எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Thursday, December 13, 2012

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் 15

ஶ்ரீரங்கம், ரங்கநாதர் கோயிலின் விமானம் இருட்டில் காட்சி அளிக்கும் கோலம் இது. தீபாவளிக்குப் போனப்போ பெரிய பெருமாளைப் பார்க்க முடியலை.  அதனாலும் இங்கே இப்போது வைகுண்ட ஏகாதசிக்காக விழாக் கோலம் பூண்டிருப்பதாலும், அப்புறமாப் பெரிய பெருமாளைப் பார்ப்பதே ரொம்பக் கஷ்டம்னு எல்லாரும் சொன்னதாலும் நேத்திக்கு மத்தியானம் ஒன்றரை மணி அளவில் வீட்டிலிருந்து கிளம்பினோம்.  ஶ்ரீரங்கம் கோயில் சேவை நேரங்கள் கொஞ்சம் வித்தியாசமானவை.  அது குறித்துத் தனியாக அட்டவணை தருகிறேன். புதுசா வரவங்களுக்குப் பயன்படும்.  ஆனால் மத்தியானம் ஒன்றரை மணியில் இருந்து மாலை ஆறு வரை பெரிய பெருமாள் சேவை சாதிக்கிறார்.  வெயில், கூட்டமும் உள்ளே போனது அங்கேயே காத்திருக்கும்.  ஆகவே கூட்டமும் இருக்கும் தான்.  ஆனால் இந்தச் சமயம் போனாலேயே எல்லா சந்நிதியும் பார்க்க முடியும் என்பதோடு தாயாரையும் சேர்த்துத் தரிசிக்கலாம்.  தாயார் சந்நிதி மூன்று மணிக்குத் தான் திறக்கிறார்கள்.  ஆனாலும் பெரிய பெருமாளைப் பார்த்துக் கொண்டு, சக்கரத்தாழ்வார், மேலப் பட்டாபிராமர்,  போன்றோரையும் தரிசித்துக் கொண்டு போனோமானால் மூன்று மணி ஆகித் தாயார் சந்நிதி திறந்து தாயார் இலவச சேவையே தருவாள்.

நேத்திக்கு நாங்க பெரிய பெருமாளைப் பார்க்கப்போனப்போ ஐம்பது ரூபாய்ச் சீட்டு எடுத்துத் தான் போனோம்.  சுமார் நூறு, நூற்றைம்பது பேர் இருந்தனர்.  ஆனால்  இலவச சேவைக்குக் கூட்டம் நெரிசல் தாங்கலை.  அதிலே ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகம்.  உள்ளே  சந்தனு மண்டபம் தாண்டி குலசேகரன் படி அருகே எல்லாரும் ஒன்றாகவே உள்ளே செல்ல வேண்டி இருப்பதால் அவங்க முண்டி அடித்துக் கொண்டு போயிடறாங்க.  இருந்தாலும் சுமார் முப்பது முதல் நாற்பது நிமிஷம் காத்திருந்திருப்போம்.  நேற்றுப் பெருமாளின் அடியிலிருந்து முடி வரை நல்ல தரிசனம் என்றாலும் திருப்பதியிலே ஜரகண்டி என்பது போல் இங்கே சொல்லாமல் பிடித்துத் தள்ளவென்றே ஒரு பட்டரை நிறுத்தி இருக்காங்க.  எல்லாரையும் பிடிச்சுத் தள்ளிட்டு இருக்கார். :(  இதுவே கேரளா என்றாலோ, கர்நாடகா என்றாலோ மக்கள் இப்படிக் கஷ்டப் பட வேண்டாம் என்பதும் மனதில் உறைத்தது.  என்ன செய்ய!  செந்தமிழ் நாட்டில் பிறந்துட்டு இதுக்கெல்லாம் ஆசைப் படலாமா?  சரி, சரி வைகுண்ட ஏகாதசி பத்திச் சொல்ல வந்துட்டு, என் சொந்த, சோகக் கதையைச் சொல்றேனே!

