எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, August 29, 2012

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் 8


மன்னனால் ஆசீர்வதிக்கப்பட்ட வீரபாண்டியன் அரியணை ஏறியதை சுந்தர பாண்டியனால் சகிக்க முடியவில்லை.  இருவருக்கும் சண்டை மூண்டது.  வீர பாண்டியனுக்கோ படைபலம் இருந்தது.  சுந்தரபாண்டியன் செய்வது என்னவெனத் தெரியாமல் தவித்தான்.  அப்போது அவன் செய்த மாபெரும் தவறு தான் தென்னாட்டுக் கோயில்களுக்குப் பல வருடங்கள் பிரச்னைகள் ஏற்படக் காரணம் ஆயிற்று.  ஆம்; நாடாளும் ஆசையில் தன் பிரதிநிதிகளை டில்லிக்கு அனுப்பி சுல்தானின் உதவியைக் கோரினான் சுந்தரபாண்டியன்.  வயதில் சுந்தரபாண்டியன் இளையவன் ஆனால் அவனே பட்டமகிஷிக்குப் பிறந்த பட்டத்து இளவரசன்.  வீர பாண்டியனோ வயதில் முதிர்ந்தவன் ஆனால் அவன் ஆசைநாயகியின் மகன்.  குலசேகரோ வீரபாண்டியனை ஆட்சி செய்ய வைத்துவிட்டுச் சென்று விட்டான்.  பாண்டிய நாடு இரண்டு பட்டது.  உள்நாட்டுச் சண்டைகள் ஏற்பட்டன.  இந்தச் சண்டைகள் குறித்த மேலதிகத் தகவல்கள் தேடினேன்.  மீண்டும் பார்க்க வேண்டும்.

அப்போது டில்லி சுல்தானாக அலாவுதீன் கில்ஜி ஆண்டு வந்தான்.  அவனால் சிறைப்பிடிக்கப்பட்ட,  சந்த்ராம் என்னும் அலி, முஸ்லீமாக மதமாற்றம் செய்யப் பட்டு மாலிக்காபூர் என்னும் பெயருடன் சுல்தானின் படையின் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தான்.  பாண்டியன் உதவி தேடி வந்ததும், ஏற்கெனவே தெற்கு நோக்கி வந்து வாரங்கல் வரையிலும் தன் பலத்தைக் காட்டிச் சென்றிருந்த மாலிக்காபூர் உடனடியாக சுந்தர பாண்டியன் உதவிக்கு வந்தான்.  மாலிக்காபூரின் பெரும்படைக்கு முன்னர் தன்னால் எதுவும் செய்ய இயலாது என்பதைப் புரிந்து கொண்டிருந்த வீரபாண்டியனோ காடுகளுக்குள் ஒளிந்து கொண்டு மறைந்து இருந்து தாக்குதல் செய்தான்.  வீர பாண்டியன் போசளரின் கண்ணனூர்க் கொப்பம் செல்ல அங்கிருந்த படை வீரர்களில் பாதிப் பேர் முஸ்லீமாக இருக்கவே அவர்களும் மாலிக்காபூருடன் சேர்ந்து கொண்டு வீரபாண்டியனை எதிர்க்கவே அவன் தில்லைச் சிதம்பரம் சென்று அங்கே ஒளிந்து கொண்டான்.   அவனைப் பின் தொடர்ந்து வந்த மாலிக்காபூர் தில்லைப் பொன்னம்பலத்தை அடியோடு பெயர்த்து எடுத்து எரியூட்டி மகிழ்ந்தான்.  ஆனாலும் வீரபாண்டியன் அவன் கைகளில் சிக்காமல் போகவே மீண்டும் மதுரை நோக்கித் திரும்பினான்.  திரும்பும் வழியில் கண்களில் பட்ட கோயில்களை எல்லாம் ஆத்திரம் கொண்டு தாக்கினான்.  அவன் தாக்கிய கோயில்களில் ஸ்ரீரங்கம் கோயிலும் ஒன்று.

