எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, August 23, 2014

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் - திருக்கோயிலின் வழிபாட்டு முறைகள் - பகுதி 3




4. அடுத்து வருபவர்கள் திருவரங்கத்திலேயே பிறந்த உள்ளூரார் எனப்படும் பிராமணர்கள் ஆவார்கள். ஶ்ரீராமாநுஜரின் சீடர்களான இவர்கள் மூலவருக்கும் வீதி உலாவுக்குச் செல்லும் உற்சவருக்கும் கைங்கரியம் செய்யும் பாக்கியம் அமையப் பெற்றவர்களாவார்கள்.  வழிபாட்டுக்குரிய புனிதப் பாத்திரங்கள், சுவாமியின் பட்டாடை, பருத்தி ஆடை, பஞ்சணைகள், விசிறி, குடை போன்றவை, தோரணங்கள், உற்சவர் உலாச் செல்கையில் உடன் எடுத்துச் செல்லப்படும் வெற்றிலைப் பேழை, வளைந்த கூர்வாள் முதலியனவற்றைப் பாதுகாத்து வருவதும், உரிய சமயங்களில் அவற்றை எடுத்துச் செல்வது இவர்கள் பணியாகும்.


தினந்தோறும் அனைத்துச் சடங்குகள், விழாக்காலங்கள், வீதி உலாச் செல்லும் காலங்கள் போன்ற சம்யங்களில் இவர்கள் பொறுப்பு சுவாமிக்குச் சந்தனம், சுவை மிக்க இனிய பலவகைப் பணியாரங்கள் அளிப்பது ஆகியன ஆகும். திருமஞ்சன நீரில் நறுமணம் கலந்து வைப்பதும் இவர்கள் வேலை. ஆலவட்டம் எடுத்தல், சுவாமியின் திருவடிகளில் நீர் சொரிதல், நெற்றியில் வைணவச் சின்னமான புனித நாமத்தைத் தரிப்பதற்கு முன்னர் வெற்றிலை, தாம்பூலம் சுவாமிக்கு வழங்குதல், திருமடைப்பள்ளியிலிருந்து நிவேதனங்களைக் கொண்டு வந்து சுவாமிக்குப் படித்தல், புதிதாகத் தோய்த்த ஆடைகள் அணிவித்தல், துளசி மாலைகள், சந்தனம் சாத்துதல் ஆகியனவும் இவர்கள் வேலையே.  வேதம், திவ்யப்ரபந்தம் ஓதுவோர் முன்பாக ஒரு பாத்திரம் நிறையத் தேங்காய்ப் பாலைச் சமர்ப்பிப்பார்கள். சுவாமிக்கு நிவேதனம் ஆன பின்னர் விளக்குகளை மாற்றி அமைப்பார்கள்.

நம்பெருமாள் உறையூர் சென்று திரும்பும்போதும், மீண்டும் இங்கே ஶ்ரீரங்கத்தில் சேர்த்தி சேவை நடைபெறும்போதும் அணிவகுத்து ஆலவட்டம் போடுவது இவர்கள் கடமை.  முக்கியமான விசேஷங்களின் போது கோயிலின் தலைமை ஆட்சியாளரைக் கௌரவித்து அவருக்காகச் சிறப்பு அர்ச்சனைகள் செய்து பிரசாதங்கள் அளித்து வாழ்த்துவதும் இவர்கள் பொறுப்பு.  பின்னர் வந்த காலத்தில் இந்தப் பணியைப் பலருக்கும் பகிர்ந்து அளித்தாலும் முக்கியமான பொறுப்புகளைத் தங்கள் வசமே வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

5.  அடுத்து வருபவர்கள் திருப்பதிகம் பாடுவோரும், இசை வாணர்களும் ஆவார்கள்.  இவர்களை விண்ணப்பம் செய்பவர்கள் என அழைப்பார்கள்.  வீணை வாசித்தல், வேதம் ஓதுதல், பிரபந்தங்களைப் பாடுதல், இசை பாடுதல் ஆகியவற்றை இறைவன் முன்னர் எல்லாச் சமயங்களிலும் பாடுவார்கள்.  தெய்வீக காரியங்களில் இசைப்பாடல்கள் மிக முக்கியமானவை என்பதால் இவர்களின் தொண்டு மிகச் சிறப்பாக நடைபெற்று வந்தது.  இசைக்கலை மட்டுமில்லாமல், சாத்திரங்களிலும் இவர்கள் தேர்ச்சியும், பயிற்சியும்  பெற்றிருந்தார்கள்.  ஆகவே கோயில் கைங்கரியங்களில் மிகவும் உயர்ந்த இடத்தை இவர்கள் பெற்றிருந்தனர். சுவாமிகளின் திருமுன்னர் நாட்டிய மங்கைகள் நடனமாடும்போது இவர்கள் பாடுவது உண்டு. இவர்களுக்குக் கோயிலில் தனியான மரியாதைகள் உண்டு.

6. அடுத்து வருபவர்கள் திருக்கரகக் கையார் என்பவர்கள்.  பெருமாளின் வழிபாடுகளில் நேரடியாகவும், நிலையாகவும் தொடர்புடையவர்கள். சுவாமிகளின் பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் சரக்கறைக்குப் பக்கத்திலுள்ள சேம அறையிலிருந்து விடியற்காலையிலேயே தீர்த்த பாத்திரங்களை எடுத்துக் கொண்டு காவிரிக்குச் சென்று இரண்டு நாட்களுக்குத் தேவையான நீரை அவற்றில் முகந்து கொண்டு கோயிலின் யானை மீது வைத்துக் கோயிலுக்குக் கொண்டு வருவது இவர்களின் முக்கியக் கடமையாகும்.  ஒவ்வொரு நாளும் ஐந்து பாத்திரங்களில் இந்த நீர் பயன்படுத்தப்படும்.  அவற்றில் கொண்டு வந்த நீரை நிரப்பி வைப்பது இவர்கள் வேலை.  விடியற்காலையில் சுவாமி முகம் கழுவி தந்தசுத்தி செய்கையிலும், பின்னர் தாம்பூலம் வழங்குகையிலும், சுவாமிக்குப் பாத பூஜை நடைபெறும்போதும் தீர்த்த பாத்திரங்களை ஏந்திய வண்ணம் இவர்கள் நிற்பார்கள்.

சுவாமிக்குப் பூமாலைகள் தொடுத்து அளிப்பவரின் கைகளில் இந்த நீரை விட்டு சுத்தி செய்வதும் இவர்கள் வேலை.  முன்னால் ஒரு காலத்தில் இவர்களே பூமாலைகளைக் கட்டி, நறுமணம் உள்ள ஆரங்களைப் புனைவதும் இவர்கள் கடமையாக இருந்து வந்திருக்கிறது.  பின்னர்  நிகழ்ந்த அரசியல் மாற்றங்களால் இந்த வேலைகள் பிராமணர் அல்லாத ஊழியர்களுக்கு வழங்கப் பட்டிருக்கிறது.

No comments: