எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, October 08, 2019

சாம்ராஜ்யத்தின் நிலைமை!

மீண்டும் தென்னகத்தின் அரசியல் சூழ்நிலையை நினைவு படுத்திக் கொள்வோம். இவை அனைத்தும் சரித்திரம் அறிந்தோர் அனைவருக்குமே தெரிந்தது. ஸ்ரீரங்கம் கோயிலின் கோயிலொழுகு புத்தகங்களில் பதிவாகியும் உள்ளது. அதைத் தவிரவும் முக்கியமான ஆதாரம் கங்கா தேவி எழுதிய முதல் பயணம் குறித்த பதிவும் காரணம். இவற்றை கங்கா தேவி சம்ஸ்கிருதத்தில் பாடல்களாக எழுதி வைத்திருந்தாள். அவள் பார்த்த, கேட்ட, நேரில் கண்ட சம்பவங்களின் தொகுப்பு அது. அந்தக் காலகட்டத்தில் உள்ள நிகழ்வுகளைத் தான் எழுதி வைத்திருந்தாள். அதை அடிப்படையாகக் கொண்டு ஸ்ரீவேணுகோபாலன் அவர்கள் திருவரங்கன் உலாவை எழுதி இருக்கிறார். கிட்டத்தட்ட அவருடைய எழுத்தை ஆதாரமாகக் கொண்டே இங்கே நானும் எழுதி வருகிறேன்.

தென்னாட்டில் எப்போதுமே வெளியே இருந்து வரும் அரசர்களாலோ, கொள்ளையர்களாலோ எவ்விதமான தொந்திரவுகளும் ஏற்பட்டதில்லை. பல சிறு நாடுகளாகப் பிரிந்திருந்த தென்னகத்தில் அந்த நாட்டு அரசர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வார்கள். பூசல்கள் ஏற்பட்டன. சின்னஞ்சிறு போர்கள் முதல் கொஞ்சம் பெரிய போர் வரை நடந்தாலும் மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கவில்லை. போர் நடைபெறுகையில் மக்கள் அந்த இடங்களை விட்டு விலகிக் கொஞ்ச தூரம் சென்று வாழ்வார்கள். போர்கள் முடிந்து சகஜ நிலை திரும்பியதும் தங்கள் இடங்களுக்குத் திரும்புவார்கள். அவர்களின் தொழில்களிலோ, நடைமுறைப்பழக்கங்களோ, பேசும் மொழியோ மாறவில்லை. சமய நெறிகளையும் அவர்கள் கடைப்பிடித்து வந்தார்கள்.

இப்படிக் கிட்டத்தட்ட அமைதிப் பூங்காவாகவே திகழ்ந்து வந்த தென்னகத்தில் பதினான்காம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முதல் முதலாக தில்லி சுல்தான்கள் படை எடுத்து வந்தனர். அப்போது தமிழகம் பல்லவர்களாலேயோ, சேர, சோழ, பாண்டிய நாடுகள் எனவோ பிரிந்திருக்கவில்லை. பிற்காலச் சோழ சாம்ராஜ்யத்துக்குப் பின்னர் ஏற்பட்ட பாண்டிய சாம்ராஜ்யத்தின் மிச்சங்கள் அப்போது எஞ்சி இருந்தன. மதுரையில் இருந்த பாண்டிய அரச வம்சத்தினரிடையே வாரிசுச் சண்டைகள், சகோதரப் பூசல்கள். வடக்கே இருந்து வலுவுடன் வந்த தில்லி சுல்தானியரை எதிர்க்கும் அளவுக்கு வலுவுள்ள நாடாகப்பாண்டிய நாடு இல்லை. அவர்களில் ஒருவரே தில்லி சுல்தானின் உதவியுடன் மதுரைச் சிம்மாசனத்தைப் பிடிக்கும் ஆவலுடன் இருந்து வந்தார். அதற்கான உதவி நாடியும் சென்றார். எஞ்சியவர்கள் இன்னும் தெற்கே தென்காசி, நாஞ்சில் நாடு, கேரளப் பகுதிகளுக்குப் போய் மறைந்திருந்து வாழ ஆரம்பித்தனர். மக்களைக் காத்துத் தலைமை தாங்கி நிற்கக் கூடிய வலுவான தலைமை இங்கே அமையவில்லை. மக்கள் நிராதரவாக அவர்களே தில்லிப் படையை எதிர்கொள்ளும் நிலைமைக்குத் தள்ளப்பட்டனர்.


இத்தகைய மோசமான சூழ்நிலையில் தமிழகம் வந்த சுல்தானியர் மக்களைக் கிட்டத்தட்டக் கொன்று பலரையும் போர் என நடந்த கூத்தில் வென்று மதுரையில் கி.பி .1323 ஆம் ஆண்டில் சுல்தானிய ஆட்சியை நிறுவினார்கள். பெரும்பாலான தமிழகம் அவர்களுக்குப் பணிந்தே இருக்க நேரிட்டது. இதனால் மக்களின் வாழ்க்கை முறை அடியோடு மாறிப் போனது. மக்கள் தங்கள் சமய நெறிகளைக் கடைப்பிடிக்க முடியவில்லை. உணவுப் பழக்கங்கள் முதற்கொண்டு அனைத்தும் மாற ஆரம்பித்தது. தமிழகமே பெரிய கொந்தளிப்பில் ஆழ்ந்து போனது. இவற்றைச் சகிக்க முடியாமல் எதிர்த்த ஹொய்சளர்கள் தான் தோற்றுப் போனார்கள். சூழ்ச்சியால் தோற்கடிக்கப்பட்டார்கள்.