கோயிலினுள் நுழைய அவனால் இயலவில்லை என ஒரு சாராரும், நுழைந்துவிட்டான் என இன்னொரு சாராரும் கூறுகின்றனர்.  ஆனால் கோயிலின் விக்ரஹங்கள் கொள்ளை அடிக்கப் பட்டன.  அவற்றில் ஸ்ரீரங்கம் கோயில் உற்சவர் ஆன அழகிய மணவாளரும், உபய நாச்சியார்களோடு கொள்ளை அடிக்கப் பட்டு டில்லி நோக்கிச் சென்றன.  ஸ்ரீரங்கம் கோயிலை இடித்துப் பாழாக்கினான்.  இத்துடன் தன் வெறி அடங்காத மாலிக்காபூர் மதுரை நோக்கிச் சென்றான்.  பாண்டிய நாடு பெரும் செல்வ வளத்தோடு இருந்து வந்ததால் பாண்டிய நாட்டுக் கருவூலத்தைக் கொள்ளை அடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு சென்றான்.  தான் அழைத்த சுல்தான் படையினால் தனக்கு மட்டுமல்லாமல் மொத்தப் பாண்டிய நாட்டுக்கே தீங்கு ஏற்பட்டதைக் கண்ட சுந்தர பாண்டியனோ  மாலிக்காபூர் திரும்பவும் மதுரைக்கு வருவதைத் தெரிந்து கொண்டதும், பாண்டிய நாடுப் பெரும் பொக்கிஷங்களோடு மதுரையை விட்டுச் சேர நாட்டுக்கு ஓடி விட்டான்.  (அப்போது பத்மநாப சுவாமி கோயிலில் அவன் ஒளித்து வைத்த பாண்டி நாட்டுப் பொக்கிஷங்களே இப்போது கிடைத்திருப்பதாக ஒரு கூற்று. அதற்கான ஆதாரங்களையும் சொல்கின்றனர்.  ஆனால் நமக்கு இந்தக் கதை இப்போது தேவை இல்லை.)   பாண்டியனும் கிடைக்காமல், பொக்கிஷமும் கிடைக்காமல் ஏமாந்த மாலிக்காபூர் மதுரையைத் தீக்கிரையாக்கியதோடு மீனாக்ஷி கோயிலுக்கும் எரியூட்டினான்.   சுந்தரபாண்டியனின் சிற்றப்பன் மாறவர்மன் விக்கிரமபாண்டியனால் எதிர்ப்பு நேரிடவே  அவனைச் சமாளிக்க முடியாமல் மாலிக்காபூர் அங்கிருந்து ராமேசுவரம் ஓடி அங்கும் கோயிலைச் சூறையாடி எரித்து மக்களைக் கொன்று, அவர்கள் பொருட்களைக் கவர்ந்து சேதம் விளைவித்துப்பின்னர் தென்னாட்டில் கவர்ந்த பொருட்களுடன் 512 யானைகள், 5,000க்கும் மேற்பட்ட குதிரைகள், 500 மணங்கு எடையுள்ள தங்க ஆபரணங்கள், விலைமதிக்க முடியா வைரங்கள், முத்துக்கள், மாணிக்கங்கள், மரகதச் சிலைகள் போன்றவற்றைச் சுல்தானுக்குக் காணிக்கையாக எடுத்துச் சென்றான்.  கூடவே நம் அழகிய மணவாளரும் சென்றார்.

