எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, June 04, 2021

மஞ்சரியின் பெற்றோர்! ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

 இரவில் நேரம் சென்று வந்த தத்தனிடம் அந்தப் பெண் மஞ்சரி உரிமையுடனும் சலுகையுடனும் கடிந்து கொண்டது வல்லபன் காதில் விழ அவன் வியப்பின் எல்லைக்கே போனான். தத்தன் என்ன சொல்கிறானோ எனக் கவனித்துப் பார்த்தவனுக்கு தத்தன் வாயைத் திறக்காமல் மௌனமாக இருந்தது உறுத்தியது. ஆனால் அந்தப் பெண் விடாமல் தன் மாமனைக் கண்டு பிடித்தானா தத்தன் என்பதை அவனிடம் விசாரிக்க அதற்கும் தத்தன் சிறிது நேரம் கழித்தே தன்னால் கண்டு பிடிக்க முடியவில்லை என்பதைச் சொன்னான். தத்தனுக்கு என்ன ஆயிற்று என வல்லபன் யோசித்தான். மஞ்சரி தத்தனிடம் மேலும் மேலும் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தாள். தன் மாமன் எங்கிருப்பார் என்பது குறித்தும் தத்தனுக்குத் தெரியாது என்பதைக் கேட்டறிந்தவள் தன்னையே நொந்து கொண்டாள். 

காஞ்சிக்குப் பெற்றோர்களைக் கண்டு அவர்களுடன் சேரலாம் என நினைத்திருந்த தன் எண்ணத்துக்கு மாறாக எல்லாம் நடப்பதைக் கண்டு மனம் வருந்தினாள் மஞ்சரி.  தத்தன் வல்லபனைத் தேடி வந்து அவனுடன் இனிச் செய்ய வேண்டியவை குறித்து ஆலோசித்தான். இரவு முழுவதும் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.  காலை விடிந்ததும் தத்தன் மஞ்சரியைத் தேடிக் கொண்டு வந்தான். அவள் வெளியே செல்லத் தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தாள். மஞ்சரியைப் பெயர் சொல்லி தத்தன் அழைக்கவும் அதிலேயே மகிழ்ந்து போன மஞ்சரி ஆவலுடன் அவனைப் பார்த்தாள். தத்தன் அவளை அமரச் சொல்லித் தானும் அவளருகே சற்றுத் தள்ளி அமர்ந்து கொண்டான். மஞ்சரியிடம் ஒரு முக்கியமான விஷயம் பற்றிக் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்றான் தத்தன்.  பின் மெல்ல மெல்ல அவள் தாத்தா தன்னிடம் கூறினவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக மஞ்சரியிடம் எடுத்துச் சொன்னான் தத்தன். கடைசியில் மஞ்சரியின் பெற்றோர் இப்போது உயிருடன் இல்லை எனவும் அவர்கள் இறந்து பல காலம் ஆகிவிட்டது என்றும் சொன்னான். 

மலர்ந்த முகத்துடன் அந்தக் காலை வேளையில் அன்றலர்ந்த மலர்போல விகசிப்புடன் இருந்த மஞ்சரிக்கு மெல்ல மெல்ல முகம் மாறி வெளிறிப் போய்விட்டது.  சிலை போல் அமர்ந்திருந்த மஞ்சரியின் கண்கள் கண்ணீரை வடித்துக் கொண்டிருந்தன. அது ஒன்றே அவள் உயிருள்ள பெண் என்பதைக் காட்டிக் கொண்டிருந்தது.  அவள் அழுது முடித்து மெல்ல மெல்லத் தேறட்டும் எனக் காத்திருந்தான் தத்தன். பின்னர் அவளைப் பார்த்து அவள் பெயர் சொல்லி, "மஞ்சரி, மஞ்சரி!" என அழைத்தான். ஆனால் அவளோ நிமிரவே இல்லை. தலை குனிந்தபடியே அப்படியே அசையாமல் வீற்றிருந்தாள்.  தத்தனுக்குள் இரக்கம் மீதூறியது. மெல்ல அவளைத் தொட்டு அசைத்து தன்னைப் பார்க்கும்படி சொன்னான். அவள் சோகத்தில் கசிந்த கண்களுடன் மெல்ல நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். மிகுந்த இரக்கத்துடன் சோகம் ததும்பிய அவள் முகத்தைப் பார்த்த தத்தன் கண்களிலும் கண்ணீர் பெருகியது.

"இதோ பார் மஞ்சரி! நாட்டைப் பீடித்திருக்கும் பீடைகள் இன்னமும் விலகவில்லை. நாம் இன்னமும் அந்நிய ஆட்சியில் இருக்கிறோம். நாட்டில் நடந்த இந்த மோசமான படையெடுப்புக்களில் எத்தனையோ மக்கள் உயிரைத் தியாகம் செய்திருக்கின்றனர். பெற்றோர்கள் குழந்தைகளை இழந்தும், குழந்தைகள் பெற்றோரை இழந்தும் வாழ்கிறார்கள். இறந்தவர்கள் அனைவருமே நம் அரங்கனுக்காகவும் தமிழ் பேசும் மக்களுக்காகவும் உயிரைத் தியாகம் செய்தவர்கள்.  சொர்க்கத்தில் இடம் பெற்றவர்கள். ஆகவே உன் பெற்றோரும் சொர்க்கத்திற்குத் தான் போயிருப்பார்கள்.  நீ அவர்களை நினைத்துக் கவலை கொள்ளாதே! மனதைத் தேற்றிக் கொள்!" என்றான்.

மஞ்சரி அவனிடம், "ஐயா! இந்தக் காஞ்சிக்கு வந்து சேர்ந்ததும் ஒருவழியாகப் பெற்றோர்களிடம் சென்று விடுவேன் என நம்பிக் கொண்டிருந்தேன். இப்போது தங்கள் செய்தியிலிருந்து எனக்கு அந்த பாக்கியம் இல்லை; நான் பெற்றோர்களைச் சிறு வயதிலேயே இழந்துவிட்டேன் என்பதைப் புரிந்து கொண்டேன்.  என் நினைப்பெல்லாம் பெற்றோர்களைச் சென்று அடைவதில் இருந்தது. நினைப்பிலேயே அவர்களை அடைந்து நினைப்பிலேயே அவர்களை இழக்கவும் செய்திருக்கிறேன்.  இப்போது இந்த நினைவுக்கள் என்னை விட்டு அழிய வேண்டும். அதற்கு நான் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் எல்லாமே கனவும்களும் நினைவுகளுமாகப் போய்விட்டன." என்று கண்ணீருடன் கூறினாள். அவள் மன முதிர்ச்சியும் பேச்சும் தத்தனை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. இத்தனை சிறிய வயதில் எவ்வளவு மன முதிர்ச்சி என நினைத்துக் கொண்டான். அவளைச் சமாதானம் செய்ய முயன்றான்.  ஆனால் நேற்றுத் தான் சொன்ன ஒரு சிறு பொய் அவளை என்ன செய்யப் போகிறதோ எனக் கவலை கொண்ட தத்தன் அவளை விரைவில் அதற்குத் தயார் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் வல்லபனைப் பார்க்க எழுந்து சென்றான்.

No comments: