எச்சரிக்கை
Sunday, January 10, 2021
தத்தனும் மஞ்சரியும்! ஶ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்!
Friday, January 08, 2021
தத்தனுக்கு நேர்ந்தது என்ன? ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!
தன்னை சுதாரித்துக் கொண்ட மஞ்சரி அங்கிருந்து கிளம்பி வைத்தியர் வீட்டுக்குச் சென்றுவிட்டாள். சிறிது நேரத்தில் இரு வேலைக்காரகள் அங்கே வந்து தத்தனைப் படுத்திருந்த கட்டிலோடு சேர்த்துத் தூக்கிச் சென்றார்கள். திடுக்கிட்ட அந்த வீரன் என்னவென விசாரித்ததற்கு நோயாளி இறந்துவிட்டான் என்பதால் உடலை அகற்றி விட்டார்கள் எனத் தெரியவந்தது.
அங்கே சத்திரத்தில் தங்கி இருந்த வல்லபனுக்கோ தூக்கமே வரவில்லை. ஊரிலிருந்து கிளம்பியதில் இருந்து நடந்தவற்றை எல்லாம் மீண்டும் நினைத்துப் பார்த்தான். ஏதேதோ சம்பவங்கள் நடந்திருந்தன. அடுக்கடுக்காக நடந்து கொண்டே இருந்தன. அந்தக் கூண்டு வண்டியையும், அதில் அந்தப் பெண்ணையும் பார்த்ததில் இருந்து சங்கடங்கள்! தலைவனிடம் அகப்பட்டு அவனோடு விவாதித்துத் தூக்குக் கயிற்றிலிருந்து மீண்டு வந்தது என அடுத்தடுத்து நினைவில் வந்தன. அரங்கனைத் தானே தேடிக் கொண்டு கிளம்பினோம்.அரங்கனும் கிடைக்கவில்லை. அவனைப் பற்றிய மேல் அதிகத் தகவல்களும் கிட்டவில்லை. எத்தனை இடையூறுகள் நேரிட்டு விட்டன?
யோசித்த வல்லபனுக்கு தத்தனின் நினைவு வந்துவிட்டது. அந்தச் சேவகன் தத்தனைப் பார்த்திருப்பானோ? அடையாளம் கண்டு கொண்டிருப்பானோ? ஓடுமானூரில் அவர்களோடு சமாதானம் செய்து கொண்டிருந்தாலும் அவர்கள் தங்கள் மேல் மறுபடி மோதல் போக்கைக் கடைப்பிடித்தால்? ஏனெனில் அவர்களிடையே சமாதானத்தை ஏற்படுத்தி வைத்தது அந்தக் கற்பூர வியாபாரி தான். அவனால் தான் சமாதானம் ஏற்பட்டது. அந்த வீரர் தலைவன் அதை ஏற்கவே இல்லை என்பது அவன் முகத்தில் அப்போதே தெரிந்தது. அதிலும் அந்தப் பெண்ணைக் காட்டும்படி சொன்னபோது அந்த வீரர் தலைவன் முகத்தில் கோபமும், குரோதமும் கொழுந்து விட்டெரிந்தது. அந்தப் பெண்ணை அவர்கள் ரகசியமாக அழைத்துச் சென்றிருந்திருக்கிறார்கள். ஆகவே அந்தப் பெண்ணைப் பலர் முன்னால் தான் காட்டச் சொன்னது அவர்களுக்குப் பிடிக்கவில்லை.
