எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, February 09, 2010

நடந்தாய் வாழி காவேரி! காவேரி ஓரம்! சார்ங்கபாணி கோயில்!

பெருமாளின் 108 திருப்பதிகளில் இதுவும் ஒன்று. ஆழ்வார்கள் அதிகமான பாடல்கள் பாடி மங்களாசாஸனம் செய்த கோயில்களிலும் இது முக்கியமானது. மற்ற இரு கோயில்கள் முதலில் கோயில் என அழைக்கப் படும் ஸ்ரீரங்கம் பதினோரு ஆழ்வார்களாலும், திருப்பதி பத்து ஆழ்வார்களாலும் மங்களாசாசனம் செய்யப் பட்டது. இந்தக் கோயிலை ஏழு ஆழ்வார்கள் மங்களா சாஸனம் செய்திருக்கின்றனர். முதல் மூன்று ஆழ்வார்களில் பேயாழ்வார், பூதத்தாழ்வாரும், பின்னர் திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கை ஆழ்வார் போன்றவர்களாலும் மங்களாசாசனம் செய்யப் பட்டுள்ளது.

இது ஒரு மாடக்கோயில். சக்கரபாணி கோயிலும் ஒரு மாடக்கோயிலே. இதுவும் கும்பகோணத்திலேயே உள்ளது. இந்த சார்ங்கபாணி கோயிலில் பெருமாள் கையில் வில்லுடன் காணப்படுவதால் சார்ங்கபாணி என அழைக்கப் படுகிறார்.கோயில் ஆயிரம், இரண்டாயிரம் வருடங்கள் பழமையானது. காவேரியில் நீராடலும், அரிசிலாற்றில் நீராடலும் விசேஷமான சிறப்பாய்ச் சொல்லப் படுகிறது. அரி சொல் ஆறு என்பதே அரிசிலாறு என வழங்கப்படுகிறதாய்க் கேள்விப் பட்டேன். கும்பகோணம் நகரின் மையப் பகுதியில் உள்ளது இந்தக் கோயில். பெரிய கடைத்தெருவிலிருந்து நடந்தே செல்லலாம். தேரின் அமைப்பில் சுவாமி சந்நிதி இருக்கும். இங்கேயும் சக்கரபாணி கோயிலைப் போலவே உத்தராயண, தக்ஷிணாயண வாசல்கள் உள்ளன. இந்த வாயில்கள் தேரின் அமைப்பின் இருபுறமும் காணப்படும். உத்தராயணம் நடக்கும்போது உத்தராயண வாயில் வழியாகவே செல்லவேண்டும். தக்ஷிணாயண வாயில் அடைத்திருக்கும். தக்ஷிணாயணம் ஆரம்பித்ததும் உத்தராயண வாயில் அடைக்கப்பட்டு தக்ஷிணாயண வாயில் திறக்கப் படும். தேரின் சுற்றுப்புறச் சுவரில் அழகான சிலைகள் வடிவமைக்கப் பட்டுள்ளன. மிகப் பெரிய கல் சக்கரங்களும் காணப்படுகின்றன. அவற்றிற்குக் கல்லிலேயே கடையாணியும் செதுக்கப் பட்டிருக்கும். ம்ம்ம்ம் படம் எடுக்க முடியாது. கண்டிப்பாக அநுமதி கொடுக்கவில்லை. :(

இந்தக் கோயிலின் கோபுரம் தமிழ்நாட்டின் உயரமான கோபுரங்களில் மூன்றாவதாய்ச் சொல்லப் படுகிறது. முதலில் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் சுமார் 240 அடியும், ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் சுமார் 170 அடியும் எனச் சொல்வார்கள். இந்தக் கோயில் கோபுரம் 150 அடிக்குக் குறையாமல் இருக்கும். சந்நிதித் தெருவில் நுழையும்போதே தேர்முட்டி எனப்படும் ஸ்வாமி தேர் வைக்கப் பட்டிருக்கும் இடம் காணப்படும். இந்தத் தேரையும் மிகவும் சிறப்பித்துச் சொல்கின்றனர். சித்திரத் தேர் என அழைப்பார்களாம். திருமங்கை ஆழ்வார் ரத பந்தம் என்னும் பாடல் அமைப்பில் இந்தத் தேரின் அமைப்பைப் பற்றிப் புகழ்ந்து ஒரு பாடல் பாடி இருப்பதாகவும் சொல்கின்றனர்.

பெருமாளுக்கு எக்கச்சக்கமான சிறப்புகள் உண்டு. முதலில் தலவரலாற்றைப் பார்ப்போமா??

3 comments:

துளசி கோபால் said...

அருமை

எல் கே said...

da athukulla mudichitenga

Geetha Sambasivam said...

ஹிஹிஹி, எல்கே, சேவ் பண்ண க்ளிக்கினால் தப்பாய் பப்ளிஷ் கொடுத்திருக்கேன் போல பப்ளிஷ் ஆயிடுத்து, முதல்லே பார்க்கலை, அப்புறம் சரி ஒரு பதிவாவது சின்னதா இருக்கட்டுமேனு விட்டுட்டேன், அதான் பாருங்க வாராது வந்த மாமணி போல வந்து துளசி அருமைனு சொல்லி இருக்காங்க! :))))))))))))))))