எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, February 15, 2010

நடந்தாய் வாழி காவேரி, காவேரி ஓரம், திருஆரூரின் அவல நிலை!

"தேரூரார் மாவூரார் திங்களூரார்
திகழ்புன் சடைமுடிமேல் திங்கள் சூடிக்
கார் ஊரா நின்ற கழனிச்சாயல்
கண்ணார்ந்த நெடுமாடம் கலந்து தோன்றும்
ஓரூரா உலகெலாம் ஒப்பக் கூடி
உமையாள் மணவாளா என்று வாழ்த்தி
ஆரூரா ஆரூரா என்கின்றார்கள்
அமரர் தம் பெருமானே எங்குற்றாயே!"


திரு ஆரூர். இதன் பெருமையைச் சொல்லித் தெரியவேண்டுவதில்லை. பன்னிரு திருமுறைகளிலே அநேகமாய் எல்லாத் திருமுறைகளிலும் குறிப்பிடப் பட்டிருக்கும் ஒரே தலம் திருஆரூர். எப்போது எனத் தெரியாத காலத்தில் இருந்தே, நம் சிற்றறிவால் யோசித்துப் பார்க்கமுடியாத காலந்தொட்டே இங்கே ஈசனும், அம்பிகையும் குடி கொண்டிருக்கின்றனர். எப்போது எனத் தெரியாத காலத்தே முன்னைப் பழம்பொருளுக்கும், முன்னைப் பழம்பொருளாய் ஐயனும், அம்மையும் வீற்றிருப்பதால் அந்தரகேசபுரம் எனவும், இந்தத் தலத்து ஈசன்,அம்மையோடு மட்டுமில்லாமல், தன் அருமை மகனான ஸ்கந்தனோடு காட்சி அளிப்பதால் ஸோமாஸ்கந்தர் என்னும் பெயர் பெற்று அந்தத் தத்துவத்தை விளக்குவதால் இவ்வூருக்கு ஸ்கந்தபுரம் என்னும் பெயரும் உண்டு. அம்பிகை இங்கே யோக மாதாவாக யோக சாத்திரத்தின் தத்துவங்களையும், அர்த்தங்களையும் விளக்கும் வண்ணம் யோகசக்தியாக வீற்றிருக்கிறாள். மூன்று தேவியரும் ஒன்றாகக் குடி இருக்கும் அந்தக் கமலாம்பிகையே இங்கே யோகசக்தியாக இருப்பதால் கமலாயபுரம் எனவும் அழைக்கப் படுகிறது. க என்னும் எழுத்து கலைமகளையும், ம என்னும் எழுத்து மலைமகளையும், ல என்னும் எழுத்து மகாலக்ஷ்மியையும் குறிக்கும்.

இம்முன்று தேவியரும் ஒருங்கே இந்தக் கோயிலில் வடமேற்குத் திசையில் ஈசான்யதிசையை நோக்கியவண்ணம், தலையில் பிறை சூடி, கங்கையும் கொண்டு யோகசக்தியாக விளங்குகிறாள் அன்னை. அம்பிகையின் அனைத்து சக்திகளும் ஒருங்கே இங்கே குடி கொண்டிருப்பதால் ஸ்ரீபுரம் எனவும் அழைக்கப் படுகிறது. ஆயிற்று, இவ்வளவு பெருமையுடனே அன்னையும், ஈசனும் குடி வந்தாயிற்று. குடிமக்கள் வரவேண்டாமா?? ஆடல்வல்லானின் சிவகணங்களே இங்கே குடி வந்தனராம். சிவகணங்களாக இவ்வூர்மக்களே விளங்குகின்றனராம். அதனால் இவ்வூரைக் கலிசெலா நகரம் எனவும் அழைக்கின்றனர். இந்த ஊரை ஒரு தட்டிலும், மற்ற தலங்களை இன்னொரு தட்டிலும் வைத்துத் தராசில் நிறுத்துப் பார்த்தபோது இவ்வூரின் பக்கமே தட்டு நிறை மிகுந்து காணப்பட்டதாக ஐதீகம். இதனால் இந்த க்ஷேத்திரத்திற்கு க்ஷேத்திரவரபுரம் எனவும் பெயர் உண்டு. திரு வாகிய திருமகளே இந்தத் தலத்தில் வழிபட்டு வரம் பெற்றதாலும் திருஆரூர் எனப் பெயர் வந்ததாகவும் சொல்கின்றனர். தேவாதிதேவர்கள் எந்நேரமும் கூடி வழிபட்டுக்கொண்டே இருப்பதாலும், தேவாதி தேவர்களுக்கெல்லாம் உயர்ந்த சிவனடியார்கள் குழுமி ஈசனைத் தொழுவதாலும் தேவாசிரியபுரம் எனவும் பெயர் பெற்றது. பஞ்ச பூதத் தலங்களில் இது நிலம் என்னும் தத்துவத்தை உணர்த்துகிறது. ப்ருத்வித் தலம் எனப் படுகிறது. உடலின் ஆறு ஆதாரங்களில் மூலாதாரத் தத்துவத்தை இது உணர்த்துகிறது. மூலட்டானமாக விளங்குவதால் மூலாதாரபுரம் எனவும், தேவேந்திரன் புற்று அமைத்து ஈசனை வழிபட்டதால் வன்மீகநாதபுரம் எனவும், முசுகுந்தச் சக்கரவர்த்தி இந்திரனுக்கு உதவி செய்து கிடைத்த ஈசனின் திருவடிவைப் பிரதிஷ்டை செய்திருப்பதால் முசுகுந்தபுரம் எனவும் அழைக்கப் படுகிறது.

