எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, August 01, 2012

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!4


இவற்றுக்கெல்லாம் ஆதாரங்கள் இல்லை எனினும் மரபு சார்ந்ததாகவே கொள்ள வேண்டி இருக்கிறது.  கோயிலைக் குறித்துப் பழங்காலத்து சங்கப்பாடல்கள், சிலப்பதிகாரம், ஆழ்வார் பாசுரங்கள் போன்றவற்றில் குறிப்பிடப் பட்டிருக்கும் இலக்கிய ஆதாரங்களையே கிட்டத்தட்ட கி.பி. பத்தாம் நூற்றாண்டு வரையிலும் கொள்ள வேண்டி இருக்கிறது.  ஏனெனில் கி.பி. ஏழாம் நூற்ற்றாண்டில் திருமங்கை மன்னனால் நான்காம் திருமதில் கட்டப்பட்டதாகக் கோயிலொழுகு சொல்வதாகக் கேள்விப் படுகிறோம்.  ஆனால் அதற்கு முன்பே முதலாழ்வார்கள் பாடிய பாடல்களையும் முன்னரே பார்த்தோம்.  தற்போது செய்துவரும் சில ஆய்வுகளின் மூலம் பழைய கோயிலின் மேலேயே இந்தக் கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. கோயிலொழுகு குறித்து நான் பார்க்க வேண்டும் என நினைத்த பெரியவர் உபந்நியாசங்களாகச் செய்து வைத்திருப்பதால் அதைப் போட்டுக் கேட்டுக் கொள்கிறேன். 

நம் பாரத நாட்டிலேயே ஸ்ரீரங்கம் கோயில் தான் ஏழு பிரகாரங்களைக் கொண்டது.  ஏழு என்ற எண் புனிதமானதாய்க் கருதப்படுகிறது.  மனித உடலுக்குக் காரணமான ஏழு தாதுக்களையும், உடலில் உள்ள ஏழு ஆதாரங்களையுமே இவை சுட்டுவதாக ஐதீகம்.  கருவறையில் தொடங்கிப் பிரகாரங்கள் வெளிப்பக்கமாக எண்ணப்படுகின்றன.  நம் உடலின் உள்ளே எவ்வாறு ஆன்மா குடி கொண்டிருக்கிறதோ அவ்வாறே கருவறையின் நடுவேஇவ்வுலகத்தின் அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாகிய  பெருமாள் எழுந்தருளி உள்ளார்.  கருவறை விமானம் நான்கு கலசங்களோடு கூடிய வட்டவடிவில் பொன்மயமாக அமைந்துள்ளது.   விமானத்தின் வெளியில் விக்னேஸ்வரர் காவல் காக்க, கீழ்ப்பக்கம் யோக மாயை ஆன ஸ்ரீதுர்கை இருக்கிறாள்.   விமானத்தின் மீது பரவாசுதேவர் கையில் கிண்ணத்தோடு இருப்பதையும் கிண்ணம் கொஞ்சம் கொஞ்சமாய் அவர் வாய்க்கருகே சென்று கொண்டிருப்பதாகவும் ஏற்கெனவே பார்த்தோம்.  விமானத்தின் கலசங்கள்காயத்ரீ தேவியின் தலைப் பகுதியாகக் கூறப் படுகிறது.  ஸ்ரீரங்க மண்டபம் காயத்ரீ மண்டபம் என்றும் அழைக்கப் படுகிறது.  அங்குள்ள 24 தூண்களும் காயத்ரீயின் 24 அக்ஷரங்கள் எனவும், கோபுரங்கள் வேத தேவதைகளாகவும்,  சாஸ்திரங்கள் அங்குள்ள பொருட்கள், செயல்களாகவும் கூறப் படும்.

இதே போல் கோயிலின் ஏழு பிரகாரங்களும் ஏழு உலகங்களைக் குறிக்கும்.  அவை யாவன:

பூலோகம்=  மாடங்கள் சூழ்ந்துள்ள சுற்று

புவர்லோகம்= திரிவிக்கிரம சோழன் சுற்று

ஸுவர்லோகம்= அகளங்கன் என்னும் கிளிச் சோழன் சுற்று

மஹர்லோகம்= திருமங்கை மன்னன் சுற்று

ஜநோலோகம்=  குலசேகரன் சுற்று

தபோலோகம்=  ராஜ மகேந்திர சோழன் சுற்று

ஸத்யலோகம்(கர்பகிருஹம் உள்ள சுற்று) = தர்மவர்ம சோழன் சுற்று

மேற்கண்டவர்கள் அந்த அந்தப் பிரகாரங்களைச் செப்பனிட்டதால் அவரவர் பெயரை வைத்து அழைக்கும் வழக்கம் ஏற்பட்டதாகவும் அறிகிறோம்.  இதைத் தவிர இந்த ஏழுவிதச் சுற்றுக்களையும் அடைத்தபடி வளைந்து வரும் நெடுஞ்சுற்று ஒன்று உள்ளது.  இதற்கு அடைய வளைந்தான் எனப் பெயர்.  இந்தச் சுற்றிலிருந்து மாடங்கள் உள்ள சுற்றுக்கு வருவதற்கு ஏற்றவகையில் நான்கு திசைகளிலும் திட்டி மூலை என்று வாசலைத் திறந்து வைத்திருக்கிறார்கள்.  ஏழாவது சுற்று, அடையவளைந்தான் சுற்று மற்றும் ஆறாவது சுற்றில் ஆகிய மூன்றிலும் மக்கள் பெருமளவு  அந்நாட்களிலும், இந்நாட்களிலும் வாழ்ந்து வருகின்றனர். 

கருவறை மேற்கு, கிழக்கு, வடக்குத் திசைகளில் சதுரமான திருவுண்ணாழியால் சூழப்பட்டுள்ளது.  அதிலே எம்பெருமானார் சயனித்த கோலத்தில் காட்சி அளிக்கிறார்.  குழைகாரை எனப்படும் சுதை வேலைப்பாட்டில் வலப்பக்கமாய்ச் சாய்ந்த வண்ணம் கிட்டத்தட்ட 21 அடி நீளத்துக்குப் புனுகுச் சட்டம் எனப்படும் தனிச் சிறப்பான தைலக்காப்புச் சார்த்தப் பட்டுத் தனியானதொரு ஒளியோடும், மெருகோடும் விளங்குகிறார்.   தன் வலக்கையைத் தலையைத் தாங்கிய வண்ணம் வைத்தும், இடக்கையால் திருவடியைச் சுட்டிக் காட்டிய வண்ணமும், தெற்கு முகமாக இலங்கையை நோக்கியபடி அருள் பாலிக்கிறார் மூலவர் பெரிய பெருமாளான ஸ்ரீரங்கநாதர்.  இவருக்குப் பெரிய பெருமாள் என்ற திருநாமம் மட்டுமே உண்டு.    ஐந்து தலைகள் கொண்ட ஆதிசேஷன் பஞ்ச இந்திரியங்கள் எனவும், அந்த பஞ்ச இந்திரியங்களையும் அடக்கியே  எம்பெருமானார் யோகநித்திரை கண்டருளுவதாகக் கூறுவர்.  அவர் அருகே உற்சவரான நம்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராகக் காட்சி அளிக்கிறார்.  உற்சவர் முதலில் அழகிய மணவாளர் என்று அழைக்கப் பட்டுப் பின்னர் நம்பெருமாள் என இப்போது அழைக்கப் படுகிறார்.  அது பின்னர் நம்பெருமாள் என மாறியது ஒரு பெரிய வரலாற்றை உள்ளடக்கிய கதை ஆகும்.  அதையும் விரைவில் பார்ப்போம்.

சுதையினால் ஆன எம்பெருமானுக்குத் திருமஞ்சனம் செய்விக்க இயலாது என்பதால் வருடம் ஒரு முறை ஆனி மாதம் ஜேஷ்டா நக்ஷத்திரத்தில் காவிரியில் இருந்து யானை மீது தங்கக் குடங்களில் நீர் எடுத்து வந்து உற்சவருக்கு அபிஷேஹம்  செய்யப்படும்.   அந்தச் சமயம் மூலவருக்கு எண்ணெய்க் காப்புச் சார்த்தித் திருவடி வரை ஒரு மெல்லிய வேஷ்டியால் மூடி விடுவார்கள்.  இது நாற்பத்தைந்து நாட்கள் அல்லது நாற்பத்தெட்டு நாட்கள் வரை இருக்கும்.  அடுத்த நாள் பெரிய திருப்பாவாடைத் தளிகை என்னும் நிவேதனம் பெரிய பெருமாள் சந்நிதி முன் சேர்ப்பிக்கப் படும்.  அந்தப் பிரசாதத்தில் பலாச்சுளை, தேங்காய், மாங்காய், நெய், தேன், வாழைப்பழம் போன்றவை சேர்த்து உப்பும் சேர்த்திருப்பார்கள்.  பெருமாளுக்கு அமுது செய்த பின்னர் பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படும்.  இந்த ஜேஷ்டாபிஷேஹம் ஸ்ரீரங்கம் பெரிய கோயிலைத் தவிரவும் அதைச் சுற்றி உள்ள மற்ற திவ்ய தேசங்களிலும் ஸ்ரீரங்கத்தில் நடந்த பின்னர் நடைபெறும்.  அவை குறித்துத் தனியாகப் பார்ப்போம்.   ஆனி மாதம் ஜேஷ்டா நக்ஷத்திரத்தில் ஆரம்பிக்கும் இது ஆடிப் பதினெட்டு அன்று நாற்பத்தெட்டு நாட்கள் பூர்த்தி ஆனால் அல்லது ஆடி மாதம் இருபத்தெட்டு வரையில் என்ற கணக்கில் இருந்து வரும்.  பின்னர் ஆடிப் பதினெட்டு விழாவில் காவிரி அம்மனுக்குச் சீர் கொடுப்பார் பெருமாள்.  ஒரு பட்டுப்புடவையில் மாலை, தாலிப்பொட்டு போன்ற மங்கலப் பொருட்களைப் போட்டுக் கட்டி யானையின் மேல் ஏற்றிக் காவிரியில் விடுவார்கள். 

இங்கு காவிரியைத் தவிரவும் ஒன்பது புண்ணிய தீர்த்தங்கள் உண்டு.  தற்போது நல்ல நிலைமையில் இருப்பது சந்திர புஷ்கரிணி மட்டுமே.  மற்றவை சரியான பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்து போயிற்று என்பது வருத்தத்துக்கு உரியதாகும்.  மற்றத் தீர்த்தங்களின் பெயர்கள் வருமாறு:

சந்திர புஷ்கரிணி, வில்வ தீர்த்தம், நாவல் தீர்த்தம், அரசு தீர்த்தம், புன்னை தீர்த்தம், மகிழ தீர்த்தம்,  புரசு தீர்த்தம்,  கடம்ப தீர்த்தம், மாதீர்த்தம் எனக் கூறுவார்கள்.  சந்திர புஷ்கரிணியைச் சுற்றி எட்டுத் திசைகளில் இவை அமைந்திருந்ததாய்க் கேள்விப் படுகிறோம்.

5 comments:

ஸ்ரீராம். said...

//
நான் பார்க்க வேண்டும் என நினைத்த பெரியவர் உபந்நியாசங்களாகச் செய்து வைத்திருப்பதால் அதைப் போட்டுக் கேட்டுக் கொள்கிறேன். //

கிருஷ்ணப் ப்ரேமி உபன்யாசங்கள்?

அடையவளைந்தான் என்ற வார்த்தைப் பிரயோகத்தை சுஜாதா எழுத்துகளில் அடிக்கடி பார்த்தி..படித்திருக்கிறேன்!

மற்ற திவ்யதேசங்களிலும் ஸ்ரீரங்கத்தில் நடந்தபின்னர் நடைபெறும் என்றால் அதே சமயமா, வேறு காலங்களிலா?

திண்டுக்கல் தனபாலன் said...

அறியாத பல விசயங்கள்...
விளக்கம் அருமை... நன்றி...

Geetha Sambasivam said...

கிருஷ்ண ப்ரேமி இல்லை ஸ்ரீராம், இவர் ஸ்ரீவைணவர். இணையத்தில் இவருடைய உபந்நியாசங்களின் சுட்டி கிடைக்கிறது. உங்களுக்கும் ஆர்வம் எனில் தனி மடலில் அனுப்பறேன். :))))

மற்ற திவ்யதேசங்கள் என்பது இங்கே ஸ்ரீரங்கத்தைச் சுற்றி இருக்கும் மற்ற ஆறு கோயில்கள் மட்டுமே.முதலில் ஸ்ரீரங்கத்தில் ஆனதும் அந்தக் கோயில்களில் நடைபெறும். அடுத்தடுத்த பதினைந்து, இருபது நாட்களுக்குள்ளாக.

Geetha Sambasivam said...

தொடர்ந்து வந்து ஊக்கம் கொடுப்பதற்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்.

மாதேவி said...

"ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!" ஆரம்பத்திலிருந்து படித்தேன். அருமை.