எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, June 05, 2012

நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! அச்வாரூடர்!


அடுத்ததாய் நாம் பார்க்கப் போவது இறைவன் குதிரை வியாபாரியாய் வந்த கோலத்தை.  இதை அச்வாரூடர் என்றும் கூறுவார்கள்.  இவரைக்குறித்து அறியும் முன்னர் இறைவன் அச்வாரூடராய் வர நேர்ந்த காரணத்தையும், எவருக்காக அச்வாரூடராய் வந்தார் என்பதையும் அறிய வேண்டும்.  “திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்” என்பது ஆன்றோர் வாக்கு.  அத்தகைய திருவாசகத்தை நமக்குத் தந்தவர் மாணிக்க வாசகர்.  மாணிக்க வாசகர் என்ற பெயர் இவரின் மாணிக்கம் போன்ற அதே சமயம் மனதையும் உருக்கும் வாசகங்களினால் ஏற்பட்டதே ஆகும்.  இவரின் இயற்பெயர் என்னவென ஒருவரும் அறியவில்லை.  இவரின் காலமும் சரிவரத் தெரியவில்லை.  எனினும் முதல் மூவருக்கு முந்தியவர் என்பது ஆன்றோர் கருத்து. மதுரைக்கு வடகிழக்கே திருவாதவூர் என்னும் ஊர் உள்ளது.  வாயு வழிபட்ட இந்தத் தலத்தின் ஈசன் வாதபுரீஸ்வரர் ஆவார்.  இவ்வூரில் அமாத்ய பிராம்மண குலத்தில் தோன்றியவரே மாணிக்க வாசகர்.  தகப்பனார் பெயர் சம்புபாதசிருதர், தாயார் சிவஞானவதி அம்மை.  இவரின் உண்மையான பெயர் என்னவென்று தெரியாத காரணத்தால் இவரைத் திருவாதவூரர் என்றே அழைத்தனர்.

வாதவூரர் அறிவாற்றலும், இயல்பாகவே கைவரப் பெற்ற சிவபக்திச் செல்வமும், அதனால் விளைந்த ஞானத்தோடும் விளங்கினார்.  இவரைப் பற்றிக் கேள்விப் பட்ட அரிமர்த்தன பாண்டியன் இவரைத் தனது முதலமைச்சராக ஆக்கிக் கொண்டான். இவருக்குத் “தென்னவன் பிரமராயன்” என்னும் பட்டமும் அளித்துச் சிறப்பித்தான்.  அமைச்சர் பதவியைச் செவ்வனே நிறைவேற்றி வந்தார் வாதவூரார்.  ஆனாலும் அவர் மனம் இவ்வுலக வாழ்க்கையிலும், அமைச்சர் பதவிக்குரிய சுகபோகங்களிலும் லயிக்கவே இல்லை.  தக்கதொரு குரு கிடைத்தால் அவர் மூலம் பிறவிப் பெரும்பயனை அடையவே விரும்பினார்.  சிவலோக சாம்ராஜ்யத்தைக் குறித்தே சிந்தித்து வந்தார்.

மன்னன் தன் குதிரைப் படையை விரிவு செய்து மேலும் பல புதிய குதிரைகளைச் சேர்க்க விரும்பினான்.  அந்தச் சமயம் கீழைக் கடற்கரையில் நல்ல குதிரைகள் அரபு நாட்டில் இருந்து வந்து இறங்கி இருப்பதாய்ச் சில தூதுவர்கள் தெரிவிக்க மன்னனும் அவற்றைத் தன் படைக்குச் சேர்க்க விருப்பம் கொண்டான்.  அரசன் முதலமைச்சராகிய வாதவூரரைப் பார்த்து, கருவூலத்தில் இருந்து வேண்டிய பொருளைப் பெற்றுக் கீழைக் கடற்கரைக்கு வந்திருக்கும் குதிரைகளைப் பார்த்து வாங்கி வரும்படி கேட்டுக் கொண்டான்.   வாதவூராரும் மன்னனின் விருப்பத்திற்கிணங்கக் கருவூலத்திலிருந்து வேண்டிய பொருளைப் பெற்றுக் கொண்டு குதிரைகள் வாங்கப் புறப்பட்டார்.   சுந்தரேஸ்வரரை வணங்கிவிட்டுப் பயணம் புறப்பட்ட அவர் பயணத்தில் திருப்பெருந்துறை என்னும் ஊரை அடைந்தார்.  அவ்வூரை நெருங்க, நெருங்க அவருக்குத் தம் பிறவிப் பயன் பூர்த்தி அடையப் போகிறது என்ற எண்ணமே மேலோங்கியது.   ஆம், இறைவன் திருவாதவூரரைத் தடுத்தாட்கொள்ள விரும்பினான்.

திருப்பெருந்துறையின் ஒரு சோலையில் குருந்த மரத்தடியில் சிவகணங்களெல்லாம் சீடர்களாகக் காட்சி கொடுக்க ஈசன் மானுட வடிவம் தாங்கி அங்கே அமர்ந்திருந்தார்.  சிவ நாமம் எங்கும் ஒலித்தது.  அந்தச் சிவநாமம் காதில் விழ விழ திருவாதவூரருக்கு மனம் பொங்கியது.  எல்லையில்லாப் பேரின்பம் உண்டாயிற்று.  ஆஹா, என்ன காரியம் செய்யத் துணிந்தோம்! மன்னனுக்குக் குதிரைகள் வாங்கிக் கொடுத்து அவன் படை பலத்தைப்பெருக்குவதன் மூலம் போர்களும் பெருகுமே.  உயிர்கள் சேதமடையுமே!  பலரும் உயிர் துறப்பரே.  ஒரு மன்னனின் வெற்றிக்காக இவ்வுலகில் எண்ணற்ற உயிர்கள் அன்றோ பலியாகும்? வேண்டாம், வேண்டாம். உலகில் சிவநாமம் எங்கும் ஒலித்த வண்ணம் சிவபக்திச் செல்வம் பல்கிப் பெருகி அன்பும், அறமும் செழிக்க வேண்டும் என்று எண்ணினார். அங்குள்ள திருக்குளத்தில் நீராடி, திருநீறு தரித்துக் கொண்டு சிவ நாமம் ஒலித்துக் கொண்டிருக்கும் சோலையை நோக்கி நடந்தார்.

அங்கே குருந்த மரத்தடியில் ஞானகுருநாதனாகப் பரம்பொருளே வீற்றிருந்தார்.  வலக்கை சின் முத்திரை காட்ட சாக்ஷாத் தக்ஷிணாமூர்த்தியே அங்கே அமர்ந்திருந்தார்.  திருவாதவூரர் அவரைக் கண்டதும் மெய் சிலிர்த்து, மேனியெல்லாம் புளகாங்கிதம் பொங்க, வணங்கினார்.  அவரின் செவியில் ஈசன் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதி, முக்திப் பேறும் அருளினார்.  திருவாதவூரரின் அகஒளி ஜோதி மயமாய்ப் பிரகாசித்தது.  அகத்தினுள்ளே உள்ளொளியில் சிவபக்தி சாம்ராஜ்யத்தைக் கண்ட திருவாதவூரர் அக்கணமே துறவுக் கோலம் பூண்டார்.  அமைச்சர் பணியை உதறினார்.  ஈசன் மேல் அருந்தமிழ்ப் பாமாலைகளைச் சூட்டி வணங்கினார்.   மனதை உருக்கும் மணி மணியான வாசகங்கள் நிறைந்த அந்தப் பாடல்களைக் கேட்ட ஈசன், “இன்று முதல் நீ மாணிக்க வாசகன்!” என்றும் பெயரைச் சூட்டினார்.

Tuesday, May 29, 2012

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! எல்லாம் வல்ல சித்தர்!


பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணத்தின் கல்யானைக்குக் கரும்பு அருந்துவித்த படலத்தில் இருந்து சில பாடல்களைக் கீழே காணலாம்:

ஈண்டு உள்ளவர்க்கு எம் விளை யாடலைக் காட்டி இச்சை
வேண்டும் பலசித்தியும் நல்குவம் வேதம் ஆதி
மாண்டு அங்கு எண் எண் கலை ஞானமும் வல்லம் அல்லால்
சேண் தங்கு எல்லாப் பொருளும் வல்ல சித்தரேம் யாம்.

உன்னால் நமக்குப் பெறல் வேண்டுவது ஒன்றும் இல்லை
தென்னா என உள் நகை செய்தனர் சித்தயோகர்
மன்னா இவர் தம் இறுமாப்பும் செருக்கும் வீறும்
என்னால் அளவிட்டு அறிவேன் என எண்ணித் தேர்வான்.
வல்லாரில் வல்லேம் என உம்மை மதித்த நீர் இக்
கல் ஆனைக்கு இந்த கரும்பை அருத்தின் எல்லாம்
வல்லாரும் நீரே மதுரைப் பெருமானும் நீரே
அல்லால் எவர் நும் மனம் வேட்டது அளிப்பன் என்றான்.


மன்னன் சித்தரைக் காண வருவதை அறிந்த குடிமக்களும் அங்கே கூடி இருந்தனர். அவர்களில் ஒரு குடியானவன் கையில் கரும்புக் கட்டை வைத்திருந்தான்.  சித்தர் அந்தக் கட்டுக் கரும்பையும் அப்படியே அவனிடமிருந்து வாங்கினார்.  அருகே இருந்த கல் யானையிடம் நீட்டினார். தம் கடைக்கண்ணால் ஒரு பார்வை பார்த்தார்.  அவ்வளவே!  என்ன ஆச்சரியம்?
செல்லா உலகத்தினும் சென்று ஒரு விஞ்ஞை கற்றோர்
பல்லாரும் நன்கு மதிக்கப் பயன் எய்துவார்கள்
எல்லாம் அறிந்த எமக்கு ஒன்றிலும் ஆசை இல்லை
கல் ஆனை கன்னல் கறிக்கின்றது காண்டி என்றார்.
1371
கடைக்கண் சிறிதே குறித்தார் முன் கடாக் கல் யானை
மடைக் கண் திறந்து மதம் மூன்றும் வழிய விண் வாய்
அடைக்கும் படிவாய் திறந்து ஆர்த்துப் புழைக்கை நீட்டித்
தொடைக் குன்று அனான் கைச் சுவைத் தண்டைப்  பறித்தது அன்றே.
1372
பறித்துக் கடைவாய் வழிசாறு அளி பாய்ந்து நக்கக்
கறித்துக் குதட்டிப் பருகிக் கரம் ஊசல் ஆட
நெறித்துத் தருக்கி நிழல் சீறி நிமிர்ந்து நிற்ப
மறித்துக் கடைக்கண் குறித்தார் பினும் மாயம் வல்லார்.
1373
மட்டு உற்ற தாரான் கழுத்தில் கண்ட மாலை தன்னை
எட்டிப் பறித்த இகல் காஞ்சுகி மாக்கள் சீறிக்
கிட்டிக் களிற்றைப் புடைப்பான் கிளர் கோல் கொண்டு ஓச்சச்
சிட்டத்தவர் கண் சிவந்து ஆனையைச் சீறி நோக்க.

