எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, May 07, 2013

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! ப்ரணய கலஹம், மட்டையடித் திருவிழா தொடர்ச்சி!


போன பதிவில் நாச்சியார் சொன்ன பதில்களின் ப்ரகாரம் கீழே

நாச்சியார் அருளிச் செய்த ப்ரகாரம்

முந்தாநாள் அழகிய மணவாளப் பெருமாள் வேட்டையாடி, வேர்த்து, விடாய்த்து எழுந்தருளினார் என்று அடியோங்கள் அதிப்ரீதியுடனே எதிரே விடைகொண்டு திருக்கை கொடுத்து உள்ளே எழுந்தருளப் பண்ணிக் கொண்டுபஓய் திவ்ய சிம்ஹாசனத்தில் ஏறியருளப்பண்ணி, திருவடி விளக்கி, திருவொத்துவாடை சாத்தி, திருவாலவட்டம் பரிமாறினோம்.  அப்போது அதிக ச்ரமத்தோடேயே எழுந்தருளியிருந்தார்.  ஆனால் இளைப்போ என்ரு வெந்நீர்த் திருமஞ்சனம் சேர்த்து ஸமர்ப்பித்தோம்.  அதை நீராடினது பாதியும், நீராடாதது பாதியுமாக எழுந்தருளியிருந்தார்.  ஆனால் இளைப்போ என்று திருவரைக்குத் தகுதியான திவ்ய பீதாம்பரம் கொண்டு வந்து ஸமர்ப்பித்தோம்.  அதையும் எப்போதும்போல சாத்திக் கொள்ளாமல் ஏதோ ஒருவிதமாகச் சாத்தியருளினார்.  ஆனால் இளைப்போ என்று கஸ்தூரித்திருமண்காப்பு சேர்த்து ஸமர்ப்பித்தோம். அதையும் எப்போதும்போ சாத்திக்கொள்ளாமல் திருவேங்கடமுடையான் திருமண்காப்புப் போல கோணாமாணாவென்று சாத்தியருளினார்.  ஆனால் இளைப்போ என்று தங்கப் பள்ளயத்தில் அப்பங்கலந்த சிற்றுண்டி அக்காரம் பாலில் கலந்து வர்க்க வகைகளை முதலானதுகளைச் சேர்த்து ஸமர்ப்பித்தோம்.  அதையும் அமுது செய்தது பாதியும், அமுது செய்யாதது பாதியுமாக எழுந்தருளியிருந்தார்.  ஆனால் இளைப்போ என்று சுருளமுது திருத்தி ஸமர்ப்பித்தோம்.  அதையும் அமுது செய்யாதபடிதானே எழுந்தருளியிருந்தார்.  ஆனால் இளைப்போ என்று திருவனந்தவாழ்வானைத் திருப்படுக்கையாக விரித்து அதன் மேலே திருக்கண் வளரப் பண்ணி அடியோங்கள் திருவடிகளைப் பிடித்துக் கொண்டிருந்தோம்.  தாம் வஞ்சகக் கள்வரானபடியினாலே எங்களுக்கு ஒரு மாயா நித்ரையை உண்டாக்கி, எங்கள் கருவூலம் திறந்து எங்கள் ஸ்த்ரீதனங்களான அம்மானக் பந்து கழஞ்சு பீதாம்பரங்களையும்  கைக்கொண்டு இன்னவிடத்துக்கு எழுந்தருளுகிறோம் என்று சொல்லாதபடி எழுந்தருளினார்.  அந்த உத்தர க்ஷணமே அடியோங்கள் அச்சமுடன் திடுக்கிட்டு எழுந்திருந்து திருப்படுக்கையைப் பார்க்குமிடத்தில் பெருமாளைக் காணாமையாலே கை நெரித்து வாயடித்து அணுகவிடும் வாசற்காப்பாளரை அழைத்துக் கேட்கும் அளவில் அவர்கள் வந்து அம்மானை பத்து கழஞ்சு பீதாம்பரமான ஸ்த்ரீ தனத்தையும் கைக்கொண்டு இன்னவிடத்துக்கு எழுந்தருளுகிறோம் என்று சொல்லாதபடி எழுந்தருளினார் என்று சொல்ல வந்தார்கள்.  அந்த உத்தர க்ஷணமே அந்தரங்க பரிஜனங்களாய் இருக்கிற திருச்சேவடிமார்களை அழைப்பு விடுத்தோம்.  அவர்கள் வந்து அடிபிடித்து அடிமிதித்துக் கொண்டு போனவிடத்தில் உறையூரிலே கொண்டு போய் விட்டது.  அங்கே மச்சினி என்றொருத்திக்கு முறைமை சொல்லி மற்றொருத்தியை மடியைப் பிடித்ததும், கச்சணி பொன்முலை கண்ணால் அழைத்ததும், கனிவாய் கொடுத்ததும், கையில் நகக்குறி மெய்யாக ஆனதும், கார்மேனியெங்கும் பசு மஞ்சல் பூத்ததும், கரும்புத் தோட்டத்திலே யானை ஸஞ்சரிக்கிறாப்போலே தேவரீர் ஸஞ்சரிக்கிறீரென்று நாங்கள் உசிதமாகப் போகவிட்ட தூதியோடி வந்து அங்க அடையாளம் உள்ளபடி வந்து சொன்னாள்.  உம்மாலே எமது மனது உலை மெழுகாய் இருக்கிறது.  ஒன்றும் சொல்லாதே போம்போமென்று நாச்சியார் அருளிச் செய்த ப்ரகாரம்.

இதற்குப் பெருமாளின் பதில் கீழ்க்கண்டவாறு.

ஒருவருக்கொருவர் ஸ்ம்சயப்பட்டால் அந்த ஸாம்சயம் ஒரு ப்ரகாரத்தாலும் தீராமற்போனால் ப்ரமாணத்தாலே தீர்த்துக் கொள்வார்கள்.  அந்தப்படி ப்ரமாணம் பண்ணித் தருகிறோம்!  நாம் தேவாதிதேவனானபடியினாலே தேவதைகளைத் தாண்டித் தருகிறோம்.! ஸமுத்ரத்திலே முழுகுகிறோம்!. அக்னி ப்ரவேசம் பண்ணுகிறோம்!. பாம்புக்குடத்திலே கை விடுகிறோம்!  மழுவேந்துகிறோம்!  நெய்க்குடத்திலே கையிடுகிறோம்!  இப்படிப்பட்ட ப்ரமாணங்களையானாலும் வாங்கிக் கொண்டு நாம் கொடுத்த புஷ்பத்தையும் வாங்கிச் சூட்டிக் கொண்டு நம்மையும் உள்ளே அழைக்கச் சொல்லிப் பெருமாள் அருளிச் செய்த ப்ரகாரம்.

பெருமாள் சொல்கிறார்!

அடி ரங்கா! என் ரங்கா!  நீ என் மேல் சந்தேகப் படலாமா?  பதிலுக்கு நானும் உன் மேல் சந்தேகப்படுவேனா!  இப்படி ஒருவருக்கொருவர் சந்தேகப்பட்டுக்கொண்டிருந்தால் என்ன சொன்னாலும் மனம் திருப்தி அடையாது. ஆகவே நான் ஆணையிட்டுச் சொல்கிறேன்.  நீ எதன்மேல் ஆணையிடச் சொன்னாலும் அந்தப்படி ஆணையிடுகிறேனடி ரங்கா!  தேவாதி தேவனான நான் இதற்காக தேவதைகளைத் தாண்டி ஆணையிடுவது உனக்குச் சம்மதம் எனில் அவ்வாறு ஆணையிடுகிறேன்.  அல்லது  என்னை சமுத்திரத்திலே முழுகு என்கிறாயா?  சரி அம்மா, அப்படியே முழுகுகிறேன்.  அது வேண்டாம், அக்னி ப்ரவேசம் பண்ணணுமா?  அதுவும் செய்கிறேன். கொடிய விஷப் பாம்புகளைக் குடத்தில் இட்டு அந்தக் குடத்திலே கையை விடச் சொன்னாலும் பயமில்லாமல் விடுகிறேனடி.  மழுவைக் கையில் ஏந்த வேண்டுமா?  இதோ வெறும் கைகளாலேயே ஏந்துகிறேன்.  கொதிக்கும் நெய்க்குடத்தில் கைவிட வேண்டுமா? சொல், செய்கிறேன்.  என்னுடைய இத்தகைய ப்ரமாணங்களை வாங்கிக் கொள் ரங்கா. வாங்கிக் கொண்டு நான் உனக்காகக் கொண்டு வந்திருக்கும் புஷ்பங்களையும் வாங்கிக் கொண்டு என்னையும் உள்ளே அழைப்பாயாக!

8 comments:

வல்லிசிம்ஹன் said...

''உம்மாலே எம்மனது உலை போலக் கொதிக்கிறது.''
பயங்கரக் கலகமாக இருக்கிறதே.
இவர் வேற் தாயாரை அடி ரங்கா என்று கொஞ்சுகிறார்.:)
பாம்புக் குடத்தில் கைவிட்டால் பாம்புகளுக்கே மோக்ஷம் கொடுப்பவராச்சே. மஹா பெரிய கள்வனானாரே ஸ்ரீரங்கன்.:)

திண்டுக்கல் தனபாலன் said...

/// பெருமாள் சொல்கிறார்! ///

பெருமாள் கெ(கொ)ஞ்சுகிறார்...!(?)

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான பதிவு. பாராட்டுக்கள்.

இன்றைய வலைச்சரத்தில் தங்களைப் பாராட்டிப்பேசியுள்ளார்கள். மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

ஸ்ரீராம். said...

முதற்பகுதியைக் கஷ்டப்பட்டுப் படித்தேன்! புரிவதில் சிரமம். அப்புறம் ஈசி!! ரங்கா ரங்கா என்று கொஞ்சுவது அழகு!

Geetha Sambasivam said...

வாங்க வல்லி, ஆமாம், மஹா கள்வன் தான். சரியான ஊர் சுத்தியும் கூட! :)))

Geetha Sambasivam said...

ஹிஹிஹி, டிடி, பெருமாள் கெஞ்சிக் கொஞ்சி எல்லாம் செய்து காட்டுகிறார் அடியார்களுக்கு. :)))))

Geetha Sambasivam said...

வாங்க வைகோ சார் வலைச்சரத்தில் வேண்டிய மட்டும் என்னோட பதிவுகள் வந்தாச்சு. :)))) இனிமேல் சொல்றவங்களாவது புதியவர்களை ஊக்குவிக்க வேண்டும். :))))

Geetha Sambasivam said...

ஸ்ரீராம், இதில் நாச்சியார் ப்ராகாரம் மட்டும் வந்திருக்கும், இதன் மொழிபெயர்ப்பைப் போன பதிவிலே எழுதிட்டேன். இரண்டையும் சேர்த்துப் போட்டால் பெரிசா இருக்குமே தனித்தனியாப் போட்டதின் விளைவு உங்களுக்குப் புரிதலில் சிரமம். போன பதிவைப் படிச்சிருந்தாப் புரிஞ்சுடும். :))))

வைணவ பரிபாஷகள் இவை எல்லாம்.