எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, June 23, 2019

வீரர் தலைவனுக்கு வந்த சந்தேகம்!

இளைஞர்கள் இருவருமே கையில் விலங்கிடப்பட்ட பெண்ணைப் பார்த்துவிட்டார்கள். யாராக இருக்கும்? துணைக்குச் செல்லும் பெண்மணி யார்? எங்கே செல்கின்றனர்? என்னும் கேள்விகள் இருவர் மனதையும் துளைத்து எடுத்தது. ஆனாலும் அந்த வீரர்கள் எதிரே இருவரும் எதையும் மனம் விட்டுப் பேசிக்கொள்ளவில்லை.  வண்டியின் மீதே அவர்கள் பார்வை இருந்தது.  கண்ணுக்கு வண்டி மறையும்வரை பார்த்துவிட்டு வல்லபன் கீழே குனிந்து தான் தூக்கி வந்த மூட்டையை எடுத்துத் தோளில் சாய்த்துக் கொண்டான். வல்லபனைப் பார்த்துக் காலதத்தனும் தன் மூட்டையை எடுத்துக் கொண்டான். இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. மௌனமாகவே பயணம் செய்தார்கள். காலதத்தனின் தாழங்குடை மறுபடியும் காற்றில் பறக்க முயற்சிப்பதும் காலதத்தன் பெரு முயற்சி செய்து அதை அடக்குவதுமாக இருந்தது. இருவர் மனதிலும் இனம் தெரியாத கலக்கம். மௌனமாக நடந்தவர்கள் சாலையின் ஓர் மேட்டில் ஏறியதும் காலதத்தன் நின்று வல்லபனைப் பார்த்தான்.

"வல்லபா! அந்தப் பாறை மேலே சீக்கிரம் ஏறு! அவசரம்!" என்று கூறிக்கொண்டே தான் அவசரமாக அந்தப் பாறையில் ஏற முனைந்தான். வல்லபனும் விரைந்து வந்தான். அங்கே ஓர் பெரிய மருதமரம். அதன் அடியில் சின்ன யானைக்குட்டி போல் காணப்பட்டது ஓர் கரிய பாறை. அதன் மேல் காலதத்தன் ஏறி நிற்க வல்லபனும் ஏறினான். மழைக்காலம் ஆதலால் மழையின் காரணமாகப் பாசி படிந்திருந்த அந்தப் பாறை ஏறுவதற்குள் வல்லபனுக்கு வழுக்கியது. என்றாலும் சமாளித்துக் கொண்டு ஏறி மேலே நிற்கும் காலதத்தன் அருகில் வந்தான். இருவரும் நெருங்கி அமர்ந்து கொண்டனர். காலதத்தன் வல்லபனைப் பார்த்து, "அதோ  பார்!" என ஓர் திக்கைச் சுட்டிக் காட்டினான். வல்லபன் அங்கே பார்த்து, "என்ன அது!" என்று வினவினான். தூரத்தில் காற்று விர்ரென்று சுழன்று அடித்துக் கொண்டிருக்க அது கிளப்பி விட்டிருந்த தூசுப் படலத்தில் சற்று முன் சென்ற கூண்டு வண்டியின் பாதுகாப்புக்குச் சென்ற வீரர்களின் தலைவன் திரும்ப நம் இளைஞர்களைச் சந்தித்த இடத்துக்கு வந்து கொண்டிருந்தான்.

அதைப் பார்த்த இளைஞர்கள் எதற்கும் தயாராகத் தங்கள் வாள், கத்தி போன்றவற்றைச் சரிபார்த்துக் கொண்டு எந்நேரமும் எடுத்துப் பயன்படுத்தத் தயாராக இருந்தார்கள். தங்கள் மூட்டைகளுக்குள் மறைத்து வைத்திருந்த வாளை எடுத்துக் கொண்டு அதன் கைப்பிடியில் தங்கள் கைகளை வைத்த வண்ணம் எந்த நேரமானாலும் வாளை உருவிக்கொண்டு போரிடத் தயாராக ஆனார்கள்.  வீரர் தலைவன் வரும்போது முதலில் வேகமாக வந்தவன் இளைஞர்கள் இருக்கலாமோ என்னும் இடம் வந்ததும் நடையின் வேகத்தைக் குறைத்துக் கொண்டு சுற்றும், முற்றும் பார்த்த வண்ணம் மெதுவாக வந்தான். அவன் சுற்றிச் சுற்றித் தேடியதைப் பார்த்தால் அவர்களைத் தான் தேடுகிறானோ என இருவருக்கும் தோன்றியது. மிக மிக உன்னிப்புடன் கவனித்துக் கொண்டு வந்தவன் இளைஞர்கள் அமர்ந்திருந்த பெரும்பாறையின் அடிக்கு வந்து விட்டான். அந்தப் பாறையைச் சுற்றிச் சுற்றி அவர்களைத் தேடினான் போலும்! இளைஞர்களும் அவனையே கவனித்த வண்ணம் இருந்தார்கள்.