கல்யானை கரும்புகளை வாங்கி கொண்டு அதன் சாறு வாயிலிருந்து ஒழுகும் வண்ணம் கடித்துத் தின்ன ஆரம்பித்தது.  அனைவரும் அதிர்ந்து நிற்க, சித்தரோ மீண்டும் கடைக்கண் பார்வையைச் செலுத்த வந்தது வினை மன்னனின் அரிய முத்துமாலைக்கு.  முத்துமாலையைப் பிடுங்கித் தன் வாய்க்குள் போட்டுக் கொண்டது கல்யானை.  மன்னன் சினத்தோடு சித்தரையும் யானையையும் அடிப்பதற்காகத் தன் வீரர்களை ஏவ அவர்களும் அடிக்கப் போனார்கள்.  சித்தரோ சிறிதும் கலங்காமல், “நில்லுங்கள் அங்கேயே!” என்றார். ஓங்கிய கைகள் ஓங்கிய வண்ணம் அப்படியே சிலையைப் போல் நின்றனர் வீரர்கள்.  மன்னன் கலங்கிப் போய் சித்தரின் கால்களில் விழுந்து வணங்கி மன்னிப்புக் கேட்க, மன்னனை மன்னித்தார் சித்தர்.  அவனுக்குக் குழந்தை பாக்கியம் வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டு குழந்தை பாக்கியமும் அளித்தார். பின்னர் கல்யானையிடம் கேட்டு மன்னனின் முத்து மாலையை வாங்கிக் கொடுத்தார். அதைப் பெற்றுக் கொண்ட மன்னன் கழுத்தில் அணிந்து கொண்டு திரும்பிப் பார்க்க,சித்தரையும் காணோம், யானையும் மீண்டும் கல்லாகி நின்றது.  சித்தராக வந்தது சாக்ஷாத் ஈசனே என்பதை உணர்ந்தான் மன்னன். சித்தரின் அருள் மூலம் பிறந்த குழந்தைக்கு விக்ரமன் எனப் பெயர் வைத்து அருமையும், பெருமையுமாய் வளர்த்து விக்ரம பாண்டியன் என்ற பெயரோடு முடி சூட்டினான்.

மதுரைக் கோயிலில் ஈசனின் சந்நிதிக்கு வடமேற்கு மூலையில் எல்லாம் வல்ல சித்தர் சந்நிதி உள்ளது.  அருகேயே துர்க்கையும் இருப்பாள்.  சித்தரைச் சுற்றினாலோ, சித்தருக்குப் பிரார்த்தனைகள் செய்து கொண்டாலோ நினைத்த காரியம் சித்தியடையும் என்பார்கள்.  சித்தருக்குப் பஞ்சலோக விக்ரஹமும் உள்ளது.  அது மஹா மண்டபத்தில் வைக்கப் பட்டிருக்கும்.  ஒவ்வொரு தைப் பொங்கலன்றும் கல் யானைக்குக் கரும்பு தந்த படலம் திருவிளையாடல் ஐதீகவிழாவாய்க் கொண்டாடப் படும்.

Saturday, May 26, 2012

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! எல்லாம் வல்ல சித்தர்


அடுத்தவராய் நாம் காணப் போவது சித்தர்களில் முதல்வரான ஈசனே சித்தனாக வந்து திருவிளையாடல் புரிந்த கதை.  இது திருவிளையாடல் புராணத்திலும் வரும்.  அனைவரும் அறிந்த ஒன்றே ஆகும்.  எனினும் சுருக்கமாய் இங்கே பார்ப்போம்.  மதுரையை அப்போது அபிஷேஹ பாண்டியன் ஆண்டு வந்த காலம். ஒரு நாள் மதுரையின் வீதிகளில் நீண்ட சடாமுடியோடும், நெற்றியில் திருநீறும், நட்ட நடுவே குங்குமத் திலகமும், காதில் குண்டலங்களை அணிந்து கொண்டு, கழுத்தில் ஸ்படிக மாலையையும், மார்பில் பூணூலையும் தரித்துக் கொண்டு, புலித்தோலால் ஆன ஆடையை அணிந்த வண்ணம் யோகப் பட்டயத்தைக் கையில் ஏந்திய வண்ணம் வலத் தோளில் விபூதிப் பையையும் மாட்டிய வண்ணம் பொற்பிரமைக் கையில் எடுத்துக்கொண்டு ஒருவர் நடமாடினார்.  குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டினார்.  ஒரு நிமிடம் தெருவில் நிற்பார்.  அடுத்த நிமிடம் அங்கிருந்து மறைந்து தெருக்கோடியிலோ அல்லது கோபுர வாயிலிலோ காணப்படுவார்.  சில சமயம் அந்தரத்திலும் காணப்படுவார்.  சில சமயம் பூமிக்குக் கீழே இருக்கிறாரோ என்னும்படி காண்பார்.  அவரை மதுரையின் எல்லா வீதிகளிலும் ஒரே சமயத்தில் காண முடிந்தது.  இதோ இங்கே பார்த்தேன் என்பார்கள்.  பார்த்தால் அங்கேயும் இருப்பார்; இங்கேயும் இருப்பார்; எங்கேயும் இருப்பார்.

