எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, February 02, 2010

நடந்தாய் வாழி காவேரி! காவேரி ஓரம் 4 இன்னாம்பூர்!


மாயவரம் சென்று வந்ததும் மறுநாள் குலதெய்வம் கோயில் சென்றதும், பெருமாள் கோயில் பற்றிய செய்திகளும் தனியாக வரும். மின் தமிழில் சந்திரா இன்னாம்பூர் நடராஜர் ஸ்வாமிமலையில் தான் இருக்கிறார் என ஒரு ஆருத்ரா தரிசனம் போது குறிப்பிட்டதில் இருந்தே இன்னாம்பூர் போகணும்னு ஆசைதான். அதுவும் ஸ்வாமிமலைக்கு எத்தனை முறை போயிருக்கோம்?? இப்படி ஒரு விஷயம் கேள்விப்பட்டதே இல்லை. சந்திராவுக்கே தற்செயலாத் தான் தெரிஞ்சிருக்குனு நினைக்கிறேன். இம்முறை ஊர்ப்பக்கம் சென்றபோது வெள்ளியன்று 22-1-10 மாலை இன்னாம்பூருக்கும், திருப்புறம்பயத்துக்கும் சென்றோம். ஆட்டோக்காரர் ரொம்பக் கிட்டத்தான் என்று சொன்னாலும் கொஞ்சம் தூரம் போகத் தான் வேண்டி இருக்கு. காவிரியின் வடகரையில் அமைந்துள்ளது. ஸ்வாமிமலை செல்லும் வழியில் அங்கிருந்து சற்றே வடகிழக்கே அமைந்துள்ளது. காவேரியின் வடகரைக்கோயில்களில் 45-வது கோயில். தேவாரப் பாடல் பெற்ற தலம் ஆகும். இந்த ஊரிலேயே பெருமாள் கோயிலும் ஒன்று உள்ளது.

சிறிது நேரத்தில் ஊரின் சிவன் கோயில் வாயிலில் கொண்டு விட்டுவிட்டார் ஓட்டுநர். கோயில் மிகப் பழமையான கோயில். திருப்பணி வேலைகள் நடைபெற வேண்டும். எப்போ நடக்கும்னு தெரியலை. இறைவன் பெயர் எழுத்தறிவித்த நாதர் என்று சொல்கின்றனர். இங்கே பேச்சு வராத குழந்தைகளுக்கும், பேச்சு வரும் வயதில் உள்ள சின்னஞ்சிறு குழந்தைகளுக்கும், நெல் முனையாலோ, கொஞ்சம் வயது சென்ற குழந்தையானால் செம்பருத்திப் பூவின் காம்பாலோ நாக்கில் எழுதுகின்றனர். நாங்கள் செல்லும்போது ஒரு பெற்றோர் தங்கள் பெண்குழந்தைக்கு (ஐந்து, ஆறு வயதிருக்கும்) நாக்கில் எழுதப் பிரார்த்தித்துக் கொண்டு வந்திருந்தனர்.

கோயிலில் அம்மன் நித்யகல்யாணியின் (கொத்தார் பூங்குழலி என்றும் பெயர்) சந்நிதி வாயிலில் கும்பகோணத்தில் இருந்து வந்திருந்த வைதீகர் ஒருவர் தன் குழந்தையோடு அமர்ந்து பாராயணம் செய்து கொண்டிருந்தார். முதலில் அவர்தான் குருக்கள் என நினைத்து அவரிடம் விபரங்கள் கேட்டோம். அவரும் சொல்லிக் கொண்டிருந்தார். அந்தச் சமயம் குருக்களே வந்துவிட்டார். கோயிலுக்கு என நிலங்கள் இருக்கின்றன என்றும், வருமானம் சரிவர வருவதில்லை என்றும் சொன்னார். இந்த ஊர் நடராஜர் ஏன் ஸ்வாமிமலை சென்றுவிட்டார் என்று கேட்டேன். பாதுகாப்புக் கருதி சென்றிருப்பதாகவும், இந்தக் கோயிலும் ஸ்வாமிமலை தேவஸ்தானத்தின் கீழ் வருவதாகவும், குருக்களுக்கு மாதச் சம்பளம் 550ரூ என்றும் சொன்னார். வரும் பக்தர்கள் போடும் பணத்தை வைத்து மற்றச் செலவுகளைச் சரிக்கட்ட வேண்டி இருப்பதாகவும் கூறினார். பல விண்ணப்பங்கள் கொடுத்தும் அன்றாட வழிபாட்டுக்குத் தேவையான பொருட்கள் சரிவரக் கிடைக்கவில்லை என்றும் வருத்தத்துடன் கூறினார். என்றாலும் கோயிலில் நித்திய வழிபாடுகளும், நாலு கால பூஜைகளும் ஊர்மக்கள் மற்றும் வந்து செல்லுபவ்ர்கள் ஒத்துழைப்புடன் நடந்து வருகின்றது. தஞ்சை மாவட்டத்தின் பல கோயில்களுக்கு இந்நிலைமைதான் இன்று என்பது மன வருத்தத்தைக் கொடுக்கிறது.

