எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, September 03, 2016

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்~ தில்லி வீரர்களின் கொடூரம்!

வரும் படைகள் எவருடையது என்ற குழப்பத்தில் அனைவரும் ஆழ்ந்தனர். வருபவர்கள் தில்லிப் படையினர் என்பது விரைவில் தெரிந்தது. உடனே அங்கிருந்தோரில் ஒருவன் பல்லக்கைத் தூக்கிக் கொண்டு வேட்டுவர் குடியிருப்பில் மறைந்திருக்கும்படி அறிவுறுத்தினான். உடனே அனைவரும் அழகியமணவாளரின் பல்லக்கைத் தூக்கிக் கொண்டு வேட்டுவர் குடியிருப்பை நோக்கி ஓடினார்கள். நோய்வாய்ப் பட்டிருந்தவர்களோடு பிள்ளை உலகாரியரும் அங்கேயே தங்கி விட்டார்.  அடுத்த சில கணங்களில் அந்தத் தோப்பை தில்லி சுல்தானின் படை நெருங்கி விட்டது. குதிரைகள் ஒரு நூறு ஒரே நேரத்தில் சடசடவென்ற சப்தத்தோடு நின்றன.

அவர்களின் தலைவன் பரிவாரங்களையும் பிள்ளை உலகாரியரையும் பார்த்து, "யார் நீங்கள்? எங்கே போகிறீர்கள்?" என்று வினவ அவர்கள் ராமேஸ்வரத்துக்குத் தீர்த்த யாத்திரை செல்வதாகக் கூறினார்கள். ஆனால் தலைவன் அதை நம்பாமல் உரக்கச் சிரித்தான். பொய் சொல்லுவதாகவும் ஏளனம் செய்தான். ஆனால் ஶ்ரீரங்கத்துப் பரிவாரங்களும் மற்றவர்களும் விடாமல் ராமேஸ்வரமே செல்வதாகக் கூற ராமேஸ்வரம் செல்லும் வழி இதுவல்ல வென்று அந்த தில்லி சுல்தானின் படைத்தலைவன் கூறினான். பின்னர் அவர்கள் ஶ்ரீரங்கத்திலிருந்து வருவதைத் தான் அறிந்து கொண்டு விட்டதாகவும் கூறினான். ஆனால் ஶ்ரீரங்கத்துக்காரர்கள் விடாமல் நோய்வாய்ப்பட்டதால் அங்கே தங்கி இருப்பதாகவும், நிழலும் நீரும் இங்கே கிடைப்பதால் தங்கி இருப்பதாகவும் கூறினார்கள். பின்னர் அவன் பார்வை அங்கே படுத்திருந்த உலகாரியர் மேல் பட்டது. அவரின் தீர்க்கமான நாமத்தைப் பார்த்த அவன் அவர் அருகே சென்று அவரைப் பார்த்து எழுப்பினான்.

"ஹே, கிழவா! எழுந்திரு! உன்னைப் போல் நாமம் தரித்தவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள் என்பதை அறிவேன். நீ உண்மையைச் சொல்ல வேண்டும். எங்கே போகப் புறப்பட்டீர்கள்?" என்று வினவினான். உலகாரியரோ, "நாங்கள் ஶ்ரீவைணவர்கள். பகவானின் திருநாமமே எங்களுக்கு அமிர்தம். அதற்கு மேல் சொல்ல ஏதும் இல்லை!" என்றார். இதைக் கேட்டுக் கடுங்கோபம் கொண்ட அந்தத் தலைவன் தன் கையிலிருந்த சாட்டையை எடுத்து ஓங்கி அவரை அடிக்க வேண்டும் என்று கையைத் தூக்கக் கூட்டத்திலிருந்த பலரும் ஓடோடி வந்து உலகாரியரை மறைத்துக் கொண்டு, எங்களை அடித்துக் கொள், அவரை ஒன்றும் செய்யாதே! என்று அலறினார்கள்.  கோபம் கொண்ட அந்தத் தலைவன் சாட்டையை ஓங்கி அங்கிருந்த ஓர் ஆளின் மேல் அடித்தான். வீறிட்டுக் கத்தினான் அவன். மீண்டும் மீண்டும் சாட்டையை ஓங்கிக் கொண்டு அதே ஆளையே திரும்பத் திரும்ப அடிக்க அவன் அடி வாங்குவதைக் கண்டு தாங்க முடியாத பிள்ளை உலகாரியர் மயங்கிக் கீழே விழுந்தார்.

பரிவாரங்கள் கோபத்தில் கொந்தளித்தனர். அப்போது ஒருவன் ஓடோடி வந்து, தலைவனைப் பார்த்து, "நிறுத்துங்கள், பிரபு!" என்று கத்தினான். யாரென்று பார்த்தால் அரங்கனோடு வேட்டுவர் குடிக்கு மறைந்திருக்கச் சென்றவர்களில் ஒருவன் அங்கே வந்து தாங்கள் யாத்திரிகர்கள் தாம் என்றும் அதை தில்லி சுல்தானின் ஒற்றர் தலைவனுக்கு நிரூபித்துக் காட்டிவிட்டதாகவும் கூற தலைவனுக்கு ஆச்சரியம். யார் அந்த ஒற்றர் தலைவன் என்று ஆச்சரியத்துடன் கேட்டான். அதற்கு அந்த ஆள் அவரைப் பெயர் மூலம் அறிந்ததில்லை என்றும் அடையாளம் தெரியும் என்று கூறிவிட்டுக் கன்னத்தில் பெரிய மச்சம் இருக்கும் என்றும் கூறினான். "அவரா" என்று தயங்கிய தலைவன் அவர் தான் என்றும் சொல்வதற்கும் நிரூபித்ததற்கும் என்ன அத்தாட்சி என்று கேட்டான்.

அதற்கு வந்தவன் அவரே இங்கே பக்கத்தில் திருக்கோட்டியூரில் இருப்பதாகவும் இங்கே இருந்து அரை நாழிகைப் பயணத்தில் அவரைக் காணலாம் என்றும் கூறினான். அதற்குத் தலைவன் அவனையே அந்த ஒற்றர் தலைவனைக் காட்டும்படி கூற இருவரும் திருக்கோட்டியூருக்குக் கிளம்பினார்கள். அனைவரும் உடன் சென்றனர். அரை நாழிகைக்கும் குறைவான நேரத்திலேயே திருக்கோட்டியூரை அடைந்தனர். எல்லா இடங்களிலும் தேடியவர்களுக்குக் கடைசியில் ஒரு வீட்டுத்திண்ணை மேல் மச்சக்காரன் இருப்பதையும் அவர்கள் தலைவனான குலசேகரன் என்பான் அங்கே இருந்து மச்சக்காரனுக்குப் பணிவிடை செய்வதையும் பார்த்தார்கள். கூட்டமாக ஆட்கள் வருவதைப் பார்த்தக் குலசேகரன் என்பான் திரும்பிப்பார்க்க தில்லிப் படை வீரர்களையும் அவர்களுடன் ஶ்ரீரங்கத்து ஆள் ஒருவனையும் பார்த்தான்.

