எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, July 23, 2018

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! மதுரையில் அரங்கன்!

பல்லக்குகளின் ஊர்வலம் அரங்கனோடு கிளம்பியது. அனைவரின் மனதிலும் திக் திக் எனக் கவலையும் உளைச்சலும் தான். நல்லபடியாக மதுரை எல்லையை முக்கியமாய்ப் பாண்டிய நாட்டைத் தாண்டி நாஞ்சில் நாட்டை அடைந்து விட்டால் போதும்! அதற்குள் எத்தனை விபத்துகள் நேரிடுமோ எனக் கலங்கினார்கள். இப்போது இவர்களின் அடுத்த வேலை மதுரை நகருக்குள் வீட்டுக்குள் அமைக்கப்பட்டிருக்கும் பாதாள அறைகளில் அடைபட்டுக் கிடக்கும் பெண்களை எப்படியேனும் வெளியேற்றுவது. அதற்கு மதுரைக்குள் புகுந்து செல்ல வேண்டும். அங்கிருக்கும் தளபதியை எதிர்கொள்ள வேண்டும். என்ன செய்வது என யோசித்துப் பேசிக் கொண்டே சென்றார்கள். பலபலவெனப் பொழுது புலரும் நேரம் வைகை ஆற்றங்கரையை அடைந்தனர். அனைவரும் வைகையில் குளித்து உடை மாற்றிக்கொள்ள ராணி வேஷத்தில் வந்திருந்த சஞ்சலவதி நினைவாக ஒரு ராணிக்குரிய அரச ஆபரணங்களைத் தரித்துக் கொண்டாள். இதற்குள்ளாகக் குலசேகரன் மற்றவர்களுடன் பேசி ஓர் முடிவுக்கு வந்திருந்தான். எப்படியானாலும்  ஹொய்சள ராணியாக வந்திருக்கும் சஞ்சலவதி நகருக்குள் போய் தளபதியின் மனைவிமார்களுக்குப் பரிசில்கள் வழங்குவதாக ஏற்பாடு ஒன்று இருந்தது. ஆனால் அவள் பல்லக்கில் தான் அரங்கனை ஒளித்து வைத்திருக்கிறார்கள். அப்படியே போவதா வேண்டாமா என யோசித்தனர். அந்தக் குறிப்பிட்ட பல்லக்கை மட்டும் மதுரைக்கு வெளியே நிறுத்தலாமா என யோசித்துப் பின்னர் அந்த முடிவைக் கைவிட்டார்கள். ஏனெனில் அது சந்தேகப்படும்படி இருக்குமோ என நினைத்தார்கள்.

ஆகவே எதையும் காட்டிக் கொள்ளாமல் மதுரை நகருக்குள்ளாக அரங்கன் இருக்கும் பல்லக்கையும் எடுத்துச் செல்வது என்று முடிவாயிற்று. அரங்கனுக்கு ஆபத்து ஏற்பட்டு விட்டால் என்ன செய்வது என்ற கலக்கமும் இல்லாமல் இல்லை. அப்படி ஏதேனும் நேர்ந்து அரங்கனைத் தங்களால் மீட்க முடியாவிட்டால் உயிர்த் தியாககம் செய்ய வேண்டியது தான் என அழகிய நம்பி, குலசேகரன், குறளன் மூவரும் முடிவெடுத்தனர். வேறு வழியே இல்லை. நகருக்குள் போக வேண்டியது தான் ஒரே வழி! அப்போது தான் சந்தேகமும் வராது. மதுரைக்கோட்டையை வெயில் ஏறும் சமயம் அடைந்த பல்லக்கு ஊர்வலம் கோட்டை வாசலில் சிறிது நேரம் நிற்க வேண்டியதாய் ஆகிவிட்டது. பல்லக்குகள் அணி வகுத்து நிற்க எதிர்த்தரப்பு வீரர்களும் வந்திருப்பது ஹொய்சள ராணி என்பதால் மரியாதை செய்யும் பொருட்டு அணி வகுத்து நின்றார்கள். கோட்டையின் மூத்த காவல் அதிகாரி இரு வீரர்களுடன் ராணியின் பல்லக்கை நோக்கி வந்தார். மதுரையை நெருங்கும் முன்னரே அரங்கனைப் பல்லக்கின் அடியில் போட்டு மேலே பஞ்சணைகள், துணி மூட்டைகளைப் போட்டுச் சஞ்சலவதி மறைத்து வைத்திருந்தாள். அவற்றின் மேலேயே தலையணைகளை அடுக்கித் தான் அதன் மேல் சாய்ந்து கொண்டும் இருந்தாள். ஆகவே அதிகாரி வந்ததும், அவள் தன் பல்லக்கின் திரையை விலக்கி ஒரே கணம் தன் முகத்தைக் காட்டிவிட்டுப் பின்னர் திரையை விட்டுக் கொண்டு விட்டாள். அதிகாரியின் வந்தனங்களை ஏற்றுக் கொள்ளும் விதமாகத் தன்  முத்திரை மோதிரங்களைக் காட்டினாள். அவரும் எந்த சந்தேகமும் இல்லாமல் போக அனுமதித்துவிட்டுப் பின்னர் மற்றப் பல்லக்குகளையும் பார்த்து அதில் உள்ள மூட்டைகள் பற்றிக் கேட்டார். அவை எல்லாம் தில்லித் தளபதிகளுக்கு அளிக்கும் கப்பங்கள் மூலம் வரும் பரிசுப் பணம், பொருட்கள் எனச் சொன்னதும் சமாதானம் ஆனார்.

