ப்ரணய கலஹத்தில் ரங்கநாயகி, நம்பெருமாள் இருவருக்கும் வாக்குவாதம் உண்டாகிறது. ரங்கநாயகியும், அரங்கனும் வாக்குவாதம் பண்ணிக் கொள்வதைப் புத்தகமாகப் போட்டிருக்கிறார்கள் அந்தப் புத்தகத்தை அளிப்பது கே.பி.எஸ்.நாராயணன் செட்டியார், சேர்மன், போர்ட் ஆஃப் ட்ரஸ்டீஸ், ஸ்ரீரங்கநாத ஸ்வாமி தேவஸ்தானம், ஸ்ரீரங்கம். மேலும் உறுப்பினர், டி.ஆர்.யு.சி.சி. திருச்சி, 55, சின்ன செட்டி தெரு, திருச்சி. இந்தப் புத்தகத்தை ஸ்கான் செய்து அனுப்பியது பதிவர் மாதங்கி மாலி, அவர் தந்தை திரு மாலி. இருவருக்கும் என் நன்றி.
முதல்லே பங்குனி மாதம் நடக்கும் இந்த பிரம்மோத்ஸவம் ஆதி பிரம்மோத்ஸவம் எனப்படும். இந்த ஆதி பிரம்மோத்ஸவம் விபீஷணனால் ஏற்படுத்தப் பட்டது. பங்குனி மாதம் உத்திர நக்ஷத்திரத்தன்று கமலவல்லியைத் திருமணம் செய்து கொண்டு உறையூரிலிருந்து திரும்பி வந்த அரங்கன், ரங்கநாயகியைத் தரிசிக்க மிகுந்த பிரேமையுடன் சென்றபோது கோபத்துடன் கதவை அடைத்தாள் ரங்கநாயகி. எல்லாம் தெரிந்த ஸ்ரீதேவிக்கே கோபமா? எனில் ஆம், கோபம் தான். நாம் இதைச் சாதாரணமான மானிடக் கண்களோடும், மானுட மனதோடும் பார்த்தால் தவறாகவே தெரியும். ஆனால் இவ்வுலகில் பரமபுருஷன் ஆன எம்பெருமான் ஒருவனே ஆண்மகன். மிகுதி உள்ள அனைவரும் ஸ்வரூபத்தால் எப்படித் தோன்றினாலும் அவர்களும் பெண்மக்களே. இதைத் தான் மீராபாய் உணர்ந்து கூறினாள். கண்ணன் ஒருவனே ஆண்மகன்; அவனுக்கு முன்னர் அனைவரும் பெண்களே என்று. ஆகவே இதைப் பரமாத்மாவுக்கும், ஜீவாத்மாவுக்கும் ஏற்படும் ஒரு விவாதமாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வுலகிலுள்ள நம்மைப் போன்ற சாமானிய தம்பதிகளின் சண்டையைப் போல நினைக்க வேண்டாம். ஸ்ரீரங்கத்தைப் போலப் பல திவ்ய தேசங்களிலும் ப்ரணய கலஹம் என்னும் நிகழ்ச்ச்சி நடத்தப் படுகிறதெனினும் ஸ்ரீரங்கத்திலே தான் மிகவும் பிரசித்தமானது.
பெருமாளுக்கும், ரங்கநாயகிக்கும் ஏற்படும் இந்தப் ப்ரணய கலஹமானது கடைசியில் நம்மாழ்வாரால் தீர்த்து வைக்கப் படுவதாக ஐதீகம். பரமாத்மாவோடு ஜீவாத்மா சேர ஆசாரியனின் உதவி தேவை என்பதை இது சுட்டிக் காட்டுவதாய்ச் சொல்லுவார்கள். இனி ப்ரணய கலஹம் என்னும் மட்டையடி ஆரம்பம். பெருமாளுக்காக அரையர்களும் நாச்சியாருக்காக நாச்சியார் பண்டாரிகளும் வாதிடுவார்கள். அப்போது பூமாலைகள், பழங்கள், பூப்பந்துகள் போன்றவை நாச்சியாரால் பெருமாள் மீது தூக்கி எறியப் படும். பெருமாளோ மிகப் பயந்தவர் போலக் காட்டிக் கொண்டு பின்னே, பின்னே ஓட்டமாக ஓடுவார். அவர் பின்னே சென்றுவிட்டார் எனத் தெரிந்ததும் மீண்டும் கதவு திறக்கப் பெருமாள் உள்ளே நுழைய முயற்சிக்க மீண்டும் வாக்குவாதம் நடக்க, மட்டையடி நடக்கப் பெருமாள் மீண்டும் பின்னடைவார். இப்போது சம்வாதத்தைச் சற்றுப் பார்ப்போமா?
