எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, June 13, 2018

ஶ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்!

கோபமாக ராணியின் அந்தப்புரத்துக்குள் நுழைந்த குலசேகரன் முன்னால் ராணி எதிர்ப்படவே அவளைப் பார்த்து, "எதற்காக என்னை அழைத்தீர்கள்?" எனக் கோபத்துடன் வினவினான். ராணியோ சாவகாசமாக அவனைப் பார்த்துப் புன்னகை புரிந்த வண்ணம் கொஞ்சம் யோசனையுடனே அவனைப் பார்த்தாள். அவ்வாறு அவள் பார்ப்பது குலசேகரனுக்கு தர்மசங்கடமாக இருந்தது. தவிப்பாக இருந்தது. ராணியோ என்ன கோபம் அரங்கமாநகரத்து வீரருக்கு என விளையாட்டாகக் கேட்டாள். அவன் முன்னால் வந்து அவனை நெருங்கி நின்றாள். அவள் மேனியிலிருந்து எழுந்த சுகந்தமான மணம் குலசேகரன் மனதையும் புத்தியையும் மழுங்கடிக்கச் செய்துவிடும் போல் இருந்தது. அவளோ அசராமல் மீண்டும் கோபத்துக்கான காரணம் என்னவோ என அவனைப் பார்த்துக் கொஞ்சும் குரலில் கேட்டாள்.
குலசேகரன் பதிலே சொல்லாமல் நிற்க அவள் அவன் கோபத்துக்குக் காரணம் அவன் ஏமாந்தது தான் என்று சொல்லி அவனைப் பார்த்துக் கைகொட்டிச் சிரித்தாள். கேலி செய்தாள்.குலசேகரனின் கோபம் அதிகம் ஆனது.  அவன் உறுமிய வண்ணம் ஏமாந்தது அந்த அரங்கன் தான் என்றும் தான் ஏமாறவில்லை என்றும் சொன்னான்.

அதைக் கேட்ட ராணி, "அரங்கனா? யார் அவன்? அந்த உலோக அரங்கனா? அவனையா சொல்கிறீர்கள்?" என ஏளனமாய்க் கேட்டாள். மேலும் அவர் எப்படி ஏமாந்தாரோ என்னும் கேள்வியையும் எழுப்பினாள். கொதித்துப் போன குலசேகரன், இங்கே இருந்து எந்த உதவியும் கிட்டாது என்பது முன்னரே தெரிந்திருந்தால் தான் இங்கே வந்திருக்கவே மாட்டேன் எனச் சொன்னான். வந்ததோடு அல்லாமல் அவர்கள் உதவியை எதிர்பார்த்தே அவளுக்குக் குற்றேவல் புரிந்ததாகவும் இப்படிக் கைவிடப் படுவோம் எனத் தெரிந்தால் எந்த ஊழியமும் செய்திருக்க மாட்டேன் எனவும் சொன்னான். "அரங்கனுக்குச் சேவை செய்ய வேண்டிய நான் ஒரு ராணிக்குச் சேவை செய்ய நேரிட்டது! எதற்காக! எல்லாம் அந்த அரங்கனை எப்படியேனும் காப்பாற்றலாம் என்பதற்காகவே! ஆனால் அது நடக்கவில்லை! வருகிறேன்." என விடை பெற்றுக் கிளம்பியவனை ராணி உள்ளே அழைத்தாள்.

அவனிடம் தான் துளுவ நாட்டுப் பெண் என்றும் அவர்கள் நாட்டில் பெண்ணானாலும் சரி ஆண் ஆனாலும் சரி, சமம் ஆனவர்களே எனவும் சொன்னாள். ஆகவே குலசேகரனின் சேவையைத் தான் இரவலாக ஒருபோதும் வாங்கிக் கொள்ளப் போவதில்லை என்றும் சொன்னாள். அதற்குக் குலசேகரன் ஏளனமாக அவள் முன்னர் ஒரு நாள் கங்கணங்கள் பரிசளித்ததைக் குறிப்பிட்டான். ஆனால் ராணி அதற்குப் பதில் சொல்லவில்லை. அவனையே பார்த்தாள். "வீரனே, உன் கோபம் அடங்கவில்லை! போகட்டும். என்னால் என்ன செய்ய முடியும் என்பதை நிரூபிக்கிறேன். உனக்கு வேண்டியது 200 நபர்கள் அடங்கிய படை தான் அல்லவா?" என்று கேட்டாள். குலசேகரனுக்கு ஆச்சரியம் உண்டானது. அவளையே பார்த்தான்.

அவள் இங்கே அந்தப்புரத்தில் இருக்கும் தனக்கு அரச சபையில் நடந்த விஷயம் எப்படித் தெரியும் என்றே குலசேகரன் ஆச்சரியப்படுகிறான் என்பதைப் புரிந்து கொண்டாள். ஆகவே அவனைப் பார்த்து, "இந்த அரண்மனையில் ஒரு சிறு  எறும்பு நகர்ந்தால் கூட எனக்குத் தெரியும். என் காதுகளுக்கு எல்லா விஷயங்களும் உடனடியாக வந்து விடும். உங்களுக்குத் தேவை 200 வீரர்கள் அடங்கிய ஒரு படை! அது தானே!" என்றாள்.

No comments: