரதானிக்கு அந்த அழகிய விக்ரஹம் மிகவும் பிடித்துப்போய்விடவே, அதனுடனேயே தூங்கி, விளையாடி, உணவு உண்டு என ஒரு நிமிடமும் அதை விட்டு அகலாமலே இருந்து வந்தாள்.  இங்கே கரம்பனூரில் இருந்த நம் நாட்டியப் பெண்மணிக்கோ அரங்கனைத் தொடர்ந்து சென்றதில் அவன் எங்கே போயிருக்கிறான் என்பதைக்கண்டு பிடிக்க முடிந்தது.   கடும் முயற்சிகள் எடுத்து அந்தப் புரத்துக்குள் நுழைந்து அரங்கனைச் சீராட்டிப் பாராட்டும் சுரதானியையும் பார்த்துவிட்டாள்.  அவளிடமிருந்து அரங்கனை எப்படி மீட்பது?  ஆனால் அவன் திரும்ப அரங்கம் வரும் வழியென்ன?? எதுவும் புரியவில்லை அவளுக்கு.  திரும்ப ஸ்ரீரங்கம் சென்றால் தவிர எதுவும் இயலாது எனப் புரிந்தது அவளுக்கு.  ஆகவே மீண்டும் எப்படியோ அந்தப்புரத்திலிருந்து வெளி வந்து ஸ்ரீரங்கத்தை அடைந்து விட்டாள்.  “பின் சென்ற வல்லி”  என்னும் பெயரால் அழைக்கப்படும் அவள், கோயிலில் சம்பந்தப் பட்டவர்களுக்கு அரங்கனின் இருப்பிடத்தைத் தெரிவித்தாள்.

அனைவரும் கலந்து ஆலோசித்தனர்.  அரங்கனை எவ்வாறேனும் திரும்பக் கொண்டுவர வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.  சும்மாப் போய்க் கேட்டால் சுல்தான் கொடுக்க மாட்டான்.  ஆகவே அவனை எவ்வாறேனும் கவர்ந்து அவன் மனதை மாற்ற வேண்டும்.  அதனால்  நன்றாய் ஆடிப் பாடக் கூடியவர்களாக சுமார் அறுபது பேரைத் தேர்ந்தெடுத்தனர்.  அவர்களுக்குப் “பின் சென்ற வல்லி “வழிகாட்ட அனைவரும் தில்லி போய்ச் சேர்ந்தனர்.  பெரிய கோஷ்டியாக வாத்திய முழக்கங்களுடன் தெற்கே இருந்து ஒரு நடனகோஷ்டி வந்திருப்பதை அறிந்த சுல்தான் தன் அவைக்கு அவர்களை வரவழைத்தான்.  அவர்கள் எதிர்பார்த்ததும் இது தானே!  மன்னன் சபையில் ஆடிப் பாடி அவன் மனம் மகிழும் வண்ணம் அவன் கண்களுக்கும், மனதுக்கும் விருந்து படைத்தனர்.  மன்னன் உண்மையாகவே அவர்கள் திறமையில் மனம் மகிழ்ந்தான்.  ஆகவே அவர்களுக்கு வேண்டிய பரிசில்களைக் கொடுப்பதாக மனப்பூர்வமாக அறிவித்தான்.  ஆஹா, இது, இது தானே அவர்கள் எதிர்பார்த்ததும்.  அவர்கள் தங்களுக்கு வேறெதுவும் வேண்டாம் எனவும், அழகிய மணவாளரைத் திரும்பக் கொடுத்தால் போதும் எனவும் தெரிவித்தனர்.  சுல்தான் அவர் இங்கிருந்தால் தாராளமாய் எடுத்துச் செல்லுங்கள் எனக் கூற, அவர்களோ அந்தப்புரத்தில் இளவரசியோடு இருப்பதைக் கூறினார்கள்.