ஶ்ரீரங்கத்து ஆள்குலசேகரனிடம் தாங்கள் யாத்திரிகர்கள் என்பதை நம்பாமல் தில்லி வீரர்கள் கொடுக்கும் தொந்திரவைச் சொன்னான்.அரங்கன் ஊர்வலத்தைச் சேர்ந்தவர்கள் என்று நினைத்துத் தொந்திரவு கொடுப்பதாகவும் அனைவரையும் சாட்டையால் அடிப்பதையும் கூறி உங்கள் ஒற்றர் தலைவனே இதை அறிவார் என்று கூறி இங்கே அழைத்து வந்ததாகச் சொன்னான். அப்போது இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அந்த மச்சக்கார ஒற்றர் தலைவன் மெல்ல முனகவும் குலசேகரன் அவனைத் தூக்கிப் பிடித்துக் கொண்டான். தன் மடியில் சாய்த்த வண்ணம் அமர்த்திக் கொண்டான்.

Saturday, August 20, 2016

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! அரங்கனும் பட்டினி!

இந்த சுரதானியையும் ஒருவன் காதலித்ததாகவும், அரங்கனையே நினைத்திருந்த சுரதானி இறந்த பின்னர் அவள்  விருப்பமான அரங்கன் மேல் அவள் கொண்ட காதல் அவனுக்கும் வந்துவிட்டதாகவும், சுரதானி காதலித்த அந்த அழகிய மணவாளர் மேல் அவனுக்கும் ஈர்ப்பு பிறந்துவிட்டதாகவும் ஒரு கூற்று உண்டு. அந்த அரங்கன் மேல் கொண்ட காதல் மாறாமல் பார்க்கும் பொருளை எல்லாம் அரங்கனாகவே அவன் பாவித்ததாகவும் அப்படி ஓர் நாள் அவன் சுட்ட ரொட்டியை எடுத்துக் கொண்டு ஓடிய கோழியையும் அரங்கனாகவே பாவித்து, நெய் தடவாத ரொட்டியை எடுத்துச் சென்று விட்டாயே அரங்கா என்று கூவிய வண்ணம் தொடர்ந்தவனுக்கு ஓர் அற்புத அனுபவம் கிட்டியதாகவும், அந்த நேரமே அவன் ஜீவன் முக்தனாக மாறி விட்டான் என்றும் அவனுக்கு முக்தி கிடைத்து அரங்கனின் கழல்களை அடைந்ததாகவும் சொல்கின்றனர்.

ஆண்டாள் வைத்த பக்திக்குப் பின்னர் சுரதானியின் காதலே அதிகம் பேசப்படுகிறது. ஆகவே பின்னர் வந்த நாட்களில் கோவிலில் சுரதானியின் உருவத்தைச் சித்திரமாக எழுதி வைத்து தினம் காலை கோதுமை ரொட்டி, கிச்சடி என்னும் பருப்புச் சேர்த்த பொங்கல் ஆகியவற்றை நிவேதனமாகப் படைப்பதாகவும் அந்த நேரத்தில் அரங்கனுக்குக் கைலி உடுத்துவதாகவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு அது இன்று வரை தொடர்ந்தும் வருகிறது. அரங்கன் விக்ரஹம் மாற்றில்லாப் பசும்பொன்னால் செய்யப்பட்டிருப்பதாக ஓர் கூற்று. மேலும் விக்ரஹத்தினுள் வைர, வைடூரியங்களையும் நவரத்தினங்களையும் புதைத்து மறைத்து வைத்திருப்பதாகவும் சுல்தானின் வீரர்கள் நினைத்தனர்.

ஆனால் சுரதானியின் தந்தை சுரதானி இறந்த பின்னர் பாரசீகமே திரும்பினாலும் உறவினர்களில் சிலர் இங்கேயே இருந்து வந்தனர். அவர்களுக்கு அந்த அரங்கன் சிலையில் ஏதோ மாய, மந்திரம் இருப்பதாகவும், வசிய சக்தி அதில் இருப்பதாகவும் நம்பினார்கள். ஆகவே அந்த விக்ரஹத்தை எப்படியேனும் தேடி அடைந்து உருக்கி உலோகமாக மாற்றி விடவேண்டும் என்னும் வெறியில் விக்ரஹத்தைத் தேடி அலைந்தனர். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோரிக்கைக்காக நம் அரங்கனைத் தேடி அலைந்து கொண்டிருந்தனர். ஆனால் அரங்கனோ எவரும் அறியாமல் காட்டுக்குள் ஒளிந்து ஒளிந்து பரிசனங்களாலும் முக்கிய பக்தர்களாலும் எடுத்துச் செல்லப்பட்டு வந்தான்.

திருக்கோஷ்டியூருக்கு அருகே உள்ள சோலைகளில் அரங்கன் மறைத்து வைக்கப் பட்டிருந்தான், ஊர் மக்களுக்கே அந்த விஷயம் தெரியாது. அரங்கனுடன் வந்தவர்கள் ஊருக்குள் சாமான்கள் வாங்க வந்தபோது ஊர் மக்கள் இல்லாமல் ஊரே வெறிச்சோடி இருப்பதைக் கண்டு அங்கிருந்த ஓரிருவரிடம் விசாரித்தால் டில்லி சுல்தானின் சூறைக்கும் படையெடுப்புக்கும் பயந்து மக்கள் ஊரை விட்டே ஓடிவிட்டதாகத் தகவல்கள் கிடைத்தன.  ஆகவே உணவுப் பொருள்கள் ஏதும் கிடைக்காமல் அரங்கனுடன் சென்ற பலருக்கும் உடல் நலிவு ஏற்பட்டது. உலகாரியரின்  உடலும் மிகவும் நலிந்து விட்டிருந்தது.  முன்பிருந்த பொலிவு அவரிடம் இப்போது இல்லை.  நகருக்குள் வந்து அவருக்காகக் கஞ்சிக்குச் சிறிதேனும் உணவு சம்பாதிக்க வந்த மக்களும் ஏதும் கிடைக்காமல் தயங்கிக் கொண்டிருந்தனர்.

அங்கே வந்த ஓர் அரங்கவாசியைக் கண்டதும் அவன் டில்லி ஒற்றனாக இருப்பானோ என்றே நினைத்துக் கொண்டு அனைவரும் ஓட்டம் பிடித்தனர். இவன் கண்களில் படாமல் அரங்கன் ஊர்வலத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் முடிவு கட்டினார்கள். ஆனால் உண்மையில் வந்தவன் ஒற்றனே அல்ல. நல்லவனே ஆகும். எல்லோரும் ஒருவர் மற்றவரைச் சந்தேகப்படும் அளவுக்கு மனம் வெறுத்துப் போய் மாறி விட்டனர். இதைக் கண்ட அந்த அரங்கவாசிக்குத் தன் நிலைமை கண்டு வேதனை ஏற்பட்டது.  ஆனால் அவனைக் கண்டு தப்பி ஓடியவர்கள் அரங்கன் ஒளிந்திருந்த இடம் சென்று டில்லி ஒற்றன் தங்களைத் தேடி வந்திருப்பதாகத் தெரிவித்தனர். உலகாரியரின் உடல்நிலை இந்த ஆலோசனைகளில் கலந்து கொண்டு கருத்துச் சொல்லும்படியாக இல்லை.

அங்கிருந்த வேறொரு முதியவர் பார்த்துச் சொன்னதும் அனைவரும் அப்போது ராகுகாலமாக இருந்தாலும் ஆபத்துக்குப் பாவமில்லை என்று அரங்கனைத் தூக்கிக் கொண்டு கிளம்பினர். ஒரே ஓட்டமாக ஓடினார்கள். அவர்கள் நடக்க அவர்கள் சென்ற பாதை சுருங்கிக் கொண்டே வந்தது. ஓர் இடத்தில் ஶ்ரீபாதம் தாங்கி ஒருவன் மயங்கி விழ அனைவரும் அரங்கனின் பல்லக்குக் கவிழாமல் பாதுகாத்துக் கீழே இறக்கிவிட்டு ஶ்ரீபாதம் தாங்கிக்கு மயக்கம் தெளிவித்தார்கள். ஆனால் பல நாட்கள் உணவில்லாமல் இருந்த அவனுக்கு மயக்கம் தெளிந்தாலும் முன்போல் நடமாட முடியவில்லை.  உலகாரியரிடம் கேட்டுக் கொண்டு அருகிலுள்ள கிராமத்துக்குச் சென்றால் அது வேட்டுவரின் கிராமமாக இருந்தது. அங்கிருந்து வேறிடம் செல்லலாம் என அனைவரும் முயன்றால் சிலரால் எழுந்து நடமாடவே முடியவில்லை. ஒரு வாய்த் தண்ணீராவது வேண்டும் என்று பலரும் அங்கிருந்து எழுந்திருக்க முடியாமல் படுத்து விட்டனர்.

அப்போது அங்கிருந்த பக்தர்கள் பலரும் அரங்கனுக்கும் அமுது படைக்க முடியாமல் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் சோதனையிலிருந்து மீள்வது எப்படி என்று கலங்கினார்கள். உலகாரியர் இது அரங்கன் நமக்கு வைத்திருக்கும் சோதனை என்றும் பசி, களைப்பு எல்லாம் நம் போன்ற சாமானியர்களுக்குத் தான் என்றும் அரங்கனுக்கு இல்லை என்றும் தெளிவூட்டினார். இத்தகைய சோதனைகள் மூலம் நம் பக்தி புடம் போடப்படுவதாகவும் உலகாரியர் கூறினார். உணவைத் தேடிச் சென்ற மக்கள் அங்கிருந்த வேட்டுவர் தலைவனிடம் நடந்ததை நடந்தபடியே கூறி உதவி கேட்டான். தானியங்களும் தண்ணீரும் கொடுத்து உதவும்படி கேட்டார்கள். நடந்ததைக் கேட்டறிந்த வேட்டுவர் தலைவன் குடியிருப்பில் இருந்த புல்லரிசி, தினை மாவு, தேன், பனங்கிழங்குகள், காட்டுக் கிழங்குகள், பழங்கள் என்று சேகரித்துக் கொண்டு அவர்களுடன் சென்றான்.

பின்னர் அரங்கனின் பல்லக்கின் எதிரே நின்று கொண்டு அனைவரும் அவர்கள் பாணியில் ஒரு நடனம் செய்து அரங்கனுக்கு அஞ்சலி செய்தனர். வேட்டுவர் குடியிருப்பின் ஊருணிக்கிணற்றிலிருந்து குடிநீரும், குடியிருப்புகளிலிருந்து காய்ச்சிய பாலும் வந்தது. அந்தப் பாலில் கொஞ்சம் போல் ஶ்ரீபாதம் தாங்கிக் கொடுத்தால் நீண்ட நாட்கள் உணவுண்ணாமல் இருந்த காரணத்தாலோ என்னமோ அவரால் அதைக் குடிக்க முடியவில்லை. கொஞ்சம் போல் குடித்தவர் பின்னர் அனைத்தையும் வாந்தி எடுத்துவிட்டுப் பின்னர் மூச்சு குறுக அப்படியே கிடந்தார்.

அந்தச் சமயம் அங்கே இருந்த பலருக்குள்ளாகவும் தில்லி ஒற்றன் என்று நினைத்தவன் பெரிய வீரனாக இருந்ததால் அவனுடைய பாதுகாப்பு தங்களுக்கு வேண்டும் என்றும், உண்மையில் அவன் அரங்கவாசி என்றும் ஒருவருக்கொருவர் விவாதித்துக் கொண்டிருந்தனர். அந்த வீரனுடன் நண்பனாக இருந்த இன்னொருவனோ அவன் அரங்க வாசி தான் ஆனால் இப்போது ஒற்றனாக மாறிவிட்டான் என்றும் அவன் தங்களுடன் சேரக் கூடாது என்றும் அரங்கனை தில்லிக்காரர்களிடம் காட்டிக் கொடுத்துவிடுவான் என்றும் கடுமையாக மறுத்துக் கொண்டிருந்தான். அப்போது அங்கே ஒரு பெரிய படை வீரர்கள் குதிரைகளில் வரும் மாபெரும் சப்தம் அலை ஓசை போல் கேட்டது. அனைவர் நெஞ்சமும் தடக் தடக் என்று அடித்துக் கொண்டது.

Thursday, May 19, 2016

ஶ்ரீரங்கரங்க நாதனின் பாதம் பணிந்தோம்! சுரதானியின் பக்தி!

அழகிய மணவாளர் விக்ரஹம் இருக்குமிடம் தெரிந்து கொண்ட அந்தப் பெண்மணி மீண்டும் நெடுந்தூரம் பயணம் செய்து தில்லியில் இருந்து ஶ்ரீரங்கம் வந்தடைந்தாள். திருவரங்கம் வந்ததும் கோயில் ஊழியர்களைக் கூட்டி அவர்களிடம் அழகிய மணவாளரின் இருப்பிடத்தைக் குறித்துக் கூறினாள். அவரை எப்பாடு பட்டேனும் மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்றும் வற்புறுத்தினாள். அனைவரும் சம்மதித்துப் பாடத்தெரிந்த சிலரும், ஆடத்தெரிந்த சிலரும் ஒன்று கூடினார்கள். சுமார் அறுபது பேர்களை ஆடல், பாடல்களில் தேர்ந்தவர்களாகக் கண்டு எடுத்து அனைவரும் மீண்டும் தில்லி நோக்கிப் பயணித்தார்கள்.

அவர்கள் அனைவரும் உசேன் கசன்பி பாதுஷாவின் மாளிகைக்குச் சென்று பாதுஷா மனம் மகிழும் வண்ணம் ஆடல், பாடல்களில் தங்கள் திறமையைக் காட்டினார்கள். மனம்மகிழ்ந்த பாதுஷா அவர்களுக்கு வேண்டிய பரிசில்களை மனம் நிறையும் வண்ணம் கொடுப்பதாகக் கூறினார். அதைக் கேட்ட அவர்கள் தங்களுக்கு இந்த விலை மதிக்கக் கூடிய தங்கம், வெள்ளி, நவரத்தினங்கள், ஆடை, ஆபரணங்கள் தேவையில்லை என்றும் விலை மதிக்க முடியாத வேறொரு பரிசு பாதுஷாவின் பாதுகாப்பில் இருப்பதாகவும், அது அவர்களைச் சேர்ந்தது தான் என்றும், படையெடுப்பின் போது இங்கே வந்து விட்டது என்றும் அதைத் திரும்பக் கொடுத்தால் போதும் என்றும் இறைஞ்சினார்கள். அப்படிப் பட்ட பரிசு என்ன என்று பாதுஷா கேட்டதற்குத் திருவரங்கன் சிலை தான் என்றனர்.

அதைக் கேட்ட பாதுஷா அந்தச் சிலையில் அப்படி என்ன இருக்கிறது? அதைப் போய்க் கேட்கிறீர்களே என்று சொல்லிவிட்டு அந்தச் சிலை அந்தப்புரத்தில் அவன் மகள் விளையாடுவதற்கு எடுத்துப் போயிருப்பதாகவும் அவளிடமிருந்து அதை எடுத்துக் கொள்ளுமாறும் கூறினான்.  சந்தோஷம் அடைந்த நாட்டியராணிகள் அந்தப்புரம் சென்று சுரதானியிடம் விக்ரஹத்தைக் கேட்டு வாங்கச் சென்றார்கள். அங்கே சென்றால் விக்ரஹம் சர்வாலங்கார பூஷிதராக அலங்கரிக்கப் பட்டுச் சுரதானி அதன் எதிரே மெய்ம்மறந்து தன்னையும் இவ்வுலகையும் மறந்து அமர்ந்திருந்தாள்.  அவள் முகமே தெய்விகமாகக் காட்சி அளித்தது. இதைக் கண்ட நாட்டியப் பெண்கள் எப்படி எடுத்துச் செல்வது என்று பயந்து போனார்கள். இந்த அழகிய மணவாளர் தன் அழகால் இந்தத் துலுக்கப் பெண்ணையும் தன் வசப்படுத்தி விட்டாரே எனப் பேசிக் கொண்டார்கள். பின்னர் சாதாரணமாகக் கேட்டால் இவள் தரமாட்டாள் என்பதைப் புரிந்து கொண்டு சுரதானியிடம் மெல்ல மெல்லப் பேச்சுக் கொடுத்தார்கள்.

பின்னர் அவளுக்குப் பிரசாதம் கொடுப்பதாக நடித்து அந்தப் பிரசாதத்தில் மயக்க மருந்தைக்கலந்து கொடுத்துவிட்டார்கள். அதை உண்ட சுரதானியும் மயக்கத்தில் ஆழ்ந்து போக விக்ரஹத்தைத் தூக்கிக் கொண்டு அரங்கம் திரும்பினார்கள் நாட்டியராணிகள். ஆனால் இங்கே மயக்கம் தெளிந்து எழுந்த சுரதானியோ விக்ரஹத்தைக் காணாமல் கலக்கம் அடைந்தாள். அழுது புலம்பினாள். அது இல்லாமல் தான் உயிர் வாழ மாட்டேன் என்று தன்னைத் தானே மாய்த்துக் கொள்ளவும் முயன்றாள். பாதுஷாவுக்குச் செய்தி போக தன் மகளின் இந்த அதீதக் காதல் அவனை ஆச்சரியப் படுத்தியது.  மகளின் பாசத்தின் ஆழத்தைக் கண்ட அவன் உடனே சிறு படை ஒன்றைத் தயார் செய்து விக்ரஹத்தைத் தூக்கிச் சென்றவர்களைப் பின் தொடருமாறு பணித்தான். சுரதானி தில்லியில் இருக்க மனமின்றித் தானும் அந்தப் படையோடு சென்றாள்.

தில்லி சுல்தான் தங்களைத் தொடருவது கண்டு அந்தப் பாடகர்களின் குழு ஶ்ரீரங்கத்திற்குச் செல்லாமல் வழியிலேயே திருமலைக்குத் திரும்பி விட்டது. அங்கே அழகிய மணவாளரை ஒளித்து வைத்தார்கள். விக்ரஹத்தைத் தேடித் திருவரங்கம் வந்த சுரதானி அங்கே அது இல்லாமல் சோகம் மிகுதியாகத் தன் உயிரை விட்டு விட்டாள். இதை அறிந்த கோயில் ஊழியர்கள் கோயிலின் கர்பகிரஹத்துக்கு எதிரே இருக்கும் அர்ஜுன மண்டபத்தில் இவளுக்காகத் தனி சந்நிதி ஏற்படுத்தினார்கள். இஸ்லாமியர் வழக்கப்படி விக்ரஹ ஆராதனை கூடாது என்பதால் இங்கே துலுக்க நாச்சியார் என்னும் பெயரில் சுரதானிக்கு வண்ணச் சித்திரமே காணப்படுகிறது. அகிலும், சந்தனமும் கலந்த தூபம் போடுவார்கள் இவருக்கு. இவருக்கு அரங்கநாதர் கைலி அணிந்தே காட்சி கொடுத்து அருளுவார்.  நிவேதனமும் சப்பாத்தி, பால், வெண்ணெய் என்று அளிப்பதாகக் கூறுகின்றனர்.

அநேகமாக எல்லாப் பெருமாள் கோயில்களிலும் இப்படி ஒரு துலுக்க நாச்சியார் சந்நிதி இருக்கிறது. இதைப் போலவே கர்நாடகா மேல்கோட்டையில் செல்வப் பிள்ளையும், அழகர் கோயிலில் கள்ளழகரும் துலுக்க நாச்சியாரைத் திருமணம் செய்து கொண்டதாக ஐதீகம்.

Sunday, May 08, 2016

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! சுரதானியின் பக்தி!

அம்சகலா விரும்பிய வண்ணம் நிறைவேற்ற சிங்கப்பிரான் மிகவும் கஷ்டப்பட்டார். திருமடப்பள்ளிக்குச் சென்று அங்கு அடுப்பினருகே சிந்திக்கிடந்த அரிசிகளைத் திரட்டி அம்சகலாவுக்கு வாய்க்கரிசி போட பத்திரப்படுத்தினார்.  அந்த அடுப்பிலிருந்தே இரண்டு எரியும் கட்டைகளையும் எடுத்துக் கொண்டார். அரங்கனின் துணிகளைத் துவைக்கும் ஈரங்கொல்லிகள் இருக்கும் பகுதிக்குச் சென்று அவர்களிடம் பெருமாளின் பரிவட்டம் இருக்கிறதா எனத் தேடிப்பார்த்துக் கிடைத்த பழைய பரிவட்டத்தை எடுத்துக் கொண்டார். இனி மாலை ஒன்று தான் தேவை. அதற்கும் ஓர் வழி கண்டு பிடித்த சிங்கப்பிரான் அருகிலுள்ள சோழங்கநல்லூரில் குடி கொண்டிருந்த ஆநிரை மேய்த்த பெருமானுக்குச் சூட்டப்பட்டிருந்த மாலைகளில் ஒன்றை வேண்டிப் பெற்றார். பின்னர் எல்லாவற்றையும் பயன்படுத்தி அம்சகலாவின் இறுதிச் சடங்குகளை நிறைவேற்றினார்.  அதன் பின்னர் இந்த உயிர்த் தியாகம் குறித்துத் திருவரங்கம் கோயிலின் அதிகாரிகள் திருவரங்கம் மீண்டும் உன்னதம் அடைந்த பின்னர் அம்சகலாவின் கடைசி விருப்பத்தை நிறைவேற்றி வைத்ததாகவும், அதன் பின்னர் கோயிலைச் சார்ந்த எந்த தேவதாசி இறந்தாலும் இத்தகைய மரியாதைகளை அளித்து வந்ததாகவும் தெரிகிறது. இது பல வருடங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கிறது. இப்போது இல்லை.

இங்கே அரங்கனோடு சென்றவர்கள் ஊர்ப்பக்கம் சென்று அரங்கனின் நிவேதனத்துக்கும் மற்றும் பரிஜனங்களுக்கும் மற்றவர்களுக்கும் உணவுப் பொருட்கள் வாங்கி வந்தனர்.  அதன் பின்னர் அவர்கள் மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடங்கினார்கள். அப்போது தில்லி சுல்தானின் ஆள் ஒருவன் அவர்களைத் தொடருவதாக நினைத்துக் கொண்டு அவனைத் தனிமையில் சென்று ஓரிருவர் சந்தித்தார்கள்.  தில்லி சுல்தானின் ஆளை மரத்திலிருந்து பறித்த மிளாறுகளால் அடித்து வீழ்த்தினார்கள்.  ஆனால் அவனுக்குத் திருவரங்கன் மேல் இருந்த அளவு கடந்த அன்பைப் பார்த்து அவனைக் குறித்துக் கேட்டார்கள். அவன் தான் 27 வருடஙக்ளுக்கு முன்னர் மாலிக்காபூர் தலைமையில் நடந்த யுத்தத்தின் போது அவனால் சிறைப்பிடிக்கப்பட்டு தில்லி சென்று மதம் மாற்றப்பட்டதாகத் தெரிவித்தான். அப்போது தான் முதல் முதல் அரங்கனைக் குறித்து அறிந்ததாகவும் தெரிவித்தான்.

மாலிக்காபூர் தென்னாட்டை முற்றுகையிட்டுத் திரும்பும்போது கணக்கற்ற செல்வத்தைக் கொள்ளையடித்துச் சென்றான். பொன் மட்டுமே 9000 மணங்கு என்று கணக்குச் சொல்கின்றனர்.  அவற்றை அவன் அனைவருக்கும் பங்கிட்டுக் கொடுத்தான். அப்போது தான் இவை தவிர திருவரங்கக் கோயிலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட அரங்கநாதனின் அழகிய மணவாளன் என்னும் பெயர் கொண்ட அர்ச்சாவதார விக்ரஹமும் ஒன்று இருந்தது. அந்த விக்ரஹம் அப்துல்லா உசேன் என்னும் பாதுஷாவிடம் கிடைத்தது. அவன் மகளான சுரதானி தந்தைக்குக் கிடைத்த பரிசில்களை எல்லாம் பார்த்தவளுக்கு இந்த அரங்கநாதனின் விக்ரஹத்தின் அழகு கண்ணையும், மனதையும் கவர அந்தத் திருவரங்கன் விக்ரஹத்தைத் தனக்கு வேண்டுமென்று கெட்டுப் பெற்றுக் கொண்டாள். அந்த விக்ரஹத்தின் பேரில் அசாத்திய பிரேமையும் கொண்ட அவள் ஒரு தெய்விகமான மனோநிலைக்கு ஆட்பட்டாள்.

அதற்கு அனைத்து அலங்காரங்களையும் செய்து அதன் முன்பாக தன்னை மறந்த நிலையில் பலமணிநேரம் அமர்ந்திருப்பது அவளுக்கு வாடிக்கை. அதை ஒரு கணமேனும் பிரியாமல் பாதுகாத்து வந்தாள். இங்கே திருவரங்கத்திலோ அடியார்களுக்கு அழகிய மணவாளப் பெருமான் இல்லாமல் அவரைப் பார்க்காமல் ஒரு நாள் கழிவதே பெரிய விஷயமாக இருந்து வந்தது. அதிலும் திருக்கரம்பனூரில் இருந்த அடியாள் ஒருத்தி எம்பெருமானைப் பார்க்காமல் உணவே அருந்த மாட்டாள். அவள் விக்ரஹம் கொள்ளை அடிக்கப்பட்டதும் தில்லிக்குப் போய்விட்டதையும் அறிந்து கொண்டு அது போன வழியே தானும் பிரயாணப்பட்டாள். பல மதங்கள் பயணம் செய்து அவள் தில்லியை அடைந்தாள். விக்ரஹம் சுரதானியிடம் இருப்பதை அறிந்து கொண்டாள்.

Tuesday, April 26, 2016

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! --உபதளபதி இறந்தான்!

அம்சகலாவால் தள்ளப்பட்ட உபதளபதி கீழே விழுந்து இறந்தது தற்செயலான ஒன்றாகவே தில்லிப் படைகளால் கருதப்பட்டது. எவருக்கும் அவன் எப்படி இறந்தான் என்னும் மர்மம் புரியவில்லை.  கோபுரத்தின் மேலேறிப் பார்த்தும் தடயம் ஏதும் கிடைக்கவில்லை. தவறி விழுந்ததாகவே எண்ணிக் கொண்டு அவன் உடலை அடக்கம் செய்தார்கள். இங்கே அழகிய மணவாளபுரத்தில் சிங்கப்பிரான் என்பார் சகல மரியாதைகளுடனும், மேள, தாள வாத்தியங்களுடனும், பரிவாரங்களுடனும் ஶ்ரீரங்கம் நோக்கிக் கிளம்பினார். அவருக்கு அம்சகலா அங்கே போனதும் நடந்த விபரங்களும் தெரியாது. தில்லிப் படைகளின் நடமாட்டங்களையும் முன்னேற்றங்களையும் கணிக்க வேண்டுமானால் அவர்களுடன் நட்புப் பாராட்டுவது போல் இருந்து தான் பார்க்க முடியும். ஆகவே அவர் கிளம்பி இருந்தார். திருவரங்கத்தின் சில சொத்துக்கள் அழகிய மணவாளபுரத்தில் இருந்தன. அவற்றைக் கண்காணித்துக் கொண்டு இருந்தார் அவர்.

தில்லிப் படைகள் முகாம் போட்டிருந்த இடத்தை நோக்கிச் சென்றவர் உபதளபதி ஒருவன் கோபுரத்திலிருந்து விழுந்து இறந்த செய்தியைக் கேட்டுக் கொண்டார். பின்னர் மற்றொரு உபதளபதியைக் காணவேண்டும் என்று கேட்டுக் கொண்டு உள்ளே சென்றார். உபதளபதியிடம் தில்லி சுல்தானின் ஆட்சியைத் தாங்கள் ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்துக் கொண்டார். தாம் கொண்டுபோயிருந்த பரிசுகளையும் உபதளபதிக்கு அளித்தார். முத்துக்கள், பவளங்கள், நீலங்கள், வைரக்கற்கள், தங்கக்காசுகள், தங்கக்கட்டிகள், ஆபரணங்கள், வெள்ளியினால் ஆன பொருட்கள், பட்டுப் பட்டாடைகள், அந்த நாட்களில் பண்டமாற்றுக்கெனப் பயன்பாட்டில் இருந்து வந்த யவனப் பொற்காசுகள், யானைகள், குதிரைகள், உணவுப் பொருட்கள், வாசனைப் பொருட்கள் என அனைத்தும் இருந்தன. அதைப் பார்த்த உபதளபதியின் கண்களில் பேராசை மின்னியது. மிகவும் மகிழ்ந்து போனான்.

இதைத் தவிர பாடகர்கள் பலர் சுருதி போட்டவண்ணம் உள்ளே வந்து நமஸ்கரித்தனர். இன்னும் சிலர் இடுப்பளவு உயரமுள்ள பெரிய பெரிய குடங்களில் திராக்ஷை மதுவை நிரப்பிக் கொண்டு வந்தனர். மதுவைப் பார்த்த உபதளபதி அதன் வாசனையிலேயே கிறங்கிப் போனான். பின்னர் சந்தேகத்துடனேயே சிங்கப்பிரானைப் பார்த்து, "நீ யார்? ஏன் இவற்றை எல்லாம் எனக்குப் பரிசளிக்கிறாய்? காரணம் என்ன?" என்று சந்தேகத்தோடு கேட்டான். அதை ஹொய்சள வீரன் ஒருவன் மொழிபெயர்த்துச் சொல்ல சிங்கப்பிரான் நாங்கள் உங்கள் பிரஜைகள். உங்களுக்குப் பரிசாகக் கொண்டு வந்துள்ளோம், என்றெல்லாம் எடுத்துச் சொல்லியும் நம்பாத உபதளபதி அந்த மதுவை சிங்கப்பிரானையே எடுத்து அருந்தச் சொன்னான். மதுவைத் தான் பருகுவதில்லை என்று அவர் எத்தனை சொல்லியும் கேட்காமல் அவரை வற்புறுத்தவே அவர் ஓர் கிண்ணத்தில் சிறிதளவு ஊற்றிக் குடித்துக் காட்டினார். பின்னரே தயக்கமின்றி அந்த மதுவை ஏற்றுக் கொண்டான் உபதளபதி.

பின்னர் அந்த அறைக்கு ஒரு அழகான மங்கையும் வந்து சேர்ந்தாள். அவள் அழகைப் பார்த்து வியந்தான் உபதளபதி. அவள் தன் பெயர் எம்பெருமானடியாள் என்று கூறினாள். அவளை அழகிய மணவாளபுரத்தின் ராணி என அறிமுகம் செய்தார் சிங்கப்பிரான்.  அவளை அருகே அழைத்து உபதளபதியை வணங்கச் செய்தார். அவள் சிங்கப்பிரானிடம் தான் உபதளபதியின் பாதுகாப்பில் இருக்க விரும்புவதாகச் சொல்ல அதை அப்படியே மொழி பெயர்க்கச் சொன்னார் சிங்கப்பிரான். அதைக் கேட்ட உபதளபதிக்கு மகிழ்ச்சி மீதூறியது. அவள் மேலும் திருவரங்கத்திற்கு உரிய நிலங்களையும் மற்றச் சொத்துக்களையும் சிங்கப்பிரான் நிர்வாகம் செய்யும்படி கேட்டுக் கொள்வதாகக் கூற அதையும் உபதளபதி ஒப்புக் கொண்டான். உரிய கப்பம் செலுத்திவிடுவதாக சிங்கப்பிரானும் கூறினார்.

இப்படியாக உபதளபதியைச் சமாதானம் செய்துவிட்டு சிங்கப்பிரான் கோயிலை நோக்கி நடந்தார். கிழக்கு வாயிலருகே செல்கையில் யாரோ தீனக்குரலில் முனகும் சப்தம் கேட்டது. யாரென்று பார்த்தால் துளசிச் செடிகளுக்கு இடையில் அம்சகலா கிடந்தாள். குற்றுயிரும் குலை உயிருமாக இருந்த அவள் உடலில் இருந்து ரத்தம் ஏராளமாக சேதம் ஆகி இருந்தது என்பது அங்கே தெரிந்த ரத்தச் சேற்றிலிருந்து தெரிந்தது. அவள் எப்படி இங்கே வந்தாள், என்ன ஆயிற்று என்றெல்லாம் புரியாத சிங்கப்பிரான் அவளைக் கீழே குனிந்து சோதித்துப் பார்த்தார். உயிர் கொஞ்சம் போல் இருப்பதைத் தெரிந்து கொண்டு அவளை அழைத்தார். மிகப் பிரயாசையுடன் கண்களைத் திறந்த அம்சகலா மிகுந்த சிரமத்துடன் அவரை யாரெனப் புரிந்து கொண்டாள்.

பேச வாயெடுத்த அவளால் பேச முடியவில்லை. என்றாலும் மெல்ல மெல்லத் தான் இங்கே வந்து தில்லித் தளபதியைப் பழி வாங்கிய கதையைச் சொன்னாள். திருவரங்கத்துக்காகவும் அரங்கனுக்காகவும் இப்படி எல்லாம் தியாகம் செய்த அம்சகலாவை நினைத்து நினைத்து வருந்திய சிங்கப்பிரான் அவள் தியாகம் எவ்வளவு பெரிது என்று உணர்ந்து கொண்டார். அவள் மனதில் ஏதேனும் ஆசை இருந்தால் நிறைவேற்றி வைப்பதாகச் சொல்ல அவளும் திருமடைப்பள்ளியிலிருந்து தனக்கு வாய்க்கரிசியும், பரிவட்டமும், கோயில் மாலையும் கொண்டு வந்து போட்டு மடைப்பள்ளியில் இருந்து கொள்ளி எடுத்து வந்து தன்னை எரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாள்.

Thursday, April 21, 2016

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! வெள்ளைக் கோபுரத்தின் கதை!

ஏற்கெனவே இந்த நர்த்தகியின் தோழியின் தாய் ஶ்ரீரங்கத்துக்கு ஏற்பட்டிருந்த அவலங்களையும், நம்பெருமாள் ஒரு பக்கமும், ரங்க நாச்சியார் இன்னொரு பக்கமும் தனித்தனியாகப் பிரிந்து சென்றதையும் கேள்விப் பட்டு மனம் கொதித்துப் போயிருந்தாள். போதாதற்கு அவள் இன்னொரு தோழி ஒருத்தியும் உலுக்கானின் வாளால் காயம் ஏற்பட்டது புரையோடியதில் இறந்து விட்டாள். எல்லாமும் சேர்ந்து அவள் கொதிநிலையில் இருந்தாள். ஆகவே இந்தத் துலுக்கர்களைப் பழிவாங்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தாள். ஆகவே ஒரு நாள் அதிகாலையிலேயே எழுந்து சீவிச் சிங்காரித்துக் கொண்டு அரங்கன் கோயிலருகே வந்து மூன்றாவது வாயிலின் அருகே ஒய்யாரமாக நடை போட்டுக் கொண்டிருந்தாள்.

