எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Thursday, November 22, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! ஹேமலேகாவின் துன்பம்!

குலசேகரனைப்பார்த்து, "ஸ்வாமி! என அழைத்த ஹேமலேகா கொஞ்ச நேரம் ஏதும் பேச முடியாமல் தவித்தாள். பின்னர் ஒருவாறு தன்னைச் சமாளித்துக் கொண்டு, "ஸ்வாமி, உலகிலுள்ள அறிவை எல்லாம் ஒன்றாக்கித் திரட்டியதற்கு "மகத்" என்னும் பெயர் இருப்பதைப் போல் இவ்வுலகிலுள்ள துக்கங்களையெல்லாம் கூட்டினால் அதன் பெயர் என்ன? இப்போது நாம் இருவரும் அனுபவிப்பத்து அத்தகையதொரு துன்பமே!" என்று கண்ணீர் விட்டாள். குலசேகரன் கண்களில் இருந்தும் கண்ணீர் வழிந்தது. மேலும் ஹேமலேகா மனம் விட்டுப் பேசலானாள். "ஸ்வாமி, நம்மிருவர் துன்பமும் ஒரே வகையானதே! ஒருவருக்கொருவர் நாம் தான் ஆறுதல் சொல்லிக் கொள்ள வேண்டும். எனக்கு உங்களை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள் ஸ்வாமி!" என்று சொல்லிவிட்டு உடல் குலுங்க அழுதாள்.

அவள் வெளிப்படையாகச் சொல்வதைக் கேட்டுக் கொஞ்சம் அதிர்ந்தான் குலசேகரன். "ஹேமூ! ஹேமூ!" என்று தடுமாறியவன், "உங்கள் வார்த்தைகள் என் நெஞ்சைத் தொட்டதோடு அல்லாமல் கலக்கியும் விட்டது ஹேமு. நான் என்ன செய்வேன்! உங்களுடன் சிறிது காலமே பழகி இருந்தாலும் எத்தனையோ ஜென்மங்களாக இருந்து வந்த உறவின் மிச்சமே என்றே எனக்குத் தோன்றியது; இப்போதும் தோன்றுகிறது! என் மனம் முழுவதும் அறிந்தவாறே நீங்கள் பேசுவது எனக்கு ஒரு பக்கம் ஆச்சரியமாக இருந்தாலும் இன்னொரு பக்கம்  இதில் என்ன ஆச்சரியம் என்னும் எண்ணமும் தோன்றுகிறது." என்றான்.

"ஸ்வாமி! வாழ்க்கையில் ஒருவரை ஒருவர் பாராமல் ஆனால் இன்னொருவரைப் பற்றிக் கேள்வி ஞானம் மூலம் தெரிந்து வைத்துக் கொண்டு இருவரும் ஒரே நினைவாக இருப்பதாலேயே ஒருவருக்கொருவர் நீண்ட நாட்கள் பழகினாற்போல் ஆகிவிடுகிறார்கள். நாமும் அப்படித் தானே ஸ்வாமி! இந்தப் பத்துவருடப் பிரிவினால் நம் அந்நியோன்னியத்தைப் பிரிக்க முடியாது ஸ்வாமி!தங்கள் மனம் நான் அறிவேன்! என்னைப் பற்றிய சிந்தனைகளை உங்களால் தவிர்க்க இயலாது! அதே போல் தான் ஸ்வாமி எனக்கும்!  இந்த நினைவு தான் ஆதார சுருதியாக, ஜீவ கீதமாக வெகு இனிமையாய் சுகமாய் மனதுக்கு இதமாய் என்னுள் ஓடிக்கொண்டே இருக்கிறது. இதில் இந்தப் பத்துவருடக் கால இடைவெளி என்பது ஒன்றுமே இல்லை. நாம் எங்கே பிரிந்தோம்! இல்லை, ஸ்வாமி, இல்லை! ஒரு காரியமாக வெளியே சென்றிருப்பவர் மறுநாளே வீட்டுக்கு வருவதைப்போல் தான் இருந்தது எனக்கு!" என்றாள்.