ஆகவே அவனுக்குத் தன்மேல் கோபம் இன்னமும் குறைந்திருக்காது. வஞ்சகத்தைத் தீர்த்துக் கொள்ளச் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பான். நினைவுகள் மேலே மேலே வந்து மோதின வல்லபனுக்குள். உறக்கம் என்பதே வரவில்லை. மனதில் கலக்கம் ஏற்பட்டு விட்டது. ஏதோ நடக்கப் போகிறது என்று உள்ளுணர்வு சொல்லியது. ஆகவே வல்லபன் உடனே எழுந்து தன் சுமைகளைச் சேகரித்துக் கொண்டான். சத்திரத்து அதிகாரியிடம் தான் இப்போதே செல்வதாகக் கூறிவிட்டுச் சத்திரத்தை விட்டு வெளியேறினான். அந்த ஊரில் மொத்தம் நான்கு பெரிய வீதிகளும் இரண்டு சிறிய தெருக்களும் இருந்தன. அங்கே யார் வீட்டுத் திண்ணையிலாவது இடம் பெற்றுப் படுக்க வேண்டும் என நினைத்தான் வல்லபன். ஒரு வீதிமுனை திரும்புகையில் பேச்சுக்குரல்கள் கேட்டுச் சற்றே நின்றான். அவனைப் பற்றித் தான் பேசிக் கொண்டிருந்தார்கள்.
ஒருவன் சொல்கிறன்: அதே பையன் தான்! சத்திரத்தில் தான் தங்கி இருப்பான். வேறே எங்கும் சென்றிருக்க மாட்டான்!" என்றான்.
"நிச்சயமாய்ச் சொல்கிறாயா? அவனேதானா? உனக்குக் கொஞ்சம் போதாது. தப்பாக அடையாளம் கண்டிருப்பாய்!" இன்னொருவன்.
இருவர் வாக்குவாதங்களும் முற்ற ஆரம்பித்தன.
Tuesday, January 05, 2021
மஞ்சரியின் சந்தேகம்! ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்.!
ஓட்டமாக ஓடிய வல்லபன் மனதில் சந்தேகம் எழ வாயிலருகே திரும்பிப் பார்த்து, கவனித்துக் கொள்வீர்களா? என்று மீண்டும் கேட்க, அந்தப் பெண்ணோ அவனைப் பார்த்துச் சிரித்தாள். ஆனால் அந்தச் சேவகனின் கட்டிலருகே இருந்த அவன் நண்பன் கட்டிலை விட்டு நகரவும் வல்லபன் அவன் எங்கே நம்மைப் பார்த்துவிடுவானோ என்னும் அச்சத்துடன் ஓட்டமாய் ஓடிவிட்டான். அவன் சென்ற பின்னர் அந்தப் பெண் யோசனையில் ஆழ்ந்தான். அவள் தன் கையிலிருந்த விளக்கை அங்கே இருந்த ஒரு மாடத்தில் வைத்துவிட்டுப் படுக்கைகள் போட்டு நோயாளிகளைப் படுக்க வைத்திருந்த இடத்தை நோக்கிச் சென்றாள். தத்தனின் கட்டிலைத் தேடிக் கொண்டு சென்றாள். சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தவள் கண்களுக்கு அந்தச் சேவகனின் கட்டில் அருகே இருந்த இன்னொருவன் தன்னைப் பார்த்தது தெரிய வந்தது.
ஆனால் அவள் எதையும் கவனிக்காதவள் போல முகத்தைச் சாதாரணமாக வைத்துக் கொண்டு இயல்பாகவே நடந்து கொண்டாள். தத்தனின் கட்டில் அருகே சென்றவள் கட்டிலின் அருகே மண்டியிட்டு அமர்ந்த வண்ணம் அவனை, "ஐயா! ஐயா!" என அழைத்தாள் மெதுவாக. ஆனால் தத்தன் ஏதும் பேசவில்லை. ஜூர வேகம் அதிகமாக இருந்தது. உடலில் இருந்து ஜ்வாலை வீசியது. கண்களைத் திறக்காமல் அப்படியே அசையாமல் இருந்தான். பயந்து போன அந்த இளம்பெண் அவன் நெற்றியில் கையை வைத்தாள். தத்தனின் உடல் சூட்டைத்தாங்காமல் தன் கைகள் பொரிந்துவிடுமோ என்று எண்ணும் வண்ணம் கொதிக்கவே அவள் திகிலுடன் கையை உதறிவிட்டு எடுத்து விட்டாள். அவள் மனதில் கலவரமும் பயமும் ஏற்பட்டது. அங்கும் இங்குமாகப் பார்வையைத் திருப்பியவள் கண்களில் மீண்டும் அந்தச் சேவகன் தன்னையே பார்த்துக் கொண்டு கட்டிலருகே நிற்பது தெரிய வந்தது.
அவன் அங்கிருந்து திடீரெனக் கிளம்பியவன் தத்தன் கட்டிலருகே அமர்ந்திருந்த அந்தப் பெண்ணை நோக்கியே வந்தான். அவனைக் கவனிக்காதது போல் காட்டிக் கொண்ட அந்தப் பெண் தன் மனமும் உடலும் பரபரப்பதை அடக்கிக் கொண்டு என்ன செய்யலாம் என்ற யோசனையில் அந்த மனிதன் வருவதைப் பார்த்துக் கொண்டு அவனைப் பார்த்துப் புன்சிரிப்புச் சிரித்தாள். அந்த மனிதன் கட்டிலை நோக்கி வருவதைக் கண்டு தான் உள்ளூர கவலை கொண்டிருப்பதை அவள் காட்டிக் கொள்ளவில்லை.
அருகே வந்த அந்த மனிதனோ அவளை, "மஞ்சரி! " என அழைத்தவாறே, "இது யார்? உன் தாத்தா தானே நோயாளி என்றாய்? இவர் யார்? உனக்குத் தெரிந்தவரா?" என்றும் கேட்டான். அதற்கு மஞ்சரி, எழுந்து கொண்டே, "இவர் எனக்கு உறவில்லை. வைத்தியருக்கு ஏதோ உறவாம். கடும் ஜன்னி கண்டிருக்கிறது. இவரை நன்றாய்ப் பார்த்துக் கொள்ள வேண்டும் என வைத்தியர் சொன்னார். நான் அதைப் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருந்தேன். இப்போது இவருக்கு நினைவே இல்லை. நினைவு தப்பி விட்டது. இன்று இரவு போவதே கஷ்டம்!" என்று சொன்னவள், கடைசி வார்த்தையை இழுத்தவாறே சொன்னாள். அந்தச் சேவகனின் ஊகத்திற்கு அதை விட்டவள் போல் பேச்சையும் பாதியில் நிறுத்தினாள்.
அவன் தத்தனின் கட்டிலை நோக்கி வருவதைத் தடுக்கும் விதமாக அவளே முன்னேறிச் சென்று அவனைத் தடுத்துத் திரும்பும் வண்ணம் செய்தவள் அவனிடம், உங்கள் நண்பரின் கால் இப்போது எப்படி உள்ளது? என்றும் கேட்டாள். அவனை அப்படியே அந்தச் சேவகன் படுத்திருந்த கூடம் வரை அழைத்துச் சென்று விட்டாள். ஆனால் அந்தச் சேவகனோ அங்கே உள்ளே செல்லாமல் அங்கேயே இருந்த ஓர் ஆசனத்தில் அமரவே மஞ்சரிக்குச் சந்தேகம் வந்துவிட்டது.
Friday, January 01, 2021
ஆதுரசாலையில் தத்தன்! ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!
ப்ளாகர் திடீர் திடீர்னு சண்டித்தனம் பண்ணுது. இன்னிக்குப் பதிவை எப்படியானும் போடணும்னு நினைச்சு முயற்சிகள் செய்தால், "இன்னிக்குப் போட முடியாது!" unable to create new post!" என்றே செய்தி வருது. என்னடா இது சோதனைனு நினைச்சுட்டு மறுபடி மறுபடி விடாமல் முயற்சி செய்ய ஒரு வழியா வந்தது. கிட்டத்தட்ட ஒரு மாசமா எழுத முடியலை. வீட்டில் உறவினர் வந்து ஒரு வாரம் இருக்கப் போறாங்கனு நினைச்சு எல்லாத்தையும் ஏறக்கட்டிட்டு இருந்தேன். வந்தவங்க உடனே கிளம்பிப் போயிட்டாங்க. ஆனாலும் பதிவு போட முடியலை. என்னமோ தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இன்னிக்கு எப்படியானும் உட்கார்ந்துடணும்னு உட்கார்ந்திருக்கேன்.
*************************************************************************************
அவ்வளவில் இருவரும் அன்றிரவு உறங்கிவிட்டார்கள். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தால் தத்தனுக்கு உடல் கொதித்துக் கொண்டிருந்தது. கஷாயம் சாப்பிட்டுவிட்டு தத்தனை ஓய்வெடுக்கச் சொல்லி விட்டுப் பார்த்தால் இரவில் மறுபடி ஜூரம் அதிகம் ஆகி தத்தன் கன்னாபின்னாவெனப் பிதற்ற ஆரம்பித்தான். வல்லபன் செய்வதறியாது சத்திரத்து உதவியாளர்களை அழைக்க அவர்கள் ஓர் வண்டி வைத்து தத்தனையும், வல்லபனையும் அங்கிருந்த ஆதுரசாலைக்கு அனுப்பி வைத்தார்கள். அந்த வயோதிக வைத்தியரின் வீட்டிற்குப் பக்கத்திலேயே அந்த ஆதுர சாலை இருந்தது. அவரும் இவர்களை உடனே அடையாளம் கண்டு கொண்டுவிட்டார். இளம் வயது என்பதால் தேவையின்றி மழையில் நனைந்திருப்பதாகச் சொல்லிக் கொண்டே தன் வைத்தியத்தை ஆரம்பித்து வைத்தார்.
சுற்றும் முற்றும் பார்த்த வல்லபன் அங்கே தத்தனைத் தவிர இன்னமும் 30 பேர் சிகிச்சைக்கு வந்திருப்பதையும், அங்கே படுக்கைகளில் படுத்திருப்பதையும் கண்டான். எங்கும் மருந்தின் மணம் சூழ்ந்து இருந்தது. வல்லபன் தத்தனின் கை, கால்களைத் தேய்த்து விட்டுச் சூடு பண்ணிவிட்டுப் போர்வையால் அவன் உடலைப் போர்த்திவிட்டுப் பின்னர் நோயாளியுடன் வந்தவர்களுக்கு எனப் பிரத்யேகமாய் இருந்த இடத்திற்குச் சென்று அமர்ந்து இளைப்பாறினான். இருள் கவிந்து வந்த அந்த மழைக்கால மாலைப் பொழுதில் ஆதுர சாலையின் அந்தக் கூடத்திலும் இருள் சூழ ஆரம்பிக்க இரு பெண்கள் வந்து ஆங்காங்கே மாடங்களில் உள்ள விளக்குகளை ஏற்றி வைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருத்தியைப் பார்த்துத் திகைத்தான் வல்லபன். தத்தன் தண்ணீரில் விழுந்தபோது அவனைக் கைப்பிடித்துத் தூக்கிய பெண் தான் அவள். சின்னப் பெண்ணான அவள் சுறுசுறுப்புடன் ஒவ்வொரு மாடமாகச் சென்று விளக்குகளை ஏற்றிக் கொண்டிருந்தாள்.