ஆனாலும் அவள் கண்கள் அந்த வழியாக வருபவர்கள் போகிறவர்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தது. அப்போது துலுக்கப்படையின் உபதளபதி மற்ற வீரர்கள், ஊழியர்கள் ஆகியோரின் வேலையை மேற்பார்வை செய்வதற்காக அங்கே தன் குதிரை மீது ஏறி வந்து கொண்டிருந்தான். அவனைக் கண்ட அம்சகலா தான் மிகவும் நாணம் அடைந்தவள் போலப் போக்குக் காட்டிக் கொண்டு ஓரமாக ஒய்யார நடை நடந்தாள். தன் எழிலை எல்லாம் காட்டி அந்தத் துலுக்கத் தளபதியை மயக்கும் எண்ணத்துடன் கடைக்கண் பார்வையை அவன் மேல் வீசினாள். சாதாரணமாகவே பெண் பித்தனான உபதளபதி இப்படி வலிய ஒரு பெண் அவன் மேல் காதல் வலை வீசினால் சும்மாவா விடுவான்! அவனும் உடனேயே குதிரையை விட்டுக் கீழே இறங்கி அவளருகே சென்றான். அவள் கோயிலினுள்ளே செல்ல அவனும் அவள் பின்னேயே சென்றான்.

இருவரும் செல்கையில் மறைவான ஓர் இடம் வந்ததும் உபதளபதி அவள் கையைப் பிடித்து இழுத்து அணைக்க முற்பட்டான். அவள் தன் சாகசங்கள் அனைத்தையும் காட்டி அவனை மயக்கி ஒரு கோபுர நிலைக்கருகே அழைத்துச் சென்றாள். அதன் படிகளில் விறுவிறுவென அவள் ஏறப் பின்னாலேயே அவனும் ஏறினான். கோபுரத்தின் மூன்று நிலைகளிலும் அவள் ஜாடையால் அங்கே கோயிலின் சொத்துக்கள் இருப்பதாகச் சொல்லிக் கொண்டு சொல்லவே அதை நம்பி அவனும் பின் சென்றான். தந்திரமாக அவள் ஓர் இடத்தில் கோபுர நிலைவாயிலின் துவாரத்தருகே சென்று கையை நீட்டி வெளியே காட்ட, அவள் அழகில் முற்றிலும் மயங்கிக் கிடந்த உபதளபதியும் வெளியே எட்டிப் பார்த்தான். அவள் வஞ்சகமான புன்னகையுடன் அவன் கால்களைப்பற்றிக் கொண்டு தூக்கி அவனைக் கீழே தள்ளி விட்டாள். கீழே கல்தரையில் மண்டை பிளக்கப் படீர் என விழுந்தான் உபதளபதி!

தளபதி விழுந்த சப்தம் கேட்டு அங்கே கீழே கூட்டம் கூடுவதற்குள்ளாக அம்சகலா என்பாள் கோபுர துவாரத்தின் எதிர்பக்கம் சென்று அங்கே பொன்மயமான திருவரங்க விமானத்தைப் பார்த்தாள். "ரங்கா! ரங்கா!" என்று கூவினாள். விமானத்தின் பரவாசுதேவரின் உருவம் அவளைப் பார்த்துச் சிரித்து ஆசி கூறுவது போல் உணர்ந்தாள். மீண்டும், "ரங்கா! நான் பழிவாங்கிவிட்டேன்!" என்றாள். "ரங்கா, உன் அடியவர்கள் துன்புற்று இறந்தவர் எத்தனை பேர்! உன் செல்வமெல்லாம் பாழாய்ப் போய் விட்டதே! திருவரங்கத்தை இருள் சூழ்ந்ததே! நீ ஒரு பக்கமும், ரங்க நாச்சியார் ஒரு பக்கமுமாகப் பிரிந்து வாழ்கின்றீர்களே! இது அடுக்குமா? எப்போதும் ரங்கா ரங்கா என்ற ஆனந்தக் கூச்சல்களே கேட்டுக் கொண்டிருந்த திருவரங்கத்திலே இன்று ஒப்பாரி ஒலிக்கின்றதே! அரங்கா இதுவும் உன் திருவுளமோ? ஆனால் என்னால் பொறுக்க முடியவில்லை! ரங்கா! ஆகவே என்னால் இயன்றவரை பழி தீர்த்துக் கொண்டேன்!" என்றாள்.

பின்னர் தன் கைகளைக் கூப்பித் தலைக்கு மேல் வைத்த வண்ணம் இமைகளை மூடிக்கொண்டு "ரங்கா! ரங்கா!" என்று கூவிய வண்ணம், "என்னை ஏற்றுக்கொள்!" என்ற வண்ணம் அவளும் கோபுர வாசலின் வழியாக வெளியே பாய்ந்தாள்.

Wednesday, April 20, 2016

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! நாயகனைப் பிரிந்த ரங்க நாயகி!

ரொம்ப நாட்கள்/மாதங்கள் ஆகின்றன இங்கே வந்து! அரங்கனைப் பட்டினி போட்டுவிட்டு நிறுத்தியது தான் அதுக்கப்புறமா எழுத முடியாமல் பிரயாணங்கள். அவ்வப்போது சில பதிவுகளை எண்ணங்கள் பக்கத்தில் எழுதி வந்தாலும், இங்கே எழுதும்போது கூடுதல் கவனம் இருக்கணும் இல்லையா? நான் பாட்டுக்கு எழுதிடக் கூடாது. ஆகவே தகவல்களைச் சரி பார்க்கணும், சரி பார்க்கணும்னே போயிட்டு இருந்தது! சோம்பேறித்தனமாக இருக்கேனேனு உறுத்தலும் இருந்தாலும் வேறு வழியில்லை. :( அரங்கன் சாப்பிட்டானா என்னனு இப்போப் பார்ப்போம்.