குழந்தை அழுதால் தூரே தெரியும் மலையை அருகே வரவழைப்பார். அருகிலுள்ள பொருளை தூரத்தே கொண்டுபோனார்.  குழந்தைகள் திடீரென வயது முதிர்ந்தவர்களாக, முதிர்ந்தவர்களோ குழந்தைகளானார்கள்.  மலடிக்குக் குழந்தை பிறக்கச் செய்தார். சிலர் வீட்டில் வலியப் போய் உலோகங்களைப் பொன்னாக்கிக் காட்டினார். பட்டப் பகலில் திடீரெனச் சூரியன் மறைந்து சந்திரன் தோன்றினான்.  இவ்விதம் திருவிளையாடல்களைப் புரிந்த வண்ணம் மதுரையின் தெருக்களில் அலைந்து திரிந்த மனிதரைப் பற்றிய தகவல் அபிஷேஹ பாண்டியனின் செவிகளில் போய் விழுந்தது.  அவரை அழைத்து வரச் சொல்லிக் காவலரை அனுப்ப, சித்தரின் திருவிளையாடல்களில் தாங்கள் வந்த காரியத்தையே மறந்து போய் நின்றனர் காவலாளிகள்.  மன்னன் பார்த்தான்.  அமைச்சர்களை அனுப்ப, அவர்களும் சித்தரைக் கண்டு வணங்கி மன்னனின் சபைக்கு எழுந்தருளுமாறு வேண்டினார்கள்.  சித்தரோ மன்னனால் தனக்கு ஆக வேண்டியது ஏதும் இல்லை எனக் கூறி அவைக்குச் செல்ல மறுத்தார்.  அமைச்சர்கள் தயங்கிய வண்ணம் மன்னனிடம் சென்று இதைக் கூற மன்னன் ஒரு கணம் யோசித்தான்.

வந்திருப்பவர் சாமானியரன்று என்ற உண்மை அவனுக்குப் புரிந்தது.  தானே நேரில் செல்ல எண்ணித் தன் பரிவாரங்களோடு கோயிலுக்கு வந்தான்.  சித்தருக்கு மன்னன் வரப் போகும் செய்தி தெரியாமலா இருக்கும்.  கோயிலில் சென்று சொக்கேசரின் கருவறைக்கு வடமேற்கு மூலையில் போய் அமர்ந்தார்.  அன்றைய தினம் பொங்கல் திருநாளாகவும் அமைந்திருந்தது.

கோயிலில் சித்தரை எங்கும் காணாமல் மன்னன் பிரகாரத்தை வலம் வந்தான்.  அப்போது வழியில் சித்தர் அமர்ந்திருப்பதைக் கண்டனர் மன்னனின் பரிவாரங்கள்.  மன்னர் வருவதால் வழியில் அமரக் கூடாது எனக் கூறி அவரை நகரச் சொல்ல அவரோ நகர மறுத்தார்.  அபிஷேஹ பாண்டியன் இவர் தாம் அந்தப் பெரியாராக இருத்தல் வேண்டும் எனப் புரிந்து கொண்டு, “தாங்கள் யார்?” என அவரை விசாரித்தான்.  அவரும் தம் நகர் காசியம்பதி என்றாலும் எல்லா ஊரும் அவர் ஊரே என்றும் எல்லா ஊரிலும் அவர் இருப்பதாயும் கூறிவிட்டுப் பற்றுதல்களே இல்லாத சிவனடியார்களே தமது சுற்றம் என்றும் கூறினார்.  தாம் சித்துகள் செய்வதில் “எல்லாம் வல்ல சித்தன்” எனவும் பெருமையோடு கூறிக் கொண்டார்.  மன்னனால் தமக்கு எந்தக் காரியமும் ஆகவேண்டியதில்லை எனவும் கூறினார்.  மன்னனுக்கு மனதில் அச்சமும், மரியாதையும் ஒருங்கே தோன்றியது.

எனினும் அவரைச் சோதிக்க எண்ணி அங்கே இருந்தவர்களில் ஒருவனின் கையில் இருந்த கரும்பை வாங்கிக்கொண்டு சித்தரை நெருங்கி அவரிடம் கொடுத்து, அங்கே இருந்த கல்யானையை அந்தக் கரும்பைச் சுவைத்துக் கடித்துச் சாப்பிட வைக்க வேண்டும் என்று கூறினான்.  அப்போது தான் அவரைத் தாம் சித்தராகவும், மதுரையம்பதியை ஆளும் சொக்கநாதராகவும் ஏற்க முடியும் என்றும் கூறினான்.  சித்தர் கலகலவெனச் சிரித்தார்.

Tuesday, April 03, 2012

நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! ஜ்வரதேவர்!


