எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, June 10, 2018

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

அப்போது குலசேகரன் குறுக்கிட்டு, "மன்னரே, எங்கள் குறிக்கோள் அழகர்மலைக்காட்டினுள் ஒளிந்து மறைந்து வாழும் அரங்கனை அங்கிருந்து அகற்றித் தென்னாட்டுக்குக் குறிப்பாய் நாஞ்சில் நாட்டுக்குக் கொண்டு போக வேண்டும் என நினைக்கிறோம். அதன் பின்னர் அவருக்கு தினம் அன்றாட வழிபாடுகளை அங்கே இருந்து கொண்டு செய்துவிடுவோம். இதற்குத் தாங்கள் உதவினாலே போதும்!" என்றான். அதற்குத் தான் என்ன செய்ய வேண்டும் என மன்னர் கேட்டார். அவர்களுக்கு உதவ ஒரு சிறு படை வேண்டும் எனக் குலசேகரன் கேட்டான். மன்னருக்கு ஆச்சரியம் மேலிட்டது. படையை வைத்து உங்களால் என்ன செய்ய முடியும் என வினவினார். தென்னாட்டுக்குச் செல்லும் ஏதேனும் ஓர் வழியில் இந்தப் படையைக் கொண்டு சென்று திடீர்த் தாக்குதல் நடத்தி தில்லிப் படைகளைத் தோற்கடித்து அவ்வழியே தென்னாட்டுக்குச் செல்வோம் எனக் குலசேகரன் சொன்னதற்கு மன்னர் மீண்டும் சிரித்தார்.

அவர்களைப் பார்த்து, "தில்லிப் படையினர் எவ்வளவு பேர் என்றாவது உங்களுக்குத் தெரியுமா? அவ்வளவு எளிதில் அவர்களை வெற்றி கொள்ள முடியுமா? நீங்கள் ஒரு பக்கம் தாக்கினால் அதை உடனே போய்ச் சொல்ல அவர்களிடம் தூதுவர்கள் இல்லையா? அவர்கள் உடனே சென்று சொன்னதும் அங்கே இருக்கும் படையினர் நீங்கள் செல்லும் வழியை உடனே போய் மறிப்பார்கள். அதோடு நானே அவர்களுக்குக் கப்பம் கட்டுவதாகச் சொல்லித் தான் போரைத் தடுத்திருக்கிறேன். இந்நிலையில் என் படைகள் இந்தப் போரில் ஈடுபட்டது தெரிந்தால் என்னையும் சும்மா விட மாட்டார்கள். இந்த வட தமிழகமும் அழிந்து போகும்." என்றார்.

ஆனால் குலசேகரன் விடாமல் மனோ தைரியம் மிக்க இருநூறு வீரர்களைக் கொடுத்தால் போதும் என்றான். அவர்களை உங்கள் நாட்டுப் படை வீரர்களாகச் சொல்லாமல் எங்கள் அரங்கனின் பக்தர்களாகவே அழைத்துச் செல்கிறோம். ஆயுதங்களை மறைத்து எடுத்துச் சென்று அவர்கள் துணையோடு இரவுகளில் மட்டும் ரகசியமாய்ப் பயணம் செய்து அரங்கனை மறைத்து எடுத்துச் செல்வோம். இடையில் தில்லிப் படை வீரர்கள் எதிர்ப்பட்டால் மட்டுமே அவர்களுடன் போர் புரிவோம். மெல்ல எப்படியேனும் நாஞ்சில் நாட்டுக்குள் புகுந்தோம் எனில் பின்னர் பிரச்னை இல்லை!" என்றான்.

ஆனாலும் மன்னர் இருநூறு வீரர்களை அனுப்ப முடியாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். அழகிய நம்பி ஒரு அரசரான உங்களால் இது முடியாத காரியமா என வினவ அதற்கு மன்னர் தன்னிடம் படை இருந்தால் தன் ராணியின் தீர்த்த யாத்திரைக்கு ஏன் குலசேகரனைத் தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும் என்று கேட்டார். அழகிய நம்பி யோசித்தான். மன்னரிடம் அவர் படைகள் எங்கே தண்டு இறங்கி இருக்கின்றன என விசாரித்ததில் இன்னும் வடக்கே கொங்கண, தெலுங்கு தேசத்து அரசர்களைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகச் சொன்னார். அவர்கள் இருவரும் அடிக்கடி தொல்லைகள் கொடுப்பதால் அவர்களை அடக்குவதற்காகப் படைகள் அங்கே இருப்பதாகச் சொன்னார்.  மேலும் தென்னாட்டினரான அவர்கள் அனைவரும் கன்னடர், தெலுங்கர், தமிழர் எனப் பிரிந்திருக்காமல் அனைவரும் ஒன்றாகக் கூட்டுச் சேர்ந்து அந்நியரை எதிர்க்க வேண்டும் என்றும் சொன்னார். நாமெல்லாம் ஒன்று சேரவே மாட்டேன் எனப் பிடிவாதமாகத் தனித்து இருக்கிறோம். இதனால் அந்நியர் உட்புக வசதியாக ஆகி விட்டது என்றும் சொன்னார்.

மேலும் சொன்னார். அப்படி ஒன்றுபட்டால் அனைவரும் சேர்ந்து தில்லிப் படைகளை ஓட ஓட விரட்டலாம் என்றும் சொன்னார். இந்த முக்கியமான வேலையில் தான் தன் படை வீரர்களைத் தான் ஈடுபடுத்தி வருவதாகவும் சொன்னார். இந்த நேரம் பார்த்துத் தென்னாட்டுப் பக்கம் தன் பார்வையைச் செலுத்த முடியாது. தான் அங்கே ஒன்றும் செய்வதற்கில்லை என முடிவாகக் கூறி விட்டார். அதற்கு அழகிய நம்பி மதுரை நகரில் ஒளிந்து வாழும் பல பெண்களையும் பற்றி எடுத்துச் சொன்னான். பெண்கள் மட்டுமில்லாமல் கணக்கற்ற பொருளும் அங்கே ஒளித்து வைக்கப்பட்டிருப்பதைச் சொல்லிவிட்டு இவற்றை மீட்க வேண்டியது நம் கடமை என்றும் சொன்னான். ஆனால் மன்னரோ எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டாரே ஒழியப் படைகளை அனுப்பச் சம்மதிக்கவில்லை. பொருள் எவ்வளவு வேண்டுமானாலும் தருவதாய்க் கூறினார். யோசனையில் ஆழ்ந்த இருவரும் திரும்பினார்கள். வழியில் அவர்கள் முன்னர் அபிலாஷிணி எதிர்ப்பட்டாள். குலசேகரனைப் பார்த்து மகாராணி அவனை அழைப்பதாகச் சொன்னாள். அப்போது குலசேகரனுக்கு ஓர் யோசனை தோன்ற அவனும் அழகிய நம்பியை மட்டும் சத்திரத்துக்குப் போகச் சொல்லிவிட்டுத் தான் மகாராணியைப் பார்க்க அபிலாஷிணியுடன் சென்றான். அவன் மனதில் ஆத்திரம் மிகுந்தது.

No comments: