எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, August 30, 2014

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! திருக்கோயில் வழிபாட்டு முறைகள் -- பகுதி 7

கோயில் ஆட்சியாளரின் பணிகளைக் குறித்துப் பார்ப்போமா?  கோயில் ஆட்சியாளர் தினம் தினம் வைகறையில் நீராடிய பின்னர் கோயிலுக்குச் சென்று தன் வேலையுடன் தொடர்புடைய தன் உதவியாளர்களைக் கண்டு அன்றாட வேலைகளைப் பிரித்துக் கொடுக்க வேண்டும்.  இரண்டாம் பிரகாரத்தின் கொடிக்கம்பத்தடிக்குச் சென்று வழிபட்டுப் பின் திருமடைப்பள்ளியைப் பார்வையிட்டுத் தேவையான பொருட்கள் இருக்கின்றனவா என விசாரிப்பது, சரக்கு அறையில் புதிதாகச் சரக்குகள் வந்தால் அவற்றைச் சரிபார்ப்பது, கோயிலுக்குத் தேவையான பொருட்கள் சரிவரக் கொடுக்கப்படுவதா எனப் பார்ப்பது, நறுமணப் பொருட்கள் எவ்வளவு தேவையோ அவற்றைச் சரியான முறையில் கொடுக்கிறார்களா என்று பார்ப்பது, இத்தகைய வேலைகளைச் சரிவரச் செய்யும்படி ஊழியர்களுக்குப் பங்கிட்டுச் செய்ய வைப்பது, திருநந்தவனம் சென்று, அன்றாட வழிபாட்டுக்குத் தேவையான பல்வேறு பூக்களைத் தேர்ந்தெடுப்பது போன்றவற்றை முடித்துக் கொண்டு பின்னர் வழிபடுவதற்குச் செல்வார்.

வழிபாடுகள் முடிந்ததும், கோயில் ஊழியர்களின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டத்திற்குத் தலைமை தாங்கி, அன்றாட வேலைகள் எவ்வாறு நடக்கின்றன என்றும், இனி செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்தும் ஆலோசிப்பதோடு ஊழியர்களை ஊக்கப்படுத்தும் வார்த்தைகளையும் கூறி உற்சாகப்படுத்துவதும் அவர் வேலை.  பின்னர் அன்றாட வழிபாடுகள் சரிவரச் செய்கின்றனரா என மேற்பார்வை பார்ப்பார்.  பகல் நிவேதனம் முடிந்து கோயில் நடை சார்த்தினால் அவர் தன் வீட்டுக்குச் சென்று உணவு உண்டு ஓய்வெடுப்பார்.  பிற்பகலில் பல்வேறு சடங்குகள், விழாக்கள் போன்றவற்றை ஏற்பாடுகள் செய்து நடத்துவது அவர் வேலையாக இருக்கும்.

ஒவ்வொரு சடங்கையும், விழாவையும் சரிவரச் செய்கின்றனரா என மேற்பார்வை பார்ப்பது அவர் முக்கிய வேலை.  நம்பிகள், பிராமணர்கள் நீங்கலாக, இத்துறையில் மற்ற அனைவரையும் இவரே கண்காணிப்பார். கருவூலத்தில் வைக்கப்படும் பொருட்களின் மேல் இலச்சினை பொறிப்பதும் இவர் வேலை.  கோயிலின் உள்துறை ஊழியத் தலைவர்கள் இவருடைய நேரடிக் கண்காணிப்புக்கும், ஆணைக்கும் உட்பட்டவர்கள். இவருக்கு உதவியாக இருப்பவரை ஏகாங்கி என அழைப்பார்கள். இவருக்குக் கோயிலில் மிக உயர்ந்த மரியாதைகளைச் செய்வார்கள்.

இவருக்குத் துணையாக நான்கு உதவி ஆட்கள் இருப்பார்கள்.  இவர்கள் கோயிலின் ஆட்சிக்கு உட்பட்ட கட்டிடங்கள், அதன் புறம்பே உள்ள கட்டிடங்கள் ஆகியவற்றின் பொறுப்பாளர்கள் ஆவார்கள்.  இவர்களில் சரக்கறைக்கு எனத் தனியாக இருக்கும் தலைவர் ஆட்சியாளர் கோயிலுக்கு வரும் முன்னரே சரக்கறைக்குச் சென்றும், திருமடைப்பள்ளிக்குச் சென்றும் அன்றாடத் தேவைக்கான அரிசி, பருப்பு, கோதுமை, தானியங்கள், பழங்கள், தயிர், நெய், பால், காய்கறிகள், தேங்காய் போன்றவை கொடுத்திருக்கின்றனரா எனச் சரிபார்ப்பார்.  கோயில் நிலங்களில் இருந்து விளையும் நெல் வகைகள், புளி, மாங்காய், மாம்பழம், தேங்காய் போன்றவை மற்றும் பல்வேறு விளை பொருட்களையும்  சரி பார்ப்பார். கோயிலின் சரக்கறைக்குக் கொண்டுவரப் படும் எண்ணெய் வித்துக்களை எண்ணெய் அறைக்குக்கொண்டு சென்று உடைத்தோ அரைத்தோ பயன்படுத்தப் படுவதற்கான ஏற்பாடுகளைக் கவனிப்பார். சுவாமி திருவீதி வலம் வருவதற்கான வாகனங்களைத் தயாரித்தல், குடை, கொடிகள் என்பனவற்றைத் தூக்கிச் செல்ல அன்றாடக் கூலியாட்களை நியமித்தல் போன்றவையும் சரக்கறைத் தலைவர் வேலையே.

3 comments:

ஸ்ரீராம். said...

//இவருக்கு உதவியாக இருப்பவரை ஏகாங்கி என அழைப்பார்கள். இவருக்குக் கோயிலில் மிக உயர்ந்த மரியாதைகளைச் செய்வார்கள்.//

ஆட்சியாலருக்கா, ஏகாங்கிக்கா?

இவர்கள் இத்தனை வேலைகளையும் தினமும் சரிவர செய்கிறார்களா இந்தக் காலத்தில்?

Geetha Sambasivam said...

ஆட்சியா"ள"ர். இம்பொசிஷன் எழுதணுமே! :))) கோயிலில் ஆட்சியாளருக்கே மரியாதைகள்! :))))

Geetha Sambasivam said...

இப்போ உள்ள நிலைமையைப் பத்தி எழுதறச்சே பாருங்க. வயிறு எரியும்! :(