ஊர்மக்களும் கோயிலுக்கு வருகின்றார்கள். கோயிலின் வாயிலும் சரி, அர்த்தமண்டபத்தின் வாயிலும் சரி, கருவறையின் வாயிலும் சரி மிக மிகப் பெரியதாக இருந்தது. உள்ளே மிகப் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய ஆவுடையார், அதன் மீது லிங்க பாணம், தழும்புகள் பாணத்தில் இருப்பதை என் கணவர் சுட்டிக் காட்டினார். சுயம்பு லிங்கம். இவ்வளவு பெரிய ஆவுடையாருடன் கூடிய லிங்கம் தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் தான் பார்த்திருக்கிறேன். தஞ்சைக் கோயிலின் லிங்க பாணமும் பெரியது. இங்கே பாணம் அதைவிடச் சின்னது. அர்ச்சகரிடம் காரணம் கேட்டேன். வந்திருக்கும் குழந்தைக்குப் பிரார்த்தனை வழிபாட்டை முடித்துவிட்டுச் சொல்வதாய்க் கூறினார்.

இந்தக் கோயில் சூரியன் வழிபட்ட தலம் என்றும் சொன்னார்கள். அகத்தியருக்கு இங்கே தமிழ் இலக்கணம் இறைவனால் போதிக்கப் பட்டதாம். அதனாலும் எழுத்தறிவித்த நாதர் என்ற பெயர் ஏற்பட்டதாய்க் கூறினார். மேலும் இந்திரனின் யானையான ஐராவதம் ஈசனைத் தினமும் வந்து வணங்க வேண்டி முயன்றபோது, கருவறை சிறியதாக இருந்ததால் அதனால் உள்ளே நுழையமுடியவில்லையாம். அது மனம் வருந்தி ஈசனை வேண்ட, ஈசனும் கருவறையைச் சற்றே நெம்பினாராம், கருவறை யானை நுழையும் அளவுக்குப் பெரிதாக ஆயிற்று. ஐராவதம் உள்ளே நுழைந்து வழிபட்டு வந்ததாம். இப்போது அவ்வண்ணமே யானை நுழையும் அளவுக்குப் பெரிய வாயிலோடு கூடிய கருவறையைக் கொண்டிருக்கிறது. மேலும் ஐராவதம் வணங்கியதை நினவூட்டும் வண்ணம் விமானமும் கஜப்ருஷ்ட விமானமாக இருக்கிறது. பிராஹாரம் சுற்றி வந்து சற்றே தள்ளி நின்று பார்த்தால் யானை முதுகைப் போன்ற விமானம் கண்குளிரக் காட்சி அளிக்கிறது.

சுதன்மன் என்னும் கணக்காளன் இந்தக் கோயில் கணக்கை நிர்வகித்து வந்தபோது, சோழ மன்னனுக்கு அவன் மீது சந்தேகம். சுதன்மன் என்னமோ கணக்குகளில் ஒழுங்காகத் தான் இருந்து வந்தான். ஆனாலும் மன்னனின் சந்தேகம் தீரவில்லை. கணக்குகளைச் சரிபார்க்கும்பொருட்டு சுதன்மனை சபைக்கு வரச் சொல்லி மன்னன் உத்திரவிட, ஈசனே சுதன்மன் போல் அங்கே போய்க் கணக்குகளைக் காட்டி, முறையாக விளக்கவும் மன்னன் சந்தேகம் தீருகின்றது. சுதன்மன் கனவில் ஈசன் வந்து தான் போய்க் கணக்கைத் தீர்த்துவிட்டதாய்க் கூற, சுதன்மன் நெக்குருகிப் போனான். உண்மை தெரிந்த மன்னன் எழுத்தறிவித்த நாதரையும், சுதன்மனையும் போற்றி வணங்கினான். இதுதான் இந்தக் கோயிலின் தலவரலாறு எனச் சொல்லப் படுகிறது.

பல கல்வெட்டுக்கள் இருந்தாலும் முக்கியமானதாய்ச் சொல்லப் படுவது சோழன் ராஜகேசரி வர்மனின் நான்காம் ஆண்டுக் கல்வெட்டும், விஜயநகர மன்னரின் காலத்து வீர கம்பண்ண உடையார் காலத்திலும் பொறிக்கப் பட்ட இரண்டே முக்கியமாய்ச் சொல்லப் படுகிறது. அந்நியர் படை எடுப்புக் காலத்தில் இந்தக் கோயில் பூட்டப் பட்டு நாற்பதாண்டுகளுக்கு மேல் வழிபாடுகளின்றி இருந்திருக்கிறது. அது குறித்த கல்வெட்டும் இருப்பதாய்க் கூறுகின்றனர்.

அடுத்தது நம்ம இன்னாம்பூராரின் குல தெய்வமும் இஷ்ட தெய்வமுமான பெருமாள் கோயில். அது ஊருக்குள் நுழையும் இடத்திலேயே முதலிலேயே திரும்பி இருக்கணும். எங்களுக்கு முதலில் தெரியவில்லை. சிவன் கோயிலுக்கு வந்திருந்த ஓர் அம்மாள் சொன்னார் தான் அழைத்துச் செல்வதாய். அதற்குள் ஆட்டோ ஓட்டுநர் திருப்புறம்பயம் போயிட்டுத் திரும்பி வரும்போது போகலாம் என்றும் திருப்புறம்பயத்தில் சீக்கிரம் நடை சார்த்திவிடுவார்கள் என்றும் கூற திருப்புறம்பயம் சென்றுவிட்டுத் திரும்பும்போது மீண்டும் இன்னாம்பூர் பெருமாள் கோயிலுக்குச் சென்றோம். முதலில் கொஞ்சம் வழி புரியவில்லை. அப்புறமாய்க் கேட்டுக் கேட்டுக் கொண்டு போய்ச் சேர்ந்துவிட்டோம். வாயிலிலேயே பெரிய இரண்டு சக்கர வண்டி இருக்க, பட்டாசாரியார் உள்ளே தான் இருக்கிறார் என்ற நிம்மதி வந்தது. என் கணவர் உடனே வேகமாய் உள்ளே போக சந்நிதியை மூடிவிட்டு பட்டாசாரியார் வந்து கொண்டிருந்தார். முதலில் இப்போ முடியாது என்று சொல்லிவிட்டார். அப்புறம் என்ன நினைச்சாரோ, மீண்டும் போய் சந்நிதியைத் திறந்தார்.

திரு இன்னாம்பூராரைப் பற்றியும், ஹிந்து பத்திரிகைக் காரங்க செய்யும் கைங்கரியம் பற்றியும் கேட்டேன். இன்னாம்பூரார் பற்றித் தெரியவில்லை என்றாலும் ஹிந்து பத்திரிகைக்காரர்கள் கைங்கரியம் பற்றிச் சொன்னார். பட்டாசாரியார் பாபுராஜபுரத்தில் இருந்து தினமும் வந்து போகிறாராம். ஆகவே அவசரத்தில் வேறே இருந்தார். என்றாலும் பெருமாளைத் திவ்ய தரிசனம் செய்து வைத்தார். பெருமாள் விக்ரஹம் நாவலப்பாக்கம் என்னும் இடத்தில் சில வருடங்கள் இருந்ததாகவும், இந்தப் பெருமாள் ஆதியில் திருமலையில் இருந்து வந்ததாகவும் கூறினார்.

பாஸ்கர க்ஷேத்திரம் என இது அழைக்கப் படுவதாயும் கூறினார். கருவறைக்கு முன்னால் சூரியன் இருப்பது இங்கே தான் என்றும் காட்டினார். அதனாலேயே இந்த ஊருக்கு இன்னாம்பூர் என்ற பெயர் வந்ததாகவும் சொன்னார். விஜயநகரப் பேரரசின் காலத்தில் அவர்களின் உறவினர்களில் ஒருவரான வீராவலி கிருஷ்ணமாசாரியார் என்பவர் இந்த விக்ரஹத்தைத் திருமலையில் இருந்து எடுத்துக் கொண்டு இந்த ஊருக்கு வந்ததாகவும், இங்கே பிரதிஷ்டை செய்யும் முன்னர் சில காலம் நாவலப் பாக்கத்தில் இருந்ததாகவும் கூறுகின்றனர். வேறு சிலர் அந்நியப் படை எடுப்பின்போது அங்கே ஒளித்து வைக்கப் பட்டதாகவும் சொல்கின்றனர். வீராவலி கிருஷ்ணமாசாரியாருக்கு உதவிய ராகவன் ஐயங்கார் தான் ஹிந்து பத்திரிகைக் குடும்பத்தினரின் மூதாதையர்கள் என்றும் கேள்விப்பட்டேன். மூலவரும் திருப்பதிப் பெருமாள் போலவே காட்சி கொடுக்கிறார். பட்டாசாரியாருக்கு ஊருக்குத் திரும்பவேண்டும் என்பதால் பிராஹாரங்கள் சுற்ற முடியலை. தரிசனம் முடிச்சுட்டுத் திரும்பிட்டோம். இன்னொரு முறை சென்றால் காலை வேளையில் சென்று கொஞ்சம் நிதானமாய்ப் பார்த்துக் கொண்டு வர ஆசை.


