எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, November 24, 2020

மீண்டும் வல்லபனும், தத்தனும்! ஶ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்!

இந்தச் சம்பவங்கள் நடந்த காலத்தில் விஜயநகர அரசர்கள் தங்களை மன்னர்களாகக் கருதிக் கொள்ளவும் இல்லை; அப்படி அழைத்துக் கொள்ளவும் இல்லை. மண்டலேஸ்வரர்கள் எனத் தனித்தனியான மண்டலங்களை ஆளும் பிரதிநிதிகளாகவே நினைத்துக் கொண்டார்கள். அப்படியே அழைத்தும் கொண்டனர். கிரியாசக்திப் பண்டிதர் சொன்னதைக் கேட்ட கோபண்ணா, தங்களால் பாமனி சுல்தான்களையோ, மதுரை சுல்தான்களையே வெற்றி கொள்ள முடியவில்லையே என்னும் வருத்தம் தமக்கும் இருப்பதாகச் சொன்னார். இவர்கள் இருவரின் யாரிடம் போர் தொடுத்தாலும் இருவரும் அவரவர் சமயங்களின் அடிப்படையில் இணைந்து கொண்டு போர் செய்தால் வெல்வது கடினம் என்பதைத் தாம் உணர்ந்திருப்பதாக கோபண்ணா சொன்னார். இருவருக்கும் இடையில் தங்கள் ராஜ்யம் அகப்பட்டுக் கொண்டு பாக்குவெட்டியில் மாட்டிய பாக்குப் போல் வெட்டுப் பட்டுவிடுமோ என்று அஞ்சுவதாகவும் சொன்னார். 

மேலும் பண்டிதர் சொன்னதாவது. இரு துருக்கிய சுல்தான்களுக்கும் இடையே இருக்கும் பொறாமைத் தீயை உசுப்பி விட்டே தாங்கள் தம் நாட்டைக் காப்பாற்றிக் கொள்ள இயலும் எனவும் இதை விட்டு வேறே ஏதேனும் செய்யப் போய் இரு சுல்தான்களும் இணைந்து விட்டால் பின்னர் எதிர்ப்பது கடினம் எனவும் ஆகவே மிகவும் கவனமாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க வேண்டி இருப்பதாகவும் சொன்னார்.  கோபண்ணாவும் அதை ஒத்துக் கொண்டார். பண்டிதர் அப்போது தமிழ் பேசும் மக்களும் நாடுகளும் இருக்கும் சிரமமான நிலையிலிருந்து அவற்றைக் காப்பாற்ற வேண்டுமானால் அதற்குக் காலம் கனிய வேண்டும் எனவும், உடனே எதுவும் செய்ய இயலாது என்றும்,அந்த மக்களும் சரி, அரங்கனும் சரி காலம் கனியும் வரை பொறுத்திருக்க வேண்டியது தான், வேறு வழியில்லை எனவும் பண்டிதர் கூறினார். கோபண்ணா யோசனையில் ஆழ்ந்து போக அவ்வளவில் பண்டிதர் அவ்விடம் விட்டு கோபண்ணாவிடம் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினார். 
**********************************************************************************

இங்கே அரங்கனையும் அவரைத் தொடர்ந்து கொண்டிருந்த முதியவரையும் வழியில் கண்டு விபரங்கள் தெரிந்து கொண்டிருந்த இளைஞர்கள் இருவரும் ஆங்காங்கே விசாரித்துக் கொண்டு அரங்கன் சென்றிருக்கும் வழி என யூகிக்கும் வழியிலே சென்று கொண்டிருந்தனர். அரங்கன் எங்கே தான் போனானோ, என்ன ஆனானோ என நினைக்கும்போதே வல்லபனுக்கு அந்தப் பெண்ணின் முகமும் அவள் எழுதியதாகச் சொல்லப்பட்ட முறியும், அந்த மகர கண்டிகையுமே நினைவில் வந்து மோதிக் கொண்டிருந்தன.  அவளை நினைக்கையில் எல்லாம் அவனது கை அந்த மகர கண்டிகையைத் தடவிக்கொடுத்துக் கொண்டிருந்தது. அவள் அந்தக் கிராதகர்களிடமிருந்து தப்பித்தாளோ இல்லையோ என்றெல்லாம் நினைத்துக் கொண்டான் வல்லபன். அந்தப் பெண் கஷ்டப்படுகிறாளோ என்னமோ என்றெல்லாம் நினைத்துக் கொண்டு உருகி உருகிக் கண்ணீரும் விட்டான். அவள் சாதாரணப் பெண்ணல்ல எனவும் ஓர் அரசகுல மங்கையாகத் தான் இருக்க வேண்டும் என்றும் வல்லபனுக்கு உறுதியாகத் தெரிந்திருந்தது. அந்தப் பெண் நம்மை மணந்து கொள்வாளா என்றெல்லாம் எண்ணிக் கற்பனைகள் பல செய்து அந்தச் சுகத்தில் ஆழ்ந்து போனான் வல்லபன்.

கூடவே வரும் தத்தனுக்குக் கூடத் தெரியாமல் தன் உணர்ச்சிகளை மறைத்துக் கொண்டு வந்தான். அவள் இருக்கும் இடத்தையாவது அடைய முடியுமா? கடவுள் அதற்கு உதவி செய்வாரா? என்றெல்லாம் எண்ணிக் கொண்டு மனம் வருந்திக் கொண்டிருந்தான். ஒரு நாள் அவர்கள் சென்றடைந்த ஊரின் பெயர் பூங்குளத்து நல்லூர் என்னும் ஊர். அங்கே சென்று சத்திரத்தில் இடம் பிடித்துக் கொண்டு தங்கிக் கொண்டு சத்திரத்து மணியக்காரரை அந்த ஊரில் என்ன விசேஷம் எனக் கேட்க அவரோ மனம் நொந்து போய் இந்த ஊருக்கெல்லாம் விசேஷங்கள் நடந்தே நாற்பது வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டன என்றார். சமீபத்தில் யாரேனும் முக்கியஸ்தர்கள் வந்தனரா என்னும் கேள்விக்கு யாரும் வரவில்லை என்றார்.

இந்தச் சத்திரம் நித்தினவல்லி என்பவனால் ஆதரிக்கப்படுவதாகவும் தினம் காலை, இரவு இருபது பேருக்கு உணவு படைக்க மான்யம் கொடுத்திருப்பதாகவும் சொன்னார். உணவு தயார் செய்தாலும் யாத்திரிகர்கள் அவ்வளவாய் வருவதில்லை எனவும், சமீபத்தில் ஓர் வீரர் படை வந்து ஏழெட்டுப் பேர்கள் உணவு அருந்திச் சென்றது தான் எனவும் அதன் பின்னரும், முன்னரும் யாரும் வரவில்லை என்றும் சொன்னார். அந்த ஆட்கள் யாராக இருக்கலாம் என்ற கேள்விக்குச் சம்புவராயர் ஆட்களாக இருக்கலாம் எனவும் இரண்டு பெண்கள் அந்தக் கூட்டத்தில் இருந்ததாகவும் மணியக்காரர் தெரிவித்தார்.  அதில் ஓர் இளம்பெண் உடல்நலமில்லாமல் இருந்ததால் சிகிச்சைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு மறுநாள் காலையிலேயே கிளம்பிவிட்டார்கள் என்றும் சொன்னார். 

வல்லபனுக்கு அது அந்த மகரவிழியாளாகத் தான் இருக்க வேண்டும் என்று உறுதியாகத் தெரிந்தது. அவளுக்கு உடல் நலமில்லையா? கடவுளே! என்ன கஷ்டப்படுகிறாளோ? என்றெல்லாம் எண்ணிக் கலங்கினார். பின்னர் வயோதிக வைணவர்கள் யாரேனும் இருக்கிறார்களா எனக் கேட்டு ஒருவர் இருப்பதாகத் தகவல் அறிந்து கொண்டு அவரைத் தேடிக் கொண்டு கிளம்பினார்கள். மழை நீரில் பள்ளமாக இருந்த தெருவில் தேங்கிக் கிடந்த நீரை எல்லாம் தாண்டிக் கொண்டு வல்லபனும் தத்தனும் அந்த வீட்டை அடைந்தனர். வல்லபன் சமாளித்துக் கொண்டு முன்னே செல்ல தத்தனுக்கு வழுக்கி விட்டது. அவன் கீழே விழுந்தான். அப்போது ஓர் பெண் குரல் சிரிக்கும் சப்தம் கேட்டது. இருவரும் நிமிர்ந்து பார்த்தபோது அந்த வீட்டு வாயிலில் நின்ற ஓர் சின்னஞ்சிறு இளம்பெண் தன் பற்களை எல்லாம் காட்டி அவர்களைக் கண்டு சிரித்துக் கொண்டு நின்றாள். பின்னர் தன் தளிர்க்கரங்களால் வாயைப் பொத்திக் கொண்டு சிரிப்பை அடக்கிய வண்ணம் தத்தன் எழுந்திருக்கத் தன் கையையும் கொடுத்தாள்.

Thursday, November 19, 2020

பண்டிதரின் விளக்கம்! ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

கோபண்ணா தொடர்ந்து தாம் அன்றைய பயணத்தையே நிறுத்திவிட்டுச் சிந்தனையில் ஆழ்ந்ததாகத் தெரிவித்தார். அப்போது அன்று மாலை அருகிலுள்ள மலைக்கோயிலுக்கு அருகே தவ நிலையில் ஆழ்ந்திருந்த ஶ்ரீ ஶ்ரீ வேதாந்த தேசிகர் அவர்கள் ஊருக்கு வரப்போவதாய்த் தகவல் வந்தது. மாபெரும் பக்தரும், கல்விக்கடலும், கவிகள் எழுதுவதில் சிம்மத்தை நிகர்த்தவரும் ஆன தேசிகரின் பெருமைகளைப் பற்றி ஏற்கெனவே அறிந்திருந்ததாகவும் ஆகவே அவரைப் போய்ப் பார்க்க நினைத்ததாகவும் கூறினார். அப்போது பண்டிதர் வித்யாரண்யர் வேதாந்த தேசிகர் குறித்து நிறையச் சொல்லி இருப்பதாகக் கூறினார். கோபண்ணா தொடர்ந்தார்.

வேதாந்த தேசிகரைப் போய்ப் பார்க்கச் சென்றபோது சின்னஞ்சிறு குடிலில் அவர் இருந்ததாகவும் பிராயம் தொண்ணூறு இருக்கும் எனவும் கூறினார் கோபண்ணா. மெலிந்த திருமேனியுடன் சுடர் விட்டுப் பிரகாசித்த விழிகளுடனும் அந்த விழிகளில் அருட்பார்வையுடனும் காணப்பட்டதாகவும் தாம் அவரைப் பார்த்ததுமே நமஸ்கரித்ததாகவும் கூறினார். கோபண்ணாவை அப்போது உணர்ச்சி வெள்ளம் ஆட்கொண்டதாகவும் இதுவரை இல்லாததொரு உணர்வு அவருக்குள் ஏற்பட்டுக் கண்களில் கண்ணீரைப் பிரவாகமாக வரச் செய்ததாகவும் கூறினார். கை கட்டி வாய் பொத்தித் தலை குனிந்து நின்ற கோபண்ணாவைப் பார்த்து தேசிகர் அவருக்குக் கனிந்து விட்டதாய்க் கூறினதாய்ச் சொன்னார். ஏதும் புரியாமல் விழித்த கோபண்ணாவுக்கு தேசிகர் அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசித்ததாகவும் தானும் அந்த மந்திரத்தைத் திரும்பச் சொன்னதாகவும் தெரிவித்தார்.  மந்திர ஜெபம் உபதேசித்தல் பூர்த்தி ஆனதும் தேசிகர் பாதங்களில் மீண்டும் விழுந்து வணங்கிய கோபண்ணாவை எழுப்பி இனி அனைத்தும் நலமே என தேசிகர் சொன்னதாய்ச் சொன்னார்.

அவ்வளவில் கோபண்ணாவின் மனதில் பெரிய மாறுதல் ஏற்பட்டதாகவும் இவ்வுலக வாழ்க்கையின் பற்றெல்லாம் மனதை விட்டு அகன்றுவிட்டதாகவும் தெரிவித்தார்.  இனி தமக்குப் பதவியோ அதிகாரமோ தேவை இல்லை எனவும் ஓர் வைணவனுக்கு உரிய கடமைகளை மேற்கொண்டு தாம் அவற்றை நிறைவேற்றப் போவதாகவும் கூறினார் கோபண்ணா. கிரியாசக்திப் பண்டிதர் கோபண்ணாவையே பார்த்த வண்ணம் அமைதியாக உட்கார்ந்திருந்தார். ஆனாலும் அவர் மனதில் எண்ண ஓட்டங்கள் ஓடிக் கொண்டே இருந்தன.  அந்தணரான கோபண்ணா தத்துவம், வேதாந்தம், மீமாம்சம், புராணம் எனப் பலவும் கற்றவர். வேதங்களில் நிபுணத்துவம் பெற்றவர். வடமொழியில் நன்கு தேறியவர். இப்படிப் பட்டவர் போர் முறைகளையும் கற்றறிந்து முள்வாய் ராஜ்யத்தின் தளபதியாகவும் ஆனார் எனில் அதற்குக் காரணம் அப்போதைய ராஜ்யங்களின் சூழ்நிலையே காரணம்.