அரங்கனுக்கு உண்ணக் கூட வழியில்லை என்பதைத் தெரிந்து கொண்ட பக்தர்கள் செய்வதறியாது திகைத்துப் போய் அமர்ந்திருக்க அந்தக் கூட்டத்தில் இருந்த நர்த்தகிகளில் ஒருத்தி தன் நகைகளைக் கழட்டிக் கொடுத்துப் பக்கத்துக் கிராமத்துக்குச் சென்று தன் நகைகளை  விற்று வரும் பணத்தில் அரங்கனுக்கும், உடன் வரும் பரிஜனங்களுக்கும் தேவையான உணவைச் சம்பாதித்துக் கொண்டு வரும்படி இருவரை அனுப்பினாள். அந்தக் காலத்தில் பண்டமாற்றுக்கு உதவிய யவன நாட்டுச் செம்பொன் நாணயங்களையும் தாராளமாக எடுத்துக் கொடுத்து உதவினாள். அவற்றை எடுத்துக்கொண்டு அடியார் கூட்டத்தில் இருவர் பக்கத்துக் கிராமத்தை நோக்கி நடந்தனர். அதற்குள்ளாக ரங்கநாயகித் தாயாரும் வேறுதிசையில் மேற்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தவளுக்கு என்ன நேர்ந்தது என்று பார்ப்போம்.
ரங்கநாயகித் தாயார் க்கான பட முடிவு
திருவரங்கக் கோயிலில் தனி சந்நிதி,அரங்கனுக்கு நிகராகத் தனி மரியாதைகள், வழிபாடுகள் என்று செங்கோலோச்சிக் கொண்டிருந்த ரங்கநாயகித் தாயார் இப்போது தன்னந்தனியாகத் தன் நாயகன் ஒரு திசையிலும் தான் மற்றொரு திசையிலுமாகப் பயணித்துக் கொண்டிருந்தாள். படையெடுப்பு நடந்த சமயம் பெரிய பெருமாளான ரங்கநாதரின் சந்நிதியைக் கல்சுவர் எடுத்து மூடிய அடியார்கள் ரங்க நாயகியைப் பெயர்த்து எடுத்து சந்நிதிக்கு அருகிலுள்ள தோட்டத்தில் வில்வமரத்தினடியில் புதைத்து வைத்தனர். அந்த வில்வ மரம் இப்போதும் இருக்கும் வில்வமரம் தான் என்கின்றனர்.  உற்சவரான அர்ச்சாமூர்த்தியை ஒரு பல்லக்கில் எழுந்தருளப் பண்ணினார்கள். தாயாரின் நகை, நட்டு மற்றச் செல்வங்களையெல்லாம் பெட்டகங்களில் அடுக்கினார்கள். ஒரு சில பரிசனங்கள் துணை வர இந்த ஊர்வலம் மேற்கு நோக்கிச் செல்வதாக முடிவாகி இருந்தது. இந்த ஊர்வலத்தில் பின்னால் அழகிய நம்பி என்பாரும் அவருடைய ஆட்களும் சேர்ந்து கொள்வதாகவும் முடிவு செய்திருந்தனர்.

அதன்படி ரங்கநாயகித் தாயார் மேற்கு நோக்கிப் போய்க் கொண்டிருந்தாள். அழகிய நம்பி என்பானும் அவனுடைய ஆட்களும் இரண்டு நாட்கள் இடைவிடாமல் பயணம் செய்து நாச்சியார் போய்க் கொண்டிருக்கும் திசையில் நாச்சியாரையும் கண்டு பிடித்தனர். பின்னர் அங்கிருந்த அனைவருடனும் கலந்து ஆலோசித்து ஊர்வலத்தைத் திருப்பதி/திருமலைப்பக்கமாய்க் கொண்டு செல்ல முடிவு செய்தனர். ஆகவே அழகிய நம்பி ஊர்வலத்தைச் சாலை மார்க்கத்தில் செலுத்தாமல் காட்டு மார்க்கமாகவே செலுத்தினான். வழியில் தென்பட்ட கள்ளர் கூட்டத்தினரிடம் எப்படியோ தப்பி மூன்று தினங்கள் பயணம் செய்த பின்னர் நான்காம் நாள் காட்டு வழியில் சென்றபோது வழியில் தென்பட்ட அசாதாரணமான இயக்கங்களினால் அழகிய நம்பிக்குச் சந்தேகம் ஏற்பட்டது. கள்ளர் கூட்டம் தான் தொடர்ந்து வருகிறது என்பதைப் புரிந்து கொண்டு தப்பி ஓட நினைத்து அதைக் குறித்துப் பேசுவதற்குள்ளாகக் குதிரைகளின் குளம்படிச் சப்தம் கேட்டது.

உடனே கள்வர்கள் தான் தொடர்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு அங்கு காய்ந்து கொண்டிருந்த புற்களின் மேல் நெருப்பை வைத்துப் புகை உண்டாக்கி அந்தப் புகையில் அனைவரும் ஆளுக்கொரு திக்காய்த் தப்பி ஓடினார்கள். அழகிய நம்பி மூன்று ஆபரணப் பெட்டிகளுக்குப் பொறுப்பேற்றுப் பின்னாலேயே சென்றவன் சற்று தூரத்தில் ஒரு கணவாய் தென்படவே அங்கே சென்று கொஞ்சம் ஓய்வெடுக்க நினைத்தான். பெட்டிகளைத் தூக்கி வந்த ஆறுபேரும், அவர்களுக்கு உதவ வந்த மற்ற மூன்று பேரும் அன்றிரவை அங்கேயே கழிக்க எண்ணவே அழகிய நம்பியும் சம்மதித்து அங்கேயே தங்கினான். ஆனால் இரவில் கிசுகிசுவென்று சிலர் சேர்ந்து பேசும் குரல் கேட்கவே விழித்த நம்பி என்னவென்று பார்க்க பெட்டகங்களைத் தூக்கி வந்த ஆறு ஊழியர்களும் தாயாரின் ஆபரணங்களைத் தாங்களே பங்கிட்டுக் கொண்டு விடலாம் என்று பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டான். என்ன செய்யலாம் என நம்பி சிந்திப்பதற்குள்ளாக அவனைக் கொல்வதற்கு ஆறு பேரும் பாய, நம்பி மற்ற மூவரையும் எழுப்பி இவர்கள் ஆறுபேரையும் எதிர்கொள்ள ஆயத்தமானான்.

நம்பியின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத அவர்கள் உடலில் காயங்கள் ஏற்பட்டு ஓடிவிட்டனர். நம்பியும் மற்ற மூவரும் விடியும்வரை விழித்திருந்து பெட்டகங்களை அங்கேயே ஓர் இடத்தில் குழி தோண்டிப் புதைத்துவிட்டு அடையாளத்திற்காகச் சில கற்களையும் வைத்து மூடினார்கள். பின்னர் கிழக்கே நோக்கிப் பயணம் செய்தனர். 

அதற்குள்ளாக இங்கே திருவரங்கத்தில் துலுக்கர்களின் அராஜகம் அதிகமாக இருந்தது. அரங்கனின் சொத்துக்காகவே படை எடுத்த அவர்கள் ஒன்றும் கிட்டவில்லை என்பதறிந்து கோபம் கொண்டனர். ஆகவே அரங்கன் எங்கே போயிருக்கிறான் என்பதைக் கண்டறியவும் அவனுடைய சொத்துக்களும் அவனுடனே செல்கின்றனவா என்பதை அறியவும் ஒற்றர் படைகளை ஏவி விட்டால் சுல்தானின் தளபதி. மேலும் கோயிலிலும் பல இடங்களையும் தோண்டியும் இடித்தும் செல்வங்கள் கிடைக்கின்றனவா என்று தேடினான். பல சிற்பங்கள் உடைக்கப்பட்டன. சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட கற்றூண்கள் இடிக்கப்பட்டன. இவற்றை எல்லாம் கேள்விப் பட்ட அரங்கன் முன் ஆடும் நர்த்தகிகளில் ஒருத்தியான அம்சகலா என்பாள் துடிதுடித்தாள். தன்னால் ஏதும் செய்ய முடியவில்லையே எனத் தவித்தாள்; உருகினாள்! வேதனையில் ஆழ்ந்தாள். அவளும் திருவரங்கத்தில் வாழ்ந்தவள் தான். இப்போது தப்பிக் காவிரியின் எதிர்க்கரையில் அழகிய மணவாளபுரம் என்னும் கிராமத்தில் ஒளிந்து வாழ்ந்து வந்தாள்.