ரங்க நாயகியின் சந்நிதி. உள்ளே அவளுக்குள் ஒரே கவலை. அரங்கனை இரண்டு நாட்களாய்க் காணோமே? அவள் படிதாண்டாப்பத்தினி தான். வில்வமரத்தடியில் குடி கொண்டிருக்கும் அந்த சந்நிதியைத் தாண்டி அவள் வரவே மாட்டாள். அதுக்காக அரங்கனைப் பத்தித் தெரியாமல் இருக்குமா? அவள் மனம் அலை பாய்ந்தது. பழைய நினைவுகள் அனைத்தும் குமுறிக் கொண்டு வந்தன. ம்ம்ம்ம்ம்ம்
"எங்கேயோ ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள்னு ஒருத்தி வந்தாள். என்னவெல்லாமோ பாடல்களைப் பாடி அரங்கனை மயக்கிக் கடைசியில் திருமணமும் செய்து கொண்டாள். அப்புறமாத் துலுக்க நாச்சியாராம். யாரோ ஓர் சுல்தானுக்குப் பெண்ணாம். இளவரசியாம். அவளை இங்கே வரவைத்து அவளையும் தன்னோடு ஐக்கியப் படுத்திக் கொண்டதோடு அல்லாமல், அவங்க தேசத்து ராஜாக்கள் கொடுத்தாங்கனு தினம் தினம் லுங்கி கட்டல், சப்பாத்தி சாப்பிடல்னு ஆயிண்டிருக்கு. இது போதாதா இந்த மனுஷனுக்கு! பெயரும் வைச்சாங்க பார்! அழகிய மணவாளனாம்! யாருக்கு? எனக்குத் தான் மணவாளன். எவளோ ஒரு கிழவி கண்களுக்கு இவர் அழகிய மணவாளனாத் தெரிஞ்சிருக்கார். உடனே எல்லாருக்குமா அழகிய மணவாளர்?? "
"போறாததுக்கு இந்தப் பரதக் கண்டம் முழுசும் சுத்தினேன்னு பெருமை வேறே. அங்கேருந்து இவர் திரும்பி வர வரைக்கும் என் பக்தன் வேதாந்த தேசிகன் புதைத்து வைத்திருந்த வில்வ மரத்தடியிலிருந்து நான் வெளியே தலையைக் காட்டி இருப்பேனா? அரங்கனையே நினைத்துக்கொண்டு இப்போது எங்கே இருக்கிறாரோ, எப்போது இங்கே வருவாரோ அன்னிக்குத் தான் வெளியே தலையைக் காட்டணும், நாம் இருக்கும் இடத்தைக் காட்டித் தரணும் என அப்படி ஒரு ஒருமித்த சிந்தனையோடு அரங்கன் வந்தால் தான் வெளியே வரது; நாம இருக்குமிடத்தைச் சொல்லுவது என்றிருந்தேன். இந்த மனிதனும் பலருடைய பிரயத்தனங்களின் பேரில் தான் ஒளிஞ்சிருந்த இடத்திலிருந்து ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தார். அப்போவே எனக்குப் புரிஞ்சு போச்சு இவர் தான் அழகிய மணவாளர்; என் அருமை மணவாளர்னு. ஆனால் அறுபது வருடத்துக்கும் மேலே ஆனபடியாலே இந்த ஜனங்களுக்குப் புரியலை. இவரோட இடத்திலே இருக்கிறவர் புது ஆள்னு சொல்லியும் தெரியலை. அதுக்கப்புறமா இவரோட பரிமள கஸ்தூரி வாசனையைத் தெரிஞ்சவங்க இருக்காங்களானு கேட்டு, கடைசியிலே அரங்கனின் அபிஷேஹத் துணிகளைத் துவைத்து வந்த பரம்பரையில் இப்போது உயிரோடு இருக்கும் வயதான ஒரே ஒரு “ஈரம் கொல்லி”யைக் கண்டு பிடிச்சு, அவனும் வந்து இவருக்கும் திருமஞ்சனம் செய்யச் சொல்லி, புதுசா ஊர்க்காரங்க பிரதிஷ்டை பண்ணி வைச்சாங்களே அரங்கன்னு அவருக்கும் திருமஞ்சனம் செய்யச் சொல்லி அந்த ஆடையைத் தன்னிடம் கொடுத்தால் கண்டுபிடித்துச் சொல்வதாய்ச் சொன்னான். அப்படியே செய்து இரண்டு ஈர ஆடைகளையும் அந்த ஈரம் கொல்லியிடம் கொடுத்தாங்க.