அரங்கன் சொல்கிறார்: "அடியே ரங்கநாயகி, நான் தான் போகும்போதே சொல்லிவிட்டுச் சென்றேன் அல்லவோ? உற்சவங்கள் முடிந்து தானே நான் வர முடியும்? நீயோ இந்தப் படியை விட்டுத் தாண்டமாட்டேன் என சபதம் போட்டிருக்கிறாய்! உற்சவத்தில் எத்தனை கோலாஹலம், எத்தனை கொண்டாட்டம் என்கிறாய்! அடி அம்மா, பிராமணர்களெல்லாம் சூழ்ந்து கொண்டு ஸ்தோத்திரம் பண்ணுகின்றனர். புஷ்பங்களால் மக்கள் அனைவரும் வர்ஷிக்கின்றனர். அலங்காரப் பிரியனான எனக்கு உற்சாகத்துக்குக் கேட்க வேண்டுமா? இப்படி எல்லாம் சந்தோஷத்தோடு உன்னைக் கண்டு சொல்ல வேண்டி ஓடோடியும் வந்தேனே!"
"நீயோ எப்போதும் என்னை எதிர்கொண்டு அழைப்பவள் இன்று வரவே இல்லை; அதோடு விட்டதா! கைலாகு கொடுத்து என்னை உள்ளே அழைத்துக் கொள்வாய். அருமையான சிம்மாசனத்தில் அமர்த்துவாய். என் திருவடியை விளக்குவாய். திருவொத்துவாடை சாற்றுவாய், திருவாலவட்டம் பரிமாறுவாய்; மங்கள ஆலத்தி எடுப்பாய். சுருளமுது திருத்தி சமர்ப்பிப்பாய். இத்தனை உபசாரங்களும் செய்வாயே, என் கண்ணே! இன்றைக்கு என்ன திருக்காப்புச் சேர்த்துக் கொண்டாயோ? என்னைக் கண்டதுமே உன் திருமுகமண்டலம் திரும்பியது திரும்பியபடி இருக்கிறதே, உன் திருச்சேவடிமார்களாலே பந்துகள், பழங்களைக் கொண்டு என்னை அடிக்கிறாயே. இப்படி எல்லாம் இன்று ஏன் என்னை அவமானம் செய்கிறாய் என் ரங்கநாயகியே! இதற்கான காரணம் என்ன சொல்வாய்?"
இது நான் எழுதியவை ஆனால் புத்தகத்தில் பெருமாள் அருளிச் செய்த ப்ரகாரம் எப்படி எனில்,
"நாம் உத்ஸ்வார்த்தமாகப் புறப்பட்டருளித் திருவீதிகளெல்லாம் வலம் வந்து தேவதைகள் புஷ்பம் வர்ஷிக்க, ப்ராம்மணர்களெல்லோரும் ஸ்தோத்ரம் பண்ண, இப்படி பெரிய மனோரதத்தோடே தங்களிடத்தில் வந்தால், தாங்கள் எப்போதும் எதிரே விடை கொண்டு, திருக்கை கொடுத்து உள்ளே எழுந்தருளப் பண்ணிக் கொண்டு போய் திவ்ய ஸிம்ஹாசனத்தில் ஏறியருளப் பண்ணி, திருவடி விளக்கி, திருவொத்துவாடை சாத்தி, திருவாலவட்டம் பரிமாரி, மங்காளலத்தி கண்டருளப்பண்ணி, சுருளமுது திருத்தி சமர்ப்பித்து--இப்படி அநேக உபசாரங்களெல்லாம் நடக்குமே. இன்றைக்கு நாமெழுந்தருளினவிடத்திலே திருக்காப்புச் சேர்த்துக் கொண்டு, திருமுக மண்டலத்தைத்திருப்பிக் கொண்டு, திருச்சேவடிமார்கள் கைகளாலே பந்துகளாலும் பழங்களாலும் விட்டெறிவித்து, இப்படி ஒருநாளும் பண்ணாத அவமானங்களையெல்லாம் இன்றைக்குப் பண்ண வந்த காரியம் ஏதென்று கேட்டுவரச் சொல்லிப் பெருமாளருளிச் செய்த ப்ரகாரம்
தொடரும்
16 comments:
உங்களின் ப்ரகாரமும் அருமை... தொடர்க...