இங்கே ஸ்ரீரங்கத்திலோ கலவரம், வேதனை, கோயிலை எப்படியாவது திருப்பணிகள் செய்து புதுப்பித்துவிடலாம்.  ஆனால் அழகிய மணவாளர் இல்லாமல் உற்சவங்கள் நடப்பது எங்கே?  என்ன செய்வது?  ஶ்ரீரங்கம் அருகே உள்ள உத்தமர் கோயிலில் எம்பெருமானுக்காகத் தினம் தினம் ஆடிப் பாடி மகிழ்விக்கும் பெண்ணொருத்தி இருந்தாள்.  அவளோ அரங்கனைப் பார்க்காமல் சாப்பிடுவதில்லை.  அரங்கனைக் காணாமல், அவன் முன்னே ஆடிப் பாடாமல் அவளால் எதுவும் செய்ய முடியவில்லை.  அரங்கன் போன வழியைத் தேடிக் கொண்டு அவளும் கிளம்பினாள்.  வழியெங்கும் விசாரித்துக் கொண்டு டில்லிப்படை சென்ற திசை நோக்கி அவளும் சென்றாள்.   விக்ரஹமும் டில்லி போய்ச் சேர்ந்தது.  தனக்கு மாலிக்காபூர் கொண்டு வந்த விலை மதிக்க முடியாப்பொருட்களைப் பார்த்து மகிழ்ந்த சுல்தான் அனைத்தையும் வீரர்களுக்குப் பிரித்து கொடுத்தான். சுல்தானின் மகள் சுரதானி என்பவள் அப்போது அங்கே வந்து அழகிய மணவாளரைப் பார்த்தாள். அந்த விக்ரஹம் அவளுடன் பேசுவது போல் தோன்றியது அவளுக்கு.  அந்த விக்ரஹத்தைத் தனக்கு வேண்டுமெனக் கேட்டு வாங்கிக் கொண்டு அந்தப்புரத்துக்கு எடுத்துச் சென்றாள்.நன்றி: தமிழ் விர்சுவல் பல்கலைக்கழகம்.

9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி...

தொடர வாழ்த்துக்கள்...

ஸ்ரீராம். said...

மாலிக்காபூர் விவரங்கள் சமீபத்தில் காவல் கோட்டம் புத்தகத்திலும் படித்தேன். மனதில் நிறுத்திக் கொள்ளக் கடினமான விவரங்கள்! சேர நாட்டுக் கோவிலில் வைத்த பொக்கிஷங்கள் என்று படித்ததைப் பற்றித்தான் நானும் முன்னர் கேட்டேன்!

ஸ்ரீராம். said...

//..அது சரி, ஸ்ரீராம், ரங்கனை வந்து பார்க்கவே இல்லையே??? பிசி?????? :))))//

ஏற்கெனவே வந்திருக்கிறேனே.... எதைச் சொல்கிறீர்கள் என்று புரியவில்லையே...!

Geetha Sambasivam said...

நீங்க வந்ததையும் கமென்ட் கொடுத்ததுமே கவனம் இல்லை ஸ்ரீராம், வரலைனு நினைச்சுக் கேட்டிருக்கேன். மன்னிக்கவும். :)))) ஹிஹிஹி, அ.வ.சி.

Geetha Sambasivam said...

நன்றி திண்டுக்கல் தன்பாலன் அவர்களே, உங்க பதிவுக்கு நிச்சயமாய் நாளைக்கு. சரியா?

வல்லிசிம்ஹன் said...

மாலிக்காபூரை நினைத்தால் மனம் பொங்குகிறது. எத்தனை நகர்களை எரித்திருக்கிறான்.:(
என்ன மன நோயோ!
அற்புதமாக எழுதி வருகிறீர்கள் கீதா. வரலாறு சிறக்கிறது.
ஸ்ரீராமானுஜர் கொண்டுவந்த செல்லப் பிள்ளை இந்த மணவாளன் தானோ

Geetha Sambasivam said...

ராமாநுஜர் கொண்டு வந்த செல்வப் பிள்ளை மேல்கோட்டையிலேயே இருக்கிறார் வல்லி. அதைப் பற்றியும் தகவல்கள் திரட்டுகிறேன். மாலிக்காபூரை வரவழைத்ததே நம் செந்தமிழ்நாட்டு அரசர்கள் தானே! யாரை நொந்து கொள்வது! :(((((

jayanth Srinivasamurthy said...

Dear Madam,

I was residing at Srirangam for 3 years, during that time I heard that Vibhishana is doing Uchikala pooja that is why temple is closed during that time. And Ranganatha vigraha which you are seeing is not original and the one which worshipped by Lord Rama is down below the what we are seeing.

Kindly confirm this information.

Thanks & Regads

S Jayanth
Hyderabad

Geetha Sambasivam said...

Welcome Jayanth, Yes, I knew about Vibishana and his Uchikala Poojai. But did not know about the other one. Will enquire about it. Thanks for the info.