அந்த ஈரம் கொல்லியும் இரண்டு ஆடையையும் வாங்கிக் கொண்டு முதலில் புது ஆளோட ஆடையின் அபிஷேஹ தீர்த்தம். பிழிந்து குடித்துப் பார்த்து முகத்தைச் சுளிச்சான். அடுத்துத் தான் நம்ம ஆளோட ஆடையின் அபிஷேஹ தீர்த்தம். அதை எடுத்துப் பிழிஞ்சு குடிச்சான். குதிக்க ஆரம்பிச்சுட்டான். இவர் தான் நம் பெருமாள்; நம்பெருமாள்னு சொல்லிக் கூத்தாடி ஆடிப் பாடினான். அன்னைக்கு வைச்ச பெயர் இவருக்கு நம்பெருமாள்னு. அந்தப் பெயர் நிலைச்சது. சரி இனியாவது நம்மளோடயே இருப்பார்னு நினைச்சேன். ஆனால் ஒவ்வொரு உற்சவத்திலும் இந்த மனுஷன் ஆண்டாளை வெளியே சந்நிதி வைச்சுக் குடியேற்றி அங்கே மாலை மாற்றிக்கொண்டு வந்துடறார். சரி போனாப் போறதுனு அனுமதிச்சா இப்போ இரண்டு நாட்களா ஆளையே காணோமே! எங்கேனு விசாரிச்சதிலே உறையூருக்குப் போயிருக்காராம். வரட்டும்; வரட்டும் ஒரு கை பார்த்துடறேன். யாரோ கமலவல்லியாம்; ராஜாவின் பெண்ணாம். அவள் என்னோட அம்சமாமே? இருக்கட்டுமே! அதுக்கு அவளைக் கல்யாணம் செய்துக்கறதா? ம்ஹூம், இதை நான் அநுமதிக்க மாட்டேன். அந்த மநுஷன் வரட்டும். உள்ளேயே விடப்போறதில்லை.
திருட்டுத்தனமாக் கல்யாணம் செய்துட்டு அதை என்னிடமிருந்து மறைக்கப் பார்ப்பார். எப்படியாவது கண்டு பிடிச்சுடணும்.
படம் உதவி கூகிளார்.
6 comments:
ஐயோ...! போனாப் போறதுனு விட்டது தப்பாப் போச்சே...!
எங்களுக்கும் பயமா இருக்கே... என்ன நடக்கப்போகுதோ...?
இருக்கு இருக்கு ஐய்யாவுக்கு.
ரங்கநாயகி கதவைத் திறக்காதே:)
எதால்லெல்லாம் அடி வாங்கப் போறாரோ!
டிடி,
வல்லி,
கோவை2தில்லி,
தொடர்ந்து படிங்க. :)))) நன்றி.
அப்பாடா.... அழகிய மணவாளர் பெயர்க் காரணமும், நம்பெருமாள் பெயர்க் காரணமும் தெரிந்து கொண்டேன். என்னதான் கதைக்காக என்றாலும், நம் அம்சம் என்று தெரிந்தேயும்....
வாங்க ஸ்ரீராம், இதை ரங்க புராணத்திலே எழுதுகையில் தான் எழுதணும்னு இருந்தேன். ஆனால் இப்போ என்னையும் அறியாமல் எழுதி விட்டேன். :))))
//என்னதான் கதைக்காக என்றாலும், நம் அம்சம் என்று தெரிந்தேயும்..//
:))))அதை அப்படி எடுத்துக்கொள்ளக் கூடாது. ஜீவாத்மா ஒன்று பரமாத்மாவோடு சேரத் தவிக்கிறது என்ற கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். வைணவத்தில் எம்பெருமான் ஒருவனே ஆண்மகன் என்று சொல்லுவோர் நிறைய உண்டு. பல ஆழ்வார்களும் தங்களைப் பெண்ணாகப் பாவித்துப் பாடி இருப்பார்கள். அவ்வளவு ஏன்? ஆண்டாள் பாடியவை கூட ஒரு பெண்ணால் பாடப்பட்டிருக்கக் கூடியவை அல்ல. பெரியாழ்வாரே இந்தப்பெயரில் பாடி இருப்பார் என திரு ராஜகோபாலாசாரியார் என்னும் ராஜாஜி அவர்களின் கூற்று. :))))ஒரு பெண்ணால் இப்படி எல்லாம் பாட முடியாது என்பது அவர் கருத்து.
Post a Comment