ரங்கநாயகி பதிலை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்...
உன் திருச்சேவடிமார்களாலே பந்துகள், பழங்களைக் கொண்டு என்னை அடிக்கிறாயே. இப்படி எல்லாம் இன்று ஏன் என்னை அவமானம் செய்கிறாய் என் ரங்கநாயகியே! இதற்கான காரணம் என்ன சொல்வாய்?"//
நீங்கள் எழுதிய வசனமும் நன்றாக இருக்கிறது.
இதைப் பரமாத்மாவுக்கும், ஜீவாத்மாவுக்கும் ஏற்படும் ஒரு விவாதமாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வுலகிலுள்ள நம்மைப் போன்ற சாமானிய தம்பதிகளின் சண்டையைப் போல நினைக்க வேண்டாம்.//
உண்மை உண்மை.
திவ்யதேசங்களில் எல்லாம் இந்த உற்சவம் நடைபெற்றாலும் ஸ்ரீரங்கத்தில் தான் நன்றாக இருக்கும் என்று சொல்வதை கேட்கும் போது
நேரில் பார்க்க ஆசை வந்து விட்டது.
:) ... Nice! I like this best- listening to them speak the dialogues during the utsavam.. Audience reaction adds to the flavor of this beautiful conversation...
இது தேவையா.செய்யறதையும் செய்துட்டு என்ன கள்ள ஆட்டம் போடுகிறார் மணவாளன்:)
மட்டையடி என்றால் வாழை மட்டை என்று நினைத்து விட்டேன். என் அறியாமையை பெருமாள் மன்னிக்கணும்.
மாதங்கிக்கும் அவரது தந்தைக்கும் நன்றி. அடுத்து தாயாரின் பதிலுரை எப்படி இருக்கிறது என்று சொல்லக் காத்திருக்கிறேன்.
வாங்க, டிடி, பாராட்டுக்கு நன்றி.
பாராட்டுக்கு நன்றி கோமதி.
வாங்க கோமதி, ஸ்ரீரங்கம் வாங்க.
வாங்க மாதங்கி, நன்றி.
வாங்க வல்லி, வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
சுருளமுது என்றால் என்ன?! திருவொத்துவாடை என்றால் என்ன? என்ன வகை ஆடை அலங்காரம்?
நீங்கள் எளிமையாக எழுதியிருப்பது என் ம.ம க்குப் புரிகிறது. புத்தகத்தில் அருளியிருப்பது புரியக் கொ....ஞ்ச நேரம் ஆகிறது!
'கண்ணன் ஒருவனே ஆண்மகன், அவனுக்குமுன் மற்ற அனைவரும் பெண்களே' மனோபாவம் வருவதற்கு இன்னும் 'ஒன்றிய மனம்' வேண்டும்.
வாங்க ஸ்ரீராம், சுருளமது என்றால்
ஹிஹிஹி, பாதியிலே மின்சாரம் போயிடுத்து. இப்போத் தான் வந்திருக்கு. எத்தனை நேரமோ தெரியலை. ஒரு மணி நேரம் தான் கொடுக்கிறாங்க. :))))அப்புறமா 2 அல்லது 3 மணி நேரம் வெட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு.
சுருளமுது என்றால் வெற்றிலைச் சுருள். திருவொத்துவாடை என்பது வியர்வையைத் துடைக்கும் ஆடை. உடலைத் துடைத்துவிடும் ஆடை. திருவாலவட்டம் என்பது தாம்பாளத்தில் ஆலத்தி கரைத்து விளக்குகள் ஏற்றிச் சுற்றுவது.
மன்னிக்கணும், தப்பாய்ச் சொல்லிட்டேன். திருவாலவட்டம் என்பது விசிறி.
இந்த மட்டையடி உற்சவத்தை பற்றி எனக்கு தெரிந்த தாத்தா ஒருவர் புத்தகம் தந்தார். அதிலேயும் இங்குள்ளோர் மூலமும் விஷயங்கள் தெரிந்து கொண்டேன்...
Post a Comment