எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, November 19, 2018

ஸ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

ஹொய்சள இளவரசன் என்னும் பெயரில் இருந்த ராஜவர்த்தன குலசேகரன் கைகளால் வாளைப் பெற்றுக் கொண்ட குலசேகரன் ஆழ்ந்த சிந்தனையுடன் தன் பயணத்தைத் தொடர்ந்தான் அவனுடன் சுமார் இருபது ஹொய்சள வீரர்கள் மாறு வேடத்தில் தொடர்ந்தார்கள். ராணி கிருஷ்ணாயியுடனான தன்னுடைய உறவின் காரணத்தால் தான் திருமணம் ஆகாமலே பெற்றுக் கொண்ட பிள்ளையை நினைந்து ஒரு கணம் குலசேகரன் மனம் சிலிர்த்தாலும் பாசத்தையும் மீறிய வெறுப்பே மேலோங்கியது! ஆனால் அதற்கு அந்தக் குமாரன் என்ன செய்வான்? தான் மட்டும் இணங்கவில்லை எனில் ஹேமலேகா ராணி வாசத்திலேயே வாழ்வதோடு அல்லாமல் விரைவில் மடிந்தும் போயிருப்பாள். ஓர் அழகிய மலர் வெளி உலகைக் காணாமலேயே கருகிப் போய் இருந்திருக்கும். தன்னுடைய இந்தச் செயலால் ஹேமலேகா காப்பாற்றப்பட்டாள் என்பதை நினைத்துக் கொஞ்சம் ஆறுதல் அடைந்தான் குலசேகரன். தொடர்ந்து அவர்கள் ஐந்து தினங்கள் ஹொய்சள நாட்டுக்குள்ளேயே பயணம் செய்ததால் வழியில் எவ்விதமான பிரச்னையும் இல்லை. அதன் பின்னர் சுல்தானின் எல்லைக்குள் அவர்கள் நுழைந்தனர்.

மதுரைக்குத் தெற்கே ஆரம்பித்திருந்த சுல்தானிய அரசு வடக்கே கண்ணனூரைத் தாண்டிப் பல காத தூரம் வியாபித்திருந்தது. இந்தக் கண்ணனூர் தான் இப்போது சமயபுரம் என அழைக்கப்படுகிறது. சுல்தானின் எல்லைக்குள் நுழைந்ததும் நேர் வழியில் செல்லாமல் சுற்று வழியில் பயணம் செய்ய ஆரம்பித்தார்கள். நுழைந்த மூன்றாம் நாள் வட காவிரி என அழைக்கப்பட்டக் கொள்ளிடக் கரையை அடைந்தார்கள். பகலெல்லாம் மறைந்திருந்து ஓர் அடர்ந்த சோலைக்குள் தங்கியவர்கள் இரவானதும் "அழகிய மணவாளம்" என்னும் கிராமத்தை அடைந்தனர்.

கிராமத்தின் தோட்டங்களை அடைந்ததும் மற்ற வீரர்கள் ஏற்கெனவே பேசி இருந்தபடி தங்கள் குதிரைகளை இளைப்பாறக் கட்டிவிட்டு அவர்களும் அமர்ந்து ஓய்வெடுக்க ஆரம்பித்தனர். குலசேகரன் மட்டும் தன் குதிரையைக் கட்டி விட்டு நடந்தே கிராமத்துக்குள் செல்லலானான். நிலவொளி பாலாய்க் கொட்டி வழி தேடச் சிரமம் இல்லாமல் இருந்தது. அதன் குளுமையில் நனைந்த வண்ணம் சென்ற குலசேகரன் செவிகளில் இனிமையான நாதம் கேட்டது. அது எங்கே என்று கண்டறிந்து கொண்டு அந்தத் திசை நோக்கிச் சென்றவன் ஓர் வீட்டின் வாசலை அடைந்தான். உள்ளிருந்து யாழின் இன்னிசை பிரவாகமாய்க் கிளம்பி எங்கும் வியாபித்தது. அந்த யாழிசையைத் தான் முன்னர் எப்போதே கேட்டமாதிரி இருப்பதாகக் குலசேகரன் ஊகித்தான். உடனே பரபரப்புடன் அந்த வீட்டின் முகப்பின் அருகே இருந்த சாளரத்தின் அருகே சென்று உள்ளே உற்று நோக்கினான்.

அவன் கண்களுக்கு உள்ளே மங்கலாகத் தெரிந்த வெளிச்சம் தவிர ஆள் நடமாட்டம் தெரியவில்லை. ஆகவே கதவருகே சென்று கதவைத் தட்டினான். உள்ளிருந்து ,"யார்?" என்று ஒரு குரல் கேட்டது. அடுத்த கணம் வாயில் கதவு திறக்கப்பட்டுக் கையில் ஓர் அகல் விளக்குடன் மெல்லிய உடலுடைய ஓர் பெண் நின்றாள். விளக்கின் ஒளியில் அவள் மேனி எல்லாம் தங்கமாய்த் தகதகத்தது. அவள் கண்கள் அந்த அகல்விளக்குகள் போலவே சுடர் விட்டுப் பிரகாசித்தது. குலசேகரனுக்கும் அவள் யார் எனப் புரிந்து விட்டது. "நீங்களா" எனக் கேட்டவண்ணம் அவனைப் பார்த்த ஹேமலேகாவின் கைகள் அகல்களைப் பிடிக்க முடியாமல் நடுங்கின. அவளை ஆவலுடன் பார்த்த குலசேகரன், "ஹேமலேகா" என ஆவலுடன் அழைத்தான். அவள் தலை நிமிராமல், "சௌக்கியமா?" எனக் கேட்டாள். அப்போது உள்ளிருந்து ஓர் குரல், "வெளியே யார் வந்திருக்கிறார்கள்? ஹேமு, உள்ளே அழைத்து வா!" என்றது. அந்தக் குரல் கேட்டுத் திடுக்கிட்டான் குலசேகரன். ஹேமலேகா அவனை உள்ளே வரும்படி அழைத்தாள். உள்ளே சென்ற குலசேகரன் அந்த வீட்டின் எளிமையைப் பார்த்து வியந்தான். அங்கே படுத்திருந்த ஓர் வயோதிகர் மெல்ல எழுந்திருந்தார். ஹேமலேகா அவனிடம் "இவர் என் கணவர்" என அறிமுகம் செய்து வைத்தாள். அவருக்கு எழுபது வயது இருக்கலாம். குலசேகரன் திடுக்கிட்டு நின்று விட்டான். 

4 comments:

நெல்லைத்தமிழன் said...

இந்த வரலாறுக்கு என்ன என்ன ஆதாரங்கள் உள்ளன? அவர்களே எழுதியிருப்பார்களா இல்லை சுவைக்காக மசாலா சேர்த்திருப்பார்களா?

ஆனாலும் இண்டெரெஸ்டிங் ஆக இருக்கிறது.

Geetha Sambasivam said...

ஆரம்பத்தில் வரும் பஞ்சுகொண்டான் என்பவர் எல்லாம் சரித்திர நாயகர்கள். குலசேகரன் பத்தித் தெரியவில்லை. ஆனால் ஹொய்சள மன்னர் அரங்கனை மீட்கவும் ஸ்ரீரங்கத்தை மீட்கவும் சுல்தானோடு போரிட்டுக்கொல்லப்பட்டது உண்மை. வல்லாளருக்குப் பிள்ளை இல்லை என்று சரித்திர ரீதியாகப் படித்த நினைவு. திருவண்ணாமலையில் ஈசனே அவருக்குப் பிள்ளையானதாகவும் சொல்வார்கள். எதுக்கும் நன்கு தெரிந்து கொண்டு சொல்கிறேன். மற்றபடி குலசேகரன்+கிருஷ்ணாயி ஒருவேளை கற்பனையாய் இருக்கலாம். ஆனாலும் துளு நாட்டோடு ஹொய்சளர்கள் மண சம்பந்தம் கொண்டதாயும் தெரிகிறது. மறுபடி படிக்கணும்.