அனைவரையும் விசாரித்த சுல்தான், தன் மகளிடமிருந்து அந்த விக்ரஹத்தைப் பிரிப்பது கஷ்டம் என உணர்ந்தவனாக அவளைத் தூங்க வைத்துவிட்டு எடுத்துச் செல்லுமாறு கூறிவிட்டான்.  அவளோ விஷயம் ஒரு மாதிரியாகப் புரிந்து கொண்டு தூங்க மறுத்தாள்.  இந்த நடன கோஷ்டியே பல்வேறுவிதமான தாலாட்டுக்களையும் பாடி அவளைத் தூங்க வைத்தது.  அவள் நன்றாய்த் தூங்கியதும் அழகிய மணவாளரைத் தூக்கிக் கொண்டு ஸ்ரீரங்கம் நோக்கிப் பறந்தனர்.  ஆனால் சுரதானியோ!  மிகவும் மோசமான நிலையில் ஆழ்ந்தாள்.  மறுநாள் காலை எழுந்து பார்த்தால் அவள் நேசித்த அழகிய மணவாளரைக் காணவில்லை.  மனம் வருந்தி எழுந்து குளிக்காமல், உணவு உண்ணாமல், உடைமாற்றாமல் அழுது கொண்டே இருந்தாள்.  சுல்தானுக்கு மகளின் மோசமான நிலை தெரிவிக்கப் பட்டது.  தன் மகளைப் பல விதங்களிலும் தேற்றிப் பார்த்தான்.  அவளோ மனம் மாறுவதாக இல்லை.  அந்த அழகிய மணவாளரையே தான் மணந்து கொள்ளப் போவதாக வேறு சொல்லிவிட்டாள்.  தன்னையும் அவரோடு அனுப்பி வைக்குமாறு வேண்டினாள்.  அவளின் அவல நிலையைப் பொறுக்க முடியாத சுல்தான், சில வீரர்களின் பாதுகாப்போடு தன் மகளையும் அழகிய மணவாளரைப்பின் தொடர்ந்து செல்லும்படி ஆணையிட்டான்.  முன்னால் சென்று கொண்டிருந்தவர்களுக்குத் தங்களை சுல்தானின் ஆட்கள் பின் தொடர்வது தெரிந்து போய்விட்டது.  ஒரு சிலர் விக்ரஹத்தை எடுத்துக் கொண்டு வழியிலேயே மறைந்தனர்.  மற்றவர் ஸ்ரீரங்கம் அடைந்தனர்.  சுரதானியும் பின் தொடர்ந்தாள்.

ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்த சுரதானியோ அங்கே கோயில் கதவுகள் அடைக்கப்பட்டிருந்ததைக் கண்ணுற்றாள்.  அவளுடன் வந்த வீரர்கள் தாங்கள் சென்று விசாரித்து வருவதாகக் கூறிச் செல்லக் கோயில் வாசலிலேயே காத்திருந்தாள் சுரதானி.  அங்கே அழகிய மணவாளர் இல்லை என்னும் செய்தியைக் கொண்டு வந்தனர் வீரர்கள்.  அவ்வளவு தான்.  அந்த இடத்திலேயே மயக்கம் போட்டு விழுந்த சுரதானியின் உயிரும் அக்கணமே பிரிந்தது.  அவளுடைய உடல் மட்டும் அங்கே கிடந்ததே தவிர உயிர் அரங்கனுடன் இரண்டறக்கலந்தது.  அவளையும் ஒரு நாச்சியாராக அன்று முதல் மக்கள் வழிபட ஆரம்பித்தனர்.  முஸ்லீம்கள் உருவ வழிபாடு செய்வதில்லை என்பதால் துலுக்க நாச்சியார் சந்நிதியில் விக்ரஹங்கள் எதுவும் இருக்காது.  ஒரு ஓவியம் மட்டுமே இருக்கும்.  தினம் காலை துலுக்க நாச்சியாருக்காக அரங்கன் லுங்கி கட்டிக் கொண்டு ரொட்டி சாப்பிடுகிறார்.  இப்போ அரங்கன் கதி என்னனு பார்ப்போம்.

வழியிலே மறைந்தவர்கள் அரங்கன் விக்ரஹத்தைத் திருப்பதியிலே மறைத்து வைத்ததாகவும், பின்னால் விஜயநகர சாம்ராஜ்யத்தின் ஆட்சியில் திரும்ப ஸ்ரீரங்கம் வந்ததாகவும் பாரதீய வித்யாபவன் வெளியீடான புத்தகங்கள் இரண்டிலும் காணப் படுகிறது.  இந்தச் சமயத்திலே தான் அரங்கனைத் திருப்பதியில் மறைத்து வைத்ததாகச் சிலர் சொல்கின்றனர்.  அப்படி மறைத்து வைக்கப்பட்ட அரங்கனைத் தான் அறுபது ஆண்டுகள் கழித்து மீட்டதாகவும் சொல்கின்றனர்.  ஆனால் ஆதாரபூர்வமான தகவல்களோ மாலிக்காபூருடன் சென்ற அரங்கன் திரும்பி  வந்து விட்டதாகவும், அதன் பின்னர் வந்த உல்லூகான் படையெடுப்புச் சமயத்திலே தான் அரங்கன் பல ஊர்களுக்கும் சென்று  ஒளிந்திருந்ததாகவும், அதன் பின்னர் கடைசியில் திருப்பதியில் ஒளித்து வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறுகின்றனர்.  வேதாந்த தேசிகர் ஆலோசனையின் பேரில் பிள்ளை உலகாரியர் தென்னாட்டுக்கு எடுத்துச் சென்றதாய்க் கூறுகின்றனர்.  இதற்கான கல்வெட்டுக்கள் ஸ்ரீரங்கம் கோயிலில் இருப்பதாகவும், அவை மறைக்கப்பட்டு வேறு சில அறிவிப்புப் பலகைகள் வைக்கப் பட்டிருப்பதாகவும் அறிகிறோம்.  இது கோயிலொழுகிலும் இப்படியே சொல்லப்பட்டிருக்கிறது.  நாம் இப்போதைக்கு மாலிக்காபூரைப் பார்த்துக் கொண்டோம்.  மற்ற விஷயங்களுக்கு ஒவ்வொன்றாய் வரப் போகிறோம்.  அதுக்கு முதலில் நாம் ஆதிநாயகப் பெருமான் கோயிலுக்குப் போகவேண்டும். 

மேற்கண்ட தகவல்கள் உதவி:  திரு ஹரிகி ஸ்கான் செய்து அளித்த பாரதீய வித்யாபவன் வெளியீடான ஸ்ரீரங்கம் கோயில் பற்றிய தகவல்கள் அடங்கிய புத்தகம் திரு தாஸ் அவர்களால் எழுதப் பட்டது   மற்றும் திரு தவே அவர்களால் எழுதப் பட்ட புத்தகத்தின் ஸ்கான் செய்யப் பட்ட பக்கங்கள். 

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை விவரங்கள் அறிந்தேன்... பதிவாகிப் பகிர்ந்து கொண்டதற்கு ரொம்ப நன்றிங்க...

ஸ்ரீராம். said...

//முன்னால் சென்று கொண்டிருந்தவர்களுக்குத் தாங்கள் பின் தொடர்வது தெரிந்து போய்விட்டது.//

தங்களை யாரோ பின்தொடர்கிறார்கள் என்பது தெரிந்து விட்டது.

ஏன் இரு வேறு கருத்துகள் [மாலிக்காபூர், உல்லூகான்] தென்படுகின்றன என்றும் எழுதுங்கள். விவரங்கள் அலைந்து திரிந்து எடுத்து தொகுத்து, பிரித்து, வரிசைப் படுத்திக் கொடுக்கிறீர்கள். சிரமமான காரியம். நன்றி.

Geetha Sambasivam said...

வாங்க திண்டுக்கல் தனபாலன், தொடர்ந்து வந்து உற்சாகம் அளிப்பதற்கு நன்றி.

Geetha Sambasivam said...

வாங்க ஸ்ரீராம், வார்த்தைகள் விடுபட்டிருக்கின்றன. :))) திருத்திட்டேன். சிரமம் ஒண்ணும் இல்லை. எனக்குச் சரித்திரத்தில் ஈடுபாடு உள்ளதால் தேடிப் பிடித்துத் தொகுப்பதில் உற்சாகமாகவே உள்ளது. நன்றி.

வல்லிசிம்ஹன் said...

உங்கள் உழைப்பு இங்கே பதிவாகிறது. எளிமையாக எழுதுவதால் புரிந்து கொள்ளமுடிகிறது.
உடல் நலத்தைப் பற்றியும் கவலைப் படாமல் நீங்கள் எழுதுவது ரொம்ப நெகிழ்ச்சியாக இருக்கிறது.