ஸ்ரீரங்கம் கோயிலின் சரித்திரத்தை ஆராயப் புகுந்தோமானால்
இந்திய சரித்திரத்தில் நீங்கா இடம் பெற்ற முக்கியக் கோயில்களில் ஒன்றாகும் என்பது புலனாகும். வைணவர்களுக்கு முக்கியக் கோயிலான இது எப்போது கட்டப்பட்டது
என்ற சரியான தகவல்கள் கிடைக்காவிட்டாலும் கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து இதன் மகிமை பேசப்படுகிறது. வேத வேதாந்தக் கருத்துக்களைப் பயிற்றுவிக்கும் ஒரு
பள்ளியாகவும் இருந்து வந்திருக்கிறது. பல மஹான்கள்,
பல ஆசாரியர்கள் உருவாகி இந்தக் கோயிலின் தொண்டாற்றி வந்திருக்கிறார்கள். என்றாலும்
இதன் பூர்வ சரித்திரம் குறித்த ஆதாரபூர்வத் தகவல்கள் கிட்டாதது நம் துரதிர்ஷ்டமே எனக்
கூற வேண்டும். இங்கே ஏராளமான கல்வெட்டுகள்
கிடைக்கின்றன. அவற்றை ஆய்வு செய்து வருகின்றனர். ஆகவே கொஞ்சம் வெளிச்சம் கிட்டலாம். எனினும் நமக்கு இந்தக் கோயிலின் ஒவ்வொரு பிரகாரங்கள்
குறித்தும், மதில்கள் குறித்தும் கிடைக்கும் விபரங்களில் இருந்து அவ்வப்போது சோழ, பாண்டிய
மன்னர்களால் இந்தக் கோயில் பல திருப்பணிகளைக் கண்டிருப்பது தெரிய வருகிறது.
நான்காம் திருமதிலைக் கட்டியவர் திருமங்கை ஆழ்வார்
என்பதை ஏற்கெனவே பார்த்தோம். ஏழாம் திருமதில்
பிரகாரத்திலும், நான்காம் திருமதில் பிரகாரத்திலும் ஆண்டாளுக்கு எனத் தனிப்பட சந்நிதிகள்
தென்மேற்கு மூலையில் ஏற்படுத்தி இருக்கின்றனர்.
இதில் ஏழாம் திருமதில் பிரகாரத்தில்
உள்ள ஆண்டாளின் திருச்சந்நிதி பிற்காலப் பாண்டியர்கள் காலத்தில் ஏற்படுத்தப் பட்டிருக்க
வேண்டும் எனத் தெரிய வருகிறது. கி.பி. பனிரண்டாம்
நூற்றாண்டிலிருந்து பதிநான்காம் நூற்றாண்டிற்கு அது கட்டப்பட்டிருக்கும் என அந்தச்
சந்நிதி பாண்டிய மன்னர்களின் கட்டுமானப் பாணியில் கட்டப்பட்டிருப்பதில் இருந்து தெரிய
வருகிறது. இதைத் தவிர நான்காம் திருமதில் பிரகாரத்தில்
இருக்கும் ஆண்டாள் சந்நிதி கி.பி. பதினேழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கும் என்கின்றனர். கல்வெட்டுகள் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் இருந்து
கிடைப்பதாகச் சொல்கின்றனர். கோயிலின் முக்கியத்துவம்
மட்டுமல்லாமல் அரசியல் ரீதியாகவும் இந்தக் கோயில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. சோழ மன்னர்களின் குல தெய்வமாக ஸ்ரீரங்கநாதப் பெருமானும்,
அவர்கள் முடி சூடிக்கொள்ளும் பரம்பரைக் கோயிலாக சிதம்பரம் நடராஜப் பெருமான் கோயிலும்
இருந்து வந்திருக்கிறது. ஆகவே ரங்கராஜனும்,
நடராஜனும் சோழர்கள் வாழ்வில் இரு கண்களைப் போலவே இருந்து வந்திருக்கின்றனர்.
சோழமன்னர்கள் கல்வெட்டுக்களில் பழமையானதாகச் சொல்லப்படுவது
முதலாம் பராந்தகனின் கல்வெட்டு ஆகும். இம்மன்னன்
ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வெள்ளிக் குத்துவிளக்கு ஒன்று அளித்ததோடு அல்லாமல் கற்பூரம்,
பருத்தித் திரிநூல் வாங்க, குத்துவிளக்குப் பராமரிப்பு, விளக்கு ஏற்றும் செலவு என
51 பொற்காசுகளையும் வழங்கி இருந்திருக்கிறான்.
அதோடு கோயிலில் மூன்று இரவுகள் வேதம் ஓதப் படுவதற்காகவும் தானம் வழங்கி இருக்கிறான். இவனுக்கு அடுத்துச் சிறப்பாகச் சொல்லும்படி தானம்
வழங்கிய மன்னன் இரண்டாம் ராஜேந்திரனின் மகன்களில் ஒருவனான ராஜமஹேந்திர சோழனின் தானம்
ஆகும். கி.பி. பதினோராம் நூற்றாண்டில் அதாவது
கி.பி. 1060---1063 ஆம் ஆண்டில் இங்குள்ள முதல் பிரகாரத்தின் திருமதிலைக் கட்டியதால்
இது ராஜமஹேந்திரன் திருவீதி என வழங்கப் படுகிறது.
கிட்டத்தட்ட இந்தச் சமயம் தான் ஸ்ரீபெரும்புதூரில் உடையவர் என அழைக்கப்படும்
ஸ்ரீராமாநுஜர் தோன்றிப் பல்லாண்டுகள் வாழ்ந்து வைணவத்தையும், ஸ்ரீரங்கநாதர் கோயிலையும்
நெறிப்படுத்தியதாகச் சொல்லப் படுகிறது. இதற்குத் தனியாக வருவோம். இப்போது கோயிலின் சரித்திரங்களை முதலில் பார்ப்போம்.
ஸ்ரீராமாநுஜர் காலத்தில் சோழ மரபின் வம்சாவளியில்
நேரடி வாரிசு இல்லாமல் போக, சாளுக்கிய—சோழ மரபில் வந்த இரண்டாம் ராஜேந்திரன் என்பவன்
ஆட்சிப் பொறுப்பை ஏற்க நேரிட்டது. சோழ குலத்தின்
நேரடி வாரிசு ஆன அதி ராஜேந்திரன் சந்ததி இல்லாமல் இறந்து போனான். முதலாம் ராஜேந்திரனின் மகளைத் திருமணம் செய்து கொண்ட ராஜராஜ நரேந்திரனின் மகனான இவன் சிறு வயதிலிருந்தே
சோழ நாட்டிலேயே வளர்ந்து வந்தவன். தன் மாமன்
இறந்ததும் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தில் இவனுக்கு மக்கள் ஆதரவு பெருமளவு இருந்து வந்ததால்
அமைச்சர்கள் இவனைத் தேர்ந்தெடுத்துக் குலோத்துங்கன் என்ற பட்டப் பெயர் சூட்டி முடிசூட்டினார்கள். இவனை முதலாய்க் கொண்டு தான் தமிழ்நாட்டில் கீழைச்சாளுக்கிய—சோழப்
பரம்பரையின் ஆட்சி தொடங்கியது. முதன்முதல்
வேற்று நாட்டு இளவரசன் தமிழ்நாட்டு அரசனாக முடி சூடியதும் இவன் காலத்தில் தான். இவனுக்கும் ஸ்ரீராமாநுஜருக்கும் பகைமை இருந்து வந்ததாய்க்
கோயில் ஒழுகு சொல்கிறது. இது குறித்துப் பின்னர்
பார்க்கப் போகிறோம்.
ஆனால் இந்தச் சளுக்கிய சோழகுல மரபில் முதலாம் குலோத்துங்கனுக்குப்
பின்னர் வந்த மூன்றாம் குலோத்துங்கன் காலத்தியக் கல்வெட்டும், ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகம் சோழர்களின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு இருந்து
வந்ததைச் சொல்கிறது. தமிழ்நாட்டின் அப்போதைய
காலநிலைமை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. திருவானைக்கா
ஜம்புகேஸ்வரர் கோயிலுக்கும், ஸ்ரீரங்கம் கோயிலுக்கும் அடிக்கடி சச்சரவுகள்; வாதப் பிரதிவாதங்கள். மூன்றாம் குலோத்துங்கனின் இருபதாண்டு ஆட்சிக்காலக்
கல்வெட்டு ஒன்றின் மூலம் ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாக அலுவலர்கள், ஜம்புகேஸ்வரக் கோயில்
ஆட்சியாளர்களோடு சமரமாகப் பூசல்களைத் தீர்த்துக்கொள்ளும்படிக் கட்டளை இட்டிருக்கிறான். இத்தனைக்கும் ஒரிசா வரை சோழ ஆட்சி பரவி இருந்தாலும்
தெற்கே இருந்து இலங்கையின் துணையோடு பாண்டியர்களும், கீழ்த்திசையில் ஆட்சி புரிந்த
கங்கர்களும், அடிக்கடி சோழர்களைத் தாக்கி வந்தனர். இதில் கி.பி. 1223 முதல் 1225 வரையிலும் ஸ்ரீரங்கம்
கோயில் கங்கர்களால் கவர்ந்து கொள்ளப்பட்டுக் கோயிலின் நிர்வாகம் முற்றிலும் சிதைந்து
பாழ்பட்டுப் போனது என்பதை அறிகிறோம்.
பின் குறிப்பு: மேற்கண்ட தகவல்கள் ஆதாரம்: அறநிலையத் துறையால் வெளியிடப் பட்ட
திருவரங்கம் திருக்கோயில் புத்தகம், வைணவஸ்ரீ, மற்றும் பேராசிரியர்
நாகசாமி அவர்களின் ராமாநுஜர் பற்றிய புத்தகத்தின் விசேஷக் குறிப்புகள்
கொண்ட வலைத்தளம்.
http://adhipiran.com/
3 comments:
ஸ்ரீரங்கப் பயணம் நீண்டது. நல்ல வேளைப் பல்லவ சாளுக்கிய சம்பந்தம் ஏற்படவில்லை. இல்லாவிட்டால் அங்கேயும் குழப்பம் வந்திருக்கும்.காஞ்சி கோவிலிலும் எவ்வளவு மாற்றங்கள் வந்திருக்குமோ.
நன்றி கீதா.
கடும் உழைப்பு தெரிகிறது.
பதிவாகிப் பகிர்த்து கொண்டதற்கு மிக்க நன்றி...
தொடருங்கள்... வாழ்த்துக்கள்...
Post a Comment