ஒருவிதமாக இந்தச் சோதனையில் இருந்து தப்பிய பல்லக்கு ஊர்வலம் நகருக்குள் மேலும் முன்னேறியது. அரண்மனை வாயிலை நெருங்க நெருங்க இடைவெளி விடாமல் பல்லக்குகள் நெருங்கிச் சென்றன. அரண்மனை வாயிலில் ராணியின் பல்லக்கு நிறுத்தப்பட சஞ்சலவதி ஒரு ராணியின் கம்பீரத்தோடு இறங்கி அரண்மனையில் அனைவரும் வரவேற்க உள்ளே சென்றாள். கொலு மண்டபத்தில் இரண்டு பக்கமும்  மொழி தெரிந்தவர்கள் துணையுடன் உரையாடினார்கள். பின்னர் ராணியாக வந்த சஞ்சலவதி தான் கொண்டு போன பரிசுப் பொருட்களைக் கொடுத்தாள். பின்னர் அனைவரையும் தனி மாளிகை ஒதுக்கி இருப்பதாகவும் அங்கே போய்த் தங்கலாம் எனச் சொல்லவும் அங்கே போனார்கள். பல்லக்குகள் எல்லாமும் நகரத் தெருக்களின் நெருக்கடியிலிருந்து தப்பிக்கும் முகமாக நகரைச் சுற்றியுள்ள தெருக்களில் வியாபித்து விட்டன. குலசேகரனும் அவன் நண்பர்களும் சிறிதும் ஓய்வில்லாமல் அதே சமயம் எவ்விதச் சந்தேகமும் வராமல் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அன்று இரவு மதுரையே உறக்கத்தில் ஆழ்ந்திருந்த போது எல்லா வீடுகளிலும் நடந்து வந்த ரகசியமான விஷயம் வெளியே கசியாதபடி பாதுகாக்கப்பட்டது. பொழுது விடியும் முன்னர் பல்லக்குகள் அனைத்தும் கிளம்பி விட்டன. கோட்டை வாசலில் அந்த அதிகாலையில் யாருக்கும் எவ்விதச் சந்தேகமும் எழவில்லை. பல்லக்குத் தூக்கிகளால் வந்தபோது பல்லக்குகளைத் தூக்கச் சிரமம் இல்லாமல் இருந்ததையும் அவர்கள் கவனித்துக் கொள்ளவில்லை. ஆகவே இப்போது பல்லக்குத் தூக்கிகள் அதிக எடையால் சிரமத்துடன் பல்லக்குகளைத் தூக்குவதையும் அவர்களால் கண்டு கொள்ள முடியவில்லை! பார்க்கப் போனால் மூட்டைகளை அங்கேயே விநியோகம் செய்ததால் பல்லக்குகள் காலியாகத் தானே இருக்க வேண்டும். ஆனால் அவர்களால் இதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. பல்லக்கு ஊர்வலம் கோட்டை வாசலைக் கடக்கவும் நேரம் அதிகம் ஆனது. பல்லக்குகள் முடிந்தவரை வேகமாய்ச் சென்றன. தெற்கே வேகமாக மூன்று நாழிகை நேரம் சென்றார்கள். வழியில் இரு முறை தில்லிப்படைகளை அவர்கள் சந்திக்க வேண்டி இருந்தது. மதுரையில் துருக்கியத் தளபதி பயணம் செய்ய அனுமதியுடன் கூடிய முத்திரை கொடுத்திருந்ததாலும் ஹொய்சள ராஜாவின் ராஜ முத்திரையைக் காட்டியதாலும் அவர்களால் சுலபமாகச் செல்ல முடிந்தது. தில்லி வீரர்களுக்கோ எங்கோ ஒரு சமுத்திரத்தில் போய்க் குளித்தால் குழந்தை பிறக்கும் என இந்த ராணிக்கு என்ன மூட நம்பிக்கை எனக் கேலி செய்து சிரித்துக் கொண்டார்கள்.

4 comments:

siva said...

Eagerly waited for this post, Madam/

siva said...
This comment has been removed by the author.
நெல்லைத் தமிழன் said...

படிக்கும்போதே திக் திக் என்று இருக்கிறது. எத்தகைய விசுவாசம் அரங்கன்மேல் இருந்தால் பக்தர்கள் இப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருப்பார்கள். தொடர்கிறேன்.

Geetha Sambasivam said...

நன்றி சிவா, நன்றி, நெல்லைத் தமிழரே!