எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, December 18, 2012

ஸ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! வைகுண்ட ஏகாதசியும், அரையர் சேவையும்!


ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசித்திருவிழா மிகவும் பிரபலம் ஆனதாகும்.   சிதம்பரத்தில் இதே மார்கழியில் எப்படி திருவாதிரைத் திருவிழா பிரபலமோ அதே போல் ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசித் திருவிழா.  மார்கழி மாதத்தில் அமாவாசை கழிந்து வரும் சுக்லபக்ஷ ஏகாதசியே வைகுண்ட ஏகாதசி ஆகும்.  இவ்வருடம் கார்த்திகை மாதக் கடைசியில் அமாவாசை வந்ததால், மார்கழி மாதம் ஒன்பதாம் தேதியே வைகுண்ட ஏகாதசித் திருநாள் வருகிறது.  ஆகவே கார்த்திகை 28-ஆம் தேதியன்று இரவில் வைகுண்ட ஏகாதசிக்கு முன்னோட்டமாக கர்பகிரஹத்தில் திருநெடுந்தாண்டகம் ஆரம்பித்து நடைபெறும்.  பின்னர் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து சந்தனு மண்டபத்துக்கு எழுந்தருளுவார்.  அங்கேயும் திருநெடுந்தாண்டகம் அபிநயமும் வியாக்யானமும் நடைபெறும்.  இதை அரையர் சேவை என்பார்கள். 


இரு பகுதிகளாக நடைபெறும் திருநாளில் முதல் பத்து நாட்கள் பகல் பத்து என்றும், அடுத்த பத்து நாட்கள் இராப்பத்து என்றும் அழைக்கப்படும்.  முதல் திருநாளன்று நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து விருச்சிக லக்னத்தில் கிளம்பி அர்ச்சுன மண்டபம் வந்தடைவார்.  இந்த மண்டபம் கிளி மண்டபத்தை ஒட்டி மேலே ஏறிச் சென்றால் வந்தடையும்.  துலுக்க நாச்சியார் சந்நிதி இங்கே தான் இருக்கிறது.  இங்கே நம்பெருமாள் சர்வாபரண பூஷிதராகக்  காட்சி கொடுப்பார்.  இவருக்கு முன்னே அரையர்கள் முதலில் நம்பெருமாளைப் பிரதக்ஷிணம் வந்து வணங்கி உத்தரவு பெற்றுக் கொண்டு பின்னர் அவர் எதிரே நின்று கொண்டு பாசுரங்கள் பாடி வியாக்யானமும் செய்வார்கள்.  முதலாயிரத்தில் பல்லாண்டு முதல் இரு பாசுரங்களும், அதற்கேற்ற அபிநயமும், வியாக்யானமும், பெரியாழ்வார் திருமொழியின் 212 பாசுரங்களும் பாடப்படும்.

இதைத் தவிரவும் மூலஸ்தானத்தில் மார்கழி மாதம் முதல் தேதியில் இருந்து பெரிய பெருமாள் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கநாதர் முன்னிலையில் அரையர் சேவை திருப்பள்ளி எழுச்சியும், திருப்பாவைப் பாசுரங்கள்  பாடுதலும் நடைபெறும்.  மூலஸ்தானத்தில்  பெரிய பெருமாளுக்கு முத்தங்கி அணிவித்து சேவை நடைபெறும்.  கூட்டம் இப்போவே தாங்கலை. L இன்னிக்கு அரையர் சேவை பார்க்கலாம்னு கிளம்பிப் போனோம்.  உள்ளே நுழையவே பெரிய வரிசையாக மக்கள் கூட்டம்.  அப்புறமா அங்கிருந்த காவல்துறைப் பெண்மணியிடம் வரிசையில் நிற்க முடியாது எனக் கேட்டு வேண்டிக் கொண்டு ஒரு சிலரைத் தனியாக விட்டுக் கொண்டிருந்த வாயில் வழியே உள்ளே சென்றோம்.  மூலஸ்தானத்தில் பெரிய பெருமாளைச் சேவிக்க ஐம்பது ரூபாய்க் கட்டணத்திலேயே ஐநூறு பேருக்கும் மேல் நின்றிருந்தனர்.  ஆகவே பெரிய பெருமாளுக்கு இங்கிருந்தே வணக்கம் சொல்லிட்டு நேரேக் கிளி மண்டபம் நோக்கி நடையைக் கட்டினோம்.  அங்கிருந்து விமான தரிசனம் செய்யும் அர்ஜுன மண்டபத்துக்கு ஏறினோம்.  சிறிது தூரத்தில் நம்பெருமாள் சாய்ந்த கொண்டையோடு அழகாய் தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தார்.  அரையர்கள் அப்போது தான் நம்பெருமாளைப் பிரதக்ஷிணமாக வந்து உத்தரவு வாங்கிக் கொண்டு சேவையை ஆரம்பித்துக் கொண்டிருந்தார்கள்.  படம் எடுக்கலாமா எனத் தெரியவில்லை.  அங்கிருந்த கோயில் பணியாளரைக் கேட்டதுக்குச் சில பத்திரிகைக் காரர்களைத் தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை என்றார்.  செல்லில் எடுக்கலாமா என யோசித்தேன்.  அங்கிருந்து காவல் துறைப் பணியாளர் வேண்டாம்னு எச்சரித்தார்.  செல்லைப் பிடுங்கிடுவாங்கனு சொன்னார்.  ஆகவே அந்த யோசனையைக் கைவிட்டோம். L

ஆனால் சுற்றிச் சுற்றி வந்து நம்பெருமாளை நன்கு சேவித்துக் கொண்டோம்.  பின்னர் சிறிது நேரம் அரையர் சேவையைப் பார்த்துவிட்டுப் பின்னர் வீடு வந்தோம்.  பலத்த போலீஸ் பாதுகாப்பு, சோதனைகள், கெடுபிடி,  ஆங்காங்கே போக்குவரத்து மாற்றம்னு ஊரே விழாக்கோலத்தில் இருக்கிறது.  சிதம்பரத்திலும் ஆருத்ரா தரிசனம் சமயத்தில் கூட்டம் வெள்ளமாக இருந்தாலும் அங்கே தரிசனம் செய்ய ஏற்பாடுகள் நன்றாக இருந்தன.  மேலும் நடராஜர் வெளியே வரும் பாதையில் எல்லாம் மக்கள் ஒதுங்கி நின்று எவ்வளவு தொலைவில் இருந்தாலும் தரிசனம் செய்யும் வண்ணம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.  இங்கே கோயிலுக்குள்ளேயே நடப்பதால் கூட்டம் தாங்கவில்லை.   ஆனாலும் சமாளிக்கின்றனர்.   கோபுர வாசலைக் கடந்து உள்ளே நுழையும் வழி சிறிதாக இருப்பதால் அங்கே எப்போதும் நெரிசலாகவே இருக்கிறது.  

ஆழ்வார்கள் அனைவரும் பெருமாளுக்கு எதிரே பெருமாளை தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.  “கண்ணிநுண் சிறுத்தாம்பு” பாசுரத்திற்கான வியாக்யானம் அரையர் சேவையுடன் நாளை  பாடப் படும் எனத் தெரிகிறது.





12 comments:

கோமதி அரசு said...

நம்பெருமாள் சர்வாபரண பூஷிதராகக் காட்சி கொடுப்பார். இவருக்கு முன்னே அரையர்கள் முதலில் நம்பெருமாளைப் பிரதக்ஷிணம் வந்து வணங்கி உத்தரவு பெற்றுக் கொண்டு பின்னர் அவர் எதிரே நின்று கொண்டு பாசுரங்கள் பாடி வியாக்யானமும் செய்வார்கள். //

உங்கள் கண் காமிரா வழியாக தரிசனம் செய்து விட்டேன்.
ஸ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்து எல்லோரும் நலமாக இருக்க பிராத்தனை செய்து கொண்டேன்.

