எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, August 25, 2014

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம் -- திருக்கோயிலின் வழிபாட்டு முறைகள் -பகுதி 4

7.ஏழாம் வகையினர் ஸ்தானத்தார் எனப்படுவார்கள்.  பெருமாளின் வழிபாட்டோடு தொடர்புடைய அனைத்தையும் கவனித்துச் சரிவரச் செய்வது இவர்கள் கடமையாகும்.  உற்சவர் கருவறையிலிருந்து வெளியே எழுந்தருளுகையில் பல்லக்கைத் தூக்குவது இவர்கள் தான். மேலும் வாகனங்களைத் தாங்குவார்கள்.  திருக்குடைகளைப் பிடிப்பார்கள்.  பல்லக்கின் பக்கத்திலேயே சென்று ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறாமல் பார்த்துக் கொள்வதும் இவர்கள் முக்கிய வேலை.  இறைவனுக்குப் பால், தயிர் வழங்குதல், தலைமை ஆட்சியாளர்களுக்குப் பூமாலைகள் சூட்டுதல், பிரசாதங்கள் அளித்தல்,  சுவாமிக்கு உரிமையான பொன், பொருள், அணிமணிகளைப் பூட்டிப் பாதுகாக்கும் அறைகளுக்குக் கருட முத்திரை வைத்தல்  ஆகியன இவர்கள் முக்கிய வேலைகளாக இருந்து வந்தன.  பின்னர் வந்த அந்நியர் படையெடுப்பின் பின்னரும் தொடர்ந்து பொறுப்புக்களை நிர்வகித்து வந்த இவர்கள் பின்னர் நம்பிகளுக்குத் தம்முடைய உரிமைகளில் சிலவற்றைக் கொடுத்தனர்.  கருட முத்திரை பொறிக்கும் உரிமை இறுதியாக நாச்சியார் சந்நிதியை நிர்வகித்த அலுவலரிடம் போய்ச் சேர்ந்தது.  இது குறித்து நீண்ட நெடுங்காலம் வழக்குகள் நடந்தன எனவும் தெரிகிறது.

8.  அடுத்ததாக பட்டர்கள். இவர்கள் அன்றாட வழிபாடுகளின் போது கருவறையில் இருந்து வேதம் ஓதுதலும், நித்தியப்படி பூஜை, சிறப்பு நிகழ்வுகள் ஆகிய எல்லாவற்றிலும் உடனிருந்து  கலந்து கொள்வதோடு, பரிவட்டம், சந்தனம், தனிமாலைகள், தாம்பூலம் முதலிய கௌரவங்களையும் பெறுவார்கள்.  ஶ்ரீராமாநுஜர் செய்த சீர்திருத்தங்களுக்குப் பின்னர் தலைமை அர்ச்சகரான நம்பிகள் ஒருவரே இதற்கு முன்னர் செய்து வந்த பல பணிகளில் ஒன்றாகச் செய்து வந்தார். பின்னர் இவர்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பணியாகப் பிரித்து அளிக்கப்பட்டது.

9. அடுத்ததாகக் குறிப்பிடத் தக்கவர்கள் ஆரியபட்டர்கள் எனப்படும் பிராமணர்கள் ஆவார்கள்.  இவர்கலின் முக்கிய வேலை கோயிலையும், சுவாமியையும் தங்கள் கண்ணுக்குக் கண்ணாகப் பாதுகாத்து வருவதே ஆகும்.  மூன்றாம் பிரகாரத்தில் தென், வட வாயில் முகப்புகளில் காவலராக நியமிக்கப் பெறுவார்கள்.  முதல் இரு பிரகாரங்களில் இருந்து உள்ளே செல்பவர்கள், வெளியேறுபவர்கள் ஆகியோரைக் கூர்ந்து கவனித்துக் கண்காணிப்பதும், திருவுலாக் காலங்களில் பல்லக்கின் பின்புறத் தண்டுகளைச் சுமப்பதும் இவர்கள் முக்கியக் கடமையாகும். இரவில் கோயில் வாயில்களுக்கு அருகேயே தாழ்வாரங்களில் உறங்குவார்கள்.   விடியலில் சுவாமியை வழிபட வரும் திருப்பதியாருக்கும், யாத்ரிகர்களுக்குக் கதவைத் திறந்து விடுவார்கள்.  அரச முத்திரை இவர்கள் பொறுப்பில் இருக்கும்.   இவர்கள் தங்கள் பணியைச் செய்கையில் அது இவர்களைப் பாதுகாப்பதாக ஐதிகம்.


10. கடைசியாகக் கோயில் பணீகளில் தாசநம்பிகள் என்ப்படுவோர் முக்கியமானவர்களில் சேர்ந்தவர்கள்.  இவர்கள் ஒரு காலத்தில் அதாவது ஶ்ரீராமாநுஜரின் காலத்துக்கு முன்னால் கோயிலுக்குப் பூமாலைகள் வழங்கி வந்தவர்களின் பரம்பரையினர் ஆவார்கள்.  சுவாமிக்காக அமைக்கப் பெறும் திரு நந்தவனங்கள் இவர்களின் பொறுப்பிலேயே இருக்கும்.  சுவாமியின் திருமுன்னரும், கர்ப்பகிரஹத்தின் உள்ளேயும், வெளியேயும் திருவிளக்குகள் ஏற்றுவதும் இவர்கள் கடமை.  சுவாமி எழுந்தருளும் பல்லக்கிற்கும் பூமாலையால் அலங்காரம் செய்வது இவர்கள் பணிகளில் ஒன்றாகும்.  பல திருவுலா நிகழ்ச்சிகளுக்கும் தேவைப்படும் பூமாலைகளையும் இவர்களே தொடுத்து அளித்து வந்தனர். ஆழ்வார்களின் சந்நிதிகள், உடையவர் ஶ்ரீராமாநுஜரின் சந்ந்தி ஆகியவற்றிலும் இவர்கள் பணிபுரிவார்கள்.  அதற்காகச் சிறப்பு மரியாதைகள் இவர்களுக்கு உண்டு. 

2 comments:

வல்லிசிம்ஹன் said...

இத்தனை நியதிகளோடு இன்னும் நடக்கிறதா கோயில்.அதிசயமான விவரங்கள்.அருமையாகத் தொகுக்கப்பட்டு இருக்கின்றன.ஸ்ரீராமானுஜருக்கப்புறம் வேறு யாராவ்து இவ்வளவு ஒழுங்கு செய்திருக்க முடியுமா என்று தெரியவில்லை. நன்றி கீதா.

Geetha Sambasivam said...

இப்போ ஓரளவுக்கு இந்த நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதாய்க் கேள்வி.