எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, September 07, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள் -

மூலவர் ஆதிநாதப் பெருமான் என்ற பெயரிலும் பொலிந்து நின்ற பிரான் என்ற பெயரிலும் அழைக்கப் படுகின்றார். தாயார் ஆதிநாதவல்லி, குருகூர் வல்லி. (நம்ம வல்லி சிம்ஹன் நினைவுக்கு வராங்களா? இது அவங்க ஊரே தான்! :D) கோவிந்த விமானத்தின் கீழே கிழக்கே பார்த்துக் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார் பெருமாள். ஸ்ரீவைகுண்டத்திற்குக் கிழக்கே மூன்று மைலில் இருக்கும் இந்த ஊருக்கெனத் தனியான ரயில்வே நிலையம் உள்ளது. இங்கே மார்கழியில் அத்யயன உற்சவத்தின் போது நம்மாழ்வாருக்கு முக்தி கொடுக்கும் நிகழ்ச்சி மிகச் சிறப்பாய் நடை பெறும். மேலும் நம்மாழ்வார் இங்கே தனிச்சன்னதி கொண்டும் விளங்குகின்றார். மார்கழி ராப்பத்து உற்சவத்தின்போது நம்மாழ்வாரின் திருவாய்மொழியைக் காதாரக் கேட்கும் எம்பிரான் நம்மாழ்வாருடன் ஒரே மண்டபத்திலே எழுந்தருளுகின்றார் எனச் சொல்கின்றனர். பத்தாம் நாள் பத்து அன்று “முனியே, நான்முகனே, முக்கண்ணப்பா” என்ற பாசுரம் வரும் என்கின்றனர். அப்போது நம்மாழ்வாரை மெதுவே எழுந்தருளச் செய்து பெருமமளின் பாதாரவிந்தங்களிலே நம்மாழ்வாரின் தலை படும்படியாகச் சமர்ப்பிக்கின்றனர்.

பெருமாளின் திருவடியில் நம்மாழ்வாரின் திருமுடி ஒன்றுடன் ஒன்று சேர்ந்து கிடக்கும் காட்சியைக் காண பக்தர்கள் கூட்டம் ஆர்ப்பரித்து, நம்மாழ்வாருக்கு முக்தி கிடைத்துவிட்டது என ஒரு பக்கம் சந்தோஷம் கொண்டாலும், மறுபக்கம் நம்மாழ்வாரைத் திரும்பத் தரும்படியும் வேண்டுவார்களாம். அப்போது சுவாமியும் நம்மாழ்வாரைத் "தந்தோம், தந்தோம், தந்தோம், சடகோபனைத் தந்தோம், நம் ஆழ்வானைத் தந்தோம்”, என்று சொல்லி பக்தர்களுக்கு அருள் புரிவார் என்று சொல்லுகின்றனர். ஒருமுறையாவது போய்ப் பார்க்கணும். கூட்டத்தை நினைச்சால் பயமா இருக்கு.

இது தவிர, வைகாசி உற்சவத்தின்போது திருக்குருகூரைச் சுற்றி அமைந்துள்ள மற்ற எட்டுத் திருப்பதிகளில் இருந்தும் பெருமாள் இங்கே வந்து நம்மாழ்வாரின் பாசுரங்களைக் கேட்க வருகின்றனர். நம்மாழ்வாரே முகமன் கூறி அவர்களை வரவேற்பதாக நம்மாழ்வாரின் உற்சவர் சென்று வரவேற்பு அளிக்கும் ஐதீகம் நடை பெறுகிறது. நம்மாவாரின் சந்நதியிலேயே பெருமாள்கள் அத்தனை பேரும் பாசுரங்களுக்காகக் காத்துக்கிடக்கும் அதிசயமும் நடக்கிறது. மதியம் திருமஞ்சனம் முடிந்து இரவு கருட சேவையில் ஒவ்வொரு பெருமாளும் வரிசையாக ஆழ்வாரின் சன்னதியைத் திறந்து கொண்டு வெளியே வருவார்கள். ஆஹா, நினைச்சுப் பார்த்தாலே பார்க்கணும்போல இருக்கு. இதெல்லாம் சொல்லித் தான் கேட்க முடிஞ்சது. ஒன்பது திருப்பதிகளின் பெருமாள்களும் வீதிவலம் வருவார்கள் நம்மாழ்வாரோடு. மதுரகவி ஆழ்வாரும் வீதி வலம் வருவார் என்றார்கள். இரவு பதினொரு மணிக்குக் கிளம்பும் ஊர்வலம் மறுநாள் விடியற்காலை ஐந்து, ஆறு மணி வரை நடைபெற்றுப் பின்னர் திருக்குருகூர் கோயிலின் மங்களாசாசன மண்டபத்திற்கு வந்து சேர்வார்கள். ஆழ்வார் ஒரு பல்லக்கில் இருப்பார். அப்போது ஒவ்வொரு பெருமாளுக்கும் அந்த அந்தப் பெருமாள் மீது பாடிய பாசுரங்கள் இசைக்கப் பட்டு பெருமாளுக்கு நம்மாழ்வார் விடை கொடுத்து அனுப்பும் காட்சி நடை பெறும். பாடலைப் பெற்றுக் கொண்டு பரமானந்தத்துடன் எல்லாப் பெருமாள்களும் தத்தம் இருப்பிடம் சென்றடைவார்களாம். கண்கொள்ளாக் காட்சி என்கின்றனர்.

நம்மாழ்வார் செய்த தவம் தான் என்னே! இறைவன் அடைவதற்கு எத்தனை எளியவன் என்று சொல்லுகின்றார் நம்மாழ்வார். அவன் பெரியவன் மட்டுமல்ல, எளிதில் அவன் நம்மிடம் வருவான் என்றும் வாழ்ந்து காட்டினார்.

டிஸ்கி: இந்தக் குறிப்பிட்ட பதிவுக்கு நன்றி திரு வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள். இத்துடன் நவதிருப்பதிகள் முடிந்தன. நவ கைலாயங்கள் அடுத்து ஆரம்பிக்கும். தொடர்ந்து ஆதரவை வேண்டுகிறேன். நன்றி.

Thursday, September 03, 2009

தாமிரபரணிக்கரையில் சிலநாட்கள்!

மணவாள மாமுனிகள்
ஆழ்வார்களுக்குள் நம்மாழ்வாருக்கு நிகராக இன்னொருவரைச் சொல்ல முடியாது என்பதே அனைவரின் கருத்தும். அதனாலேயே மணவாளமாமுனிகளும், அவர் பிறந்த வைகாசி விசாகத்தைச் சிறப்பித்து,

உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பு ஒருநாள்
உண்டோ சடகோபர்க்கொப்பொருவர்
உண்டோ திருவாய்மொழிக்கு ஒப்பு தென்குருகைக்
குண்டோ ஒரு பார்தனில் ஒக்கும் ஊர்!”