கண்ணன் சென்றதும் முதலில் விநாயகரை அங்கே தரிசித்து ஆசிகள் பெற்றுப் பின்னர் முருகனையும் சந்தித்து ஆசிகளைப் பெற்றான்.  பின்னர் உமாதேவியிடமும் ஆசிகள் வாங்கிய கண்ணன் ஈசனை எதிர்கொள்கிறான்.  ஈசன் அவனோடு போர் புரிய ஆயத்தமாகக் கண்ணன் முதலில் பின் வாங்குகிறான்.  பின்னர் ஈசனே இது உண்மையான யுத்தமில்லை; பாணாசுரனோடு நீ போடப் போகும் யுத்தமே உண்மையானது.  அதில் நீயே வெல்வாய்!  கவலை வேண்டாம் என்று கூற ஈசனோடு போர் புரிகிறான் கண்ணன்.  ஈசன் உஷ்ண ஜ்வராக்னியை விட, கண்ணன் தன் சீதள ஜ்வராக்னியால் அதை எதிர்கொண்டான்.  ஆனால் கண்ணனின் சீதள ஜ்வராக்னியை ஈசனின் உஷ்ண ஜ்வராக்னி வென்று விடுகிறது.  மூன்று சிரங்கள், நான்கு கரங்கள், ஒன்பது விழிகள், மூன்று கால்களோடு அந்த ஜ்வராக்னி தேவன் விளங்கினான்.  பின்னர் கண்ணன் ஒருவாறு ஈசனோடு சமர் புரிந்து வர, ஒரு கட்டத்தில் அவன் பாணாசுரனை வெல்லும் நேரம் வந்தது என ஈசன் ஒதுங்க கண்ணன் பாணாசுரனோடு போர் புரிந்து அவன் கைகளை வெட்டினான்.  ஈசனைத் தொழுத கைகள் தவிர மற்றக் கைகள் வெட்டப் பட்டன.  பின்னர் குடமுழா வாசிக்க பாணாசுரன் மீண்டும் அமர்த்தப் பட்டான்.  உஷைக்கும் அநிருத்தனுக்கும் திருமணம் முறைப்படி நடந்தது.

இந்த ஜ்வரதேவரை வணங்கினால் தீராத ஜ்வரம் தீரும் என்பார்கள்.  இவருக்கு நிவேதனமாக சுக்குக் கஷாயம் படைப்பது உண்டு.  மதுரையில் சுவாமி சந்நிதிப்  பிராகாரத்தில் ஒரு மூலையில் ஜ்வரதேவர் காணப்படுவார். இவருக்கு சீதளமான பசுந்தயிரால் அபிஷேஹமும் செய்வார்கள்.

Friday, March 30, 2012

நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! ஜ்வரதேவர்!


நடராஜ தத்துவம் பற்றி இன்னும் நிறையக் குறிப்புகள் இருக்கின்றன. ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.  அதுக்குள்ளே இங்கே அடுத்த மூர்த்தி பற்றிப் பார்க்கலாமா?  அடுத்தவர் ஜ்வரதேவர். சின்ன வயசிலே எனக்கு அடுத்தடுத்து ஜுரம் வந்து கொண்டே இருக்கும்.  மீனாக்ஷி கோயிலில் ஜ்வர தேவருக்கு யாரானும் அர்ச்சனை, அபிஷேஹம்னு பண்ணிப் பிரசாதம் கொண்டு வந்து கொடுப்பாங்க.  என்னோட ஜுரம் அதுக்கெல்லாம் மசிஞ்சதில்லை.  எத்தனை நாள் இருக்கணுமோ இருந்துட்டுத் தான் போகும்.  ஆனால் ஜ்வரதேவர்னு ஒருத்தர் இருக்கிறதைச் சின்ன வயசிலேயே தெரிந்து கொண்டேன் என்பதே இங்கே கவனிக்க வேண்டியது.  இந்த ஜ்வரதேவரும் ஈசனின் பல்வேறு வடிவங்களில் ஒருத்தரே.

மஹாபலியின் மகன் பாணாசுரன்.  இவன் மனைவி சுப்ரதீபிகை.  இருவரும் ஈசனிடம் பக்தி பூண்டவர்கள்.  நர்மதை நதிக்கரையில் சிவலிங்கம் அமைத்து தினந்தோறும் ஆயிரம் முறை சஹஸ்ரநாமாவளிகளால் அர்ச்சனை செய்து வந்தான்.  ஈசனும் மகிழ்ந்து அவன் கேட்ட வரமான, அழிவற்ற நிலையும், நெருப்பிலான மதில் சுவரும் அனைத்து உலகையும் ஒரு குடைக்கீழ் கொண்டு வந்து ஆளும் வல்லமையும், தேவாதி தேவர்களின் அடித்தாமரையும் கொடுத்து அருளினார்.  தினந்தோறும் தனக்கு இருந்த ஆயிரம் கைகளாலும் பாணாசுரன் குடமுழா வாசித்து ஈசனை மகிழ்வித்து வந்தான்.  ஈசன் மிகவும் மகிழ்ந்தார்.  அவனுடனேயே வசிக்கவும் சம்மதித்தார்.  மேலும் ஈசனைத் தவிர வேறு எவராலும் தன்னை வெல்ல முடியாது என்னும்படியான வரத்தைக் கேட்க  தன்னுடன் அவன் போர் செய்யலாகாது எனவும், கண்ணன் வந்து அவனைத் தோற்கடிப்பான் எனவும் கூற பாணாசுரன் கோபம் மீதூற,” யார் அந்தக் கண்ணன்?  எங்கு உள்ளான்?  என்று வருவான்?” எனப் பரபரத்தான்.  “அவன் பேரன் தான் உனக்கு மாப்பிள்ளையாகப் போகிறான்.” என ஈசன் சொல்ல,” கண்ணன் பேரனுக்கு என் மகளை மணம் முடிக்க மாட்டேன்.” என்று பாணாசுரன் கூறிவிட்டான்.

காலக்கிரமத்தில் பாணாசுரனுக்கு ஒரு மகள் பிறக்க அவளுக்கு உஷை என்று பெயரிட்டு வளர்த்து வந்தான்.  உஷைக்குத் தக்க பருவம் வந்தபோது கன்னிமாடத்தில் அக்கால வழக்கப்படி அவள் வசித்தாள். அப்போது ஒரு நாள் கனவில் தான் ஓர் அழகிய இளைஞனோடு பந்து விளையாடுவதாய்க் கனவு கண்டாள் உஷை.  அந்தக் கனவிலேயே அந்த இளைஞனைத் தான் மணம் செய்து கொள்வதாயும் கனவு கண்டாள்.  விழித்தெழுந்த உஷை கண்டது கனவு என்றறிந்து மனம் வருந்த, அவள் தோழி சித்ரலேகை என்பாள் அப்போது ஆண்டு கொண்டிருந்த அரசர்கள், இளவரசர்கள், வீரர்கள் என அனைவரையும் சித்திரம் வரைந்து காட்ட ஒவ்வொருத்தரையும் ஒதுக்கிய உஷை கடைசியில் கண்ணன், பலராமன், கண்ணன் மகன் ப்ரத்யும்னன் ஆகியோரின் சித்திரத்தைப் பார்த்து மரியாதையும் வெட்கமும் காட்ட அடுத்து ப்ரத்யும்னன் அநிருத்தனின் சித்திரத்தைப்  பார்த்து மிகவும் வெட்கம் அடைந்து இவனே அந்த மணாளன் எனச் சொல்கிறாள்.

சித்ரலேகை உடனே எவ்வாறோ துவாரகை சென்று அநிருத்தனிடம் விஷயத்தைக் கூறி உஷையைக் காண அழைத்து வந்துவிடுகிறாள்.  இருவரும் உஷையின் பெற்றோருக்குத் தெரியாமல் காந்தர்வ விவாஹம் அக்கால வழக்கப்படி செய்து கொண்டு கணவன், மனைவியாக வாழ்ந்து வருகின்றனர்.  இது எவ்வாறோ பாணாசுரனுக்குத் தெரியவர, அவன் அநிருத்தனைக் கொல்ல முயன்றான்.  அநிருத்தன் அங்கிருந்து சென்று தன் தாத்தாவான கண்ணனிடம் விபரத்தைக் கூறுகிறான்.  பாணாசுரனைக் கொன்று அவன் அகம்பாவத்தை அழித்து அவன் ஆயிரம் கைகளையும் வெட்டி  உஷையைக் கொண்டு வந்து சேர்ப்பிப்பதாய்க் கண்ணன் கிளம்பிச் செல்கிறான்.

Tuesday, February 28, 2012

நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! தாண்டவ விளக்கங்கள்!

நடராஜத் தத்துவத்தை ஆழ்ந்து கவனிக்குங்கால் பேரொளியான ஈசன் ஒரு தீச்சக்கரம் சுழல்வது போலத் தன் கைகளை வீசிக்கொண்டு, நிலம் , நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் அனைத்துக்கும் தானே ஒரு சாட்சியாய்த் தோன்றுவதை உணரலாம். வீசும் கைகளின் புயல்வேக அசைவு காற்றையும், (சிலர் சுவாசம் என்றும் சொல்வார்கள்) சூரிய, சந்திர, நெற்றிக் கண்கள் அக்னி ரூபமாகவும், உடலே நிலமாகவும், தலையில் இருக்கும் கங்கையே நீராகவும், செவிகள் ஆகாயமாகவும் குறிப்பிடப் படும். மேற்சொன்ன பஞ்ச பூதங்களில் நாட்டியம் இல்லாத எதுவுமே இல்லை. காற்று தென்றலாகவும், சுழற்காற்றாகவும் நடை போட்டால், தீச்சுடரோ பலவேறு விதங்களிலும், வண்ணங்களிலும் நெளிந்து நடனமாடும். பூமியோ எல்லாவற்றிற்கும் மேல் வெடிப்போசையின் மூலம் தன் நடனத்தை நிகழ்த்துகிறது. நீரோ கடல் அலைகளால் தன் நாட்டியத்தைக் காட்டினால் விண்ணோ, அதிரும் இடியோசையிலும், கொட்டும் மழையிலும், வீசும் காற்றிலும், சூரிய, சந்திர, நக்ஷத்திரங்கள் மூலமும் தன் அளப்பரிய சக்தியைக் காட்டுகிறது.

இவ்வாறு இறைத் தத்துவம் பல்வேறு விதங்களில் தன் இருப்பை நமக்குக் காட்டி வருகிறது. அனைத்துமே ஒழுங்கான ஒரு இயக்கமாக இருப்பது எங்கனம்? நினைக்க நினைக்க ஆச்சரியமாய் இருக்கிறது அல்லவா? ஈசனின் பல்வேறு நாட்டியக் கோலங்களையே இதற்குக் காரணமாகச் சொல்லுவார்கள். ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு உள்ளர்த்தமும் உள்ளது. ஊர்த்துவ தாண்டவம் என்பது யோகநிலையில் மேல்படியைச் சுட்டிக் காட்டுவது என்பதைப் போல ஒவ்வொரு தாண்டவத்திற்கும் ஒவ்வொரு தத்துவம் இருக்கிறது. இவற்றில் சிதம்பரத்தில் இருக்கும் ஆனந்த நடராஜரை ஆத்ம ஸ்வரூபி என்றால் மற்ற இடங்களில் காணப்படும் ஒவ்வொரு கோலத்துக்கும் ஒவ்வொரு தத்துவப் பொருள் உண்டு. இதில் ஏற்கெனவே திரிபுர சம்ஹாரத்தில் ஆணவம்,, கன்மம், மாயை என்னும் மும்மலத்தின் தாக்கத்தால் தன் நிலை மறந்த அரக்கர்களைக் குறித்துப் பார்த்தோம். திரிபுர தாண்டவம் என்னும் அந்தத் தாண்டவத்தில் திரிபுரத்தை ஈசன் எரித்தான் என்பதை உண்மையாகவே ஒரு நகரத்தை எரித்தான்; அசுரர்களைக் கொன்றான் என்ற நேரடிப் பொருள் கொண்டால் அது முழுத் தவறு. இங்கே கொல்லப்படுவது ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்றும். எரிக்கப்படுவது இவை மூன்றுமே. இங்கே அக்னியாகச் சுட்டப்படுவது நம்முடைய தவமாகிய அக்னி. இந்த யோகநெறியுடன் கூடிய தவாக்னியில் மும்மலங்களும் சுட்டுப் பொசுக்கப் படுகின்றன என்பதே உள்ளார்ந்த பொருளாகும்.

அடுத்தது பிரம்மாவின் தலையைக் கொய்தல். இதற்கும் உள்ளார்ந்த அர்த்தம் உண்டு. மூலாதாரத்தில் தோன்றும் மூலாக்னியை மேலெழுப்பி சஹஸ்ராரத்துக்குக் கொண்டு போகவேண்டும். அதற்குத் தடையாக இருப்பதோ பிரம்மா அதிபதியான சக்கரமாக இருக்கும் சுவாதிஷ்டானச் சக்கரம். இங்கேயே சிருஷ்டித் தொழில் நடைபெறவேண்டி பிரம்மா துணை புரிகிறார். ஜீவனுக்கு இதிலேயே மனம் ஆழ்ந்து போகாமல் காத்துத் தடுக்க வேண்டும். மேலும் பிரம்மாவுக்குத் துணையாக இருப்பவரும் மாயன் எனப்படும் விஷ்ணு. அவரோ மணிபூரகத்தில் இருந்து உலக மாயைகளில் மனதைச் சிக்க வைப்பார். இவர்கள் இருவரிலிருந்தும் சீவனை விடுவித்து சஹஸ்ராரத்தில் கொண்டு போய்ச் சேர்ப்பதே பிரம்மாவின் சிரச்சேதமாகச் சொல்வதுண்டு. இதற்கு மனம் மிகவும் பக்குவப் பட வேண்டும். அத்தகைய பக்குவப்பட்ட ஆன்மாக்களை இந்த சிருஷ்டி மோகத்திலிருந்து தடுத்து மேலே கொண்டு போவதே பிரம்ம சிரச்சேதம் ஆகும்.

நிஜமாகவே பிரம்மாவின் தலையை வெட்டிவிட்டார் என அர்த்தம் பண்ணிக் கொள்ளக்கூடாது.

Friday, February 17, 2012

நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! சந்த்யாநிருத்த மூர்த்தி!

அடுத்ததாய் நாம் பார்க்கப் போவது சந்தியா ந்ருத்த மூர்த்தி. பிரதோஷக் காலத்தில் நடனமாடியதால் ஈசனுக்கு இந்தப் பெயர் ஏற்பட்டது. இதன் கதையும் நாம் அனைவரும் அறிந்ததே. தேவர்கள் அம்ருதம் வேண்டிப் பாற்கடலைக் கடைகின்றனர். ஆனால் அதன் முன்னர் ஈசனின் அனுமதியை வேண்டவில்லை என்பதோடு அவருக்குத் தெரிவிக்கவும் இல்லை. மந்தரமலையை மத்தாகக் கொண்டு கடைகின்றனர். வாசுகி தான் மத்தின் கயிறாகப் பயன்பட்டது. வாய்ப்பாகத்தை அசுரர்களும், வால் பாகத்தை தேவர்களும் பிடித்துக்கொண்டு வெகு வேகமாய் இழுத்துக் கடைந்தனர. அந்த வேகத்தில் வாசுகி விஷத்தைக் கக்கக் கூடவே பாற்கடலில் இருந்தும் ஹாலாஹால விஷம் வெளியே வரத் தொடங்கியது. தேவர்களும், அசுரர்களும் மட்டுமல்லாமல் விஷ்ணுவும் விஷத்தின் கடுமையால் உடல் கருகினார். அனைவரும் செய்வதறியாது தவிக்க, விஷ்ணுவின் ஆலோசனையின் பேரில் கைலை சென்று ஈசனிடம் முறையிட்டனர்.

ஈசனும் அந்த விஷத்தை ஒரு உருண்டையாகத் திரட்டி எடுத்துவரச் சொல்லி ஆலால சுந்தரரை அனுப்பி விஷத்தை எடுத்துவரச் செய்தார் என்று ஒரு கூற்று உண்டு. அதே விஷத்தை நந்தி தேவரைத் திரட்டிக் கொண்டு வருமாறு ஈசன் பணித்ததாகவும் கூறுவார்கள். நந்தி தேவர் விஷத்தைத் திரட்டி ஒரு பெரிய உருண்டையாகக் கொண்டு வந்து ஈசனிடம் கொடுக்க, அந்த விஷத்தை ஈசன் விழுங்கினாலும் அபாயம், விழுங்காமல் விஷம் வெளியே இருந்தாலும் அபாயம் என்பதால் அதை ஈசன் அப்படியே தொண்டையில் நிறுத்திக்கொண்டார். விஷத்தைக் கண்டு பயந்தே ஈசன் தம் தொண்டையில் நிறுத்திக்கொண்டதாய் நினைத்த நந்தி தேவர் கேலியாக ஒரு ஹூம்காரம் செய்து சிரித்தார். அதைக் கண்ட ஈசன் நந்தியின்கர்வத்தைப் போக்க எண்ணி விஷமுண்ட தம் கையை நந்தியின் மூக்கெதிரே வைத்து முகரச் செய்ய முகர்ந்த நந்தி மயங்கியதோடல்லாமல் விழித்து எழுந்தும் பித்துப் பிடித்தவர் போலானார்.

