எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, June 29, 2018

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! அழகர் மலையில்!

ஹொய்சள மன்னர் திருவண்ணாமலை திரும்பி விட்டார். சுமார் 20 நாட்களுக்கு மேலாக அவர் அழகர்மலையையும் மதுரையைச் சுற்றியும் மாறுவேடத்தில் சுற்றிப் பார்த்திருந்தார். அவர் கண்ட காட்சிகள் அவர் மனதைக் கலங்க அடித்து விட்டது. எல்லாவற்றையும் அப்படி அப்படியே போட்டு விட்டு மக்கள் எங்கெல்லாமோ ஓடி ஒளிந்திருந்தார்கள். கிராமங்களும் நகரங்களும் பாழடைந்து காணப்பட்டன. பாண்டிய ராஜ்ஜியமே சிதறிப் போய்ச் சின்னாபின்னமாகி இருந்தது. அப்போது ஆண்டு கொண்டிருந்த மன்னரைத் தான் காணோம் எனில் அவரது தாயாதிகளும் எங்கோ ஓடி ஒளிந்திருந்தார்கள்.  மதுரையின் தெருக்களில் ஆள் நடமாட்டமே இல்லை. வீடுகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆட்கள் காணப்பட்டாலும் பெண்களைக் காணவே முடியவில்லை. ஆனால் அவர்கள் அனைவரும் அவரவர் வீட்டு நிலவறைகளில் தங்கள் செல்வத்தைக் கொண்டு வைத்ததோடு தாங்களும் ஒளிந்து வாழ்ந்தார்கள். பலருக்குச் சூரிய ரச்மியே மறந்து விட்டது. மன்னர் மனம் வெதும்பிப் போனார். இத்தகைய காட்சிகள் அவரைத் துயரத்தில் ஆழ்த்தி இருந்தது. கனத்த மனதுடன் திருவண்ணாமலை  திரும்பியவரை ராணி கிருஷ்ணாயி எதிர்கொண்டாள்.

மன்னர் நாட்டு மக்களைப் பற்றி விவரிப்பதைக் கேட்க அவளுக்குப் பொறுமை இல்லை. அரங்கனைப் பற்றியே கேட்டாள். மன்னர் மீண்டும் மீண்டும் மக்கள் சீரழிந்து இருப்பதைச் சொன்ன போதும் அவள் அதைக் காதிலேயே வாங்காமல் அரங்கனைப் பார்த்தீர்களா இல்லையா எனக் கோபத்துடன் மன்னரை வினவினாள். மன்னர் தாம் அழகர் மலை சென்றதையும் அரங்கனைப் பார்த்ததையும் எடுத்துக் கூறினார். அரங்கனைச் செடி, கொடிகளால் ஆன ஒரு தழைப்பந்தலின் கீழ் அமர்த்தி இருப்பதாகவும், அவன் அமர ஒரு பீடம் கூட இல்லை என்றும் வருத்தத்துடன் சொன்னார். அப்படியே வனத் தரையில் அரங்கன் அமர்ந்திருப்பதை வர்ணித்தார். "வாகனங்கள் ஏதும் இல்லாமல் திருவாசி இல்லாமல், தோளுக்கினியான் என்னும் அவன் பல்லக்கு இல்லாமல், அர்க்ய பாத்திரங்களோ,தூப தீபத் தட்டுக்களோ, அலங்காரங்களோ இல்லாமல் , பூக்களோ, வாசனைத் திரவியங்களோ இல்லாமல் மணி அடித்து நிவேதனம் இல்லாமல்  கிடைத்ததைக் கிடைத்த நேரத்துக்கு உண்டு கொண்டு அரங்கன் வாழ்ந்து வருகிறான். அங்குள்ள ஓர் கிணற்று நீர் தான் அவனுக்கு அபிஷேகம்! அது தான் அவன் வாசனைத் திரவியம்!  அரங்கத்துக்கே ராஜாவாக இருந்த அரங்கராஜன் இப்போது ஏழையிலும் ஏழை பரம ஏழை!" எனக் கண்ணீருடன் தெரிவித்தார்.  அரங்கனுக்கு உயிர் கொடுத்த அந்தக் கிணறு இப்போதும் இருப்பதாகத் தெரிய வருகிறது.

இதைக் கேட்ட கிருஷ்ணாயி அரங்கனைக் காப்பாற்றும் வழி என்ன என யோசித்தீர்களா என மன்னரைக் கேட்டாள். மன்னர் தாம் யோசித்ததாகவும் 200 வீரர்களை அனுப்பி வைத்தாலும் தில்லிக்கோ தில்லி வீரர்களுக்கோ தெரியாமல் அரங்கனைக் காப்பாற்றும் விதம் தமக்குத் தெரியவில்லை என்றும் சொன்னார். நாம் செய்யப் போகும் காரியத்தைப் பற்றித் தெரிந்தால் தில்லித் தளபதியைச் சீண்டி விட்டாற்போல் ஆகும் எனத் தாம் பயப்படுவதையும் சொன்னார். ராணியும் யோசித்தாள். பின்னர் மன்னனிடம் தனக்கு ஓர் வழி புலப்பட்டிருப்பதாய்க் கூறினாள். மன்னர் அவளை விசித்திரமாய்ப் பார்த்தார். ஆனால் கிருஷ்ணாயி லட்சியம் செய்யவில்லை.

மன்னரிடம் அவள் மகாராணி கன்யாகுமரிக்குப் புனித யாத்திரை போவதாக அறிவிக்கச் சொன்னாள். மூடு பல்லக்குகளில் யாத்திரை கோஷ்டியைப் பிரயாணப்பட வைக்க வேண்டும் என்றும் சொன்னாள். சில பல்லக்குகள் மட்டும் பெண்களால் நிறைந்திருந்தால் போதும் எனவும் பல பல்லக்குகள் வெறுமையாக இருக்கட்டும் என்றும் கூறினாள். வீரர்களை எப்படி அனுப்புவது என்ற மன்னரின் கேள்விக்கு அவள் பல்லக்குகளின் முன்னும், பின்னும் காவலாக 50 வீரர்களை அனுப்பி வைத்துவிட்டு மற்றவர்களை மறைந்து இருந்து கொண்டு வரும்படி பணிக்க வேண்டும் என்றாள். அது எவ்வாறு முடியும் எனக் கேட்ட மன்னரிடம் பல்லக்குத் தூக்கிகளுக்குப் பதிலாக வீரர்களைப்பல்லக்குத் தூக்கிகளாக வேஷம் தரிக்கச் செய்ய வேண்டும். அவசியம் நேர்ந்தால் அவர்கள் சண்டையிட முடியுமே என்ற யோசனையைத் தெரிவித்தாள். மன்னர் மனம் கலங்கினார். கிருஷ்ணாயியை அப்படி எல்லாம் அனுப்பி வைக்கத் தம்மால் இயலாது எனத் தெரிவித்தார். அவளோ தானும் போக இஷ்டப்படவில்லை என்றாள்.

2 comments:

நெல்லைத் தமிழன் said...

எழுத்து ரொம்ப நல்லா வருது.

அந்த அந்த இடங்களை வரலாற்றுச் சின்னமாகப் பேணவேண்டும். அப்போதுதான் இவை 'நாவல்' அல்ல, நடந்த நிகழ்ச்சிகள் என்பது புரியும்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தொடர்ந்து வாசிக்கிறேன்.