எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, September 06, 2014

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!


முன் பதிவு

அரங்கனை மேற்கண்ட பதிவில் செல்பவர்களோடு பிரயாணம் செய்ய விட்டு விட்டுக் கொஞ்சம் பின்னோக்கிப் போய் அரங்கமாநகரில் நடந்த நிகழ்வுகளைப் பார்ப்போம். ஏற்கெனவே  பனிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 1311-ஆம் ஆண்டிலே மாலிக்காஃபூர் தலைமையிலே நடந்த படையெடுப்பில் களவாடிச் செல்லப்பட்ட அழகிய மணவாளர் விக்ரஹம் குறித்தும் பின்னர் அது திரும்ப அரங்கம் கொண்டுவரப் பட்டது குறித்தும் அறிந்து வைத்திருந்த இப்போதைய சுல்தான் தன் மகனைத் தளபதியாக அனுப்பிக் கட்டாயமாய் ஶ்ரீரங்கம் நகரில் நுழைந்து வேண்டிய மட்டும், பொன், மணி, ஆபரணங்கள், விக்ரஹங்கள் என எடுத்து வரும்படி கட்டளை இட்டிருந்தான்.  ஆகவே உலுக்கான் என அழைக்கப்பட்ட அந்தத் தளபதியும், (இவன் தான் பின்னர் அரியணை ஏறி முகமது-பின் - துக்ளக் என்னும் பெயரில் ஆட்சி புரிந்தவன்) தனக்கு வழிகாட்டிச் சென்ற ஹொய்சளர்களை அரங்கமாநகருக்குள்ளே நுழைந்து செல்லும்படி கட்டளை இட்டிருந்தான்.  வேறு வழியின்றி ஹொய்சளப் படைகள் முதலில் வழிகாட்டியபடி ஶ்ரீரங்கம் நகருக்குள் நுழைந்தது.

அதற்குள்ளாகக் கோயிலில் பெரிய பெருமாள் சந்நிதிக்குக் கல்திரை போட்டு மூடியதோடு அல்லாமல், தாயார் சந்நிதியின் மூலவரை அங்கிருந்த நந்தவனத்தில் ஒரு வில்வ மரத்தடியில் ஒளித்து வைத்துவிட்டு உற்சவரை அரங்கன் சென்ற திசைக்கு எதிர்த் திசையில் அனுப்பி வைத்தனர். இனி கடவுள் விட்ட வழி என வேதாந்த தேசிகரும் களைப்புடன் அமர்ந்த நிலையில் அவருக்கு அரங்கன் ஊர்வலம் தென் திருக்காவிரியின் எதிர்க்கரையில் ஒரு தோப்பினுள் மறைந்த வண்ணம் தேசிகர் வருகைக்குக் காத்திருப்பது சொல்லப்பட்டது. ஆனால் தேசிகர் இத்தனை மக்களையும், அரங்கனின் பரிசனங்களையும் விட்டுவிட்டுத் தான் மட்டும் செல்வது எப்படி என மறுத்துக் கொண்டிருக்கையில் அங்கே விவாதம் ஆரம்பித்தது. அப்போது கோயிலின் மூன்றாவது திருச்சுற்றில் காவலுக்கு இருந்தவர்கள் காதில் எச்சரிக்கை முரசொலி கேட்டது.

அனைவரும்  திடுக்கிட்டுப் போய்ப்பார்க்க, டில்லி சுல்தானின் படை வடகாவிரியைக் கடந்து வந்து கொண்டிருக்கும் செய்தி கிட்டுகிறது. ஆற்றில் ஆழம் காணவேண்டிப் பதிக்கப்பட்டிருந்த கொண்டைக் கோல்கள் அனைத்தும் அரங்கன் கோயிலைக் காத்து நின்ற படையால் அகற்றப்பட்டதால் டில்லி வீரர்களுக்கு  ஆற்றின் ஆழம் புரிந்து அதன் பின்னர் ஆழமில்லாத இடங்களைத் தெரிந்து கொண்டு ஆற்றைக் கடக்க நேரம் பிடிக்கும் என இங்கிருந்தவர்கள் நினைத்தனர். ஆனால் அவர்களோ விரைவில் கண்டு பிடித்து விடிவதற்குள்ளாக ஆற்றின் மறுகரைக்கு வந்துவிட்டனர்.  இதைக் கண்ட ஶ்ரீரங்கம் படை வீரர்கள் திகிலுடன் கோயிலுக்குச் செய்தியைச் சொல்லப் பறந்தனர்.  ஹொய்சளப் படைகள் வழிகாட்ட, டில்லிப் படைகள் அணிவகுத்து வந்து கொண்டிருந்தன.  அவற்றிற்கு ஓர் முடிவே இல்லாதது போல் நீளமாக வந்து கொண்டே இருந்தன.  அலங்காரப் பல்லக்கு ஒன்றில் டில்லி சுல்தான் கியாசுதீனின் மூத்த மகன் உல்லு கான் எனப்படும் உலுக்கான் அமர்ந்திருந்தான்.  போர் புரியும் திறமைகளை நன்கு கற்றறிந்தவன் எனப் பெயர் பெற்றிருந்த அவன் தன்னைச் சுற்றிலும் இங்குமங்கும் காணப்படும் காட்சிகளைக் கண்டு மனதில் பதிய வைத்துக் கொண்டு வந்தான்.

