எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, January 11, 2015

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

ஶ்ரீரங்கத்திலிருந்து உற்சவர் அழகிய மணவாளர் (இவர் தான் பின்னால் நம்பெருமாள் எனப் பெயர் மாற்றம் பெற்றவர்) ஊர் ஊராக அலைய ஆரம்பித்ததும், சில வருடங்கள் அவர் இருக்குமிடம் தெரியாமலேயே இருந்து வந்தது.  அப்போது உள்ளூர்க்காரர்கள் புதியதொரு விக்ரஹத்தைச் செய்து உற்சவர் இடத்தில் அமர்த்தினார்கள்.  பின்னால் திருமலையில் நம்பெருமாள் இருக்குமிடம் கண்டுபிடிக்கப்பட்டு அவரும் ஶ்ரீரங்கம் திரும்பி வந்ததும், அனைவருக்கும் இத்தனை நாட்களாக அவர் இடத்தில் இருந்தவரை என்ன செய்வது எனத் தோன்றியது!


இவரும் திருவரங்கத்தைச் சேர்ந்தவர் தானே என்னும் எண்ணம் தோன்றிய கோவில் ஊழியர்கள் அவரை நம்பெருமாள் அருகிலேயே வைத்தனர்.  திருவரங்க மாளிகையார் என்னும் புதுப் பெயரைச் சூட்டினார்கள்.  யாகசாலை நாட்களில் இவரே அங்கு எழுந்தருளுவார் எனவும் அப்போது ,"யாகபேரர்" என அழைக்கப்படுவார் என்றும் தெரிய வருகிறது.  ஆனால் இப்போது அவர் நம்பெருமாளுடன் கருவறையில் காணப்படவில்லை.  எங்கே இருக்கிறார் என விசாரிக்க வேண்டும்.  இங்கிருக்கும் சிலரை விசாரித்ததில் அவர்களில் பலருக்கு இந்த விஷயமே தெரியவில்லை.  தெரிந்தவர்களைக் கேட்டுச் சொல்கிறேன்.

இந்தக் கோயிலின் மொத்த சந்நிதிகள் 54 ஆகும்.  ஒவ்வொரு சந்நிதிக்கும் தனித்தனியான நிவேதனங்களும் உண்டு.  இவை அனைத்தும் இங்குள்ள திருக்கொட்டாரம் எனப்படும் இடத்தில் சேமிக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கிறது.  ஒவ்வொரு சந்நிதியையும் சேர்ந்த அர்ச்சகர் அல்லது மடைப்பள்ளி ஊழியர் அங்கு வந்து அன்றைய நிவேதனத்துக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் செல்வார்கள். உபயதாரர்கள் அளிக்கும் காணிக்கைப் பொருட்களில் இருந்து அனைத்தும் இங்கேயே சேமிக்கப்படுகின்றன.

இந்த நிவேதனங்கள் பெரும்பாலும் பாலிலும், நெய்யிலுமே செய்யப்படுகின்றன.  விளக்குகள் கூடச் சுத்தமானப் பசு நெய்யிலேயே எரிக்கப்படுகின்றன. ஆதிசேஷனுக்கு மிகவும் பிடித்தது பால் தான் என்பதால் தினமும் இரவு நேரம் அரவணை வழிபாட்டின் போது ஆதிசேஷனுக்குப் பால் அமுது செய்விக்கப்படும்.  பெருமாளுக்கு அரவணை நிவேதனம் செய்யப்படும். இவற்றைப் பிரசாதமாக வழங்குவார்கள்.  இதைத் தவிர மாலையிலும் க்ஷீரான்ன வழிபாட்டின் போது பாலமுது தான் ஶ்ரீரங்கநாதருக்கு நிவேதனம் செய்யப்படும்.படத்துக்கு நன்றி: கூகிளார் வாயிலாக தினகரன் தினசரியில் வந்தது. 


"ரங்கனே தெய்வம், பொங்கலே பிரசாதம், கம்பமே காவிரி" என்பது இங்குள்ள பிரபலமான சொல்வழக்கு.  ஶ்ரீரங்கம் கோயிலில் வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல் எனப்படும் அரவணை, புளியோதரை, அப்பம், அதிரசம், தேன்குழல், திருமால்வடை, தோசை போன்றவற்றோடு தினம் காலை வழிபாட்டில் கோதுமை ரொட்டியும், வெண்ணெயும் நிவேதனம் செய்யப்படுகிறது.  தாயாருக்கு மாலை வேளைகளில் புட்டு அமுது செய்யப்படும்.  வைகுண்ட ஏகாதசியன்று சிறப்பு நிவேதனமாக சம்பார தோசை, செல்வரப்பம்,ஆகியவையும் கடைசி நாளான நம்மாழ்வார் மோக்ஷத்தன்று "கேலிச் சீடை"யும் நிவேதனம் செய்யப்படும்.

3 comments:

வல்லிசிம்ஹன் said...

நம்பெருமாளைப. பற்றி. அறிய. அரிய செய்திகள்
அஅன்பே இருப்பவர்களுக்கு தெரியவில்லை என்றால். எப்படித்தான. தெரிந்து கொள்வது

திண்டுக்கல் தனபாலன் said...

நிவேதனங்களின் செய்முறையை அறிந்தேன்...

ஸ்ரீராம். said...

நிவேதனங்கள் பற்றி ஊன்றிப் படித்தேன்! :)))))

நங்கநல்லூர் ஆஞ்சிக் கோவில் உட்பட எல்லா இடங்களிலும் என் ராசி நான் போகும் நேரம் புளியோதரை கிடைக்காது. எப்பப் பாரு பொங்கல்தானா என்று அலுத்துக் வைப்பார்கள் பெருமாள்களும், ஆஞ்சிகளும்!

:)))))))))))))))))