ஒவ்வொரு இடமாகப் போன அவள் அந்த ஆதுரசாலையின் ஓர் ஓரத்துக் கட்டில் அருகே விளக்கை ஏற்றும்போது அந்தக் கட்டிலில் படுத்திருப்பவரைப் பார்த்த வல்லபனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. எங்கேயோ பார்த்த நினைவு வந்தது. காலில் கட்டுகளுடன் அங்கே படுத்திருந்த மனிதனையும், அவனது கால் மாட்டில் வல்லபனுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு நிற்பவரையும் ஏற்கெனவே பார்த்த மாதிரி இருந்தது வல்லபனுக்கு. எங்கே பார்த்தோம் என யோசித்தவனுக்கு திடீரென நினைவு வந்தது. ஆஹா! இவர்கள் அந்த மகரவிழி மங்கைக்குப் பாதுகாவலாகச் சென்ற சேவகர்கள் ஆயிற்றே! இங்கே எப்படி வந்தார்கள்? தன்னைப் பார்த்திருப்பார்களோ? அப்படிப் பார்த்து அடையாளமும் தெரிந்து கொண்டால் ஆபத்தாயிற்றே!
இவர்கள் இருவர் மட்டும் இருக்கிறார்களா? அல்லது மற்றவர்கள் இவர்களுக்காக இந்த ஊரிலேயே காத்திருக்கிறார்களா? அப்படியானால் அந்த மகரவிழியாள்? அவள் எங்கே போயிருப்பாள்? அவள் கட்டாயமாய் பாண்டிய ராஜகுமாரியாகத் தான் இருக்க வேண்டும். இப்படி எல்லாம் நினைத்த வல்லபன் விளக்குகளை ஏற்றி முடித்துத் திரும்பிச் சென்று கொண்டிருந்த அந்த இளம்பெண்ணைப் பார்த்துவிட்டு அவளைத் தொடர்ந்து சென்றான். இரண்டே எட்டில் அவளை அடைந்து முன்னால் சென்று அவள் வழியை மறிக்கிறாப்போல் நிற்கவே அவள் வல்லபனைப் பார்த்துப் புரிந்து கொண்டு குறும்புப் புன்னகை செய்தாள். அவள் பெயர் என்னவென்று கேட்டுக்கொள்ளவில்லையே என நினைத்தவண்ணம் வல்லபன் அவளிடம், அவசரமாக ஓர் உதவி வேண்டும் என்று கெஞ்சினான். அந்தப் பெண்ணோ அதை வேடிக்கையாக எடுத்துக் கொண்டு தத்தன் மீண்டும் வழுக்கி விழுந்துவிட்டானா? என்று கேலியாகக் கேட்டுவிட்டுக் கலகலவெனச் சிரித்தாள்.
வல்லபன் அதற்கு தத்தன் அந்த ஆதுரசாலையில் தான் ஜுரத்துடன் படுத்திருப்பதாகச் சொன்னான். அவள் ஆச்சரியத்துடன் அப்படியா எனவினவிவிட்டு எங்கே படுத்திருக்கிறான் என்பதையும் கேட்டாள். தூரத்தில் இருந்தே தத்தன் படுத்திருந்த கட்டிலைச் சுட்டிக்காட்டிய வல்லபன், அந்த சேவகர்கள் இருந்த இடத்தையும் சுட்டிக் காட்டிவிட்டு இந்தச் சேவகர்களால் தங்கள் இருவருக்கும் எந்நேரமும் ஆபத்து ஏற்படலாம் என்பதை விளக்கிச் சொன்னான். அந்தப் பெண்ணிடம் அதனால் தான் வேண்டிக் கேட்டுக் கொள்வதாகவும் அந்தச் சேவகர்களால் தத்தனுக்கு ஆபத்து ஏற்படாமல் பாதுகாக்க அவள் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டவன், அவர்கள் மேல் தாக்ஷண்யம் வைத்து அந்தப் பெண் இதைச் செய்ய வேண்டும் எனவும், மேலும் தொடர்ந்து வல்லபன் அங்கேயே இருந்தால் அவனுக்கும் ஆபத்து வந்துவிடும் என்பதால் தான் போய்வருவதாகவும், தத்தனைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளும்படியும் சொல்லிக் கொண்டே வாசல்பக்கம் ஓடினான் வல்லபன். அந்தப் பெண்ணோ பிடி கொடுத்தே பேசவில்லை.