ஸ்ரீரங்கத்து அரங்கன் நம்பெருமாளாயிற்றே. ஆனால் இவன் அழகிய மணவாளன் என்றே அழைக்கப் பட்டிருக்கிறான். நம்பெருமாள் என அழைக்கப்படும் காரணத்தை வரும் நாட்களில் தெரிந்து கொள்வோம். இப்போ இந்த அழகிய மணவாளன் செய்த ஒரு காரியத்தைச் சொல்லியே ஆகணும். இவனோ ஊர்சுத்தி. ஆங்காங்கே இருக்கும் பெண்கள், ஆண்கள் அனைவரும் தன் பரிமள கஸ்தூரி வாசனையினாலேயே வசீகரிப்பவன். இப்படி இருந்த அரங்கன் ஒரு நாள் உலாப் போகையில் இளவரசி ஒருத்தி அவனைக் கண்டாள். கண்டது முதல் அவன் நினைவாகவே இருந்தாள். மணந்தால் அரங்கன்; இல்லையேல் திருமணமே வேண்டாம் என்றிருந்தாள். அரங்கனுக்குத் தான் வியவஸ்தையே இல்லையே! அவன் பாட்டுக்குத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதித்தான். என்ன இது? ஏற்கெனவே ரங்கநாயகி நாச்சியார் இருக்கையில் இன்னொரு திருமணமா? ஆஹா! ஆம், ஆம், இன்னொரு திருமணம் தான், அதுவும் ரங்கநாயகிக்குத் தெரியாமல். இது என்ன புதுக்கதை?
சோழர்களுக்கு உறையூர் தலைநகரமாக இருந்த காலம் அது. நந்த சோழன் என்னும் மன்னன் நாட்டை ஆண்டு வந்தான். அவனுக்கு மக்கட்பேறே இல்லாமல் இருக்க ஸ்ரீரங்கத்து அரங்கனை வேண்டினான். அரங்கனோ இப்பிறவியில் அவனுக்கு மக்கட்பேறுக்கு வாய்ப்பில்லை; எனினும் நம் பக்தன் அவன், ஆகையால் அவனுக்கு அருள் செய்ய வேண்டும் என எண்ணினான். திருமகளைக் கடைக்கண்ணால் நோக்க அவளும் புரிந்து கொண்டாள். தன் அம்சத்தை அவனுக்கு மகவாய்த் தரத் திருவுளம் கொண்டாள். ஓர் நாள் உத்தியானவனத்தில் சுற்றி வந்த மன்னன் கண்களில் தாமரை ஓடையில் ஒரு பெரிய அதிசயத் தாமரைப் பூவும், அதில் இருந்த ஒரு குழந்தையும் கண்களில் பட்டது. மன்னனுக்கு ஆச்சரியம். குழந்தையைத் தன்னிரு கைகளிலும் தூக்கி எடுத்து மார்போடு சேர்த்து அணைத்தான். குழந்தை, “களுக்”எனச் சிரித்தது. கமலப் பூவில் கண்டெடுத்த குழந்தைக்குக் கமலவல்லி எனப் பெயரிட்டு வளர்த்து வந்தான். மன்னன் மனம் மகிழ்ந்தது.
விரைவில் மணப்பருவம் எய்திய கமலவல்லி தான் அரங்கனின் உலாவைக் கண்டாள்; அவன் பால் அவள் மனம் சென்றது இயற்கை தானே! திருமகளின் அம்சமான அவள் சேர வேண்டிய இடத்திற்கு அவள் மனம் சென்றது அதிசயம் அல்லவே. ஆனால் இது எதுவும் அறியா மன்னன் மகளின் வருத்தம் கண்டு தானும் வருந்திக் காரணம் கேட்டறிந்தான். இது நடக்கக் கூடியதா என எண்ணி வியந்தான். கவலையில் ஆழ்ந்த மன்னன் கனவில் அரங்கன் தோன்றி, “உன் மகள் வேறு யாருமல்ல. திருமகளே உனக்கு மகளாய் அவதரித்துள்ளாள். அவளை மணப்பெண்ணாக அலங்கரித்து ஸ்ரீரங்கம் அழைத்து வருவாய். நான் அவளை ஏற்றுக்கொள்வேன்.” என்றான். அரங்கன் சொல்படியே மன்னன் தன் மகளை அழகிய மணமகளாய் அலங்கரித்து திருவரங்கம் அழைத்து வர, அரங்கன் சந்நிதிக்கருகே மணமகள் மறைந்தாள். இதைத் தன் கண்களால் கண்ட மன்னன் வியந்தான். திருமகளையே தன் மகளாகத் தான் வளர்த்து வந்ததையும், அரங்கனே தனக்கு மருமகனாக வாய்த்த பேறையும் எண்ணி மனம் சிலிர்த்து ஸ்ரீரங்கம் கோயிலுக்குப் பற்பல திருப்பணிகள் செய்தான். என்றாலும் அவன் மனம் அமைதியுறவில்லை.
