எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, April 27, 2013

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! ப்ரணய கலஹம், இன்னும் முடியவில்லை!


ரங்கநாயகி அவ்வளவு எளிதில் உள்ளே விடுவாளா?  இன்னும் கேட்க வேண்டியவை எவ்வளவோ இருக்கிறது. இந்த மனிதன் ஒவ்வொரு முறையும் நம்மை ஏமாற்றி விடுகிறானே.  இம்முறை விடக் கூடாது.  ரங்கநாயகி தொடர்ந்தாள்.

"அழகிய மணவாளரே! முந்தாநாள் நடந்ததைக் கொஞ்சம் நினைத்துப்பாருங்கள்.  தாங்கள் வேட்டைக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றிருந்தீர்கள். உண்மையாகவே வேட்டையாடி, வியர்த்து விடாய்த்து வந்தீர்கள்.  என் மனம் நெகிழ்ந்தது.  தங்களைக் கண்டதுமே உள்ள நிலைமை புரிந்தபடியால் தங்களை எதிர்கொண்டழைத்துக் கைலாகு கொடுத்து உள்ளே அழைத்துச் சென்றோம்.  தங்களை திவ்ய சிம்ஹாசனத்தில் எழுந்தருளப் பண்ணினோம்.  தங்கள் திருவடிகளைப் பாதபூஜை செய்து கழுவித் துடைத்து ஆசுவாசம் போக்கி தங்கள் திருவடிகளை ஒத்தியெடுக்கும் திருவொத்துவாடையால் ஒத்தி எடுத்து, திருவாலவட்டம் காட்டி அருளினோம்.  ஆனாலும் தாங்கள் அதிக ச்ரமத்தோடேயே காணப்பட்டீர்கள்.  ஆகவே தங்கள் உடலுக்குக் களைப்பினால் ஏற்பட்ட இளைப்போ என எண்ணிக் கொண்டு வெந்நீரால் தங்களுக்குத் திருமஞ்சனம் செய்விக்கச் செய்து சமர்ப்பித்தோம்.  ஆனாலும் தாங்கள் சரிவர நீராடவில்லை.  நீராடியது பாதியும், நீராடாதது பாதியுமாகவே இருந்தது.  நமக்கு அதன் காரணம் புரியவில்லை."

"தங்களுக்கு மேலும் சிரமத்தால் ஏற்பட்ட இளைப்போ எனக் கருதி, தங்கள் திருமேனிக்கு ஏற்ற திவ்ய பீதாம்பரத்தைத் தேடி எடுத்துச் சமர்பித்தோம்.  அதையும் சரிவர சாத்திக்கொள்ளவில்லை தாங்கள்.  ஏனோதானோ எனச் சாத்தியருளி இருந்தீர்கள்.  பின்னும் விடாமல் கஸ்தூரித் திருமண்காப்பு சேர்த்துச் சமர்ப்பித்துப் பார்த்தால், ஆஹா, என்னவாச்சு தங்களுக்கு.  தாங்கள் எப்போதும்போல் சார்த்திக்கொள்ளும் திருமண்காப்பைப் போல் அல்லாமல் திருவேங்கடமுடையான் காப்புப் போல் அல்லவோ சார்த்திக் கொண்டீர்?  கோணாமாணாவென இருந்தது.  பின்னரும் விடாமல் தங்கள் பசியாற வேண்டி, தங்கப் பள்ளயத்தில் அப்பம் கலந்த சிற்றுண்டு, அக்காரம் முதலானவற்றைப் பாலில் கலந்து, வர்க்க வகைகளையும் சமர்பித்தோம். ஆனாலும் தாங்கள் அவற்றை சரிவர அமுது செய்யவில்லை. அமுது செய்தது பாதியும், அமுது செய்யாதது பாதியுமாக வைத்துவிட்டீர்கள்.  எனினும் விடாமல் சுருளமுது திருத்தி சமர்ப்பித்தோம்.  அதையும் அமுது செய்யாதபடிதானே எழுந்தருளி இருந்தீர்?"