என்று நம்மாழ்வார் பிறந்த வைகாசி விசாகத்தை மட்டுமில்லாமல், அவர் பிறந்த ஊரான திருக்குருகூரையும் சிறப்பித்துச் சொல்லி இருக்கின்றார். வேதத்தின் சாரமாய்க் கருதப் படுகின்ற இவரின் பாசுரங்களைச் சிறப்பித்து நம்பெருமாளான ஸ்ரீரங்கநாதனே இவரை “நம்மாழ்வார்” என்று பெருமையுடன் அழைத்துப் பெருமைப் படுத்தியதாய்த் தெரிய வருகிறது.

நம்மாழ்வார் அமர்ந்திருந்த உறங்காப்புளி மரம் இன்னமும் திருக்குருகூரில் காணக்கிடைக்கிறது. இந்தப் பாசுரங்கள் அனைத்துமே திருமங்கை ஆழ்வார் காலத்திற்குப் பின்னர் தேய்ந்து மறைந்து போய்விட்டன. ஒன்பதாம் நூற்றாண்டில் காட்டுமன்னார்குடி எனத் தற்போது அழைக்கப் படும் வீரநாராயணபுரத்தில் நாதமுனிகள் என்ற பெயரில் ஒரு குழந்தை பிறந்து வளர்ந்து வந்தது. அந்தக் குழந்தை பிறவியிலேயே விஷ்ணுவிடம் பக்தி பூண்டு வந்தது. அந்த ஊர்க் கோயிலுக்கு யார் வந்தாலும், அவர்கள் பாடும் பாசுரங்களில் பெருமாளின் ஒவ்வொரு அவதாரமும், ஒவ்வொரு திவ்யதேசமும் சிறப்பித்துக் கூறப் பட்டிருப்பதை நாதமுனிகள் கேட்டு அநுபவித்து வந்தார். நாளாவட்டத்தில் அவருக்குப் பாசுரங்களின் மேல் அதீதக் காதல் ஏற்பட்டன. ஒரு சமயம் கும்பகோணம் ஆறாவமுதன் மேல் பாடப் பட்ட நம்மாழ்வாரின் பாசுரங்கள் பதினொன்றையும் கேட்டுவிட்டு, பதினோராவது பாடலில், இந்தப் பாடலை எழுதியவர் குருகூர்ச் சடகோபன் என்பவர் எனக் குறிப்பு வரவே, மேல் விபரங்கள் தேடியதில் சுமார் ஆயிரம் பாசுரங்களை குருகூர்ச் சடகோபன் பாடி இருப்பது தெரிய வந்தது.ஆயிரம் பாடல்களையும் அறிய முற்பட்ட நாதமுனிகளுக்கு அவை கிடைக்கவில்லை. பாடிக் காட்டியவர்களுக்கும் சரிவரத் தெரியவில்லை. இதன் மூலத்தை அறிய வேண்டி திருக்குருகூர் வந்தார் நாதமுனிகள். அங்கே மதுரகவி ஆழ்வாரின் சிஷ்ய பரம்பரையைச் சேர்ந்த சிலர் மதுர கவி ஆழ்வார் நம்மாழ்வாரைக் குறித்துப் பாடிய பதினொரு பாடல்களைத் தந்து, நாதமுனிகளை, அந்த உறங்காப்புளிய மரத்தினடியில் அமர்ந்து நம்மாழ்வாரைத் தியானித்து, இந்தப் பதினொரு பாசுரங்களையும் பனிரண்டாயிரம் முறைகள் நியமங்களை அனுசரித்துச் ஒன்னால் நம்மாழ்வாரே விரும்பியதை அருள்வார் எனச் சொல்ல, நாதமுனிகளும் அவ்வண்ணமே தாமிரபரணியில் நீராடி உறங்கப்புளிய மரத்தடிக்கு வந்து அமர்ந்தார். பனிரண்டாயிரம் முறைகள் மதுரகவி ஆழ்வார் பாடிய பாசுரங்களைப் பாடினார். நம்மாழ்வார் அவர் முன் தோன்றி, “உமக்கு என்ன வேண்டும்?” எனக் கேட்க, ஆயிரம் பாசுரங்களையும் கொடுத்தருள வேண்டி நாதமுனிகள் வேண்டினார். நம்மாழ்வார் நாதமுனிகளின் பக்திக்கு மெச்சி, அந்த ஆயிரம் பாசுரங்கள் மட்டுமில்லை, மற்றப் பாசுரங்களையும், இன்னும் மற்ற ஆழ்வார்கள் பாடியதையும் சேர்த்தே தருகின்றேன் என்று சொல்லிவிட்டு அவ்வண்ணமே அனைத்துப் பாசுரங்களும் கிடைக்கும்படி அருளிச் செய்தார். இவை அனைத்துமே நம்மாழ்வார் தவமிருந்த புளிய மரத்தினடியிலேயே நடந்தது என்பது அந்தப் புளிய மரத்தின் சிறப்பை மேலும் கூட்டுகின்றது.

இந்த க்ஷேத்திரத்துக்குத் திருக்குருகூர் என்னும் பெயர் வரக் காரணம் பிரம்மா பல்லாண்டுகள் மகாவிஷ்ணுவைக் குறித்துத் தவம் இயற்றி “அர்ப்பணம் குரு” எனச் சொன்னதால் திருக்குருவான ஆதிநாதன் கோயில் கொண்ட இடம் திருக்குருகூர் எனப் பட்டது. பின்னர் நம்மாழ்வாரின் பெருமையால் ஆழ்வார் திருநகரி எனச் சிறப்புப் பெயரும் பெற்றது. இதைத் தவிர இந்த ஊருக்கு தாந்த க்ஷேத்திரம் என்றும் பெயர் உண்டு. வடநாட்டில் இருந்த தாந்தன் என்னும் வேதம் பயின்று கொண்டிருந்த அந்தணனை அனைவரும் மதிக்காமல் ஏசினார்கள். மனம் வருந்திய அவன் பரிஹாரம் என்ன எனத் தேட திருக்குருகூர் சென்று ஆதிநாதரைக் குறித்துத் தொழுதால் ஞானம் உண்டாவதோடு நன்மையும் ஏற்படும் எனத் தெரிய இங்கே வந்து அவ்வண்ணமே செய்தான். அவனுக்கும் இங்கே தான் முக்தி கிடைத்தது. நம்மாழ்வாருக்கும் இங்கே தான் முக்தி கிடைத்தது. இனி கோயிலின் பெருமாளையும் நம்மாழ்வாரின் முக்தியைக் குறிக்கும் நிகழ்வு பற்றிய சிறப்பையும் பற்றிக் காணலாம்.