இங்கே கோயிலில் மூன்றாவது திருச்சுற்றில் வரும்படைகளை வரவேற்க வேண்டி அண்டாக்களில் எண்ணெயும், நெய்யும் கொதித்துக் கொண்டிருந்தது.  மரக்குச்சிகள், கொம்புகள், இரும்புத் துண்டங்கள் போன்றவை கூர் தீட்டப்பட்டு வீரர்கள் கைகளை அலங்கரித்தன.  பஞ்சு கொண்டான் என்னும் முதிய வீரர் படைகள் வரும் வடக்கு வாயிலையே பார்த்த வண்ணம் நின்று கொண்டிருந்தார். உடைவாளை இறுகப் பற்றிய வண்ணம் டில்லிப் படைகள் வரக் காத்திருந்தார் அவர்.  டில்லிப் படைகள் அடிக்கும் நகராவின் சப்தமும், முரசுகளின் சப்தமும் ஓங்கி ஒலித்தன. ஆங்காங்கே நின்று கொண்டிருந்தவர்களை இப்போதுள்ள கருட மண்டபத்தின் பின்னே இருந்த பட்சிராஜன் தோப்பு என்னும் காட்டுக்குள்ளிருந்து டில்லிப் படைகள் துரத்த ஆரம்பித்தனர்.

கோயிலினுள் வெளீயே நடப்பவை தெரியாமல் திருமடைப்பள்ளியில் சமையல் வேலை மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.  அப்போது தான் ஆர்யபடாள்  வடக்கு வாயிலுக்கே டில்லிப் படைகள் வந்துவிட்ட செய்தியும் கிடைத்தது.  குதிரைப்படை முன்னால் வந்தது.  அந்த வீரர்கள் மெல்ல மெல்ல முன்னேறி நான்காம் திருச்சுற்றின் இருபுறங்களையும் சுற்றி வளைத்துக் கொண்டது.  அவர்களுக்குப் பின்னால் பூரண ஆயுதங்கள் தரித்த காலாட்படை வீரர்கள் பரபூரண கவசத்தோடு அணிவகுத்து நின்றனர்.  பின்னர் திடீரென அத்தனை வீரர்களும் பின் வாங்க, அவர்களில் பத்துப் பேர் மட்டும் முன்வந்து கோயிலுக்குள் இருக்கும் பொருட்களை எல்லாம் சுல்தானிடம் ஒப்படைக்குமாறும், இல்லை எனில் அநாவசியமாகப் போர் புரிந்து உயிரை விட வேண்டி இருக்கும் எனவும், சுல்தானுக்குப் பணிந்து போவது தான் ஒரே வழி எனவும் எச்சரிக்கை செய்தனர்.

4 comments:

ஸ்ரீராம். said...

ஏற்கெனவே படித்த மாதிரி இருக்கிறதே... டெல்லி பாதுஷாவின் மகள் வசம் இருக்கும் பெருமாளை மீட்க டெல்லிக்கே போனது வரை படித்து விடவில்லையோ?

Geetha Sambasivam said...

அது மாலிக்காஃபூர் வந்த நேரம் நடந்தது. அப்போப் போன அழகிய மணவாளரைத் தான் இங்கிருந்து நாட்டியக்காரர்கள், பாடகர்கள் போய் மீட்டு வந்தனர். இது அதன் பின்னர் நடந்தது. படை எடுத்தது இருமுறையும் டில்லியில் இருந்து என்பதால் ஒரே மாதிரியா இருக்குனு நினைக்கிறேன். :)

இராஜராஜேஸ்வரி said...

திருக்கோவில்கள் தாம் எத்தனை சோதனைகளை எதிர்கொண்டிருக்கின்றன..!

Thenammai Lakshmanan said...

ராஜி சொன்னதுபோல் திருக்கோயில்களுக்குத்தான் எத்தனை சோதனைகள். தத்ரூபமாகப் படைத்திருக்கிறீர்கள் கீதா மேம்.