"தூக்கம் சரிவர இல்லை என நினைத்து அனந்தாழ்வானைக் கூப்பிட்டுத் தங்களுக்கேற்ற திருப்படுக்கையாக விரித்துக் கொள்ளச் சொல்லி அதன்மேலே தங்களைத் திருக்கண் வளரப் பண்ணி நாமே தங்கள் திருவடிகளை மிருதுவாகவும், தங்கள் உடல் நோவு தீரும் வண்ணமும் பிடித்துக் கொண்டிருந்தோம்.  ஆனால் ஐயா, தாங்கள் எத்தனை வஞ்சகர்!  தங்கள் வஞ்சகத்தால் எங்களுக்கெல்லாம் ஒரு மாயா நித்திரையை உருவாக்கி விட்டீர்கள்.  எங்கள் கருவூலம் திறந்தீர்கள்.  எங்கள் ஸ்த்ரீதனங்கள் ஆன அம்மானை, பந்து கழஞ்சு, பீதாம்பரங்கள் அனைத்தையும் கைக்கொண்டு விட்டீர்கள்.  எந்த இடத்துக்குச் செல்கிறோம் என எவரிடமும் கூறவே இல்லை. தாங்கள் சென்ற அடுத்த கணமே எங்கள் மாயா நித்திரை கலைந்தது.  திடுக்கிட்டு விழித்தோம்.  அனந்தாழ்வான் விரித்திருந்த படுக்கையில் பார்த்தால் தாங்கள் அங்கே இல்லை. என்ன செய்வது எனப் புரியவில்லை."சரியென்று வாயில்காப்போனை அழைத்துக் கேட்டால் அவர்கள் வந்து அம்மானை, பத்து கழஞ்சு, பீதாம்பரமான ஸ்த்ரீதனங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு தாங்கள் இன்ன இடத்துக்கு எழுந்தருளுகிறோம் என்று சொல்லாதபடி எழுந்தருளிவிட்டார் என்று சொல்கின்றனர்.  அந்த பதில் கிடைத்ததுமே எங்கள் அந்தரங்கத் திருச்சேவடிமார்களை அழைத்தோம்.  அவர்கள் வந்து தங்கள் அடி பிடித்து, தங்கள் திருவடித் தடம் கண்டு அந்த அடியில் மிதித்துக் கொண்டு சென்றால் அது உறையூரிலே கொண்டு போய்விட்டது. அங்கே மச்சினி என்ற ஒருத்திக்கு முறைமை சொல்லி அழைத்ததும், மற்றொருத்தியை மடியைப் பிடித்ததும், கச்சணிந்த முலைகளோடு கூடிய பெண்ணைக் கண்ணால் அழைத்ததும், கனிவாய் கொடுத்ததும், தங்கள் உடலெங்கும் அதனால் ஏற்பட்ட நகக்குறிகளும், தங்கள் கார்மேனியில் அதனால் ஏற்பட்ட  பசுமஞ்சள் நிறமும், தெரிய வந்தது,"

"ஐயா, தாங்கள் கரும்புத்தோட்டத்தில் சஞ்சரிக்கும் யானையைப் போல இந்தப் பெண்கள் கூட்டத்தின் நடுவே சஞ்சரிக்கிறீர்கள் என நாங்கள் உங்களைத் தேடும்படி அனுப்பி வைத்த தூதி ஓடோடியும் வந்து தங்கள் அங்க அடையாளங்களைச் சொல்லி உள்ளது உள்ளபடி அடையாளம் காட்டிவிட்டாள். உம்மாலே எம் மனது அனலில் இட்ட மெழுகாய், இல்லை இல்லை, கொல்லன் உலையில் இட்ட மெழுகாய்க் கொதிக்கிறது.  நீர் எதுவும் பேசவேண்டாம், போம், போம்.  இங்கிருந்து செல்லும்."

என்றாள் நாச்சியார்.

இது குறித்த ப்ரகாரம் நாளைக்கு வரும்.  கூடவே பெருமாளின் பதிலும்.


9 comments:

வல்லிசிம்ஹன் said...

இதேதடா இவ்வளவுதானா.இன்னமும் உண்டா. அவ்வளவு மோகமா. கருவூலத்திலிருந்து பொன்னெல்லாம் எடுத்துக் கொண்டு போய்க் கொடுத்தாராமா.
சந்தேகம் என்ன என்றால் ஒரு பெண்ணா பலபெண்களா. துவாரகாபதியாகிப் போய்விட்டாரோ:))
அருமை கீதா. நிச்சயமாகக் கலகம் தான்.

கோமதி அரசு said...

\அழகாய் சொல்லிவிட்டீர்கள்.
நாளை அவர் பதில் எப்படி இருக்கும் அறிய ஆவல்.

திண்டுக்கல் தனபாலன் said...

ஆவலுடன் காத்திருக்கிறேன்...

ADHI VENKAT said...

பெருமாள் என்ன சொல்லப் போகிறார் என பார்ப்போம்....:))

ஸ்ரீராம். said...

படிச்சாச்சு.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே http://blogintamil.blogspot.in/2013/05/blog-post_7.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Ranjani Narayanan said...

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்!
1534 பதிவுகளா? சீக்கிரம் 2000 தொட வாழ்த்துக்கள்!
ப்ரணய கலகம் நீங்கள் சொல்லிப் போகும் பாணி அருமை!

THULA said...

Dear SRI,
Namaskaram.
Just today I happen to read your Blog on Sri Parimala Ranganathar,THIRUVAZHNDUR.IT IS VERY INFORMATIVE.Your Tamil is enchanting.I like it very much. I also went through some of your blog on various Temples,stories, etc. They are all very interesting to read.I thank you very much for your interest in Aanmekam and writings on various temples. I find new information in your writings. I am grateful to you.I request you to permit me to copy and paste your Blog on temples in the "MAHA PERIVA PROBOARD" dedicated to SRI KANCHI MAHA PERIVA.I BELONG TO MAILADUTHURAI. MY BEST WISHES AND RESPECTFUL REGARDS TO YOU.V.RADHAKRISHNAN

Geetha Sambasivam said...

திரு துலா அவர்களுக்கு, நமஸ்காரங்கள். தாங்கள் என்னை மிகவும் கெளரவப் படுத்தி விட்டீர்கள். தாராளமாய் மஹா பெரியவாளின் அருள் நிறைந்த வலைப்பக்கத்தில் பகிர்ந்து கொள்ளலாம். இதை விடப் பெரிய பரிசு எனக்கு வேறொன்றும் இல்லை. வணக்கத்துடன்,


கீதா சாம்பசிவம்.

பி.கு. தங்கள் தனிப்பட்ட மெயில் ஐடி கிடைக்காததால் இங்கேயே பதில் கொடுக்கும்படி ஆயிற்று. மன்னிக்கவும்.