மன்னனால் ஆசீர்வதிக்கப்பட்ட வீரபாண்டியன் அரியணை
ஏறியதை சுந்தர பாண்டியனால் சகிக்க முடியவில்லை.
இருவருக்கும் சண்டை மூண்டது. வீர பாண்டியனுக்கோ
படைபலம் இருந்தது. சுந்தரபாண்டியன் செய்வது
என்னவெனத் தெரியாமல் தவித்தான். அப்போது அவன்
செய்த மாபெரும் தவறு தான் தென்னாட்டுக் கோயில்களுக்குப் பல வருடங்கள் பிரச்னைகள் ஏற்படக்
காரணம் ஆயிற்று. ஆம்; நாடாளும் ஆசையில் தன்
பிரதிநிதிகளை டில்லிக்கு அனுப்பி சுல்தானின் உதவியைக் கோரினான் சுந்தரபாண்டியன். வயதில் சுந்தரபாண்டியன் இளையவன் ஆனால் அவனே பட்டமகிஷிக்குப்
பிறந்த பட்டத்து இளவரசன். வீர பாண்டியனோ வயதில்
முதிர்ந்தவன் ஆனால் அவன் ஆசைநாயகியின் மகன்.
குலசேகரோ வீரபாண்டியனை ஆட்சி செய்ய வைத்துவிட்டுச் சென்று விட்டான். பாண்டிய நாடு இரண்டு பட்டது. உள்நாட்டுச் சண்டைகள் ஏற்பட்டன. இந்தச் சண்டைகள் குறித்த மேலதிகத் தகவல்கள் தேடினேன். மீண்டும் பார்க்க வேண்டும்.
அப்போது டில்லி சுல்தானாக அலாவுதீன் கில்ஜி ஆண்டு
வந்தான். அவனால் சிறைப்பிடிக்கப்பட்ட, சந்த்ராம் என்னும் அலி, முஸ்லீமாக மதமாற்றம் செய்யப்
பட்டு மாலிக்காபூர் என்னும் பெயருடன் சுல்தானின் படையின் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தான். பாண்டியன் உதவி தேடி வந்ததும், ஏற்கெனவே தெற்கு
நோக்கி வந்து வாரங்கல் வரையிலும் தன் பலத்தைக் காட்டிச் சென்றிருந்த மாலிக்காபூர் உடனடியாக
சுந்தர பாண்டியன் உதவிக்கு வந்தான். மாலிக்காபூரின்
பெரும்படைக்கு முன்னர் தன்னால் எதுவும் செய்ய இயலாது என்பதைப் புரிந்து கொண்டிருந்த
வீரபாண்டியனோ காடுகளுக்குள் ஒளிந்து கொண்டு மறைந்து இருந்து தாக்குதல் செய்தான். வீர பாண்டியன் போசளரின் கண்ணனூர்க் கொப்பம் செல்ல
அங்கிருந்த படை வீரர்களில் பாதிப் பேர் முஸ்லீமாக இருக்கவே அவர்களும் மாலிக்காபூருடன்
சேர்ந்து கொண்டு வீரபாண்டியனை எதிர்க்கவே அவன் தில்லைச் சிதம்பரம் சென்று அங்கே ஒளிந்து
கொண்டான். அவனைப் பின் தொடர்ந்து வந்த மாலிக்காபூர்
தில்லைப் பொன்னம்பலத்தை அடியோடு பெயர்த்து எடுத்து எரியூட்டி மகிழ்ந்தான். ஆனாலும் வீரபாண்டியன் அவன் கைகளில் சிக்காமல் போகவே
மீண்டும் மதுரை நோக்கித் திரும்பினான். திரும்பும்
வழியில் கண்களில் பட்ட கோயில்களை எல்லாம் ஆத்திரம் கொண்டு தாக்கினான். அவன் தாக்கிய கோயில்களில் ஸ்ரீரங்கம் கோயிலும் ஒன்று.
கோயிலினுள் நுழைய அவனால் இயலவில்லை என ஒரு சாராரும்,
நுழைந்துவிட்டான் என இன்னொரு சாராரும் கூறுகின்றனர். ஆனால் கோயிலின் விக்ரஹங்கள் கொள்ளை அடிக்கப் பட்டன. அவற்றில் ஸ்ரீரங்கம் கோயில் உற்சவர் ஆன அழகிய மணவாளரும்,
உபய நாச்சியார்களோடு கொள்ளை அடிக்கப் பட்டு டில்லி நோக்கிச் சென்றன. ஸ்ரீரங்கம் கோயிலை இடித்துப் பாழாக்கினான். இத்துடன் தன் வெறி அடங்காத மாலிக்காபூர் மதுரை நோக்கிச்
சென்றான். பாண்டிய நாடு பெரும் செல்வ வளத்தோடு
இருந்து வந்ததால் பாண்டிய நாட்டுக் கருவூலத்தைக் கொள்ளை அடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு
சென்றான். தான் அழைத்த சுல்தான் படையினால்
தனக்கு மட்டுமல்லாமல் மொத்தப் பாண்டிய நாட்டுக்கே தீங்கு ஏற்பட்டதைக் கண்ட சுந்தர பாண்டியனோ மாலிக்காபூர் திரும்பவும் மதுரைக்கு வருவதைத் தெரிந்து
கொண்டதும், பாண்டிய நாடுப் பெரும் பொக்கிஷங்களோடு மதுரையை விட்டுச் சேர நாட்டுக்கு
ஓடி விட்டான். (அப்போது பத்மநாப சுவாமி கோயிலில்
அவன் ஒளித்து வைத்த பாண்டி நாட்டுப் பொக்கிஷங்களே இப்போது கிடைத்திருப்பதாக ஒரு கூற்று.
அதற்கான ஆதாரங்களையும் சொல்கின்றனர். ஆனால்
நமக்கு இந்தக் கதை இப்போது தேவை இல்லை.) பாண்டியனும்
கிடைக்காமல், பொக்கிஷமும் கிடைக்காமல் ஏமாந்த மாலிக்காபூர் மதுரையைத் தீக்கிரையாக்கியதோடு
மீனாக்ஷி கோயிலுக்கும் எரியூட்டினான். சுந்தரபாண்டியனின்
சிற்றப்பன் மாறவர்மன் விக்கிரமபாண்டியனால் எதிர்ப்பு நேரிடவே அவனைச் சமாளிக்க முடியாமல் மாலிக்காபூர் அங்கிருந்து
ராமேசுவரம் ஓடி அங்கும் கோயிலைச் சூறையாடி எரித்து மக்களைக் கொன்று, அவர்கள் பொருட்களைக்
கவர்ந்து சேதம் விளைவித்துப்பின்னர் தென்னாட்டில் கவர்ந்த பொருட்களுடன் 512 யானைகள்,
5,000க்கும் மேற்பட்ட குதிரைகள், 500 மணங்கு எடையுள்ள தங்க ஆபரணங்கள், விலைமதிக்க முடியா
வைரங்கள், முத்துக்கள், மாணிக்கங்கள், மரகதச் சிலைகள் போன்றவற்றைச் சுல்தானுக்குக்
காணிக்கையாக எடுத்துச் சென்றான். கூடவே நம்
அழகிய மணவாளரும் சென்றார்.
இங்கே ஸ்ரீரங்கத்திலோ கலவரம், வேதனை, கோயிலை எப்படியாவது திருப்பணிகள் செய்து புதுப்பித்துவிடலாம். ஆனால் அழகிய மணவாளர் இல்லாமல் உற்சவங்கள் நடப்பது எங்கே? என்ன செய்வது? ஶ்ரீரங்கம் அருகே உள்ள உத்தமர் கோயிலில் எம்பெருமானுக்காகத் தினம் தினம் ஆடிப் பாடி மகிழ்விக்கும் பெண்ணொருத்தி இருந்தாள். அவளோ அரங்கனைப் பார்க்காமல் சாப்பிடுவதில்லை. அரங்கனைக் காணாமல், அவன் முன்னே ஆடிப் பாடாமல் அவளால் எதுவும் செய்ய முடியவில்லை. அரங்கன் போன வழியைத் தேடிக் கொண்டு அவளும் கிளம்பினாள். வழியெங்கும் விசாரித்துக் கொண்டு டில்லிப்படை சென்ற திசை நோக்கி அவளும் சென்றாள். விக்ரஹமும் டில்லி போய்ச் சேர்ந்தது. தனக்கு மாலிக்காபூர் கொண்டு வந்த விலை மதிக்க முடியாப்பொருட்களைப் பார்த்து மகிழ்ந்த சுல்தான் அனைத்தையும் வீரர்களுக்குப் பிரித்து கொடுத்தான். சுல்தானின் மகள் சுரதானி என்பவள் அப்போது அங்கே வந்து அழகிய மணவாளரைப் பார்த்தாள். அந்த விக்ரஹம் அவளுடன் பேசுவது போல் தோன்றியது அவளுக்கு. அந்த விக்ரஹத்தைத் தனக்கு வேண்டுமெனக் கேட்டு வாங்கிக் கொண்டு அந்தப்புரத்துக்கு எடுத்துச் சென்றாள்.
நன்றி: தமிழ் விர்சுவல் பல்கலைக்கழகம்.
நன்றி: தமிழ் விர்சுவல் பல்கலைக்கழகம்.