Geetha Sambasivam said...

பிள்ளை லோகாரியர், தேசிகர் ஆகியோரைப் பற்றி உங்களுக்கே தெரிந்திருக்கும். வெள்ளை கோபுரத்திலிருந்து தில்லி சுல்தானின் உப தளபதியைத் தள்ளி விட்ட பெண்ணின் நினைவாகத் தான் அந்த கோபுரம் "வெள்ளை கோபுரம்" என அழைக்கப்படுவதும் தெரிந்திருக்கும். ஒரு சில கற்பனைகள் இருக்கலாம்.

நெல்லைத்தமிழன் said...

ஆமாம் கீசா மேடம். நிறைய படித்த இடங்களையெல்லாம் அரங்கன் கோவிலில் பார்க்கணும்னு ஆசை. அது ஓரிரு நாட்களில் முடிகிற காரியமா?

உலகாச்சாரியரும் தேசிகரும் செய்தவைகளைப் படிக்கும்போது எனக்கு அது மிகவும் ஆச்சரியமாக இருக்கும். ஏசி பஸ் வசதி இருந்தும் நல்ல தங்குமிடங்கள், செல்ல ஆட்டோ, உண்ண உணவகங்கள் என்று எல்லாம் இருந்தும், அரங்கம் வருவது ஒரு பெரிய வேலையாக இருக்கும் இந்த நாள் எங்கே..... பக்தி, நம்பிக்கை இவைகளை மட்டும் கைக்கொண்டு, திருவரங்கத்திலிருந்து சத்தியாகாலம் சென்ற தேசிகர், நம்பெருமாளுடன் மதுரை வரை, தள்ளாத வயதில் சென்ற உலகாச்சாரியர் இவர்கள் காலம் எங்கே...

சத்தியாகாலத்துல காவிரிக் கரையினின்று கோவில் 1 கிலோ மீட்டர். தினமும் அங்கு அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு கோவிலுக்கு வருவார் தேசிகர். நாங்கள், கோவில் வாசல் வரை காரில் சென்று, தரிசனத்துக்குப் பிறகு, கோவிலில் வற்புறுத்தி அளித்த சம்பிரமான உணவை (அங்கு சாம்பார், ரசம், தயிர், பாயசம். காய் கறிகள்/கூட்டு கிடையாது. என் பெண் உலக அதிசயமாக மிகவும் ரசித்துச் சாப்பிட்டாள். பிரசாதத்தின் மகிமைக்குக் கேட்கவா வேணும்) உண்டு, தேசிகர் தினமும் சென்ற காவிரிக் கரைக்கு காரில் சென்றோம்...

அரங்கத்தில், நம்பெருமாளை ஆராதித்த ஒரு இடம் இன்னமும் இருக்கிறதாமே (அதன் பெருமை தெரியாமல் சுற்றிவர ஆக்கிரமிப்புகளுடன். அங்கு அந்த சமயத்தில் பள்ளிகொண்ட பெருமாளும் இருந்தாராமே/இருக்கிறாராமே). இதையெல்லாம் எப்போது தரிசனம் செய்யப்போகிறேனோ...

இந்தத் தடவை இராமானுசரின் தரிசனம் மிக அற்புதம். எந்த அலங்காரமும் இல்லாமல் புனுகுப் பூச்சுடன். நீங்கள் அப்படித் தரிசனம் செய்திருக்கிறீர்களோ?

கோவில், தெருக்கள், கடைவீதிகள் என்று எல்லாம் கலந்து, கோவிலின் பாதுகாப்பு அரணாக அருமையாக வடிவமைத்திருக்கிறார்கள்.