எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, January 16, 2013

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம், வைகுண்ட ஏகாதசிச் சிறப்பு!


ஏகாதசி அன்று விருச்சிக லக்னத்தில் சிம்ம கதியில் பக்தர்களின் உற்சாக முழக்கங்களோடும், வாத்திய இசை முழக்கங்களோடும் மூலஸ்தானத்தில் இருந்து கிளம்பும் நம்பெருமாள் மதுரையின் ராணி மங்கம்மாள் அளித்த ரத்தின அங்கியில், பாண்டியன், கொண்டை, கிளிமாலையோடு புறப்படுகிறார்.  பெருமாளின் திருமேனியில் பனி விழாவண்ணம் துணிக்கூடாரம் பிடித்துக் கொண்டு வருவார்கள்.  சந்தனு மண்டபத்துக்கு முதலில் வரும் நம்பெருமாள் அங்கே சிறிது நேரம் இருந்து பக்தர்களின் வழிபாட்டை ஏற்றுக் கொண்டு பின்னர் வழியெங்கும் காத்து நிற்கும் பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்த வண்ணம் சேனை முதலியார் சந்நிதிக்கு வருவார்.  அங்கே அரங்கனின் திருவடியில் சமர்ப்பித்த மாலை சேனை முதலியாருக்குச் சமர்ப்பிக்கப் படுகிறது.  இதன் மூலம் தான் மீண்டும் மூலஸ்தானத்துக்கு எழுந்தருளும் வரை தன் அதிகாரத்தைச் சேனை முதலியாருக்கு மாற்றிக் கொடுக்கிறான் அரங்கன். பின்னர் பக்தர் கூட்டம் வெள்ளமாய்ப் பின் தொடரப் பரமபத வாசல் நோக்கி அரங்கன் ஊர்வலம் மெல்ல மெல்ல நகர்கிறது.

பரமபத வாசலை அரங்கனோடு சேர்ந்து கடப்பது அரியதான ஒன்றெனில் அவன் அந்த வாசல் வழியே வருகையில் எதிரே நின்று தரிசிப்பதும் சிறந்ததாகவே கூறப்படுகிறது.  நாழி கேட்டான் வாசல், கொடிமரம் போன்றவற்றைக் கடந்து நம்பெருமாள் திரை மண்டபம் வந்து சேர்கிறார்.  அங்கே யஜுர் வேதத்தின் எட்டாம் பிரச்னம் சாற்றுமறையாகும்.  அதைத் தொடர்ந்து மற்றவேதங்களும் சொல்கிறார்கள்.  வேதங்களைப் பெருமாளின் சுவாசமாகச் சொல்கின்றனர்.  பக்தர் வெள்ளத்தினூடே பரமபத வாசலுக்குப் பெருமாள் வந்து சேர்கிறார்.  பரமபத வாசலைத் திறக்க, அரங்கனின் ஆணை வேண்டும்.  ஆகவே சற்று நேரம் பக்தர்களோடு சேர்ந்து பரமனும் காத்திருக்கிறான்.  சிறிது நேரத்தில், பரமனின் ஆணை பிறப்பதாக ஐதீகப்படி ஆணை பிறந்ததும் பரமபத வாசலின் மணிகள் கணீர், கணீர் என ஒலிக்கக் கதவுகள் திறந்து கொள்கின்றன.  கூடி இருக்கும் கூட்டம் ரங்கா, ரங்கா, கோவிந்தா, கோவிந்தா என கோஷம் போட எட்டுத் திசைகளும் அதிரும் வண்ணம் வாத்திய முழக்கங்கள் செய்யப் பரமன் தன் அடியார் கூட்டத்தோடு பரமபத வாசலை அணுகினான்.  அந்த அதிகாலை வேளையில் குறிப்பிடப் பட்ட முஹூர்த்த நேரமான 4-45 மணி அளவில் தன் பக்தர்களுக்கு அருள வேண்டிப் பரமபத வாசல் வழியே ஆயிரங்கால் மண்டபம் அடைகிறான் நம்பெருமாள்.

அரையர் சேவையும் தொடர்ந்து நடைபெற, ஆயிரங்கால் மண்டபம் சென்றடைந்த அரங்கன் அங்கே பரமபதத்தின் திருமாமணி மண்டபத்தை நினைவு கூரும் வண்ணம் கட்டப்பட்ட பூலோகத் திருமாமணி மண்டபத்தில் ஆஸ்தானம் இருக்கிறான்.  மீண்டும் அரையர் சேவை நடைபெறும்.  வைகுண்ட ஏகாதசி அன்று நள்ளிரவு வரை அரங்கன் தரிசனம் திருமாமணி மண்டபத்தில் பக்தர்களுக்குக் கிடைக்கும்.  யோக நித்திரையிலேயே என்றென்றும் இருக்கும் பரமன் தன் பக்தர்களுக்காக வேண்டி இன்று தன் நித்திரையை ஒழித்து ஓய்வு, ஒழிச்சல் இல்லாமல் வீற்றிருந்து அரையர் சேவை, முதலானவற்றைக் கேட்டுக் கொண்டும், நடு நடுவே தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு அருள் பாலித்துக் கொண்டும் ஓய்வில்லாமல் தரிசனம் தந்தருளுவான்.

அதன் பின்னரே மூலஸ்தானம் சென்று சேர்வான். வைகுண்ட ஏகாதசி முழுநாளும் அதிகாலை நான்கு மணியில் இருந்து இரவு பத்து மணி வரைக்கும் பரமபத வாசலும் பக்தர்கள் கடப்பதற்காக வேண்டித் திறந்திருக்கும்.  அதன் பின்னர் அடுத்த பத்து நாட்களுக்கு இராப்பத்து உற்சவம் நடைபெறும்.  அதன் நிறைவு நாளன்று நம்மாழ்வாருக்கு மோக்ஷம் கொடுக்கும் நிகழ்வு நடைபெறும்.  அதைக் குறித்து அடுத்துப் பார்ப்போம்.



6 comments:

வல்லிசிம்ஹன் said...

இவ்வளவு விவரமாக நடக்கும் வைபவங்கள். கண்ணால் பார்ப்பது போல உணர்வு கிடைக்கிறது கீதா.
நம்மாழ்வார் மோக்ஷம் காத்திருக்கிறேன்.

Ranjani Narayanan said...

வைகுண்ட ஏகாதசிக்கு போக முடியவில்லையே என்ற குறை உங்கள் பதிவு போக்குகிறது.
ஒருமுறை நம்மாழ்வார் மோக்ஷம் சேவித்திருக்கிறோம்.
பக்தர்கள் அனைவர் கண்ணிலும் கண்ணீருடன் சேவித்தது மறக்க முடியாத அனுபவம்.

உங்கள் அடுத்த பதிவுக்குக் காத்திருக்கிறேன்.

Geetha Sambasivam said...

வாங்க வல்லி. நம்மாழ்வார் மோக்ஷம் தொடரும்.

Geetha Sambasivam said...

வாங்க ரஞ்சனி, இந்த ஊர்க்காரங்க நீங்க, சேவிக்காமலா? அப்போல்லாம் இவ்வளவு கூட்டமும் இருந்திருக்காது இல்லையா?

மாதேவி said...

அரங்கநாதனின் வைகுண்டஏகாதசி உலா அழகாக விபரித்துள்ளீர்கள்.

இங்கும் விஷ்ணு கோவில்களில் வைகுண்டஏகாதசி சிறப்பாக இருக்கும்.

Geetha Sambasivam said...

நன்றி மாதேவி.