இந்நகரம் சப்தவிடங்கத் தலங்களில் முதன்மையானது. சப்தவிடங்கம் என்றால் என்ன என்பவர்களுக்கு. ஒவ்வொன்றாய்ப் பார்க்கப் போகிறோம். கோயில் ஐந்துவேலியாம், தீர்த்தக்குளம் ஐந்துவேலியாம், செங்கழுநீர் ஓடை நந்தவனம் ஐந்துவேலியாம், என்று சொல்லுவதுண்டு. திருவாரூர் கோயில் இந்த நிலப்பரப்பைப் பற்றி அப்பர் பெருமான் ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னரே குறிப்பிட்டுள்ளார். இன்னும் சொல்லப்போனால் கோயில் என அழைக்கப் படும் தில்லைச் சிற்றம்பலத்தை விட அதிகமான பாடல்கள் பெற்றதி திருஆரூரே ஆகும். மூவர் பாடிய பாடல்களில் கிட்டத் தட்ட இருநூறு பாடல்களுக்கு மேல் திருவாரூர் பற்றிய பாடல்கள் உள்ளன. திருஞாநசம்பந்தர் தனது திருவாரூர்ப் பதிகத்தில்,


சித்தந் தெளிவீர்காள் , அத்த னாரூரைப்
பத்தி மலர்தூவ , முத்தி யாகுமே.
பிறவி யறுப்பீர்காள் , அறவ னாரூரை
மறவா தேத்துமின் , துறவி யாகுமே.
துன்பந் துடைப்பீர்காள் , அன்ப னணியாரூர்
நன்பொன் மலர்தூவ , இன்ப மாகுமே. “
என்றும், திருநாவுக்கரசர்,

பாடிளம் பூதத்தி னானும் பவளச்செவ் வாய்வண்ணத் தானும்
கூடிள மென்முலை யாளைக் கூடிய கோலத்தி னானும்
ஓடிள வெண்பிறை யானும் ஒளிதிகழ் சூலத்தி னானும்
ஆடிளம் பாம்பசைத் தானு மாரூ ரமர்ந்தவம் மானே.

எனவும் பாடியுள்ளார். இதைத் தவிரவும் திருவாரூர் அறநெறி என்னும் பாடல்களையும் நாவுக்கரசர் பாடி இருக்கிறார். திருவாரூர்க் கோயிலின் நில அளவைக் குறிக்கும் பாடலும் ஒன்று உள்ளது. பாடல் தேடினேன். தட்டச்சுத் தேடலில் கிடைக்கவில்லை. “அஞ்சணைவேலி” என ஆரம்பிக்கும் பாடல். மாணிக்க வாசகர் பாடிய திருவாசகத்தில்

பூங்கமலத்து அயனொடுமால் அறியாத நெறியானே
கோங்கலர்சேர்குவிமுலையாள் கூறாவெண் நீறாடீ
ஓங்கெயில்சூழ் திருவாரூர் உடையானே அடியேன் நின்
பூங்கழல்கள் அவை அல்லாது எவையாதும் பகழேனே!”

