உறையூர் வந்துவிட்டார் அழகிய மணவாளன் என்னும் நம்பெருமாள். இது 108 திவ்ய தேசங்களில் இரண்டாமிடத்தைப் பெற்ற சிறப்பான க்ஷேத்திரம். பின்னே? ஸ்ரீரங்கம் உற்சவரே இங்கும் உற்சவர் ஆயிற்றே. இங்கு கமலவல்லி நாச்சியாரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டி வந்திருக்கிறார். வந்தாச்சு; வந்த வேலை முடிந்தது. கமலவல்லியுடன் திருமணம் முடித்துக் கொண்டு சேர்த்தி சேவையும் முடிந்தது. இனி திரும்பணுமே ஸ்ரீரங்கத்துக்கு. கமலவல்லியோ கண்ணும் கண்ணீருமாக நிற்கிறாள். அவளை சமாதானம் செய்த நம்பெருமாள் அவளுக்குப் பரிசாகத் தன் கணையாழியையே கொடுக்கிறார். ஆஹா, அதைக் கொடுக்கும் முன்னர் அது யாருடையது என்பது தெரியாதா அரங்கனாரே? வம்பு வளர்க்கத் தானே கொடுக்கிறீர்கள்? கொடுங்கள், கொடுங்கள். அதை வாங்கிக் கொண்டு கமலவல்லியும் அமைதி அடைகிறாள். பின்னர் நம்பெருமாள் ஸ்ரீரங்கம் கிளம்புகிறார். கிளம்பியவர் நேரே ரங்கநாயகியைப் பார்க்கப்போகவேண்டாமோ?
ஏதோ வேலை நெட்டி முறிக்கிறாப்போல் அறுவடை ஆகி வந்திருக்கும் நெல் அளவையைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார். அதுக்கப்புறமாத் தான் தாயார் சந்நிதிக்கே போகிறார். அங்கே போனதும் இவ்வளவு நாழி வேலை செய்துவிட்டுக் களைத்துச் சோர்ந்து போன வந்த நம்பெருமாளுக்குத் திருமஞ்சனம் என்னும் அபிஷேஹம் நடைபெறுகிறது. ரங்கநாயகி சந்தோஷமாய்ப் பார்க்கிறாள். அவள் கண்களிலே பட்டது அந்த விபரீதம்.
"எங்கே? கையைக் காட்டுங்கள்!"
"என்ன கையிலே ஒன்றுமில்லையே?"
"அதான் கேட்கிறேன். நான் உங்களுக்குக் கொடுத்த அந்த மோதிரம் எங்கே?"
"ம்ம்ம்ம்??? என்ன மோதிரம், எங்கே மோதிரம்?"
"சரிதான்!"
"ஓ அதுவா? வரும்போது காவிரியைக் கடந்து நீரில் இறங்கி வந்தேனா? ஆற்றில் விழுந்துவிட்டது போலிருக்கே! இப்போ என்ன செய்வது?"
"ரங்கநாயகி, இரு, நீ இங்கேயே இரு. நான் போய் ஆற்றில் நன்றாய்த் தேடிப் பார்த்துவிட்டு வருகிறேன்."
ரங்கநாயகிக்கு நம்பிக்கையே இல்லை. என்றாலும் என்ன செய்யலாம்? இந்த மனுஷன் தேடிவிட்டு வரட்டும். அதுக்கப்புறம் என்னனு விசாரிக்கலாம்.
கொள்ளிட ஆற்றங்கரைக்குத் தங்கக் குதிரையில் எழுந்தருளுவார் நம்பெருமாள். ஆற்றில் அங்கும் இங்கும் கணையாழியைத் தேடுவார். கீழே, மேலே, மணலில், ஆற்றங்கரையின் நட்டநடுத் தீவுகளிலே, மரங்களிலே, இண்டு இடுக்கு விடாமல் தேடுகிறாராம். பின்னர் சத்தம் போடாமல் திரும்புகிறார். சித்திரை வீதியில் வையாளி சேவை நடக்கும். வையாளி சேவைன்னா அது சேவை. குதிரை நிஜமாகவே ஓடும். ஓடி ஓடித் தேடுகிறாராம். இங்கே இருந்தால் தானே கிடைக்க! எங்கே கொடுத்தோம்னு அவருக்கு நன்றாகவே தெரியும். இப்போ வெறுங்கையோடு தான் திரும்பியாகணும். வேறே வழியே இல்லை. ரங்கநாயகிக்கு ஏதோ விஷமம் என்று புரிந்து விட்டது. கோபம் கொண்டாள். முகத்தைத் திருப்பிக் கொண்டதோடு கதவையும் அடைத்தாள். ஆயிற்று. ப்ரணய கலஹம் ஆரம்பமாயிற்று. மேள, தாள அமர்க்களத்தோடு வருகிறாரா? வரட்டும், வரட்டும். யார் உள்ளே விடப் போறாங்க? கதவு படீரென்று சார்த்தப் பட்டது.
படம் உதவி: கூகிளார்
5 comments:
தப்பிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது !
வாங்க டிடி. நன்றி.
ஆஹா. ப்ரணய கலஹம் வார்த்தைக்கு முழுதும் படித்து வரும்போதுதான் அர்த்தம் உரைக்கிறது பாருங்கள்.... குழல் விளக்கு நான்!
வாங்க ஸ்ரீராம், வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
இருந்தால் தானே தேட....:))
ரங்கன் பெரிய ஆள் தான்...:))
இன்றும் சல்லடை போட்டு மோதிரத்தை தேடுவார்களாம்...
Post a Comment