வடக்கே இருந்து வந்த துருக்கர்களால் தங்கள் வாழ்க்கை முறை, மொழி, கலாசாரம் அனைத்தையும் துறக்க நேரிடுமோ என்னும் கவலையாலும் அச்சத்தாலும் தென்னாட்டு மக்கள் ஓரு பொது எதிரியைத் தாங்கள் எதிர்கொள்ள வேண்டி இருப்பதை உணர்ந்து கொண்டனர். இதில் அனைவருமே கலந்து கொண்டு தங்கள் பங்கை அளித்து வந்தனர். இதை ஒட்டியே அந்நாட்களில் பல அந்தணர்களும் போர்ப்பயிற்சியை மேற்கொண்டு தங்கள் நாட்டுக்குத் தங்களால் இயன்ற உடல் உதவியைக் கொடுத்து வந்தனர். இப்படிப் போர்களில் ஈடுபட்ட பல அந்தணர்கள் சிறப்பான முறையில் போரிட்டுப் பெரும் சைனியாதிபதிகளாகவும், தளபதிகளாகவும் பெரும் பெருமையுடனும் சிறப்புடனும் திகழ்ந்து வந்தனர். அவர்களில் ஒருவர் தான் கோபண்ணா. புக்கராயருக்காகப் பல போர்களில் பங்கெடுத்து அவருக்கு வெற்றியை வாங்கிக் கொடுத்தவர் இப்போது புக்கராயரின் ஆணையின் பேரில் அவர் குமாரர் கம்பணருக்கு உதவ வேண்டி முள்வாய் ராஜ்யத்துக்கு சைனியாதிபதியாக வந்திருந்தார். இப்படிப் பட்டவர் இப்போது தாம் ராஜரிக காரியங்களிலிருந்து விலகுவதாய்ச் சொன்னது கிரியா சக்திப் பண்டிதருக்குச் சரியாகப் படவில்லை. 

கோபண்ணாவைப் பார்த்து அவர் சொற்கள் தமக்கு அதிர்ச்சியைத் தருவதாகச் சொன்னார். மேலும் தொடர்ந்து, இந்த விஜயநகர சாம்ராஜ்யத்தின் சிறப்புக்குக் காரணமே அவரைப் போன்ற பெரும் வீரர்கள் தாம் எனவும் இதனால் தான் மக்கள் கொஞ்சமேனும் தங்கள் சமய நெறிகளைப் பின்பற்றி வாழ முடிந்திருக்கிறது என்றும் கூறினார். இந்த நாட்டை ஒரு மாபெரும் சாம்ராஜ்யமாக மாற்றி தில்லி அரசுக்கு நிகராகவும் அவர்களுக்கு ஓர் பெரிய எதிரியாகவும் ஓர் ஆட்சியைத் தோற்றுவிக்கத் தென்னாடு முழுமையும் தங்கள் குடைக்குள் கொண்டு வர விஜயநகர அரசர்கள் லட்சியம் கொண்டுள்ளதாயும் புக்கராயர் அதில் முழு ஈடுபாட்டுடன் இருப்பதாகவும் கூறினார் கிரியாசக்திப் பண்டிதர். இந்நிலையில் வடக்கே தில்லி சுல்தானியர்களின் பலமோ குறைந்ததாய்த் தெரியவில்லை. குறைந்து விட்டதோ என்னும் எண்ணும் வேளையில் நம் சாம்ராஜ்யத்திற்கு வடக்கே இருந்து குல்பர்க்காவில் இருந்து கொண்டு பாமணி வம்சத்தினர் தொந்திரவு கொடுத்து வருகின்றனர். அவர்களால் நமக்கு எப்போதுமே ஆபத்து என்பதை நீங்கள் உணரவில்லையா என்றும் கேட்டார்!

Monday, November 16, 2020

கோபண்ணா சொன்ன கதை! ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

 அதற்கு கோபண்ணா பின்னிரவில் அவரை ஓர் விஷ ஜந்து தீண்டிவிட்டதாகச் சொன்னார். அது என்ன எனப் பார்த்தபோது பெரியதான ராஜ தேள் என்றும் சொன்னார். கொடுமையான, கடுமையான வலியில் தாம் துடித்ததாகவும் ஆட்களை எழுப்பி அந்த அர்த்த ஜாமத்திலும் வைத்தியரைக் கூட்டி வரச் சொன்னதாகவும் சொன்னார். "புது ஊர், புது இடம் என்பதால் என் ஆட்களுக்கு அக்கம்பக்கம் விசாரித்துத் தெரிந்து கொண்டு வைத்தியரைக் கண்டு பிடிக்க நேரம் ஆகிவிட்டது. வைத்தியர் வந்து சூரணத்தைக் குழைத்துப் போட்டும் குணமாகவில்லை என்றதும் பச்சிலையை அரைத்துச் சாறு பிழிய வேண்டுமெனச் சொல்ல வைத்தியரிடம் அடையாளங்களைக் கேட்டுக் கொண்டு பச்சிலையைத் தேடிச் சென்றனர் என் பரிவாரங்கள். அக்கம்பக்கம் எங்கேயும் கிடைக்காமல் அருகிலுள்ள கிராமத்தின் மலைச் சாரலிலே கிடைக்கும் எனச் சொல்லவே தீவர்த்திகளை ஏற்றிக் கொண்டு அங்கே சென்றனர். கடும் பிரயத்தனங்களுக்கு நடுவே ஒரு வழியாக அதைக் கண்டு பிடித்துப் பறித்து வந்து வைத்தியரிடம் கொடுக்க அவரும் பச்சிலையைச் சாறு பிழிந்து தேள் கொட்டிய இடத்தில்  பரப்பவே ஒரு நாழிகையில் வலியிலிருந்து விடுதலை பெற்றேன்." கோபண்ணா நிறுத்தியதும், கிரியாசக்திப் பண்டிதர், "இதை ஏன் இப்போது சொன்னீர்கள்?" என வினவினார்..

கோபண்ணா எல்லாம் முடிந்து மறுநாள் ஊருக்குக் கிளம்பும் நேரம் அந்த வயதான முதிய வைணவர் மறுபடியும் கோபண்ணாவைத் தேடிக் கொண்டு வந்ததாய்ச் சொன்னார். ராத்திரி என்னைத் தேள் கொட்டியதைப் பற்றி வினவியர் நான் அது பற்றிய விபரங்களைக் கூறியதும் மௌனமாகக் கேட்டுக் கொண்டார். பின்னர் என்னைப் பார்த்து, "தளபதி அவர்களே! உங்களை இப்போதுக் கொடிய தேள் கொட்டி இருப்பது போல் தான் நாட்டையும் கொடுமையானதொரு விஷ ஜந்து தீண்டி விட்டது என்பதை உணருங்கள். நேற்று இரவோடு இரவாக மூலிகையைத் தேடி உங்கள் ஆட்கள் அலைந்தனரே! அதே போல் அரங்கனைத் தேடியும் நீங்கள் அலைந்து திரிந்து பாருங்கள். அவன் எங்கிருக்கிறான் என்பதை முதலில் கண்டு பிடியுங்கள்!" என்று சொல்லிவிட்டு மறுமொழியைக் கூட எதிர்பார்க்காமல் உடனே கிளம்பி விட்டார்." என்றார் கோபண்ணா.

அவர் வார்த்தைகள் தன்னைக்கட்டிப் போட்டதைப் போல் உணர்ந்ததாகச் சொன்னார் கோபண்ணா. தேள் கொட்டிய வலியை விட மிக அதிகமான வலியைத் தாம் உணர்ந்ததாகவும் சொன்னார். ஆம், தமிழகத்தை விஷ ஜந்து தான் தீண்டி இருக்கிறது. தாம் இதைப் புரிந்து கொள்ளாமல் போய்விட்டோமே எனத் தாம் மனதில் நினைத்துக் கொண்டதாய்ச் சொன்னார்.  அஞ்சினான் புகலிடத்து மக்களின் கண்ணீர் அந்த விஷ ஜந்துவின் கொட்டலினால் ஏற்பட்ட வலிதான் என்பதையும் புரிந்து கொண்டேன். அவர் இதைச் சுட்டிக் காட்டியது மட்டுமல்ல. அதற்கான பரிகாரத்தையும் கூறிவிட்டார். அது தான் அரங்கனைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய விஷயம். அந்த அரங்க விக்ரஹம் வெறும் விக்ரஹம் மட்டுமல்ல. ஒரு தெய்விக மூலிகை. அதை எப்பாடுபட்டாவது தேடிக்கொண்டு வந்து தமிழக மக்களின் துயரைப் போக்கி அவர்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை உண்டு பண்ண வேண்டும்."

"ஒரு சாமானியனான என்னுடைய உடல் வலியைப் போக்குவதற்கு நடு இரவில் மூலிகையைத் தேடி அலைந்தனர் என் பரிவாரங்கள். ஒரு நாட்டின் மக்களது மன வலியைப் போக்க ஓர் தளபதியாக நான் செய்ய வேண்டியது என்ன என்பதை அந்த நிகழ்ச்சி மூலம் எனக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்பதை அந்த முதியவர் சுட்டிக் காட்டியதும் தான் நான் புரிந்து கொண்டேன். அந்த வயோதிகர் மூலமாக அந்த மக்களின் மனக்கருத்து வெளிப்பட்டிருப்பதைப் புரிந்து கொள்ளாமல் அலட்சியமாகச் சிரித்து அவர்களை எல்லாம் அவமானப்படுத்தி விட்டேன். இப்போது என் தலையாய வேலை அரங்கனைக் கண்டு பிடிக்க வேண்டியது ஒன்றே ஆகும்." என்றார் கோபண்ணா.

இந்த ஒரு சம்பவம் உங்கள் மனதை மாற்றிவிட்டதா எனப் பண்டிதர் கேட்க கோபண்ணா, இல்லை இன்னமும் இருக்கிறது என்று மேலும் தொடர்ந்தார். 

Sunday, November 15, 2020

கோபண்ணாவின் கர்வம்! ஶ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்!

கோபண்ணா அதற்கு அஞ்சினான் புகலிடத்தில் உள்ள மக்களுக்குத் தாம் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்ததாகச் சொன்னார். முடிந்த அளவுக்கு மானியங்களையும் வழங்கியதாய்ச் சொன்னார். பின்னர் அங்கிருந்து திருநாராயணபுரம் சென்றதாகவும் அங்கே உள்ள பல வைணவர்கள் புதிதாகக் காணப்பட்டமையால் விசாரித்ததற்கு அவர்களில் பலரும் தமிழ்நாட்டிலிருந்து சுல்தானியர்கள் கைகளில் அகப்பட்டுக்கொள்ளாமல் தப்பி ஓடி வந்தவர்கள் எனவும் கேள்விப் பட்டதாய்ச் சொன்னார். அவர்கள் அனைவரும் ஒன்று கூடி கோபண்ணாவைக் கண்டதும் ஓடோடி வந்து தங்கள் குறைகளைத் தெரிவித்ததாய்ச் சொன்னார். மேலும் தொடர்ந்த கோபண்ணா அவர்கள் அனைவரையும் தாம் சமாதான வார்த்தைகள் கூறி வேண்டியதைச் செய்து தருவதாக உறுதியும் கூறி அனுப்பி வைத்ததாகச் சொன்னார். ஆனால் அவர்கள் அனைவரும் திரும்பிச் சென்ற பிறகும் எண்பது வயது மதிக்கத் தக்க முதிர்ந்த ஓர் வைணவர் மட்டும் அங்கேயே இருந்து தயங்கித் தயங்கித் தன்னிடம் ஏதோ சொல்ல வந்ததாகச் சொன்னார். அவரை அழைத்துத் தாம் விசாரித்ததாகவும் அதற்கு அவர் கூறியவை என அவர் சொன்ன விபரங்களை  கிரியாசக்திப் பண்டிதரிடம் விவரித்தார் கோபண்ணா.

கோபண்ணா பண்டிதரைப் பார்த்து, "ஆசானே! அத்தகைய வயது முதிர்ந்தவருக்கு என்ன குறை இருக்க முடியும் என யோசித்தேன். ஆனால் அவர் சொன்ன செய்தி! பல வருடங்கள் முன்னர் சுல்தானியர் தாக்கியதில் ஶ்ரீரங்கத்து மக்கள் மட்டுமின்றி அங்கிருந்த அரங்கனின் அர்ச்சாவதாரத்தையும் பரிசனங்கள் அனைவரும் பிள்ளை லோகாசாரியார் தலைமையில் மறைவிடத்துக்குக்கொண்டு சென்றதாகச் சொன்னார். அந்த ஊர்வலத்துடன் இந்த வயதான பெரியவரும் அப்போது கலந்து கொண்டாராம்.  அவர்கள் அனைவரும் பாண்டிய நாடு, கேரள நாடு முழுதும் சுற்றிவிட்டுக் கடைசியில் கன்னட தேசத்துக்கு வந்தனராம். இங்கே திருநாராயணபுரம் என்னும்  மேல்கோட்டை வந்ததும் அரங்கன் சில நாட்களோ மாதங்களோ இங்கிருந்தானாம். பின்னர் திரும்பிப் போனதாகச் சொல்கிறார். இவர் மட்டும் இங்கேயே தங்கி விட்டாராம்.                                                                                                                 

அவர் சொன்ன இன்னொரு விஷயம் என்னவெனில் அரங்க விக்ரஹத்தை நாலைந்து பேர்கள் எடுத்துக்கொண்டு திருப்பதியை நோக்கிப் பயணப்பட்டார்களாம். இவருடைய நினைவில் இருந்து திருப்பதியை நோக்கி அரங்கனின் பயணம் ஆரம்பித்துப் பதினெட்டு ஆண்டுகள் ஆகிவிட்டனவாம். ஆனால் அரங்கன் திருப்பதியைப் போய்ச் சேர்ந்தானா, அவனுக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்த விபரங்கள் ஏதும் தெரியவில்லையாம். அந்தப் பெரியவர் இதைச் சொல்லும்போது அழுது விட்டார். அரங்கனுக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்துத் தெரியாமல் தான் தவிப்பதாகச் சொன்னார். என்னைப் பார்த்து, "ஐயா! நீங்கள் ராஜாங்கக் காரியத்தில் பெரிய பதவியில் இருக்கிறீர்கள். உங்களால் அரங்கனைத் தேடிக் கண்டு பிடிக்க முடியும். அவன் இப்போது எங்கிருக்கிறான், என்ன நிலைமையில் இருக்கிறான் என்பதையும் உங்களால் கண்டறிய முடியும். உங்கள் செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டு அரங்கன் இருக்கும் இடத்தையும் என்ன நிலைமையில் இருக்கிறான் என்பதையும் கண்டு பிடித்து அவனுக்கும் நித்தியப்படி பூஜைகள் செய்ய வழி செய்தால்! இந்த நாட்டைப் பிடித்திருக்கும் பீடை ஒழிந்து போகும். சுபிக்ஷம் பெருகும். ஒரு வேளை பிற்காலத்திலோ அல்லது அதிர்ஷ்டவசத்தால் அரங்கன் கிடைத்த பின்னரோ தமிழகத்தில் நல்ல காலம் ஏற்பட்டால் அரங்கனைத் திருவரங்கத்திலேயே சேர்ப்பித்து விடலாமே!" என்றார். இது தான் அந்தப் பெரியவர் சொன்னது. ஆனால், இது எவ்வளவு பெரிய காரியம்! நம்மால் ஆகுமா என நினைத்து நான் எனக்குள்ளாகச் சிரித்துக் கொண்டேன்." என்றார் கோபண்ணா.

அதற்குக் கிரியாசக்திப் பண்டிதர், "இது எத்தனை முக்கிய விஷயம்! சிரிப்பு வரக்கூடியதா?" என வருத்தத்துடன் கேட்டார். கோபண்ணாவின் முகத்திலும் வருத்தம் தெரிந்தது. பின்னர் அவர் பண்டிதரிடம், "சுவாமி! சிரிக்கக் கூடாது தான். ஆனால் நான் சிரித்ததற்குக் காரணம் உண்டு! அரங்கனைத் தூக்கிக் கொண்டு அந்தப் பெரியவர் சுமார் 40 வயதில் திருவரங்கத்திலிருந்து கிளம்பிய கோஷ்டியுடன் புறப்பட்டிருக்கிறார். அதன் பின்னர் மேலும் 40 வருடங்கள் கடந்து விட்டன. அந்தப் பெரியவருக்கு இப்போது எண்பது வயது. அவர் சொல்லும் செய்தியும் உறுதியானது அல்ல. திருப்பதி நோக்கிப் பயணப்பட்டிருக்கிறார்கள். அவ்வளவே அவர் அறிந்தது. இதை வைத்து நாம் என்ன செய்ய முடியும்? இந்த நாற்பது வருடங்களில் என்னென்ன நடந்தனவோ! ஒரு சாதாரண உலோக விக்ரஹம் தானே! இத்தனை ஆண்டுகள் தாக்குப் பிடித்திருக்குமா? இதற்காக நான் நம்முடைய சாம்ராஜ்யம் முழுதும் தேடியா பார்க்க முடியும்? "

"மேலும் ஐயா! நான் ராஜரீக காரியங்களிலே சம்பந்தப் பட்டிருப்பதையும் அவரே சொன்னார். என்னுடைய இத்தகைய மும்முரமான முக்கியக் காரியங்களிடையே ஓர் உலோக விக்ரஹம், அதுவும் நாற்பதாண்டுகளுக்கு முன்னர் எவராலோ தூக்கிச் செல்லப்பட்டது! எப்படிக் கண்டு பிடிப்பேன்! என்னால் அதற்கென நேரமா ஒதுக்க முடியும்? விக்ரஹத்தைத் தேடி நான் அலைய முடியுமா? அல்லது சேவகர்களை இந்தக் காரியத்துக்கென ஒதுக்க முடியுமா? அதனால் தான் சிரித்தேன் ஐயா! ஆனால் உண்மையில் நான் அகம்பாவத்துடன் சிரித்ததன் பலன் அன்றிரவே எனக்குத் தெரிந்து போய்விட்டது." என்றார் கோபண்ணா!

"ஆஹா! அது என்ன?" என்றார் பண்டிதர்.

Tuesday, November 10, 2020

கோபண்ணாவின் வருத்தம்! ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

கம்பணன் இல்லை என்றதும் யோசனையில் ஆழ்ந்தார் பண்டிதர்.  திருநாராயணபுரத்துக்கு ஆட்களை அனுப்பிக் கம்பணனை வரவழைக்கலாமா என்னும் ராணியரின் யோசனைக்கு மறுப்புத் தெரிவித்த கிரியாசக்திப் பண்டிதர் கம்பணனின் மந்திரியான சோமப்பரோ அல்லது மற்ற மந்திரிப் பிரதானிகளான சாளுவ மங்கு, மாராய நாயகர், ராமய்யா போன்றவர்களில் எவரேனும் இருக்கிறார்களா எனக் கேட்டார். ஒருவருமே இல்லை; ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தினால் ஊரை விட்டுச் சென்று விட்டார்கள் என்று கங்காதேவியும் குந்தளாவும் சொன்னார்கள். ராணிகளின் பொறுப்பில் ராஜ்யத்தை ஒப்படைத்துவிட்டு மன்னன் போய்விட்டானா எனக் கேட்டார் பண்டிதர். அதற்கு ராணியர் இருவரும் சைனியங்களின் தளபதியான கோபண்ணா ஊரில் தான் இருப்பதாகச் சொன்னார்கள். கோபண்ணாவும் திறமை வாய்ந்த மனிதர்தான் என்பதால் கிரியாசக்திப் பண்டிதர் தாமே சென்று அவரைப் பார்ப்பதாகக் கூறிவிட்டுச் சென்றார்.

கோபண்ணாவின் மாளிகையை அடைந்த பண்டிதர் அவரைத் தேடுகையில் கோபண்ணாவே வந்து பண்டிதரை வரவேற்று கீழே விழுந்து வணங்கி அவருக்கு அமர ஆசனமும் கொடுத்து உபசரித்தார். கோபண்ணா ராஜரிக விஷயங்களில் இருந்து விலகி இருக்கிறாரோ என்னும் எண்ணம் தோன்றவே கிரியா சக்திப் பண்டிதர் கோபண்ணாவின் உடல்நலம் பற்றி விசாரித்தார். கோபண்ணாவும் உடல் நலத்துக்குக் கேடெல்லாம் இல்லை எனவும் மனம் தான் சரியில்லை எனவும் கூறினார். கிரியாசக்திப் பண்டிதர் சந்தேகப்பட்டபடியே கோபண்ணா தாம் ராஜரீகக் காரியங்களிலிருந்து விலகப் போவதாகவும் அறிவித்தார். திடுக்கிட்டுப் போனார் பண்டிதர். கோபண்ணா பதில் சொல்லத் தயங்கினார். பின்னர் மெதுவாகப் பேச ஆரம்பித்தவர் விஜயநகர சாம்ராஜ்யத்தின் தென் பகுதிகளில் தாம் சுற்றுப் பயணம் வந்தபோது கண்ட காட்சிகளைப் பண்டிதரிடம் கூறினார்.

"கொள்ளேகாலம்" என அழைக்கப்படும் ஊர் அந்நாட்களில் :கொள்ளைக்களம்" என அழைக்கப்பட்டு வந்தது. அந்த ஊர் அருகே உள்ள இடங்களுக்கு கோபண்ணா பயணம் செய்து வந்தார். அங்குள்ள எல்லாக் கிராமங்களும் "அஞ்சினான் புகலிடம்" என அழைக்கப்பட்ட அகதிகள் முகாமாகவே காணப்பட்டதாய்ச் சொன்னார் கோபண்ணா. மேலும் அந்த மக்கள் அனைவருமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், தமிழ் பேசும் நாடுகளிலிருந்து இங்கே அடைக்கலம் தேடி வந்திருப்பதாயும் சொன்னார்கள். அவர்களில் சிலர் சுமார் இருபது முப்பது ஆண்டுகள் முன்னரே வந்து இங்கேயே தங்கி விட்டவர்கள். சிலர் சமீப காலங்களில் வந்திருப்பவர்கள். இவர்களில் அதிகம் பேர் மலையாள தேசப்பக்கம் போய்க் குடியேறி விட்டார்கள். இதை எல்லாம் சொன்ன கோபண்ணா அவர்களைப் பார்த்ததும் தம் நெஞ்சம் பதறிற்று எனவும் அவர்கள் வடித்த கண்ணீரிலிருந்து அவர்கள் எப்படிப் பட்ட துன்பத்தை அனுபவித்து வந்திருக்கிறார்கள் எனவும் புரியவந்ததாகச் சொன்னார். தங்கள் ஊர்களில் தங்கள் சொத்துக்களை எல்லாம் அப்படியே விட்டு விட்டு உயிர் பிழைத்தால் போதும்; தங்கள் பாரம்பரியத்தைப் பின்பற்றத் தடை இல்லாமல் இருந்தால் போதும் என்னும் ஒரே எண்ணத்தோடு ஓடி வந்ததாகச் சொன்னார்கள். இதை எல்லாம் சொன்ன கோபண்ணா மேலும் கிரியா சக்திப் பண்டிதரைப் பார்த்து, "ஐயா! இதை எல்லாம் சொன்னதோடு அவர்கள் நிற்கவில்லை. அவர்கள் மீண்டும் தங்கள் நாடு திரும்ப வேண்டும் என நினைக்கிறார்கள்.. அதற்கு நம் உதவியையும் எதிர்பார்க்கிறார்கள். இது உங்களால் தான் ஆகும். நீங்கள் தான் செய்ய முடியும் என்றெல்லாம் சொல்கின்றனர். பலர் என் கால்களில் விழுந்து கெஞ்சிக் கேட்டுக் கொண்டனர்." என்றார் கோபண்ணா.

அதைக் கேட்ட கிரியா சக்திப் பண்டிதர் முகம் துக்கத்திலும் வருத்தத்திலும் ஆழ்ந்து போனது. கோபண்ணாவிடம், "கோபண்ணா! ருத்ரோத்காரி வருஷம் மதுரையில் பாண்டியர்களை விரட்டி அடித்துவிட்டு சுல்தானிய ஆட்சி வேரூன்றியது. இப்போது 37 வருடங்கள் ஆகியும் ஒன்றும் மாற்றம் இல்லை. அவர்களை எதிர்த்துப் போரிட்ட ஹொய்சள மன்னரும் வஞ்சனையாகக் கொல்லப்பட்டார். பழைய சோழ ராஜாக்கள் இருக்கும் இடமே தெரியவில்லை. பாண்டியர்களோ ஒருவருக்கொருவர் தாயாதிச் சண்டை போட்டுக் கொண்டு தென்காசியிலும், மலையாள தேசத்திலும் ஒளிந்து வாழ்கின்றனர். அவர்களால் ஒரு வலுவான படை திரட்டக் கூட முடியவில்லை. பராக்கிரமசாலிகள் யாருமே இல்லை. அப்படியே இருந்தாலும் அவர்களுக்குள் ஒற்றுமையே இல்லையே! இதற்காக நாம் வருத்தப்பட்டு என்ன செய்ய முடியும்? நீங்கள் தான் ராஜரீக வாழ்க்கையைத் துறந்து என்ன செய்யப் போகிறீர்கள்?" என்றார் பண்டிதர்.

அதற்கு கோபண்ணா, ராஜரிக வாழ்க்கை போன்ற லௌகிக வாழ்க்கையைத் துறந்து தாம் முற்றிலும் ஆன்மிக வாழ்க்கையை வாழலாமோ என எண்ணுவதாய்ச் சொன்னார்.  நிலையான ஒன்றை விட்டுப் பற்று அதிகம் கொண்டு நிலையற்ற ஒன்றைப் பற்றிக் கொண்டிருப்பதாய்த் தாம் வருந்துவதையும் தெரிவித்தார் கோபண்ணா. அதற்குக் கிரியாசக்திப் பண்டிதர் கோபண்ணா இவ்விதம் மனம் வருந்திப் பேசுவதற்கு ஏதோ காரணம் இருக்க வேண்டும் என்று ஊகித்தார். அதை கோபண்ணாவிடம் கேட்கவும் செய்தார். 

Saturday, November 07, 2020

கம்பணனுக்கு அழைப்பு! ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

 கோயிலொழுகு புத்தகத்தின் பிரதிகளை ஒரு மாதிரி கண்டெடுத்துவிட்டேன். டிஜிடலைஸ் செய்தவை. ஆனால் சம்பவங்கள், நிகழ்வுகள், வருடங்கள் முன்பின்னாக மாறி வருகின்றன. ஒரு மாதிரியாக நடந்தவற்றின் வரிசைக்கிரமம் புரிந்தபடியால் மேற்கொண்டு அரங்கன் துணையுடன் தொடங்கலாம் என எண்ணம். எனக்கு வேறே மேற்கோள்களை எடுத்துக் கொள்ள யோசனை. இனிக் கவலை இல்லை. எப்போப் போனாலும் புத்தகங்கள் கிடைக்கும். வேண்டுமெனில் தரவிறக்கிக் கொள்ளலாம். இறைவனுக்கு நன்றி. சுமார் ஆறுமாதங்களாகப் பட்ட பாடு வீண் போகவில்லை. இனி!

***********************************************************************************கங்காதேவியை நாம் கடைசியாகப் பார்த்தோம். அவளைத் தேடிக்கொண்டு சேடிப் பெண் வந்ததாகவும் பார்த்தோம், அவளுடன் பேசிக்கொண்டிருந்த இன்னொரு மங்கையும் ஓர் அரசகுலப் பெண்மணியே! குந்தளா என்னும் பெயர் கொண்ட அவள் கங்காதேவியுடன் பேசிக்கொண்டிருக்கையில் தான் சேடிப் பெண் வந்து அவர்களைப் பார்க்கக் க்ரியா சக்திப் பண்டிதர் வந்திருப்பதாகச் சொல்லவும் இருவரும் எழுந்து செல்கின்றனர். அப்போது விஜயநகர சாம்ராஜ்யத்தை ஆண்டு கொண்டிருந்த புக்கராயர் தெற்கே உள்ள முள்வாய்ப் பட்டணத்தின் ராஜப் ப்ரதானியாகக் கம்பண்ண உடையாரை நியமித்திருந்தார். மேலே சொன்னவர்கள் அவரின் மனைவியர் தாம். கம்பண்ண உடையார் அப்போது பக்கத்தில் உள்ள திருநாராயணபுரத்திற்குச் சென்றிருந்தார். தற்போது மேல்கோட்டை என அழைக்கப்படுவது இந்த ஊரே ஆகும். 

கொஞ்சம் சரித்திர காலத்தை நினைவூட்டிக் கொள்வோம். தென்னாடு பெரும்பாலும் அதிகம் வெளியார் தொந்திரவுகளை அனுபவிக்காமலேயே இருந்து வந்தாலும் பதினான்காம் நூற்றாண்டில் அது நடைபெறவில்லை. ஆரம்பகாலத்திலேயே முதல் முதல் தில்லி சுல்தான்கள் வந்து தாக்கினார்கள். அவர்களுடைய படை எடுப்பு முறைகள் தென்னக அரசர்களுக்கும் மக்களுக்கும் ஓர் அதிர்ச்சியாக அமைந்தன.  ஏனெனில் சாதாரணமாகப் போர் புரிந்து இருபக்கங்களிலும் மரணங்கள் விளைந்தாலும் மக்களின் வாழ்க்கை முறையோ பழக்க வழக்கங்களோ, வழிபாடுகளோ மாறியதே இல்லை. இப்போது முதல் முறையாக அதில் மாற்றம் வந்தது.  அவர்களுடைய சமய நெறிகள், வழிபாட்டு முறைகள் ஆகியவற்றில் பெருமளவு மாற்றங்கள் வந்ததோடு அல்லாமல் சில இடங்களில் முற்றிலும் நிறுத்தப்படும் அளவுக்கும் போய்விட்டன. மக்கள் மனம் பீதியில் உறைந்து அங்கும் இங்குமாக அலைந்து திரிந்து தங்களையும் தங்கள் உறவுகளையும் அதன் மூலம் தங்கள் கலாசாரங்களையும் காப்பாற்றிப் பாதுகாத்துக்கொள்ள விழைந்தனர். 

குறிப்பாய்த் தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்த நாடு. அவர்கள் இதுவரை கண்டதெல்லாம் சேர, சோழ, பல்லவ, பாண்டிய நாடுகளுக்கிடையேயான போர்களை மட்டுமே/ என்னதான் போர் நடந்தாலும் மக்களுக்குப் பெருமளவில் பாதிப்பு இருக்காது. போர் முடிந்ததும் சகஜமான வாழ்க்கை தொடங்கி விடும்.  இப்போதோ சேரர்கள், பல்லவர்கள், சோழர்கள் எல்லாம் இல்லை. தென் பாண்டி நாட்டில் பாண்டிய அரசு மட்டும் நிலையாக இருந்து கொண்டிருந்தது. அவர்களும் பக்கத்தில் உள்ள முத்துக்குளித்துறைமுகத்தின் மீனவர்களோடு இணக்கமின்மை காரணமாகத் தங்கள் உதவிக்கு உள்ளூர் ஆட்கள் இல்லாமல் பரிதவித்துக் கொண்டிருந்தனர்.  அதோடு இல்லாமல் பாண்டிய அரசு வாரிசுகளுக்குள்ளேயே உரிமைப் போர் வேறே நடைபெற்றது.  இதனால் சுல்தானின் உதவியை ஒரு பாண்டிய வாரிசு கேட்க, மற்றவர்களோ தங்களால் எதிர்கொள்ள முடியாது என நினைத்து இன்னும் தெற்கே மதுரையை விட்டும் தெற்கே திருநெல்வேலியையும் தாண்டித் தென்காசியின் மலைப்பகுதிகளுக்குச் சென்று மறைந்து வாழத் தலைப்பட்டனர். ஒரு விதத்தில் தமிழ்நாட்டில் தில்லி சுல்தான்களின் ஆட்சி தோன்றியதற்குப் பாண்டியர்களே முக்கியமான காரணம் ஆவார்கள்.

ஆக மன்னன் இல்லாமல் தலைமை தாங்கப் பெரும்படையோ அதற்கேற்ற தளபதிகளோ இல்லாமல் தவித்த தமிழகம், முக்கியமாய்த் தென் தமிழகம், சுல்தானியர் வசம் வெகு எளிதாகச் சென்றுவிட்டது. மதுரையைத் தலைநகராய்க் கொண்டு கி.பி. 1323 ஆம் ஆண்டில் சுல்தானிய ஆட்சி ஏற்பட்டுப் பெரும்பாலான சிற்றரசர்கள், அரசர்களின் வாரிசுகள் சுல்தானியருக்குப் பணிந்து நடக்க வேண்டியதாயிற்று. மக்கள் மனமோ தங்களுக்கு ஏற்ற தலைமை இல்லாமல் பாண்டிய மன்னனும் ஓடிப் போய் ஒளிந்து கொள்ள தங்களைக் காத்துப் பாதுகாக்கும் தலைவர்கள் இல்லாமல் மனக் கொந்தளிப்பில் ஆழ்ந்தனர். இதைக் கண்டு மனம் புழுங்கிய ஹொய்சளர்கள் பட்ட பாட்டைத்தான் முன்னர் பார்த்தோம். வீர வல்லாளரை வஞ்சகமாகப் பிடித்து உயிரோடு தோலை உரித்து மாட்டினார்கள் சுல்தானியர். 

இந்தச் சமயம் தோன்றியவர்களே விஜயநகரப் பேரரசர்கள். இவர்கள் தோன்றிய வரலாறை ஏற்கெனவே நாம் பார்த்தோம். ஹரிஹரர் இறந்து போக அவர் சகோதரரான புக்கராயர் பேரரசின் மன்னராக இருந்தார். அவர் தங்கள் பெரிய சாம்ராஜ்யத்தை நிர்வாக வசதிக்காகப் பல பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு பகுதியையும் அரச வம்சத்தைச் சேர்ந்த வாரிசுகளால் நிர்வகிக்கும்படி ஏற்பாடுகள் செய்திருந்தார். அதைப் போலவே  அவர்களின் பிரதிநிதியாக முள்வாய்ப் பட்டணத்தை ஆண்டு வந்த கம்பண்ண உடையார். புக்கராயரின் ஓர் மகன். வடக்கே துங்கபத்ரையிலிருந்து தெற்கே தமிழ்நாட்டு எல்லை வரை பரவி இருந்த அரசைப் பல ராஜ்யங்களாகப் பிரித்து இந்த முள்வாய் ராஜ்யத்தைக் கம்பண்ணர் பொறுப்பில் விட்டிருந்தார் புக்கராயர். கம்பண்ணர் திருநாராயணபுரம் சென்றிருக்க அவரைத் தேடி வந்த கிரியாசக்தி பண்டிதர் அரசர் இல்லாததால் ராணிகளைப் பார்க்க வேண்டி அழைக்க கங்காதேவியும், குந்தளாவும் பண்டிதரைப் பார்க்கச் சென்றனர். பண்டிதரை வணங்கி அவர் ஆசிகளைப் பெற்று ஆசனங்களில் அமர்ந்தார்கள் இருவரும்,

புக்கராயர் குடும்பத்துக்குல குருவான கிரியாசக்திப் பண்டிதரைத் தன் ஆசானாகக் கொண்டு அவரிடம் வடமொழி பயின்றவள் தான் கங்கா தேவி. வடமொழியில் கவிகள் இயற்றும் ஆற்றல் படைத்தவள். இப்போது தன் குருவை விநயத்தோடு பார்த்து வணங்கிக் கொண்டே முன்னரே வருகை பற்றித் தெரிந்திருந்தால் அரச மரியாதைகளோடு வரவேற்றிருக்கலாம் என்னும் தன் ஆதங்கத்தை வெளிக்காட்டினாள். கிரியாசக்திப் பண்டிதரோ தான் அவசரமாகக் கிளம்பி வந்ததாய்ச் சொல்கிறார்.  அந்நிலையிலும் கங்காதேவியிடம் அவள் வடமொழிப் படிப்பைப் பற்றிக் கேட்டு அறிந்து கொண்டார் பண்டிதர். அவள் ஏதேனும் கவி எழுதினாளா என்றும் கேட்டு அறிந்து கொள்கிறார். காளிதாசன், பவபூதி, போன்றோரின் எழுத்துக்களைப் படிக்கையில் தனக்குத் தன்னால் அப்படி எல்லாம் எழுத முடியவில்லை என்னும் வருத்தம் தோன்றுவதாகக் கங்கா தேவி சொல்லப் பெருமிதம் கொண்டார் பண்டிதர். பின்னர் மன்னனை எங்கே எனக் கேட்க மன்னன் திருநாராயணபுரம் சென்றிருப்பதைச் சொல்கின்றனர் இருவரும். அப்போது கிரியாசக்திப் பண்டிதர் புக்கராயர் தன் மகனான கம்பணனை உடனே கிளம்பி வரும்படி சொல்லி இருக்கிறார் என்று சொல்ல இரு ராணிகளும் திகைப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

Sunday, November 01, 2020

அரங்கன் வருவானா?

 பல மாதங்கள் ஆகிவிட்டன. ஒரு சில பிரச்னைகளால்  கிட்டத்தட்ட இதை வேண்டாம்னு விட்டுடலாம்னு கூட ஓர் எண்ணம். இன்னொரு பக்கம் எடுத்த காரியத்தை முடிக்காமலா என்று மனம் கேட்டது. என்ன செய்ய என்றே தெரியவில்லை. அதே சமயம் கிடைத்த ஓரிரு புத்தகங்களின் உதவியோடு தொடரச் சொல்லி மனதில் ஓர் எண்ணம். துணைப்புத்தகங்கள் தேடினால் கோயில் ஒழுகு இணையத்திலும் கிடைக்கவில்லை. பத்மா அவர்கள் கொடுத்த சுட்டியில் வேலையும் செய்யலை. எரர் காட்டுது. முன்னால் எல்லாம் ஒலிநாடா மூலம் இணையத்தில் கிடைத்து வந்தது. இப்போது அது வேலையே செய்வதில்லை. பத்மா கொடுத்த சுட்டியில் இன்னொன்று புத்தகம் விலைக்கு அமேசானில் வாங்கணும். இப்போதைக்கு வாங்க முடியாது என்பதால் மற்றத் துணைப்புத்தகங்கள் உதவியோடயே படிச்சதை ஓரளவுக்கு மெருகூட்டி எழுதணும். இதற்கு நடுவில் வேறு சில புத்தகங்கள் வெளியீட்டுக்காகச் சில, பல வேலைகளும் செய்யணும். அதையும் கவனிக்க வேண்டி இருக்கிறது.  முடிஞ்ச வரை வாரம் ஒரு பதிவாகப் போட்டுவிட நினைக்கிறேன். மற்றவை அரங்கன் சித்தப்படி.