Tuesday, September 01, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள்! நம்மாழ்வார் தொடர்ச்சி!

நம்மாழ்வாரும் , மதுரகவியாழ்வாரும்
நாம போன பதிவிலே பார்த்த திருக்கோளூரில் ஒரு அந்தண குலத்தில் பிறந்த ஒரு குழந்தை இளமை முதலே அருமையான கவி பாடும் ஆற்றலைப் பெற்றிருந்தது. அதனால் குழந்தை மதுரமான கவிகள் பாடுவதால் மதுரகவி எனப் பெயரும் பெற்றது. அந்தக் குழந்தை வளர்ந்து வேத, சாத்திரங்களை நன்கு பயின்று மேலும் பயிலவும் வடநாடு சென்றார். நாட்கள் செல்லச் செல்ல உலக வாழ்க்கையில் பற்று நீங்கியது. அயோத்தி, மதுரா போன்ற திவ்ய தேசங்களைத் தரிசித்தார். ஒருநாள் அவர் அயோத்தியில் தங்கி இருந்தார். மாலை மங்கி இரவுப் போதில் தங்கியிருந்த இடத்தைவிட்டு வெளியே வந்தபோது விண்ணில் ஒரு பேரொளியைக் கண்டார். அந்தப் பேரொளி தென் திசை முழுதும் வியாபித்திருந்ததையும் கண்டார். என்னவெனப் புரியாமல் அன்றைய இரவைக் கழித்தார். மறுநாள் இரவு மீண்டும் அதே மாதிரி அதிசயம். தென் திசை சுடர் விட்டுப் பிரகாசித்தது. அத்தோடு மட்டுமா? அந்த ஒளி அவரை அழைப்பது போலவும் தோன்றியது அவருக்கு.

தெற்கே ஏதோ ஓர் அதிசயம் நடந்துள்ளது என்பதையும், அந்த ஒளியைத் தான் பின்பற்றிச் செல்லவேண்டும் என்பதையும் மதுரகவியாழ்வார் உணர்ந்தார். தென் திசை நோக்கிப் பயணப் பட்டுத் திருக்குருகூர் வந்தடைந்தார். அங்கே ஓர் புளியமரத்தடியில் அந்தப் பேரொளி நிலை பெற்றிருப்பதைக் கண்டார். புளியமரத்தடியில் ஒரு பாலகன் மோன தவத்தில் இருந்ததையும் கண்டார். மோனத் தவத்தில் இருந்த சிறுவனை எழுப்ப முயன்றுவிட்டுப் பின்னர் ஒரு கல்லைத் தூக்கிப் போட்டு முதலில் சிறுவனின் சமாதியைக் கலைத்தார். பின்னர் அந்தச் சிறுவனிடம், “செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?” என்று கேட்டார். பிறந்ததில் இருந்து அதுவரையிலும் பேசாமல், அசையாமல் இருந்த அந்தச் சிறுவன் அப்போது, “அத்தைத் தின்று அங்கே கிடக்கும்.” என்று பதில் சொன்னான். இந்தக் கேள்வியும், இதற்கான பதிலும் மேலோட்டமாய்ப் பார்க்க சாமானியமாயும், அர்த்தம் இல்லாமலும் தோன்றினாலும் இதன் உள் அர்த்தமானது மானுட வாழ்வின் தத்துவத்தையே உணரத்துவதாய்ப் பெரியோர் சொல்லுவார்கள்.

“ஜீவன் சூக்ஷ்மம் ஆனது. அது கண்ணுக்கே தெரியாத ஒன்று. அந்த ஜீவன் சூக்ஷ்மம் ஓர் மனித உடலில் புகுந்து பிறவி எடுக்கிறது. அப்படி சூக்ஷ்மம் ஆன ஜீவன் பிறவி எடுத்தால் அப்போது அந்தப் பிறவியின் வாழ்க்கை எப்படி அமையும்?” இதுவே மதுரகவி ஆழ்வாரின் கேள்வி. இதற்கு நம்மாழ்வார் கொடுத்த பதிலானது, "தன் பூர்வ ஜென்மத்தின் புண்ணிய, பாவங்களை, அவற்றின் பலாபலன்களை நுகர்வதே இந்த ஜென்மத்தின் வாழ்க்கையாய் இருக்கும்" என்பதே ஆகும். இவரின் இந்த நுண்ணிய அறிவையும், பிறக்கும்போதே சகல ஞானமும் அறிந்தே பிறந்திருப்பதையும் உணர்ந்து கொண்ட மதுரகவி ஆழ்வார் அக்கணமே அவரைத் தன் குருவாக வரித்துக் கொண்டார். மதுரகவி ஆழ்வார் இவரைப் போற்றியே பாடல்கள் புனைந்துள்ளார். அவை பதினொரு பாடல்களாக இருக்கின்றன. அவற்றுள் ஒன்று
"நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்,
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே;
தேவு மற்று அறியேன்; குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித்திரிவனே."

நம்மாழ்வாருக்குப் பிறக்கும்போது இட்ட பெயராக "மாறன்" என்று தெரிய வருகிறது. இதைத் தவிர பராங்குசன் என்ற பெயராலும் அழைக்கப் படுகின்றார். பக்தி என்ற அங்குசத்தைக் கொண்டு பெருமாளை வசப் படுத்தியதால் பராங்குசன் என்று சொல்லுவார்கள். மற்ற ஆழ்வார்கள் சரீரம் என்றால் அந்த சரீரத்தின் ஆன்மா நம்மாழ்வார் என்று சொல்லுவது வைணவ சம்பிரதாயத்தில் மிகவும் முக்கியமான ஒன்று. நம்மாழ்வார் எழுதிய பாடல்களை எல்லாம் "திருவாய்மொழி" என்னும் சிறப்புப் பெயராலும், "திராவிட வேதம்" என்னும் சிறப்புப் பெயராலும் அழைக்கப் படுகின்றது. இந்தப் பாடல்கள் நான்கு பகுதிகளாய்ப் பிரிக்கப் பட்டுள்ளது.
திருவாசிரியம் - யஜுர் வேதம்
திருவிருத்தம் - ரிக்வேதம்
பெரிய திருவந்தாதி- அதர்வ வேதம்
திருவாய்மொழி- சாமவேதம்
என்று சொல்லப் படுகின்றது. கிட்டத்தட்ட நாலரை ஆண்டுகள் நம்மாழ்வார் சொல்லச் சொல்ல பட்டோலையில் மதுரகவி ஆழ்வார் எழுதியதாகவும் சொல்லப் படுகிறது. ஆழ்வார்கள் அத்தனை பேரிலும் இவரை மட்டுமே "நம்" என்று சிறப்பித்து நம்மாழ்வார் எனவும் கொண்டாடப் படுகின்றார். பெரிய திருவந்தாதியில் இருந்து ஒரு பாடல்

பூவையும் காயவும் நீலமும் பூக்கின்ற
காவிமலர் என்றும் காண்தோறும்_பாவியேன்
மெல்லாவி மெய்ம்மிகவே பூரிக்கும் அவ்வவை
எல்லாம் பிரான் உருவே என்று

காயாம்பூ, கரு நெய்தல், செங்கழுநீர் போன்ற பூக்களைப் பார்க்கும்போதெல்லாம் மனம் மகிழ்ந்து பூரித்து திருமாலின் வடிவங்களாய்த் தோன்றுவதாய்ப் பாடல் சொல்லுகின்றது.

Wednesday, August 26, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள்!

அமரர்கள் தொழுதெழ அலைகடல் கடைந்தவன் றன்னை,
அமர்பொழில் வளங்குரு கூர்ச்சடகோபன் குற் றேவல்கள்,
அமர்சுவை யாயிரத் தவற்றினு ளிவைபத்தும் வல்லார்
அமரரோ டுயர்விற்சென் றறுவர்தம் பிறவியஞ் சிறையே. (2823) திருவாய்மொழி

திருக்குருகூர் தனிச் சிறப்புப் பெற்ற தலம். இதுவும் நெல்லை திருச்செந்தூர் சாலையில் தான் உள்ளது. ஸ்ரீவைகுண்டத்திற்குக்கிழக்கே கிட்டத் தட்ட ஐந்து கிமீ தூரத்தில் தாமிரபரணியின் தென்கரையில் உள்ளது. பெருமான் ஆதியில் இங்கே தான் ஆசை கொண்டு இருந்தபடியால் அவர் பெயரும் ஆதிநாதர். நின்ற திருக்கோலத்தில் காட்சி கொடுக்கிறார். கிழக்கே பார்த்துக் கொண்டு “பொலிந்து நின்ற பிரான்” என்ற பெயரைத் தாங்கிக் கொண்டு கோவிந்த விமானத்தின் கீழ் அருள் பாலிக்கிறார். தாயார் ஆதிநாயகி, குருகூர் நாயகி. பிரம்மாவிற்குப் பிரத்யட்சம் எனச் சொல்லப் படும் இந்த க்ஷேத்திரம் நம்மாழ்வாரின் திரு அவதாரத்தின் பின்னே ஆழ்வார்திருநகரி என்ற பெயரிலேயே வழங்கப் படுகிறது. ஹரி க்ஷேத்திரங்களுள் ஸ்ரீமந்நாராயணன் இங்கேயே முதன் முதல் அவதரித்ததாய்ச் சொல்லப் படுகிறது. இப்போ நம்மாழ்வாரின் அவதார மகிமை பற்றிப் பார்ப்போமா??

ஸ்ரீவைகுண்டம், அருகிலே இரு தேவியரும் இருக்க, கருடனும், ஆதிசேஷனும் இருக்கையில் பெருமான் சொல்கின்றார். “நீங்கள் எல்லாரும் பூமியில் போய்ப்பிறக்கவேண்டும். வேதங்களைத் தமிழாக்கி, திவ்யப்ப்ரபந்தங்கள் என்னும் பெயரிலே அருளிச் செய்யவேண்டிய காரியம் இருக்கிறது. எங்கே நம் சேனை முதலியார்??? விஷ்வக்சேனர்? அவர் தான் இந்தக் காரியம் செய்ய வல்லவர். அவர் பூமியில் சடத்தை வென்ற சடகோபனாய்ப் பிறக்கவேண்டும் . ஆதிசேஷா, நீ புளியமரமாகப் போய் இருப்பாய்! கருடா, நீ மதுரகவி என்னும் பெயரிலே ஒரு ஆழ்வாராகப் பிறந்து, சடகோபனின் பெருமையை உணர்ந்து, அவரின் சிஷ்யனாக மாறி, சடகோபரின் பெருமையை உலகு அறியச் செய்வாய்! அத்தோடு அனைத்து ஆழ்வார்களின் பாடல்களும் அறியப் படவேண்டும்.” என்று சொன்னார்.

நாடாத மலர்நாடி நாள்தோறும் நாரணந்தன்,
வாடாத மலரடிக்கீழ் வைக்கவே வகுக்கின்று,
வீடாடி வீற்றிருத்தல் வினையற்ற தென்செய்வதோ?
ஊடாடு பனிவாடாய். உரைத்தீராய் எனதுடலே.(2832) திருவாய்மொழி

சரி, எல்லாரையும் பிறக்கச் சொல்லியாச்சு, அதற்கான இடம் வேண்டாமா? அதுக்குத் தகுந்த க்ஷேத்திரமாகத் திருக்குருகூர் தேர்வு செய்யப் பட்டது பகவானாலேயே. தாய், தகப்பன்? அதுவும் தேர்வு செய்யப் பட்டது. திருவழுதி வளநாடரின் வழித் தோன்றலான காரி என்பவருக்கும் அவர் மனைவியான உடைய நங்கைக்கும் குழந்தைகளே இல்லை. அவர்கள் இருவரும் அருகே உள்ள திருக்குறுங்குடி என்னும் திவ்ய க்ஷேத்திரத்தின் நம்பியை வேண்டிப் பிரார்த்தனை செய்தனர். இருவரின் பிரார்த்தனைக்கும் செவி சாய்த்த எம்பிரான் தம்பதியரிடம், “யாரைப் போன்ற பிள்ளை வேண்டும்?” என்று கேட்க, உடைய நங்கையோ யோசிக்கவே இல்லை. “பரந்தாமா! உன்னைப் போல் பிள்ளை வேண்டும்” என்று கேட்டுவிட்டார். பகவானும், “அவ்வண்ணம் நாமே உமக்கு மகனாய்த் தோன்றுவோம்” என்று சொன்னாராம். அப்படி திருக்குறுங்குடி நம்பியின் அம்சமும், சேனை முதலியாரின் அம்சமும் சேர்ந்து தோன்றியவரே நம்மாழ்வார். குழந்தை பிறந்தாச்சு. குழந்தை அழணுமே? ஆனால் அழவே இல்லை, பால் குடிக்கணுமே? தாயிடம் பால் குடிக்கவும் இல்லை. எந்தவிதமான உணவும் எடுக்கவில்லை. இது என்ன அதிசயக் குழந்தை? இதை எவ்வாறு வளர்ப்பது? புரியாமலேயே கலங்கிப் போன காரியாரும், உடைய நங்கையும் குழந்தை பிறந்த பனிரண்டாம் நாள் குழந்தையை ஆதிநாதர் சந்நதிக்கு எடுத்துச் சென்றனர். அங்கே அக்குழந்தையை ஆதிசேஷனின் அவதாரமாய்த் தோன்றி இருக்கும் புளிய மரத்தடியில் விட்டுச் செல்லுமாறு தோன்ற அவ்வண்ணமே செய்தனர். குழந்தை ஏன் இவ்விதம் பிறந்தது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை, புரியவில்லை. பின்னாட்களிலேயே தெரிய வந்தது.

பிறக்கும்போது, தாயின் கர்ப்பத்தில் கூட ஒவ்வொரு குழந்தையும் ஞானம் கொண்டதாகவே விளங்குகிறது. ஆனால் பிறப்பின் ரகசியத்தால் இறைவன் சிலருக்கு மட்டுமே ஞானத்தோடு பிறக்க அருள் புரிகின்றான். மற்ற நம் போன்ற சாமானியருக்கு கர்ப்பத்தில் இருந்து வெளியே வரும்போதே சடம் என்னும் வாயு சூழ்ந்து கொண்டு நம்மை அஞ்ஞானம் என்னும் சாகரத்தில் தள்ளிவிடுகிறது. நம்மாழ்வாரோ தெய்வக் குழந்தை மட்டுமல்ல, பிறக்கும்போதே ஞானக் குழந்தையும் கூட அல்லவோ? ஆகையால் தம்மைச் சூழவந்த சடத்தைக் கோபித்து விலக்கிவிட்டார். அதனாலேயே அவர் பேசவில்லை, பால் அருந்தவில்லை. இப்படிச் சடத்தை உதறித் தள்ளிவிட்டுப் பிறக்கும்போதே ஞானத்தோடு பிறந்த குழந்தைக்குச் “சடகோபன்” என்னும் திருநாமம் சூட்டினார்கள். குழந்தை புளியமரத்தடியிலேயே வளர்ந்தது. கையிலே சின்முத்திரையைத் தாங்கிக் கொண்டு தெற்கே பார்த்து அமர்ந்திருந்தது அந்தக் குழந்தை. வரவேண்டுமே, உரிய நேரத்தில் சீடன் வரவேண்டும் அல்லவா? அதற்குத் தானே காத்திருந்தது குழந்தை? பதினாறு ஆண்டுகள் முடிந்துவிட்டன. குழந்தை இன்னும் தவம் செய்துகொண்டு மோன நிலையிலேயே இருந்தது. அப்போது!

Monday, August 24, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள்!


கொஞ்சம் அவசரமாவே திருக்கோளூரில் தரிசனம் பண்ணினோம்னு நினைக்கிறேன். பெருமாளோட பெயர் மட்டும் நல்லா நினைவில் இருக்கு. என்ன பெயர் தெரியுமா? வைத்தமாநிதி! பெருமாளே ஒரு மாநிதிதான். அதிலும் இந்தத் தலத்துக்கு வந்து தரிசனம் செய்தால் குபேரன் வைத்த மாநிதிகள் அத்தனையும் கிடைக்கும். கேட்பானேன்! பெருமாளின் அருளே வைத்தமாநிதிதானே. நாம் கொடுத்து வைத்திருந்தால் தவிர இத்தகையதொரு மாநிதியான இறை தரிசனம் கிடைக்குமா? இந்தக் கோயிலின் தலவரலாறு பின்வருமாறு:

ஈசனின் நண்பன் ஆன குபேரன் ஈசனின் அருளால் அலகாபுரியில் தனக்கென ஒரு நகரை நிர்மாணித்துக் கொண்டு வடதிசைக்கு அதிபதியாக இருந்து வந்தான். இறைவனின் அருள் பரிபூரணமாய்க் கைவரப் பெற்ற அவனுக்கு நவநிதிகளும் வசமாகி இருந்தது. அவனுக்கு இறைவனிடம் இருந்த செல்வாக்கினாலும், அதீத உரிமையினாலும் எப்போது வேண்டுமானாலும் கைலையங்கிரிக்குச் சென்று ஈசனைத் தரிசிக்கும் உரிமையைப் பெற்றிருந்தான். அவ்வாறே ஒருநாள் அவன் சென்றிருந்த சமயம் இறைவனும், இறைவியும் தனித்திருந்த நேரம். அம்பாள் அதீத அழகுடன் சுடர்விட்டுப் பிரகாசித்தாள். இவர்கள் தனியாய் இருப்பதை உணராமல் சென்ற குபேரன் ஒளிவீசிப் பிரகாசிக்கும் காந்தியுடன் விளங்கிய அம்மையைக் கண்டு ஒரு கணம் மனம் தடுமாறினான். அவளையே உற்று நோக்கினான். உலக நாயகியாம் அம்மாவுக்குத் தன் மகனில் ஒருவன் இம்மாதிரி நடப்பது பொறுக்குமா? மகன் தான் என்றாலும் இதே தவறை மற்றவரும் செய்யாவண்ணம் காக்கவேண்டுமே? தக்க தண்டனை ஒன்றை இவனுக்கு அளிக்கவேண்டும். அதன் மூலம் பாடமும் கற்கவேண்டும் எனத் தீர்மானித்தவளாய்,” தீய எண்ணத்தோடு உன் தாய் போன்ற என்னைப் பார்த்ததால் உன் உருவம் விகாரமடைந்து, உனக்கு ஒரு கண்ணும் போகும். உன்னை விட்டு நவநிதிகளும் விலகும்.” என்று சொல்லுகின்றாள்.

உடனேயே தன் தவற்றை உணர்ந்த குபேரனும் ஈசனை வணங்கித் தன்னை மன்னிக்குமாறு கேட்க, இதற்கேற்ற பரிகாரத்தை மலை மகளே சொல்லுவாள், அவளையே போய்ப் பணிந்து கேள் என அனுப்புகின்றார் ஈசன். பூலோக வாசமும் செய்யுமாறு அவனைப்பணித்து, பொருநையாற்றின் கரையில் இந்த நிதி தீர்த்தத்தில் நீராடி புருஷோத்தமனைப் பணிந்து வா. ஒருநாள் நீ வேண்டியது நடக்கும் எனச் சொல்லிவிடுகின்றாள் உமை அம்மை. அதன்படி குபேரனும் இங்கே வந்து நிதி தீர்த்தத்தில் நீராடி புருஷோத்தமனாகிய பெருமாளைக் குறித்துத் தவம் இயற்றப் பெருமாளும் மனமிரங்கி, இந்த க்ஷேத்திரத்தின் மகிமை அளவிடமுடியாதது. தர்மம் இங்கே நிலைத்து நிற்கிறது. அதர்மம் இந்த க்ஷேத்திரத்தை அணுகாது. நீ உமையை கெட்ட நோக்குடன் பார்த்த பாவம் மெதுவாய்த் தான் போகும். உன்னுடைய நவநிதிகளையும் தற்சமயம் தரமுடியாது. கொஞ்சம் தருகிறேன் கொண்டுபோ! என்று சொல்லிவிட்டுத் தான் படுத்துக் கொண்டிருந்த இடத்திற்கு அடியில் இருந்து நிதியை எடுத்து ஒரு மரக்காலால் அளந்து குபேரனுக்குக் கொடுக்கிறார். நவநிதிகளில் அனைத்தும் குபேரனைச் சென்றடையவில்லை என்பதாலும், இங்கே உள்ள நவநிதிகளையும் காத்துக் கொண்டு அதன்மேலேயே பெருமாள் சயனத்திருக்கோலத்தில் காட்சி கொடுப்பதாலும் வைத்தமாநிதிப் பெருமாள் என்ற பெயர் பெற்றார். கிழக்கே பார்த்துக் கொண்டு புஜங்க சயனத்தில் படுத்துக் கொண்டு நிதியைப் பத்திரமாய்க் காவல் காத்துக் கொண்டிருக்கிறார்.

தாயார் கோளூர் வல்லி நாச்சியார், குமுதவல்லி நாச்சியார். மதுரகவி ஆழ்வார் இங்கேதான் அவதாரம் செய்ததாய்ச் சொல்லுகின்றனர். நம்மாழ்வார் இந்தத் தலத்திற்கும் மங்களாசாஸனம் செய்திருக்கிறார். கோயில் விமானத்தை ஸ்ரீகரவிமானம் என அழைக்கின்றனர். செல்வம் வேண்டிப் பிரார்த்திப்போர் இந்தக் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்து பெருமாளுக்குப் பிரார்த்தித்துக் கொண்டால் செல்வம் கிட்டும் என்றும் சொல்லுகின்றனர். குபேரன் செல்வம் பெற்றது மாசி மாதம் சுக்லபட்ச துவாதசியில். அப்போது இங்கே சிறப்பான வழிபாடுகள் நடக்கும்.

அடுத்து நாம் காணப்போவது மிக முக்கியமான தலம். திருக்குருகூர். நம்மாழ்வாரின் அவதார ஸ்தலம். மதுரகவி ஆழ்வார் வடக்கே சென்றிருந்தவர் நம்மாழ்வாரைத் தேடிக் கண்டுபிடித்தது, மணவாள மாமுனிகள் அவதார க்ஷேத்திரம், நாதமுனிகளுக்கு நம்மாழ்வார் பிரபந்தங்களை அருளிச் செய்தது போன்றவற்றை அடுத்து வரும் பதிவுகளில் காணலாம்.

Friday, August 21, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள்!

திருச்செந்தூர் செல்லும் வழியிலேயே இந்தக் கோயில் இருப்பதால் திருச்செந்தூர் செல்லும் போதே இந்தக் கோயிலைத் தரிசித்துவிட்டே சென்றோம். திருச்செந்தூரில் நடை சார்த்த நேரம் ஆகும் என்பதாலும், இந்த மாதிரி கிராமங்களின் சிறு கோயில்கள் சீக்கிரம் மூடிவிடுவதாலும் , திருச்செந்தூரில் இருந்து திரும்ப வரும்போது பார்க்கமுடியுமோ என்ற எண்ணத்தாலும் போகும்போதே சென்றோம். இந்த நவதிருப்பதிகள் அனைத்துமே டிவிஎஸ் நிர்வாகத்தினரின் உதவியோடு நிர்வாகமும், பக்தர்களுக்கு தரிசன வசதிகளும் மிகவும் சிறப்பாக நடை பெற்று வருகிறது. கோயில்களும் சுத்தமாய்ப் பராமரிக்கப் படுகின்றன. பொதுவாகத் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்ட மக்களே கொஞ்சம் சுத்தம் பராமரிக்கப் படுவதில் ஆர்வம் உள்ளவர்களாய் இருக்கின்றனர். பெரும்பாலும் வடமாவட்டங்களில் காணப்படும் ப்ளாஸ்டிக் கழிவுகளும், அங்கே குறைவாகவே காணமுடிகிறது. சாலைப் பராமரிப்பும் மிகவும் சுகமாய் இருக்கிறது. ஆகையால் பயணமும் செளகரியமாகவே அமைந்தது. ஓட்டுநரும் கோயில்கள் பற்றிய தகவல்களை நன்கு அறிந்தவராய் இருந்ததால் வசதியாகவும் இருந்தது.

திரு டோண்டு சாரின் குலதெய்வமும், இஷ்டதெய்வமும், வலைப்பதிவர்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவரும் ஆன மகரநெடுங்குழைக்காதர் கோயில் தென் திருப்பேரையில் தாமிரபரணியாற்றின் தென்கரையில் உள்ளது. பெருமாள் நல்ல ஆஜாநுபாகுவாக அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி கொடுக்கின்றார். பெரிய காதுகள், அதற்கேற்ற மீன் வடிவம் கொண்ட மகர நெடுங்குழைகள். அதி அற்புதமாய் உள்ளது. கிழக்கே பார்த்துக்கொண்டு பூமாதேவி அளித்ததாய்ச் சொல்லப் படும் குழைகளை அணிந்து கொண்டு அதன் காரணமாய் ஸ்ரீ எனப் படும் லட்சுமியின் கோபத்துக்கு ஆளானதாய்ச் சொல்லுகின்றார்கள். தென் திருப்பேரையில் தான் பகவான் பூமாதேவியிடம் ஆசை கொண்டதாயும் சொல்லுகின்றனர். ஒருவேளை இந்த இடத்தின் தண்மையும், பசுமையும் ஆசை கொள்ள வைத்ததோ என்னமோ?? நாங்களும் பார்த்து இரண்டு வருஷம் ஆச்சு, இப்போ பசுமை அப்படியே இருக்கா இல்லையா எப்படினு தெரியலை!  இங்கே மஹாலக்ஷ்மி பூமாதேவியின் பேரில் பெருமாளுக்குத் தனி ஆசை இருப்பதைக் கண்டு தனக்கு பூமாதேவியின் உருவும், நிறைவும் ஏற்படவேண்டும் என வேண்டினாளாம். அதுவும் துர்வாஸரிடம் கேட்டிருக்கிறாள். உடனே துர்வாஸர் பூமாதேவியைப் பார்க்க தென் திருப்பேரையை அடைந்தார்.