சற்று நேரம் இப்படி அந்த வீரனை அலைய வைத்தபின்னர் காலதத்தன் மேலே அமர்ந்த வண்ணமே தன் கைகளைத் தட்டி அந்த வீரர் தலைவனை அழைத்தான்.திடுக்கிட்ட வீரர் தலைவன் அங்குமிங்கும் சுற்றிலும் பார்த்து யாரையும் காணாமல் திகைத்தவன் ஒரு வழியாகப் பாறையின் மேல் அமர்ந்திருந்த இரு இளைஞர்களையும் பார்த்துவிட்டான். அங்கே இருந்த வண்ணம் அவர்கள் தன்னை அழைத்தது அவனுக்குக் கொஞ்சம் கோபம் வந்தது. ஆகவே முதலில் கோபத்தைக் காட்டி அவர்களைப் பார்த்தவன் திடீரென ஏதோ நினைத்தவன் போல் முகத்தில் மந்தகாசம் காட்டினான். "என்னடா தம்பிகளா? நீங்கள் இருவரும் மனித குலம் தானா? அல்லது கிஷ்கிந்தை வாசிகளா?" என நகைச்சுவையாகக் குறிப்பிடுவது போல் சொல்லி வராத சிரிப்பை வரவழைத்துக் கொண்டு சிரித்தான்.

அவனை மிக நுட்பமாகக் கவனித்த காலதத்தனும் அவன் சொல்வதை ஆமோதிப்பவன் போல் தலையை ஆட்டினான். "ஐயா, தெற்கே தானே இலங்கை இருக்கிறது! ஆகவே கிஷ்கிந்தை இங்கே தான் இருந்திருக்கும்! இங்கே இருந்தே கிஷ்கிந்தாவாசிகள் இலங்கைக்குப் போயிருக்கலாம்!" என்று வாசாலகமாகப் பேசினான். சேவகர்களின் தலைவன் தான் அந்தப் பேச்சைக் கேட்டுப் பாராட்டிச் சிரிப்பதைப் போல் பாவனை செய்தான். பின்னர் குதிரையைத் தடவிக் கொடுத்துக் கொண்டான். மீண்டும் அவர்களைப் பார்த்து, "ஏனடா தம்பிகளா? இந்தப் பாறை மேல் ஏறி அமர்ந்து விட்டீர்கள்? நீங்கள் இருவரும் ஓடுமானூர் சத்திரம் வந்து தங்கப் போவதில்லையா?" என்றும் கேட்டான். காலதத்தன் இன்னும் இருட்டிய பின்னர் வருவதாகச் சொன்னான். தற்போது இங்கே இருக்கும் காற்றும் பூந்தூற்றலாகப் பொழியும் மழையும் அவர்கள் மனதைக் கவர்ந்து விட்டதால் அதை அனுபவித்துக்கொண்டு அங்கே உட்கார்ந்திருப்பதாய்ச் சொன்னான். இரவுக்குள் ஓடுமானூர் வந்துவிடுவோம் என்றான்.

உடனே வீரர் தலைவன் அவர்களைப் பார்த்து அப்படியானால் என்னுடைய வீரர்கள் பலரும் பின் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் இந்த இடத்துக்கு வந்ததும் ஓடுமானூருக்குச் செல்லும் வழியை அவர்களுக்குக் காட்டி அனுப்பி வையுங்கள் என்றும் கேட்டுக் கொண்டான். காலதத்தன் அவ்வாறே செய்வதாக ஒப்புக்கொள்ள வீரர் தலைவன் அடிக்கடி திரும்பித் திரும்பிப் பார்த்த வண்ணம் அங்கிருந்து கிளம்பி ஓடுமானூர் நோக்கிச் சென்றான். வல்லபன் இதெல்லாம் என்ன, தனக்கு ஒன்றும் புரியவில்லையே என்று கேட்டவன் ஏதோ மூடுமந்திரமாகவும் இருப்பதாகச் சொன்னான். அதைக் கேட்ட காலதத்தன்.வல்லபனிடம் தாங்கள் இருவரும் அப்போது பேராபத்திலிருந்து தப்பி இருப்பதாகச் சொன்னான். வல்லபன் திடுக்கிட்டான். என்ன விஷயம், என்ன ஆயிற்று, ஏன் காலதத்தன் இவ்வாறு சொல்கிறான் என்றெல்லாம் வல்லபன் கேட்க அதற்குக் காலதத்தன் வல்லபனிடம் சொன்னான்.

"வல்லபா! இந்த வீரர் தலைவன் திரும்பி வந்தது நம்மை யார் என்றும் என்னவென்றும் பார்த்து அறிவதற்காகவே! நாம் எப்படியோ அவனிடமிருந்து தப்பி விட்டோம்!" என்று சொன்னான் காலதத்தன். அதைக் கேட்ட வல்லபன் திகைத்து நிற்க, " ஆம், வல்லபா!கூண்டு வண்டி கிளம்பிச் செல்லும்போதே அவன் நம்மைப் பார்த்த பார்வையில் சந்தேகம் தெரிந்தது. ஆகவே அவன் நாம் பின் தொடருகிறோமா எனப் பார்த்துக் காத்துக் கொண்டிருந்துவிட்டு நாம் வரவில்லை எனில் நம்மைத் தேடி வருவான் என யூகித்தேன். அப்படியே நடந்தது!" என்றான் காலதத்தன்.

2 comments:

நெல்லைத்தமிழன் said...

//வாசாலகமாகப் // - சாமர்த்தியமாக என்று அர்த்தமா? இதுவரை கேள்விப்படாத வார்த்தை

Geetha Sambasivam said...

வாசாலகம் என்றால் சொல் வன்மை! பேச்சால் கட்டிப் போடுதல்!