எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, January 02, 2007

ஓம் நமச்சிவாயா -24

கைலை மலையின் தோற்றங்களை நாம் நான்கு திசைகளிலும் பார்க்க முடிகிறது. உலகின் மையத்தில் இருப்பதாய்க்கூறப்படும் இந்தக் கைலையே "மஹா மேரு" என்றும் சொல்லப் படுகிறது. நான்கு திசைகளிலும் தோன்றும் 4 முகங்களும், மேல் நோக்கிய ஒரு முகமும் வருமாறு:
கிழக்கு நோக்கிய "தத்புருஷம்" என்னும் முகம் மின்னல் போல் ஒளி வீசும் ஸ்படிகம் என்றும்,
தெற்கு நோக்கிய "அகோரம்" என்னும் முகம் நீலக்கடலைப் போன்ற நீல ஒளி வீசும் நீலக்கல்லாகவும்,
மேற்கு நோக்கிய "சத்யோஜாதம்" என்னும் முகம் செந்நிறம் கொண்ட மாணிக்கக் கல்லாகவும்,
வடக்கு நோக்கிய முகம் "வாம தேவம்" எனப்படும் பளபளக்கும் தங்கமாகவும்,
மேல் நோக்கிய "ஈசானம்" என்னும் முகம் கண்களை உறுத்தும் வெள்ளியாகவும் தோன்றுகிறது என்று வர்ணிக்கிறார்கள்.

இப்போ சமீப காலத்தில் தினசரிச் செய்திகளில் இந்தியாவும், சீனாவும் இணைந்து கைலைப் பிராந்தியத்தில் செய்யப் போகும் ஆய்வுகள் பற்றிய செய்திகள் வந்தன.அவை கங்கை, பிரம்ம புத்ரா, சிந்து, சட்லெஜ், கர்நாலி போன்ற நதிகள் எங்கிருந்து உற்பத்தி ஆகின்றன என்பதையும் கண்டுபிடிக்கவும்தான் என்று படித்தோம். கைலையின் ஈசான முகத்தில் இருந்து தான் கங்கை ஆறு உற்பத்தி ஆகி வருவதாயும், மற்ற ஆறுகள் கைலையின் மற்றப் பக்கங்களில் இருந்து உற்பத்தி ஆகி வருவதாயும் சொல்கிறார்கள். எல்லாம் வல்ல அந்த ஆதிப் பரம்பொருள் பத்மாசனத்தில் தன் தொடையில் தேவியை உட்கார்த்தி வைத்துக் கொண்டு நிஷ்டையில் இருப்பதாக ஐதீகம். கண்ணால் காணுதற்கு அரிய இந்தக் காட்சியைக் கண்டு கொண்டே 52 கி.மீ. தூரம் உள்ள "பரிக்ரமா"வை மேற்கொள்கிறோம். நிரம்பக் கொடுத்து வைத்தவர்களுக்கும், மிகுந்த மன உறுதி படைத்தவர்களுக்குமே இதை முடிக்க முடிகிறது என்பது உண்மை.

"தார்ச்சன்" என்னும் இடத்தில் இருந்து ஆரம்பிக்கும் முதல் நாள் பரிக்ரமா அவ்வளவாகச் சோதனைகள் இல்லாதது, கொஞ்சம் சமவெளி, சற்றுக் குன்றுகள், ஆறுகள் என்றுதான் இருக்கின்றன என்றாலும் சிலர் (எங்களைப் போல்) இதிலேயே களைப்படைந்து போகிறார்கள்.வழி நெடுகக் காணும் கைலையின் தரிசனத்தால் ஓரளவு புத்துணர்ச்சி பெற முடியும். தார்ச்சனில் உள்ள பழமையான பெரிய "பெளத்த ஆலயம்" சீனப் புரட்சியாளர்களால் தரைமட்டமாக்கப் பட்டிருக்கிறது. இரண்டாம் நாள் "பரிக்ரமா" இருப்பதிலேயே சற்றுக் கடினமானது. கட்டாயமாய் எல்லாரும் 7 கி.மீ. நடக்க வேண்டும். அதன்பின் ஒரு செங்குத்தான மலையைக் கடக்கிறார்கள். கிட்டத் தட்ட 19,000 அடி உயரம் உள்ள அந்தச் செங்குத்தான மலையை ஏறிக் கடப்பதுதான் இந்தப் பரிக்ரமாவின் முக்கியமான சாதனை. கட்டாயம் எல்லாருடைய மன உறுதியையும் சோதிக்கக் கூடிய பயணம். 18,600 அடி உயரத்தில் "டோல்மா பாஸ்" என்னும் இடம் வருகிறது. இது சாட்சாத் அம்பாளின் உறைவிடமாய்க் கருதுகிறார்கள். இதற்குப் பக்கத்தில் உள்ள "கெளரிகுண்ட்" இதை உறுதி செய்கிறது. அந்த கெளரிகுண்டிற்குப் போக எல்லாருக்கும் அனுமதி இல்லை. மனோதிடமுள்ள வெகு சிலரே அங்கு அனுமதிக்கப் படுகின்றனர். அங்கிருந்து நீர் எடுத்து வர எங்கள் குழுவில் உள்ள யாரும் போகவில்லை. ட்ராவல்ஸ்காரர்களே போய் நீர் எடுத்து வந்திருக்கிறார்கள்.

இந்த டோல்மா-பாஸில் தான் பிராணவாயு ரொம்பவே கம்மி. இங்கு தங்கப் பத்து நிமிஷங்களுக்கு மேல் யாரையும் அனுமதிப்பதில்லை. அதற்குள் இதைக் கடந்து விடவேண்டும். பின் இந்தச் செங்குத்தான மலையில் இறங்க வேண்டும். இதுவும் ரொம்பவே கடினமானது தான். ஆனால் நம் கூட வரும் உதவி ஆளின் துணையுடன் இறங்கவேண்டும் என்று சொல்கிறார்கள். அன்று இரவு வரைக் கைலையின் தோற்றம் கிடைப்பதில்லை என்கிறார்கள். பின் மூன்றாம் நாள் முதல் நாள் பயணத்தைப் போல் சற்றுச் சுலபமானது. திரும்பவும் தார்ச்சனில் வந்து முடிகிறது. இதைத் தவிர உள்சுற்று எனப்படும் ஒரு பரிக்ரமா முறையும் உள்ளது கைலையில். இதன் தூரம் 28 கி.மீ. என்கிறார்கள். 13 முறை வெளிச்சுற்றை முடித்தவர்கள் (அதாவது 52 கி.மீ தூரம் உள்ள வெளிச்சுற்று) உட்சுற்றுக்குப் போகலாம் என்று கூறப்படுகிறது. கைலையின் மிக அருகில் போகவும், கரங்களால் தொடும் தூரத்துக்குப் போகவும் முடிகிற இந்தச் சுற்றை முடித்தவர்கள் சில பெளத்தத் துறவிகள் மட்டுமே என்று அறிகிறோம். உள்ளே அமர்நாத்தைப் போல் பனிலிங்க தரிசனம் கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள். கைகளால் தொட முடிந்த தூரத்துக்குப் போனாலும் அந்த இடத்தின் புனிதம் கருதி யாரும் தொடுவதும் இல்லை என்றும் சொல்கிறார்கள்.

12 comments:

தி. ரா. ச.(T.R.C.) said...

ஈசனுக்கு முதலில் ஆறுமுகங்கள்இருந்தன. ஆறாவது முகத்துக்கு அதோமுகம் என்று பெயர்.அது கீழ்நோக்கியிருந்தது.அந்தமுகத்தால் ஈசன் யாரையாவது பார்த்தால் அவ்வளவுதான் அவன் கதி. அதனால்தான் சொல்லுவார்கள் அவன் கதி அதோகதி என்ற வார்த்தை.அந்த முகத்தை பிரும்மா பிடுங்கியதால்தான் பிரும்மஹத்திதோஷம் வந்தது அவ்ருக்கு.பல உபயோகமான விஷயங்களை சொன்னதற்கு நன்றி.

EarthlyTraveler said...

வெகு அருமையாக விவரித்து உள்ளீர்கள்.நீங்கள் 52கி.மீ பயணம் முடித்தீர்களா?உடல்பலம்,மனோபலம் நிறையவே வேண்டி உள்ளது இந்த யாத்திரையில்.உங்களுடனேயே நாங்களும் வந்தது போல ஒரு உணர்வு.
--SKM

Anonymous said...

முன்பு ஒருமுறை நேஷனல் ஜியோகிராபிக்கில் இருந்து எவரெஸ்டின் முப்பரிமாண வரபடம் வந்திருந்தது - அது நினைவுக்கு வருகிறது - இதுபோல

Geetha Sambasivam said...

ரொம்ப நன்றி, தி.ரா.ச. சார். ஏதோ ஒரு பின்னூட்டமாவது இருந்தால் தான் இதையும் படிக்க ஆள் இருக்கிறது என்று தோன்றுகிறது. இல்லாட்டி யாருமே படிக்கலைன்னு நினைப்பு வருது.

Geetha Sambasivam said...

எஸ்.கே.எம். எனக்குத் தெரிஞ்சு நீங்களும் மலை நாடன் என்பவரும்தான் இதை விடாமல் படிக்கிறீர்கள் என நினைக்கிறேன். நான் முதல் நாள் பரிக்ரமா ஆரம்பித்த சில மணி நேரத்திலேயே குதிரை மேலிருந்து கீழே விழுந்து அடி பட்டுக் கொண்டு விட்டேனே, அதனால் மூன்று நாளும் போக முடியவில்லை. கூட வந்தவர்கள் சொன்ன தகவலும், மற்ற ட்ராவல்ஸ்கார நண்பர்கள் மூலமும் 2-ம் நாள், 3-ம் நாள் பரிக்ரமா பற்றித் தகவல் திரட்டினேன்.

Geetha Sambasivam said...

ஜீவா,
நீங்கள் கொடுத்த சுட்டியில் போய்ப் பார்த்து விட்டு வந்தேன். கிட்டத் தட்ட் இங்கேயும் இவ்வாறு தான் இருக்கிறது. எங்களிடம் டிஜிட்டல் காமிரா இல்லாததால் சில படங்கள் வீணாகி விட்டன. முடிந்த படங்களைப் போட முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன். கருத்துப் பரிமாற்றத்துக்கு நன்றி.

வடுவூர் குமார் said...

இந்த " கெளரி குண்ட்" ரகசியம் என்ன?ஏன் போக முடியாது.இதெல்லாம் படித்த போதே கேட்க வேண்டியது,கணினி மறுத்ததால் பின்னூட்டதில் பதிவேற்ற முடியவில்லை.

மலைநாடான் said...

//எஸ்.கே.எம். எனக்குத் தெரிஞ்சு நீங்களும் மலை நாடன் என்பவரும்தான் இதை விடாமல் படிக்கிறீர்கள் என நினைக்கிறேன்.//

அம்மா! நான் தொடர்ந்து படித்து வருகின்றேன். சிலவேளைகளில் நேரமின்மை காரணமாகப் பின்னூட்டமிடுவதில்லை. மன்னித்துக் கொள்ளுங்கள். மற்றும்படி அதிகமானோர் இப்படித்தான் வாசித்துச் செல்வார்கள். ஆகவே நீங்கள், கவலைப்படாது தொடர்ந்து எழுதுங்கள்.

இலவசக்கொத்தனார் said...

//பசுபதி நாதருக்கு 5 முகங்கள். 4 திசைகளிலும் 4 முகங்கள், மேலும் தலையில் மேலே பார்த்து ஒரு முகம், இதை "அதோ முகம்" என்கிறார்கள். மொத்தம் 5 முகங்கள்.//

எனக்கு ஒரு சந்தேகம். பழைய பதிவில் இப்படி இருந்தது. திரசதான் சொல்லி இருந்தாருன்னு நினைக்கிறேன். இப்ப சொல்லுங்க. மேல பாக்குற அதோமுகமா இல்லை கீழ பாக்குற முகமா?

Geetha Sambasivam said...

குமார், கெளரி குண்ட் பத்தி இதுக்கு அடுத்த பதிவிலே சொல்லி இருக்கேன். அங்கே முடிஞ்சா போய்ப் பாருங்க. இல்லாட்டி ஒரு பதிவாக் கடைசியிலே போடறேன்.
@மலைநாடான், ரொம்பவே நன்றி, உங்களுக்கு.
@இ.கொ. எனக்குத் தெரிஞ்சு 6 முகம் இருந்ததாய்த் தெரியாது. அதற்கான ஆதாரங்களைத் தேடிட்டு இருக்கேன். எனக்குத் தெரிந்து பிரம்மாவிற்குத் தான் ஐந்து முகங்கள் இருந்து அவரின் கர்வம் காரணமாய் ஈசன் ஒரு முகத்தைக் கிள்ளி எறிய அது அவர் கையில் ஒட்டிக் கொண்டு விடாமல் பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டதாய்ச் சொல்வார்கள். அது காசியில் விட்டதாயும், அவர் கபாலத்தைப் போட்ட இடம் பத்ரிநாத்தில் "பிரம்ம கபாலம்" என்றே ஓர் இடம் இருக்கிறது. தப்த குண்டம் பக்கத்தில் அங்கே என்றும் சொல்வார்கள். தி.ரா.ச. அவர்கள் சொன்னதுக்கான ஆதாரம் கிடைத்தால் வெளியிடுகிறேன்.நேபாளத்தில் பசுபதி நாதருக்கும் ஐந்து முகங்கள். கைலையிலும் ஐந்து முகங்கள்.

மலைநாடான் said...

//எனக்குத் தெரிந்து பிரம்மாவிற்குத் தான் ஐந்து முகங்கள் இருந்து அவரின் கர்வம் காரணமாய் ஈசன் ஒரு முகத்தைக் கிள்ளி எறிய அது அவர் கையில் ஒட்டிக் கொண்டு விடாமல் பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டதாய்ச் சொல்வார்கள். //

இ.கொத்தனார்!

நானறிந்த வரையில், அம்மா சொல்வது சரியென்றே கருதுகின்றேன். இந்த அதோமுகச் சேர்க்கை, முருகனுக்குத் தான் வருவதாக அறிந்திருக்கின்றேன். வழிபடும் அடியவர்களின் முகத்தை அடையாளப்பபடுத்துவதே அதோ முகம் என்றும், இதையொட்டியே கூறும் அடியார்கள் தீர்த்தமுகமொன்று எனத் திருப்புகழில் வருவதாக வாரியார் சுவாமிகள் சொல்லக் கேட்டதாகவும் ஞாபகம். பிழையெனின் மன்னிக்கவும்.:)

Geetha Sambasivam said...

மலைநாடான் சொல்வது தான் சரியென எனக்கும் தோன்றுகிறது. இது பற்றித் திருப்புகழ் மணியான குமரனோ அல்லது ராகவனோ தான் தெளிவாக்க வேண்டும்.