பங்கையக் கண்ணன் என்கோ.
பவளச்செவ் வாயன் என்கோ,
அங்கதிர் அடியன் என்கோ.
அஞ்சன வண்ணன் என்கோ,
செங்கதிர் முடியன் என்கோ.
திருமறு மார்வன் என்கோ,
சங்குசக் கரத்தன் என்கோ.
சாதிமா ணிக்கத் தையே. 3.4.3
3049
சாதிமா ணிக்கம் என்கோ.
சவிகோள்பொன் முத்தம் என்கோ,
சாதிநல் வயிரம் என்கோ,
தவிவில்சீர் விளக்கம் என்கோ,
ஆதியஞ் சோதி என்கோ.
ஆதியம் புருடன் என்கோ,
ஆதுமில் காலத் தெந்தை
அச்சுதன் அமல னையே. 3.4.4 நம்மாழ்வார் பாசுரம். ஆனால் இந்தக் கோயில் பற்றி ஒரு பாசுரம் தான் எழுதி இருக்கார். கண்டுபிடிக்கணும். :))))))

ஆனால் பகவானின் மடியில் செளக்கியமாய் அமர்ந்திருந்த பூமாதேவி துர்வாஸரைக் கண்டு வணங்கவில்லை. மடியை விட்டு எழுந்து உபசரிக்கவில்லை. அதனால் ஸ்ரீயின் உடலை நீ பெறவேண்டும் என துர்வாசர் சபித்ததாகவும், ஸ்ரீயின் உடல் தனக்கு வேண்டாம் என பூமாதேவி கேட்டுக் கொண்டதின் பேரில் அவளை பொருநை நதிக்கரையின் தென்கரையில் பங்குனி மாதப் பெளர்ணமியில் நதியில் நீராடித் தவம் புரியச் சொன்னார். அஷ்டாக்ஷரத்தில் தவம் இருந்ததாயும் சொல்கின்றனர். பூமாதேவி அவ்வாறு தவம் புரியும் வேளையில் மீன்போன்ற வடிவுடைய இரு குண்டலங்கள் அவள் கைகளுக்குக் கிடைத்தன. அவற்றைக் கண்டதும் மீண்டும் பெருமாள் நினைவே அவளுக்கு வர, அவற்றைப் பெருமாளிடம் கொடுக்க, அவரும் அதை ஆசையுடன் வாங்கித் தம் காதுகளில் அணிந்து கொண்டார். அது முதல் பெருமாள் மகரநெடுங்குழைக்காதர் ஆனார். தாயார் பெயர் குழைக்காதவல்லி,/ ஊர் பெயர் ஸ்ரீபேரை என்றும், தென் திருப்பேரை என்றும் வழங்குகிறது. மற்றொரு தாயாரை தென் திருப்பேரை நாச்சியார் என்றும் சொல்லுவார்கள்.

அசுரர்களால் தோற்கடிக்கப் பட்ட வருணன் தனது நாகத்தையும், பாசத்தையும் இழந்து தவிக்க, அவன் மனைவி தேவகுருவிடம் வேண்ட தேவகுரு அவனை தென் திருப்பேரை மகர தீர்த்தத்தில் நீராடி “திருவைந்தெழுத்தால்” பகவானை வழிபட வேண்டியது பெறுவாய் என்று சொல்ல அவ்வண்ணமே வருணன் பங்குனி பூர்ணிமையிலேயே வழிபட்டதாகவும், அப்போது மகிழ்ந்த பெருமான் கொடுத்த நீரானது பாசமாக மாறி அதைப் பெற்று வருணன் மனமகிழ்வோடு அசுரர்களைத் தோற்கடிக்கப் புது வலிமை பெற்றதாகவும் தலபுராணம் சொல்லுகின்றது. மேலும் விதர்ப்ப நாட்டில் பஞ்சம் ஏற்பட்டபோது தாமிரபரணிக் கரைக்கு தென் திருப்பேரைக்கு வந்து மகரநெடுங்குழைக்காதரை வேண்ட பஞ்சம் நீங்கி, மழை பொழிந்ததாகவும் சொல்கின்றனர்.

அடுத்தது திருக்கோளூர் என்னும் ஸ்தலம். நம்மாழ்வாரைக் கண்டெடுத்த மதுரகவியாழ்வார் அவதாரம் பண்ணிய இடம் இது.

Monday, August 17, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள்!


இந்த இரட்டைத் திருப்பதியில் அடுத்தடுத்து இரண்டு கோயில்கள் இருக்கின்றன. அதனால் இவை இரட்டைத் திருப்பதி என அழைக்கப் படுகிறது. ஆழ்வார்திருநகரியில் இருந்து 2 மைல் தொலைவிலே தாமிரபரணியின் வடகரையிலே இவை உள்ளன. முதல் திருப்பதியிலே பெருமாள் திவ்ய நாமம் ஸ்ரீநிவாசன் என்ற தேவர்பிரான் ஆகும். நின்ற திருக்கோலத்தில் கிழக்கே பார்த்துக் கொண்டு இருக்கிறார். தாயார் ஸ்ரீதேவிதிருமார்பிலும் இருபக்கமும் உபய நாச்சியார்களும் உள்ளனர்.

அடுத்த கோயிலில் செந்தாமரைக் கண்ணன், அரவிந்தலோசனன் என்ற திருநாமங்களால் அழைக்கப் படும் பெருமாள். குமுத விமானத்திலே தாயார் கருத்தடங்கண்ணியோடு எழுந்தருளி இருக்கிறார். நம்மாழ்வார் மங்களாசாஸனம் செய்த ஊர். இந்தக் கோயிலின் தலபுராணம் கீழ்க்கண்டவாறு சொல்லப் படுகிறது.

திருப்புளியங்குடிக்குத் தென் கிழக்கே நெல் வயல்களும், பூந்தோட்டங்களும் நிறைந்த கோதார நிலையம் என்னும் திருப்பதி ஒன்று இருந்தது. அதுவே தொலைவில்லி மங்கலம் என அழைக்கப் பட்டது. ஆத்ரேயகோத்திரத்தைச் சேர்ந்த சுப்ரபர் என்னும் முனிவர், இங்கே ஊரின் அழகையும், பொலிவையும் கண்டு யாகம் செய்யத் தகுந்த இடம் எனத் தீர்மானித்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். யாகசாலை அமைக்கப் பூமியை உழுது சமன்படுத்தியபோது அங்கே ஒரு வில்லும், தராசும் கிடைக்கப் பெற்றார்.

இது யாருடையவை என எண்ணி எப்படி இங்கே வந்தது என்றும் யோசித்துக் கொண்டே அவற்றை எடுத்தார். தராசு ஒரு பெண்ணாகவும், வில் ஓர் ஆண்மகனாகவும் மாறிக் கணவன், மனைவியாகத் தோற்றம் தர, சுப்ரபரும் மற்றவரும் வியந்து, இது என்ன விந்தை என அந்தத் தம்பதிகளைக் கேட்டனர். தம்பதிகளில் கணவன் சொன்னான்:” முன்பிறவியில் வித்யாதரன் என்னும் தேவனாக இருந்த அவன் தன் மனைவியான இந்தப் பெண்ணுடன் மோகம் கொண்டு உடலில் ஆடையில்லாமல் இருந்த கோலத்தில் யாத்திரை சென்று கொண்டிருந்த குபேரன் கண்ணில் பட அவனும் இவ்விதம் பொதுஇடத்தில் அநாகரீகமாய் நடந்து கொண்டதற்கு அவர்களை வில்லாகவும், தராசாகவும் மாறும்படி சாபம் கொடுத்துவிட்டான். சாபவிமோசனம் கிடைக்காதா என எண்ணி ஏங்கிய அவர்களுக்கு, சுப்ரபாதர் என்னும் முனிவர் யாகசாலை அமைக்க நிலத்தை உழும்போது உங்களுக்குச் சுயவுருக் கிட்டும் என்று சொன்னதாகவும், இப்போது சுயவுருக்கிட்டியதால் அவரைப் பணிந்து ஏத்துவதாகவும் சொன்னார்கள். முனிவர்களும் அவர்களை அனுப்பிவிட்டு விஷ்ணுவை ஆராதித்துப் பணிந்து தேவர்பிரான் என்ற பெயரோடு அங்கே எழுந்தருளச் செய்தனர். வில்லுக்கும், தராசுக்கும் முக்தி கொடுத்த இடமாகையால் அந்தப் பெயரிலேயே இது தொலைவில்லி மங்கலம் என அழைக்கப் படவேண்டும் என்றும் பிரார்த்தித்தனர்.

சுப்ரபர் தினமும் அந்தக் கோயிலுக்கு வடக்கே உள்ள பொய்கைக்குச் சென்று அங்கே தாமரைப் பூக்களைப் பறித்து மாலை தொடுத்து பெருமானை அணியச் செய்து வந்தார். மாலையின் அழகைக் கண்டு உவந்த பெருமான் எங்கே இருந்து இத்தனை அழகான மலர்கள் கிடைக்கின்றன என்று கண்டறிய முனிவரோடு அங்கே வர, பொய்கையின் அழகையும், மலர்களின் வண்ணவிசித்திரங்களையும் கண்டு மனம் மகிழ்ந்து, தான் யாகசாலையில் தேவர்பிரானாகவும், இந்தப்பொய்கைக் கரையில் அரவிந்தலோசனனாகவும் இருக்கப் போவதாய்ச் சொல்கின்றார். தினந்தோறும் முதலில் தேவர்பிரானுக்கு இந்தத் தடாகக் கரையின் பூக்களால் வழிபாடுகள் நடத்திவிட்டு பின்னர் இந்த அரவிந்தலோசனனையும் தாமரை மலர்களால் அர்ச்சிக்கவேண்டும் என்றும் அருளிச் செய்தார்.

அச்வினி தேவர்கள் வைத்தியத்தில் தேர்ந்தவர்கள். அவர்களுக்குத் தேவர்களுக்குக் கிடைப்பதுபோல் யாகங்களிலும் யக்ஞங்களிலும் அவிர்பாகம் கிடைக்கவில்லை. ஆகவே பிரம்மாவிடம் சென்று தங்களுக்கும் அவிர்பாகம் கொடுக்கவேண்டுகின்றனர். பிரமன் அவர்களை தேவர்பிரானையும், அரவிந்தலோசனனையும் வணங்கித் தவம் இயற்றி வரம் வாங்கி வருமாறு கூறுகின்றான். அச்வினி தேவர்கள் அவ்விதமே தொலைவில்லிமங்கலம் பொய்கையில் நீராடி தேவர்பிரானையும், அரவிந்த லோசனனையும் வழிபாடுகள் செய்து தவம் இயற்றினார்கள். இறைவனும் அவர்கள் தவத்தை மெச்சி அவர்களுக்கும் அவிர்பாகம் கிடைக்குமாறு தேவர்களுக்குச் சொல்லிவிட்டு இந்தத் தீர்த்தமும் உங்கள் பெயரால் அச்வினி தீர்த்தம் என வழங்கப் படும் என்றும் அருளிச் செய்தார். இந்த அச்வினி தீர்த்தத்தில் நீராடினால் சகலவியாதிகளும் தீர்ந்துவிடும் என்றும் சொல்லுகின்றனர். கங்கைக்கரையில் உள்ள ஓர் அந்தணரான சத்தியசீலரின் இரண்டாவது மகன் ஆன விபீதகன் குஷ்டத்தால் பீடிக்கப் பட்டிருக்க, நாரதமுனி அவன் முற்பிறவியில் தன் குருவின் பசுவைத் திருடியதால் குருவின் சாபத்தால் இந்நிலைமை அடைந்திருப்பதாயும் தென்னாட்டிற்கு வந்து அச்வினி தீர்த்தத்தில் நீராடினால் ரோகம் நீங்கும் என்று சொல்லுகின்றார். அது போல் விபீதகனும் தாமிரபரணியின் வடகரையில் உள்ள தொலைவில்லிமங்கலம் வந்து அச்வினி தீர்த்ததில் நீராடி ரோகம் நீங்கப் பெற்றான் என்றும் சொல்லுவார்கள். அடுத்து நம்ம டோண்டு சாரின் இஷ்ட தெய்வமும், வலைஉலகப் பெருமக்களின் குலதெய்வமும் ஆன தென் திருப்பேரை மகரநெடுங்குழைக்காதன். அப்பா, எவ்வளவு பெரிய காது? எவ்வளவு பெரிய குழை???