இந்தச் சமயம் தான் வித்யாரண்யர் உதவியுடனும் கிரியா சக்திப் பண்டிதர் என்பவர் உதவியுடனும் ஹரிஹரன், புக்கன் என்னும் இரு சகோதரர்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்தனர். இவர்கள் வாரங்கலைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த பிரதாப ருத்திரனின் பொக்கிஷ அதிகாரிகள் எனச் சிலரும் படையில் இருந்தவர்கள் எனச் சிலரும் கூறுகின்றனர். எது எப்படியானாலும் வீரம் மிகுந்தவர்கள். தங்கள் அரசர் பிரதாப ருத்திரர் சிறைப்பிடிக்கப்பட்ட  பின்னர் மனம் நொந்து போய் துங்கபத்திரா நதிக்கரைக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கே வித்யாரண்யரைச் சந்திக்க நேர்ந்து விஜயநகர சாம்ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டது எல்லாம் ஏற்கெனவே பார்த்தோம்.


இந்தக் கதை ஆரம்பித்த காலத்தில் ஹரிஹரன் காலம் முடிந்து போய் அவர் சகோதரர் புக்கராயர் தான் ஆட்சி செய்து வந்தார். நிர்வாக வசதிக்காக சாம்ராஜ்யம் பல பகுதிகளாகப்பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றையும் ஆட்சி செய்யத் தக்க அரசகுமாரர்கள் அல்லது அரச வம்சத்தினர் நியமிக்கப்பட்டு அவர்கள் அரசர் என்றே அழைக்கப்பட்டனர் அப்படி ஒரு ராஜ்யம் தான் முள்வாய் ராஜ்யம்.இந்த ராஜ்யத்தை புக்கராயரின் மகன்களில் ஒருவரான கம்பணன் என்பவர் நிர்வகித்து வந்தார். இவர் மனைவியர் தான் நாம் சென்ற அத்தியாயத்தில் பார்த்த குந்தளா தேவியும், கங்கா தேவியும். இருவரும் பேசிக் கொண்டிருக்கையில் உள்ளே வந்த சேடி ஒருத்தி கிரியா சக்திப் பண்டிதர் அவர்களைக் காண வந்திருப்பதைத் தெரிவித்தனர்.

11 comments:

Padma said...

அரங்கன் எங்கே இருக்கிறார் ? அவரை காண ஒரு வாரமா நாங்கள் காத்திருக்கிறோம்.
வல்லபனுக்கு என்ன நடந்தது?

நீங்கள் மிகவும் பிஸியாக இருப்பதை நாங்கள் அறிவோம்.ஒரு வாரத்திற்கும் மேலாக புதுப்பிப்பு இல்லாமல் பார்க்க வருத்தமாக இருக்கிறது அம்மா.
என்னை தவறாக நினைக்க வேண்டாம்

Padma said...

இரண்டாம் மாதமே வந்து விட்டது .இன்னும் கதை தொடரவில்லை.

Padma said...


Daily Iam religiously visiting the blog only to find no updates. Please dont mistake me,I really wish you give updates every week.

Geetha Sambasivam said...

I am sorry! I am in a dilemma whether to continue or not. Tried some sources for some historical events but to no avail. I cannot get the "koilozugu!" references also. So trying some other sources.

Padma said...

Please do continue this.
Thiruvarangan Ula is 'almost' based on Koil Ozhugu.
Also you can read Rangaratinam by Kalachakra Narasimha. It has some interesting information.

Padma said...

https://archive.org/details/Tamil-Vishnu-Koyil-Ozhugu

Padma said...

There is one book called Chronicles of Srirangam. It is also very informative.

Geetha Sambasivam said...

Thank You Padma for giving me these details. I will check them and starts to work. _/\_

Padma said...

Since there is no further update I come to a conclusion that this post is the last. A kind of huge disappointment for a regular reader like me. Daily I visit your blog only to find it inactive.

However, I sincerely request you to dedicate a post or two to summarize what happened next (recovery of Namperumal, how did he come back).... And finish the story with that. You can present as chronological facts (not story, It is long I am aware still lots more to be covered)

You have been writing this story for many days, You should not abort it without a proper conclusion.
Please forgive me, If I am wrong.

நெல்லைத்தமிழன் said...

வேலைப் பளு மற்றும் கண் பிரச்சனை காரணமா, இந்தத் தொடரில் முனைப்பு காட்டவில்லை கீசா மேடம் என நினைக்கிறேன். மிகுந்த உழைப்பு தேவைப்படும் தொடர் இது. மீண்டும் எழுத ஆரம்பியுங்க.

சமையல் பகுதியும் முக்கியம்தான். எண்ணங்கள், எங்களுடனான இன்டராக்‌ஷன். ஆனால் இந்தத் தொடர் நிறைவு பெற வேண்டும். தொடருங்கள்.

Geetha Sambasivam said...

பத்மா, நெல்லையாரே, கொஞ்சம் வேலை இருக்கு. முதலில் தகவல்களைத் தொகுத்து அதற்கேற்ப எழுதணும். கட்டாயம் தொடர்ந்து நம்பெருமாளை இங்கேயும் ஸ்ரீரங்கத்தில் கொண்டு சேர்த்துவிடணும்.