இருவரும் தங்கள் உடல் சோர்வு நீங்கவும் புழுதியான உடம்பு சுத்தமாகவும் வேண்டி மீண்டும் குளித்தார்கள். குளித்துவிட்டு வந்த தத்தன் அந்த மகரகண்டியைக் கையில் எடுத்துக் கொண்டு வல்லபனிடம் அது தங்களிடமே பத்திரமாக வைத்துக் கொள்ளலாம் எனவும், அதற்காக அந்தப் பெண்ணின் ஓலையை நம்பி வழியில் பிறழ்ந்து செல்லவேண்டிய அவசியம் இல்லை எனவும் சொன்னான். ஆனால் வல்லபனோ வேறு ஏதோ யோசனையில் இருந்தான். தத்தன் அவனிடம் வற்புறுத்தலாகக் கடந்த இரு நாட்களில் நடந்ததை எல்லாம் மறந்துவிட வேண்டும் என்றான். ஆனால் வல்லபனோ எதற்கும் மறுமொழி சொல்லாமல் அவனையே பார்த்த வண்ணம் நின்றான்.
தத்தன் மேலும் அவனிடம் தாங்கள் வந்த காரியம் வேறு எனவும் அந்தக் காரியத்தை முடிக்கவேண்டும் என்னும் லட்சியத்தில் இருந்து தாங்கள் பின்வாங்கக் கூடாது என்றும் அறிவுறுத்தினான். இந்தச் சம்பவங்கள் இடையில் வந்தவை! நாமாக உட்புகுந்து விட்டோம். ஆகவே இவற்றை அடியோடு மறந்து விடலாம். நாட்டில் எங்கெங்கோ, யார் யாருக்கோ என்னவெல்லாமோ நேரிடுகிறது. அதற்கெல்லாம் நாம் பொறுப்பாகவும் முடியாது! அனைவரையும் நம்மால் காப்பாற்றிக் கொண்டிருக்கவும் முடியாது. வல்லபனின் தாயார் வல்லபனை இவ்வளவு தைரியமாக வெளியே அனுப்பி இருப்பதன் நோக்கத்தை நினைத்துப் பார்க்கச் சொன்னான் தத்தன். அவன் தந்தையின் லட்சியத்தை நிறைவேற்றுவதிலேயே அவன் ஈடுபட வேண்டும் என்றும் கண்டித்துக் கூறினான். வல்லபனும் ஆமோதித்தான். "ஆம்! என் தாய்க்கு என் தந்தை கண்ட கனவு பலிக்க வேண்டும்." என்றான்.
"வல்லபா! உன் தாய்க்கு வாழ்க்கையின் குறிக்கோளே அது தான்! அதற்காகவே உன்னைப் பெற்றெடுத்தார்கள். உன்னைக் கல்வி பயின்று வர அனுப்பினார்கள். கொங்கு நாட்டின் வீராதி வீரர்களிடம் உன்னை மல்யுத்தம், வாள் வீச்சு, வில் வித்தை எல்லாவற்றிலும் பழக்கி இருக்கின்றார்கள். இத்தனையும் தனியொரு பெண்ணாக நின்று அவர் செய்திருக்கிறார் வல்லபா! அனைத்தும் எதற்காக? அந்த நீண்ட நெடுங்காலத்துக் கனவு! அரங்கனை எப்பாடுபட்டாவது கண்டு பிடிக்க வேண்டும். மீண்டும் அவனைத் திருவரங்கத்தில் சேர்க்க வேண்டும். இது தானே அவர்களின் நீண்ட நெடுங்காலக் கனவு!அதையும் அவர் வாழ்நாளுக்குள்ளே நடந்து அவர் கண்களால் அதைக் காண வேண்டும்.அவர் உயிர் வாழ்வதே இதற்காகத் தானே வல்லபா! அதை நினைத்துப் பார்! இதை முடிக்க வேண்டியே வெளி உலகுக்கு உன்னையும் துணைக்கு என்னையும் அனுப்பி இருக்கிறார். இதோ பார் வல்லபா! நாடு எவ்வளவு சீர் குலைந்திருக்கிறது என்பதை நீ அறிவாய் அல்லவா? நாட்டின் இத்தகைய சீர்கேட்டிலும் உன் தாய் உன்னை தைரியமாக வெளியே அனுப்பி அரங்கனைத் தேடும் பணியில் ஈடுபடுத்தி இருக்கிறார்கள் என்றால் அது எப்பேர்ப்பட்ட லட்சியமாக இருக்கும் என்பதை அறிவாய் அல்லவா?"
நீளமாகப் பேசிவிட்டுப் பெருமூச்சு விட்டான் தத்தன். வல்லபன் எதற்கும் பதில் சொல்லவில்லை.தத்தன் கூறுவதெல்லாம் சரி என்றே அவன் உள்மனம் சொன்னது. தத்தன் சொன்னது மாதிரியே நடந்து கொண்டு இடையில் நடந்தவற்றை எல்லாம் மறந்து விடலாம் என ஓர் எண்ணம் வேகமாக அவன் நெஞ்சில் எழுந்தது. ஆகவே தத்தனோடு சேர்ந்து அவனும் நடக்க ஆரம்பித்தான். இருவரும் மௌனமாகவே சற்று நேரம் நடந்தார்கள். போகும்போதே வல்லபன் அவனிடம் அரங்கன் பற்றிய விசாரம் ஒன்றே இனி என் குறிக்கோள் என உறுதியாகச் சொன்னான். தத்தனும் அதை மகிழ்வோடு ஆமோதித்தான்.