என்கின்றார். இது தவிர திருமூலர் தம் திருமந்திரத்திலும் திருவாரூர் பற்றி அஜபா மந்திரம் என்னும் பகுதியில் சொல்கிறார்என்று தெரியவருகிறது.

10 comments:

எல் கே said...

learned some more information abt thiruvarur. keep up paatti

Jayashree said...

Romba naala kaekkanumnu irunthu maranthu poivittathu. Mazhunna enna Mrs Shivam? 3 concavity poattu oru weapon maathiri sivan valathu kaiyil irukkae athuvaa?

Geetha Sambasivam said...

எல்கே, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :P:P:P

Geetha Sambasivam said...

மழு=battle axe யுத்தம் செய்யப் பயன்படும் கோடரினு இந்த இடத்திலே அர்த்தம் வரும் ஜெயஸ்ரீ, பலராமன் கையிலும் இதுதான்! சிலர் கலப்பைனும் சொல்றதுண்டு. உழுவதற்குப் பயன்படும் கலப்பையை விட இதுக் கொஞ்சம் மாறுபடும்.

G. Krishnamurthy said...

பஞ்சபூதத் தலங்கள்:
1. நெருப்பு ‍ - திருவண்ணாமலை
2. காற்று - காளஹஸ்தி
3. ஆகாயம் - சிதம்பரம்
4. நிலம் - காஞ்சிபுரம்
5. நீர் - திருவானைக்காவ‌ல்

திருவாரூர் எவ்வாறு பஞ்சபூதத் தலமாக கருதப்படுகிறது?

Geetha Sambasivam said...

திருவாரூரும் ப்ருத்வித் தலமே. காஞ்சி அன்னையால் ப்ருத்வித் தலம் ஆனது எனில் திருவாரூர் அப்பனால் ப்ருத்வித் தலம் ஆனது. அம்மையப்பன் தன் குடும்பத்தோடு முதல் முதல் கோயில் கொண்ட இடம் திருவாரூர். நம் உடலின் மூலாதாரமும் திருவாரூரே என்பார்கள். மூலாதாரம் எவ்வாறு பூமியைக் குறிக்கிறதோ அவ்வாறே திருவாரூர் ப்ருத்வியைக் குறிக்கிறது.

Nanjil Kannan said...

மிக சரியான பதிவு அத்துனை கருத்துக்களையும் மிக தெளிவாக சொல்லி விட்டீர்கள் ... நான் போட போகும் புதிய பதிவுக்கு உங்கள் பதிவில் இருந்து சில கருத்துக்களை தெரிந்து கொண்டேன் .. மிக்க நன்றி :)))))

இராஜராஜேஸ்வரி said...

எப்போது எனத் தெரியாத காலத்தே முன்னைப் பழம்பொருளுக்கும், முன்னைப் பழம்பொருளாய் ஐயனும், அம்மையும் வீற்றிருப்பதால் அந்தரகேசபுரம் எனவும், இந்தத் தலத்து ஈசன்,அம்மையோடு மட்டுமில்லாமல், தன் அருமை மகனான ஸ்கந்தனோடு காட்சி அளிப்பதால் ஸோமாஸ்கந்தர் என்னும் பெயர் பெற்று அந்தத் தத்துவத்தை விளக்குவதால் இவ்வூருக்கு ஸ்கந்தபுரம் என்னும் பெயரும் உண்டு.

nice

ஸ்ரீராம். said...

நல்ல பதிவு. கோவில் பற்றி அறிந்து கொள்ள இணையத்தில் தேடியபோது இந்த விவரங்கள் நானும் படித்தேன். கோவிலின் விஸ்தீரணம் பிரமிக்க வைக்கிறது. இந்தக் கோவிலைப் பார்க்க மட்டுமே இரண்டு நாட்களாவது வண்டும். அப்புறம்தான் சுற்றியுள்ள கோவில்கள் எல்லாம்!

Geetha Sambasivam said...

ஹ்ஹிஹிஹி, ஶ்ரீராம், வருகைக்கு நன்றி. இந்த ஒரு பதிவு மட்டும் இல்லை. இதைத் தொடர்ந்து நாலைந்து பதிவுகள் திருவாரூரைக் குறித்து மட்டும் இருக்கிறது. முடிஞ்சால் படிங்க. :))))) கட்டாயமெல்லாம் இல்லை.