குலசேகரனுக்கு அவள் பேசும் விதம்மிகவும் பிடித்திருந்தது.  அவள் பேச்சைக் கண்களை மூடியவண்ணம் கேட்டு ரசித்துக் கொண்டிருந்தான். ஆனாலும் அவன் உள்ளத்தில் இவள் தன்னை நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறாளா என்னும் சந்தேகம். அவளைப் பார்த்து, "ஹேமு! உங்களுக்கு எப்படித் தெரியும் என் மனதிலும் உன் மனதிலும் ஓடியது ஒரே நினைவு தான் என! அதை எப்படி ஊகித்து அறிந்தீர்களா?" என்று கேட்டான். "ஸ்வாமி! ஊகம் செய்ய வேண்டுமா என்ன?  சூரியனைக் கண்டு தாமரை மலர்வதைப் போல் சந்திரனைக் கண்டு சக்ரவாகப் பக்ஷி தத்தளிப்பது போல், மழை மேகங்களைக் கண்டு மயில்கள் ஆடுவது போல் இதெல்லாம் இயற்கை ஸ்வாமி! அதோடு இல்லாமல் என்னைப் பார்க்கும் தோறும் விகசிக்கும் உங்கள் முகம்! கனிவு ததும்பும் கண்கள்!இங்குமங்கும் அலை பாயும் பார்வுகள். மௌனமான உங்கள் தவிப்பு! இவை போதாதா உங்களை அறிய!" என்றாள்.

"ஹேமூ! ஹேமூ! என் உள்ளத்தின் தாபங்களை எல்லாம் நீ அறிந்து கொண்டு விட்டாயா?" குலசேகரன் அறியாமல் அவளை ஒருமையில் அழைக்கத் தொடங்கி விட்டான். "ஸ்வாமி! என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை எனில் வேறு யாரால் புரிந்து கொள்ள முடியும்!" என்ற வண்ணம் அவனைப் பார்த்த ஹேமலேகாவின் கண்களில் காதல் ததும்பி வழிந்தது. "ஆம், ஹேமூ! ஆம், என் மனதில் நீண்ட நெடுங்காலமாக நிலைத்து நிற்கும் கனவு இது! அதை நீ புரிந்து கொண்டாய் அல்லவா?  இது போதும் எனக்கு!" என்றான்.  ஹேமலதா அதற்கு சம்ஸ்கிருதக் காவியங்களிலும் அவற்றின் உள்ளார்ந்த பொருட்சுவையிலும் ஊறிய தனக்குப் புரியாமல் போகுமா எனக் கேட்டாள். ஆனால் குலசேகரன் அப்போது உடல் எங்கும் நடுக்கம் கண்டது. உணர்ச்சிப் பெருக்கில் தன்னை மறந்து கண்ணீர் பெருக்கிக் கொண்டே, "ஹேமலேகா, அப்படி எனில், அப்படி எனில், ஏன் இந்த விஷப் பரிக்ஷை? இது எவ்வளவு தூரம் உண்மை?" என்று கேட்டான்."எது ஸ்வாமி?"  என ஹேமலேகா கேட்க, "உன் இல்லற வாழ்வு!" என்றான் குலசேகரன் பெரும் துக்கத்துடன். அப்போது ஹேமலேகா அடுத்த இடியை அவன் மேல் இறக்கினாள். "ஸ்வாமி! இந்த நாட்டுக்கு ஏற்பட்ட விபத்து என் வாழ்விலும் ஏற்பட்டு விட்டது!" என்றாள்.

2 comments:

நெல்லைத்தமிழன் said...

உரையாடல்கள் எல்லாம் நீங்களே எழுதறீங்களா? நல்ல ரசனையா இருக்கு.

பாருங்க... எழுத்தாளர்னு ஆகிட்டாலே கற்பனைல புகுந்து திரும்பவும் 'இளமை மன உணர்வோடு' எழுதவேண்டியிருக்கு. பாராட்டுகள்.

Geetha Sambasivam said...

http://kannanvaruvan.blogspot.com/2011/12/blog-post_17.html ஒரு உதாரணத்துக்குக் கொடுத்திருக்கேன். இது மொழிபெயர்ப்பு. கவனிக்கவும். மொழி ஆக்கம் இல்லை. இங்கேயும் நானாக யோசித்து எழுதிய வசனங்கள், தலைப்புகள். தேவையான இடங்களில் பாஞ்சாலி சபதத்தின் வாசகங்களையும் தலைப்புகளாகப் பயன்படுத்தி இருக்கேன்.