சுமார் 21 நாட்கள், நடைபெறும் இந்த விழா பகல் பத்து, இராப்பத்து என இரு பிரிவாக நடைபெறும்.  டிசம்பர்-ஜனவரி மாதங்களுக்கு இடையில் அதாவது மார்கழி-தை மாதங்களுக்கு இடையில் நடைபெறும்.  தீபாவளி கழித்து ஒரு நல்ல நாளில் தென்னை மரத்தின் அடித்தண்டினை இந்த விழாவிற்கான முதற்கம்பமாக நடுவார்கள்.  இந்தப் பந்தல் முழுதும் அமைத்து முடியும் போது 47 கம்பங்கள் இருக்கும்.  மூன்றாம் பிராகாரத்தின் வடகிழக்கு வாசலில், ஆயிரக்கால் மண்டபத்தின் முன்னே அமைக்கப்படும்.  இவற்றோடு சேர்த்தே ஆயிரக்கால் மண்டபத்திற்கு ஆயிரம் கால்கள் என்கிறார்கள்.  இது குறித்து தகவல் விசாரித்துச் சொல்கிறேன்.  அம்மன் சந்நிதிக்கு அருகே இருக்கும் இரண்டாம் பிராகாரத்தின் வடக்கு வாயில் தான் பரமபத வாசல் என அழைக்கப் படுகிறது.  ஆண்டு முழுதும் மூடி இருக்கும் இது வைகுண்ட ஏகாதசி அன்று மட்டுமே திறக்கப் படும். இந்த வடக்கு வாயில் வழியாகவே நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து சிம்ம கதியில் புறப்படுகிறார்.

தொடர்ந்து அதிகாலை நாலே முக்கால் மணியளவில் பரமபத வாசல் திறக்கப்பட்டு நம்பெருமாள் ஆயிரக்கால் மண்டபத்தில் உள்ளிருக்கும் திருமாமணி மண்டபத்திற்கு எழுந்தருளுவார்.  அதற்கு முன்னோடியாக பகல் பத்துத் திருநாள் நாளை டிசம்பர் பதினான்காம் தேதி இந்த வருடம் துவங்குகிறது.  இன்றிரவு பூர்வாங்கமாக ஸ்ரீரங்கநாதரின் மூலஸ்தானத்தில் திருமங்கையாழ்வாரின் திருநெடுந்தாண்டகம் பாடப்படும்.  பின்னர் பகல்பத்து உற்சவம் ஆரம்பிக்கும்.  14-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை நடக்கும் பகல் பத்து உற்சவங்களில் தினமும் நம்பெருமாள் அதிகாலை மூலஸ்தானத்தை விட்டுக் கிளம்பிக் கோயிலின் இரண்டாம் பிராகாரத்தில் உள்ள அர்ச்சுன மண்டபத்தில் சர்வாலங்கார பூஷிதராக சிறப்பு அலங்காரத்தில் அமர்ந்து சேவை சாதிப்பார்.

அரையர்கள் நம்பெருமாள் முன்னிலையில் திருமொழிப் பாசுரங்களைப் பாடி, ஆடி அபிநயித்துக் காட்டுவார்கள்.


தொடரும்.

6 comments:

ஸ்ரீராம். said...

இவ்வளவு விவரங்கள் எல்லாம் தெரியாது. இப்போதுதான் தெரிந்து கொள்கிறேன்.

Ranjani Narayanan said...

வைகுண்ட ஏகாதசிக்கு ஒரு முன்னோட்டம் உங்கள் பதிவு!
தெளிவான தகவல்கள்.

வல்லிசிம்ஹன் said...

இன்று ஆரம்பிக்கும் இராப்பத்து பகல் பத்து உத்சவ நிகழ்ச்சிகளை முடிந்தபோது பார்த்து,அரையர் சேவை பற்றியும் பார்த்துவிட்டு எழுதுமாறு வேண்டிக் கொள்கிறேன்.
வெகு அருமையான பகிர்வு கீதா.மன நிறைந்த நன்றி.

Geetha Sambasivam said...

வாங்க ஸ்ரீராம், வரவுக்கு நன்றி.

Geetha Sambasivam said...

நன்றி ரஞ்சனி.

Geetha Sambasivam said...

வாங்க வல்லி, இன்னிக்கு அரையர் சேவையும் பார்த்தாச்சு. நல்லவேளையா அங்கே கூட்டம் அதிகமா இல்லை. :))))