திருசெந்தூருக்கு சமீபத்தில் போய் இருந்தேன் எவ்வளவு கூட்டம் இருந்தாலும் உள்ளூர்காரர்கள் அவர்கள் வசிக்கும் தெருவைச் சொல்லி விட்டு வரிசையில் நிற்காமல் இரண்டு இரண்டு பேராய் நேராக போய் தரிசனம் செய்யலாம்.

அந்த வசதி மீனாட்சி, கோவில், ஸ்ரீரங்கம் எல்லாம் இருந்தால் நன்றாக இருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

அரையர் சேவை ஆச்சா!!கோமதி சொல்வது போல உங்கள் கண் வழியாக எல்லாவற்றையும் கண்டோம் கீதா. முத்தங்கி சேவையா பெருமாளுக்கு!எத்தனை அழகா இருந்திருப்பார்.சீனியர் சிடிசன் உரிமை திருப்பதியில் உண்டு.அதே போல இங்கேயும் செய்யலாம். எத்தனையோ லாம்'ல இதுவும் ஒண்ணு:)நன்றிமா.

Geetha Sambasivam said...

வாங்க கோமதி அரசு, வரவுக்கு நன்றி. பார்த்தால் பார்த்துக்கொண்டே இருக்கும் அழகு, நம்பெருமாள். அழகிய மணவாளர் என்றே தான் பெயர் அவருக்கு. ஊரெல்லாம் சுத்திட்டு வந்ததும் பெயர் மாறி இருக்கு! :))))

திருச்செந்தூர் விஷயம் புதுசா இருக்கே! நாங்க போனப்போ 500 ரூ டிக்கெட் வாங்கியும்,(நாலு பேர் போகலாம்) கஷ்டமாத்தான் இருந்தது. மீனாக்ஷியை சமீபத்தில் மதுரை போனப்போ பார்த்துட்டேன். :))))

Geetha Sambasivam said...

வாங்க வல்லி,முத்தங்கி சேவையே தான். நம்பெருமாள் ரத்னாங்கி. :)))

வல்லிசிம்ஹன் said...

இதப் பாருடா. முத்தும் ரத்தினமுமப் போட்டு மயக்குகிறாரோ ஐய்யா. அதான் கல்யாணப் பெண் மயங்கி நிற்கிறாள்:) இன்னும் 26 நாளில் கல்யாணம் நடத்துவார்களா கீதா.

வல்லிசிம்ஹன் said...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பங்குனி உத்திரம் திருமண நாள் என்று தெரியும்.

ADHI VENKAT said...

நேற்று அரையர் சேவையின் போது நாங்களும் இருந்தோம்..:)

நம்பெருமாள் சாய்ந்த கொண்டையும், ராக்கொடி வைத்த பின்னலுமாக அழகோ அழகு தான்..

முத்தங்கி சேவை இரண்டாம் தேதி வரை உள்ளதால் ஒருநாள் சென்று பார்க்க வேண்டும்.

ஸ்ரீராம். said...

விவரங்கள் படித்துக் கொண்டேன். எனக்கு இந்த விவரங்கள் எல்லாம் தெரியாது.

Geetha Sambasivam said...

கல்யாணம் இப்போவானு தெரியலை வல்லி, கேட்டுச் சொல்றேன். இன்னிக்குப் பெரிய பெருமாளை முத்தங்கி சேவையிலும் தரிசிச்சாச்சு! அடியிலிருந்து முடி வரை! :))))

Geetha Sambasivam said...

வாங்க கோவை2தில்லி,

நேத்திக்கு வீட்டில் விருந்தினர்கள், அதோடு ராத்திரி வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்குப் போக வேண்டி இருந்தது. அதனால் மோகினி அலங்காரம் பார்க்கலை. :))))

Geetha Sambasivam said...

வாங்க ஸ்ரீராம், வரவுக்கு நன்றி.

நெல்லைத்தமிழன் said...

இடுகையைப் படித்துவிட்டேன்.