படங்கள் உதவி: கூகிளார், நன்றி.

10 comments:

Jayashree said...

இன்னாம்பூர் ஒருதடவை போகணும். இந்த கோவில் உற்சவ நடராஜருக்கு திருவாச்சி உண்டோ? .சிற்பமும் ரொம்ப துல்லியம்னு கேள்விபட்டிருக்கிறேன் இன்னம்பூர் நடராஜரோட ஜடை, தலை எல்லம் வித்யாசமா இருக்கும்னும், features ரொம்ப நன்னா இருக்கும்னு சொல்லி கேட்டிருக்கிறேன்

மாதேவி said...

இன்னாம்பூர் சிவன்கோயில்,பெருமாள் கோயில், பெரிய்ய்ய்ய்ய ஆவுடையார் யாவும் கண்டோம்.

எல் கே said...

//தஞ்சை மாவட்டத்தின் பல கோயில்களுக்கு இந்நிலைமைதான் இன்று என்பது மன வருத்தத்தைக் கொடுக்கிறது.//

சிறு திருத்தம் .. தமிழகம் முழுவதும் பெரும்பாலான கோவில்களின் நிலைமை இதுதான்.. பெரிய கோவில்கள் மட்டுமே நல்ல நிலைமையில் உள்ளன

Geetha Sambasivam said...

வாங்க ஜெயஸ்ரீ, இன்னாம்பூர் நடராஜர் ஸ்வாமிமலையில் இருக்கும் செய்தியே கடந்த ஒரு வருஷத்துக்கு முன்னால் தான் தெரியும், இன்னும் பார்க்கலை, திருவாசி இல்லைனு தீக்ஷிதர் நண்பர் சொல்றார். பார்க்கணும் ஸ்வாமிமலை போகும்போது.

Geetha Sambasivam said...

வாங்க மாதேவி, ரொம்ப நன்றிம்மா.

Geetha Sambasivam said...

எல்கே, நீங்க சொல்லுவது சரியே, என்றாலும் தஞ்சை மாவட்டத்தில் பல கோயில்களும் பூட்டியும் கிடக்கின்றன. கிராமங்களில் கோயில்களில் வழிபாடுகள் நடத்த யாருமே இல்லை. :((((((((

இன்னம்பூரான் said...

ஆஹா! மேலே சொல்ல வார்த்தையில்லை. பட்டாச்சார்யருகு என்னை தெரியும். பேர் அறிந்திஉக்காமல் இருக்கலாம்.
இன்னம்பூரான்

ஶ்ரீவாஞ்சியம் சுந்தரமூர்த்தி வாஞ்சிலிங்கம் said...

அருமையான தகவல்..நன்றி..இன்று(28/1/17) ஒருவர் திருஇன்னாம்பூர் எங்கு என்று கேட்டார்கள்..எனக்கு தெரியவில்லை என்றேன்.பிறகு இன்னாம்பூர் என்று google ல் போட்டால் உங்களின் பதிவு கிடைத்தது..நன்றி..இனி யார் கேட்டாலும் வழிகாட்டுவேன்...திருவாஞ்சியம் வா சுந்தரமூர்த்தி

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

தங்கள் சொல்படி இன்னாம்பூர் பதிவை படிக்க வந்தேன். அழகான கோவில்கள் தரிசனங்கள் கண்டேன். சிவன் கோவிலில் இருக்கும் நடராஜர் ஸ்வாமி மலையில்தான் இப்போதும் இருக்கிறாரா? மேலும் திருப்பதியில் இருக்கும் ஸ்ரீநிவாசன் இன்னம்பூரில் இருப்பதும் கேள்விப்படாத ஒன்றுதான்.. இதெல்லாம் நான் எங்கே கேள்விபடப்போகிறேன்.? ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் கூடிய அக்கறையுள்ள தங்களது விபரமான சேகரிப்பின் வாயிலாகத்தான் இப்போது இதையெல்லாம் தெரிந்து கொள்ள முடிகிறது. சிவன் கோவில், மற்றும் பெருமாள் கோவிலில் நல்ல தரிசனம் கிடைத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி. கோவில்களின் விபரங்களை கூறிய நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Geetha Sambasivam said...

நன்றி கமலா. இந்தப் பக்கம் நாங்கள் சென்று வந்த கோயில்கள் பற்றிய தகவல்களே அதிகம் காணப்படும். இப்போது தான் ஶ்ரீரங்கம் பற்றி எழுத ஆரம்பித்ததும் கோயில்கள் பற்றிய பதிவுகளையும் "எண்ணங்கள்" பதிவிலேயே போட்டு வருகிறேன்.