பாசத்துடன் தான் வளர்த்த தன் மகளுக்கென ஒரு அழகிய கோயிலை உறையூரில் எடுப்பித்தான். பெருமாளை வேண்டிக்கொள்ள அவரும் அழகிய மணவாளராக அங்கே எழுந்தருளியதாகக் கோயில் வரலாறு. இதன் பின்னர் உறையூர் மண்மாரியால் மூடிய பின்னர் மீண்டும் புனர் நிர்மாணம் செய்யப் பட்டபோது எழுப்பிய கோயிலே இப்போது நாச்சியார் கோயில் என்னும் பெயரில் உறையூரில் வழங்குவதாய்ச் சொல்கின்றனர். அரங்கன் அங்கே அழகிய மணவாளனாக எழுந்தருளி இருக்கின்றான். இந்த நாச்சியாரின் திருநக்ஷத்திரமான ஆயில்யத்தன்று பங்குனி மாதம் இவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டி ஸ்ரீரங்கத்திலிருந்து நம்பெருமாள் என்னும் அழகிய மணவாளர் ஒவ்வொரு வருடமும் உறையூருக்குச் செல்கிறார். பங்குனி மாதம் ஆயில்ய நக்ஷத்திரத்தன்று அங்கே கமலவல்லி நாச்சியாருடன் சேர்த்தி சேவை நடைபெறும். இதை முடித்துக் கொண்டு அரங்கன் ஸ்ரீரங்கம் திரும்புகிறார். இதெல்லாம் ரங்கநாயகிக்குத் தெரியாது. தெரிஞ்சதுனா அவ்வளவு தான். இனிமேத் தான் இருக்கு அவருக்கு!
படம் உதவி: கூகிளார்.
12 comments:
அடடா... இப்படி செய்து விட்டாரே... இவ்வளவு செய்தவர் ரங்கநாயகியை சமாளிக்க தெரியாதா என்ன...?
பட்சாச்!
அதுதான் வாங்கப் போகிறாரே!! திரும்பிப் போகும் போது தெரியும் சேதி. ஐயா படப் போகும் பாடு.
ஆமாம் எல்லாரும் அரங்கன் சந்நிதியில் மறைந்துவிடுகிறார்களே:)
இன்னுமெத்தனை நங்கைகள் அங்கெ ஒளிந்தனரோ. ரங்கா உன் லீலைகள் கண்ணனை மிஞ்சும் போலிருக்கிறதே.
அரங்கனின் லீலைக்கா பஞ்சம்!
நாச்சியார் கோவில் அழகான கோவில். சேர்த்திக்கு மறுநாள் தான் நாங்கள் சென்றது.
வாங்க டிடி, ரங்கநாயகியை நல்லாவே சமாளிப்பார் பாருங்க. :))))
வா.தி. உங்களை இந்த வலைப்பதிவிலே பார்த்ததும் மயக்கம் போட்டு விழுந்தவ, இப்போத்தான் எழுந்தேன். :P :P :P :P
வாங்க வல்லி, நல்லா வாங்குவார். :)))))
வாங்க கோவை2தில்லி, ஸ்ரீரங்கமா, தில்லியா? வரவுக்கும் கருத்துக்கும் நன்றிம்மா.
பரீட்சை இன்று தான் தொடங்கியுள்ளது...:) ஸ்ரீரங்கத்தில் தான் வாசம்...:)
படித்தேன். உறையூர்தான் கும்பகோணம் அருகிலுள்ள நாச்சியார் கோவிலா? தாண்டித் தாண்டி பஸ்ஸில் சென்றுள்ளேனே தவிர, கோவில் இறங்கிப் பார்த்ததில்லை. ஆனால் நீண்ட நாளாய் ஆர்வம் இருக்கிறது. :)
வாங்க கோவை2தில்லி. மறு வரவுக்கு நன்றி.
வாங்க ஶ்ரீராம், வருகைக்கு நன்றி. உறையூர் திருச்சிக்கு மிகப் பக்கத்திலே. கும்பகோணம் அருகிலுள்ள நாச்சியார் கோயில் வேறு , கல்கருடன் அங்கே பிரபலம். இதே ஆன்மிகப் பயணம் வலைப்பதிவில் அந்தக் கோயிலைக் குறித்தும் எழுதி இருப்பேன்.
இந்தக் கமலவல்லித் தாயார் கோயிலை இங்கே நாச்சியார் கோயில் என்று அழைக்கின்றனர். இது இரண்டாவது திவ்ய தேசம்.
Post a Comment