அனைவரையும் தம் அருமைக்குழந்தைகளாய் நினைக்கும் அன்னை மனம் வருந்தி நந்தியைத் தண்டிக்கலாமா என ஈசனிடம் கேட்க, தண்டனை இல்லை என்றும் நந்திக்கு கர்வம் அடங்கவே தாம் இவ்வாறு செய்ததாகவும் ஈசன் கூறிவிட்டு, அரிசியை நீரில் நனைத்து வெல்லம் சேர்த்துக் காப்பரிசியாக நந்திக்கு உண்ணக் கொடுக்குமாறும் கூறினார். அவ்வாறே செய்ய நந்திக்குச் சுய நினைவும் மீண்டதாகப் புராணங்கள் கூறுகின்றன. அதன் பின்னர் ஈசனின் திருவடியில் விழுந்து தம்மை மன்னிக்கும்படி நந்தி ஈசனை வேண்ட, ஈசனும் அவ்வாறே மன்னித்ததாய்க் கூறிவிட்டு, நந்தியின் இருகொம்புகளுக்கிடையே நின்ற வண்ணம் சூலம், உடுக்கை ஏந்திக் கொண்டு ஒரு ஜாம காலம் நிருத்தியம் செய்தார். அவரின் ஆடலைக் கண்ட தேவர்களும், பிரம்மா, விஷ்ணுவும் மனம் மகிழ்ந்து வாத்தியங்கள் வாசித்து நடனத்துக்கு மெருகூட்டினார்கள். இது மாலை நேரத்தில் நடந்ததால் அந்த நேரத்தைப் பிரதோஷக் காலம் என்பார்கள்.

விஷமுண்ட ஈசனே மயங்கினாற்போல் படுத்துவிட்டதாகவும், அப்படிப் படுத்த நாள் ஏகாதசி எனவும் ஒரு கூற்று உண்டு. ஈசனே படுத்ததைக் கண்ட தேவர்கள் ஊண், உறக்கமின்றித் தாமும் உபவாசம் இருந்து நாள் முழுதும் விழித்திருந்து சிவனைத் துதித்தனர். மறுநாள் துவாதசி அன்றும் பாராயணத்தைத் தொடர, அதன் மறுநாள் திரயோதசி அன்று ஈசன் மனமிரங்கித் திருநடனம் செய்தருளினார். இந்தப் பிரதோஷ காலத்தில் தான் விஷம் துரத்தி தேவர்கள் ஓடி வந்ததைக் குறிக்கும் வண்ணம், சோமசூக்தப் பிரதக்ஷிணம் என்னும் முறையில் பிரதக்ஷிணம் செய்வதுண்டு. பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய ஆலஹால விஷத்தின் தாக்குதலில் இருந்து தப்பிக்க அனைவரும் ஈசனை நாடிக் கைலை நோக்கி ஓட, அங்கேயும் விஷம் அப்பிரதக்ஷிணமாய் வந்து அவர்கள் எதிரே தோன்றி விரட்ட, அவர்கள் வந்த வழியே திரும்பி ஓட, விஷம் மீண்டும் எதிரே வந்து விரட்ட, இப்படியே இடம், வலமாக அவர்கள் வலம் வந்த முறையே சோமசூக்தப் பிரதக்ஷிண முறை எனக் கடைப்பிடிக்கப் படுகிறது. முக்கியமாய் பிரதோஷ காலத்தில் செய்யவேண்டிய பிரதக்ஷிண முறை இதுவாகும்.

நந்தியின் இரு கொம்பிற்கிடையே ஈசனை வழிபட்டுவிட்டு அப்பிரதக்ஷிணமாக சண்டேஸ்வரர் வரை சென்று திரும்பிப் பின் மீண்டும் நந்தியைத் தரிசித்துப் பிரதக்ஷிணமாக வரவேண்டும். இந்தப் பிரதக்ஷிணம் கோமுகம் எனப்படும் அபிஷேஹ நீர் வரும் துவாரம் வரையில் தான் செய்யவேண்டும். பின்னர் மீண்டும் திரும்பி வந்து நந்தி தரிசனம், மீண்டும் அப்பிரதக்ஷிணம் சண்டேஸ்வரர் வரை என்று செய்தல் நலம். ஆனால் இப்போதெல்லாம் பிரதோஷம் என்றால் சின்னஞ்சிறிய கோயில்களிலேயே கூடும் கூட்டத்தைப் பார்த்தால் கொஞ்சம் கஷ்டம் தான். மதுரை வெள்ளியம்பலத்தில் சந்த்யாந்ருத்ய மூர்த்தியாக நடராஜரைக் காணலாம். பாண்டியனுக்காகக் கால் மாறி ஆடிய கோலமும் இதுவே. சதாசிவ மூர்த்தியின் உச்சியில் அமைந்துள்ள ஈசான முகத்திலிருந்தே நடராஜ வடிவம் தோன்றியதாய்க் கூறுவார்கள். நடராஜவடிவம் காணக் காணத் திகட்டாத அழகு வாய்ந்த ஒன்றாகும். இவ்வடிவின் வெவ்வேறு கோலங்களே பல்வேறு விதமான நிருத்த மூர்த்திகளாக அமைந்துள்ளன.