எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, June 26, 2019

வல்லபனின் தீர்மானம்! தத்தனின் அனுமானம்!

சற்று நிறுத்திய வல்லபன், ஒரு நீண்ட பெருமூச்சை விட்டான். பின்னர் தொடர்ந்து, "தத்தா! அதோடு மட்டுமா? வருடம் தோறும் பற்பல உற்சவங்கள், திருவிழாக்கள், பண்டிகைகள் என்றெல்லாம் நடக்குமாமே! அவற்றில் கலந்து கொண்டு மக்கள் புத்தாடை அணிந்து மகிழ்ச்சியோடு ஆடிப் பாடிக் கொண்டாடுவார்களாம்.  திருவிழாக்காலங்களில் அரங்கனின் அர்ச்சாவதாரம் , தத்தா, நாம் இன்னமும் அதைப் பார்த்ததே இல்லை அல்லவா? அந்த அர்ச்சாவதாரத்தை வீதிகளில் எழுந்தருளப் பண்ணிக் கொண்டு போவார்களாம். மக்கள் அந்த ஊர்வலத்தைத் தொடர்ந்து ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும் செல்வார்களாம். வேதங்களாமே! நீ கேட்டிருக்கிறாயா தத்தா? வேதங்களை பிராமணர்கள் ஓதுவார்களாம். அவர்கள் எல்லோரும் இந்த ஊர்வலங்களில் வேதங்களை ஓதிக்கொண்டு செல்வார்களாமே! அதைத் தவிர்த்தும் பற்பல பிரபந்தங்களையும் பாடிக்கொண்டு போவார்களாம்! ஆழ்வார்களையும் எழுந்தருளப் பண்ணுவார்களாம். தத்தா! நானெல்லாம் ஆழ்வார்கள் எனப்  பெயர்களைக் கேட்டதோடு சரி! இதை எல்லாம் பார்க்க நமக்குக் கொடுத்து வைக்கவில்லையே!"

"தத்தா! என் தாய் சொல்லுவார்! சித்திரை மாதம் பிறப்பதையே பெரிய விழாவாகக் கொண்டாடுவார்களாம். ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு திருவிழாவாம், பண்டிகையாம்! பெண்களுக்கு எனத் தனிப் பண்டிகையாக ஒன்பது நாட்கள் உண்டாம்! அந்த நாட்களில் மூன்று தேவியரையும் வழிபட்டுப் பூஜைகள் செய்து, பொம்மைகள் அடுக்கி மக்கள் விமரிசையாகக் கொண்டாடி வந்தனராம். இப்போது அவை எல்லாம் எங்கே போயின? அவ்வளவு ஏன்? எந்தக் கோயிலை இப்போதெல்லாம் தைரியமாகத் திறந்து வழிபாடுகள் செய்கின்றனர்! மிகக் குறைவே! கோயில்கள் எல்லாம் அழிந்து வருகின்றன தத்தா! திறப்பதே இல்லை! பாழடைந்து போய் சந்நிதிகளில் காணப்பட்ட விக்ரஹங்கள் போன இடம் தெரியாமல் கோபுரங்களிலும், கோயில் விமானங்களிலும் அரசும், ஆலும் முளைத்துக்கிடக்கின்றன. மதில்கள் அனைத்தும் உடைந்து விட்டன. அவற்றைக் கோர்த்த கல்வெட்டுக்கள் அனைத்தும் விழ ஆரம்பித்து விட்டன. திருக்குளங்களில் தண்ணீர் இல்லை. இருந்தால் இலைகளும், தூசியும் தும்புமாகக் கிடக்கின்றன. கோயிலில் வைத்திருந்த விக்ரஹங்கள் அனைத்தும் பூமியில் புதைக்கப்பட்டு விட்டன என்று ஒரு சாராரும், வேறு நாடுகளுக்கு எடுத்துச் சென்று விட்டதாக இன்னொரு சாராரும் கூறுகின்றனரே!"

"தத்தா! நம் அரங்கன் அப்படித் தான் எங்கோ போய் விட்டானாம். அவனைக் கண்டு பிடித்து மீண்டும் திருவரங்கத்தில் பிரதிஷ்டை செய்யவே என் தந்தை தன் வாழ்நாளைக் கழித்து வந்தாராம். ஆனால் அவரால் இயலவில்லை. என் அன்னை அதற்குத் தான் என் தந்தையின் லட்சியத்தை நிறைவேற்றத் தான் என்னை அனுப்பி உள்ளார். தத்தா! நீ பார்த்திருக்கிறாயா? எந்தக் கோயிலிலாவது விக்ரஹங்களைப் பார்த்திருக்கிறாயா? கர்பகிரஹம் என்று சொல்லும் கருவறையில் திறந்து வைத்து மூலவர்கள் யாரையேனும் பார்த்திருக்கிறாயா?  நமக்கெனக் கோயில்கள் இருந்தும் இல்லாதவையாக இருக்கின்றனவே! எத்தனையோ பண்டிகைகளையும் கோயில் திருவிழாக்களையும் நம் முன்னோர்கள் நமக்காக ஏற்படுத்தியும் நாம் எவற்றையும் கொண்டாட முடியவில்லையே! இப்படிப்பட்ட ஓர் ஆட்சியில் நாம் மாட்டிக்கொண்டிருக்கிறோமே! வீட்டுக்குள்ளேயே ஒடுங்கி விட்டோம் நாம். நான்கு பேர் சேர்ந்து பேசக் கூட அஞ்சி அடங்கி ஒடுங்கி வாழ்ந்து வருகிறோமே!கல்வி பயிலவும் தடை, வேதங்கள் ஓதவும் தடை! பற்பல கலைகளைத் தெரிந்து வைத்திருந்தும் அவற்றைக் கற்பதற்கும் தடை! நாற்பது வருடங்களாக இப்படி இருந்து வருகிறதே! நல்லதொரு தலைவன் இருந்திருந்தால் நம்மை இப்படி விட்டு வைத்திருக்க மாட்டான்! தத்தா! என் மனம் பதைக்கிறது!" என்றான் வல்லபன்.

வல்லபனின் நீண்ட சொற்பொழிவைக் கேட்ட தத்தன் சாவகாசமாக, "வல்லபா, ஏதோ புது விஷயத்தைச் சொல்லி விட்டாற்போல் அல்லவா நினைத்துக்கொள்கிறாய்! இவை எல்லாம் எனக்குத் தெரியாதா? அனைவருமே அறிந்த ஒன்று தானே! உனக்கு ஏன் இத்தனை படபடப்பு?" என்றான் கேலியாக.  வல்லபன் துயரம் மேலோங்க, "நம்மிடையே இன்னமும் ஓர் நாயகன் தோன்றவில்லையே தத்தா!" என்றான் அழும் குரலில். அதற்கு தத்தன், " ஏன் பிறக்கவில்லை? தோன்றி இருக்கிறார்கள். இனியும் தோன்றுவார்கள். நம் காலத்துக்கு முன்னே வீர வல்லாளர் என்னும் ஹொய்சள மன்னர் இவர்களை எதிர்த்து நிற்கவில்லையா? அவரைத் தான் சதியால் கொன்றுவிட்டனர்! என்ன செய்ய முடியும்! அவரைப் போல் யாரேனும் தோன்றுவார்கள்! யார் கண்டனர்! இத்தனை வருடங்களில் தோன்றி இருக்கலாம்! தக்க சமயத்துக்குக் காத்திருக்கலாம்!" என்றான் தத்தன். ஆனால் வல்லபனோ இதனாலெல்லாம் தன் நெஞ்சு ஆறப்போவதில்லை என்றும் அவன் மனம் இன்னமும் இதை எல்லாம் நினைத்துப் பதைப்பதாகவும் தானே ஏதேனும் செய்தாக வேண்டும் என்னும் முடிவில் இருப்பதாகவும் கூறினான்.

"வல்லபா! நீயா? நீ மட்டும் தனித்தா? நானும் உனக்கு உதவுவேன்! ஆனால் எப்படி? நம்மால் என்ன செய்ய முடியும்?" என்று தத்தன் கேட்டான். "தீமைகளை நாம் தட்டிக் கேட்க வேண்டாமா?" என்று வல்லபன் கேட்க, அவன் என்ன சொல்லப் போகிறான் என்பதைப் புரிந்து கொண்ட தத்தன், "அப்படியா! மேலே சொல்!" என்றான் புன்னகையுடன். வல்லபன் அதற்கு, "இதோ பார் தத்தா! நம் கண்ணெதிரே ஓர் இளம்பெண்ணை, அதுவும் அரசகுலப் பெண் என நீ சொல்கிறாய்! அந்தப் பெண்ணைப் பலர் கடத்தியோ கைது செய்தோ அழைத்துச் செல்கின்றனர். இதைப் பார்த்துக் கொண்டு நாம் சும்மா இருக்கலாமா? அவர்களோடு போரிட்டு அந்தப் பெண்ணை விடுவிக்க வேண்டாமா?" என்றான்.

"வல்லபா! உனக்கு என்ன பைத்தியமா? நாம் செல்லப் போவது மிக முக்கியமான காரியத்தை முன்னிட்டு! சற்று முன்னர் நீயே உன் வாயால் சொன்னாய்! உன் தந்தையின் லட்சியத்தை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்பதை! ஆகவே நாம் அரங்கன் இருக்குமிடத்தைத் தான் தேடிச் செல்லவேண்டும். ஒரு பெண்ணின் பின்னால் அல்ல!" என்று தீர்மானமாக தத்தன் கூறினான்.  மேலும் தொடர்ந்து, "நீ செல்ல வேண்டிய வழி என்னவென்று தெரிந்திருந்தும் உன் வழியில் பிறழாதே!" என வல்லபனுக்கு நினைவூட்டினான். அதற்கு வல்லபன், "ஆம்! நீ சொல்வது சரியே! என் வழியில் நான் பிறழவில்லை. ஆனால் அரங்கனை நான் கண்டு பிடித்தால் மட்டும் போதுமா? மீண்டும் திருவரங்கத்தில் கொண்டு சேர்ப்பித்து மறுபடி எல்லா ஆராதனைகளும் திருவிழாக்களும் அரங்கனுக்கு முறைப்படி நடக்கச் செய்ய வேண்டாமா?" என்றான். பின்னர் தொடர்ந்து, "அதற்கு நாம் இருவர் மட்டும் போதாது! தத்தா! இந்த நாடே நம் பின்னால் நிற்க வேண்டும். அரங்கனைத் திருவரங்கத்தில் சேர்ப்பிக்க வேண்டும் என்னும் ஆவலில் நாட்டில் உள்ள நல்லோர் அனைவரும் ஒன்று சேரத் திரள வேண்டும் தத்தா! இல்லை எனில் நமக்கு ஆன்மிக பலமும் இருக்காது. மக்கள் பலமும் இருக்காது!" என்றான்.

"அதற்கு?" என தத்தன் கேட்க, "அதற்குத் தான் சொல்கிறேன். கண்ணில் பட்ட இந்தத் தீமையை நாம் தட்டிக் கேட்டே ஆகவேண்டும். இப்படியான தீமைகள் அழிக்கப்படுகிறது. அதற்கும் ஆட்கள் இருக்கிறார்கள் என மக்களுக்குத் தெரிந்தால் நம்பக்கம் அனைவரும் ஒன்று சேர்வார்கள்!"என்றான் வல்லபன். தத்தன் யோசனையுடன், "உன் எண்ணம் என்ன, வல்லபா! அந்தப் பெண்ணை எப்படியானும் காப்பாற்றியே ஆக வேண்டும்! அது தானே!" என்று கேட்க வல்லபன், "ஆம்!" என ஒற்றை வரியில் சொன்னான்! தத்தன் அதற்கு, "ஏற்கெனவே வழியில் பிறழாதே! என்று எச்சரித்து விட்டேன். இப்போது சொல்கிறேன் கேள்! விழியில் பிறழாதே!" என மறுபடி எச்சரித்தான் தத்தன். வல்லபன் வெறுப்புடன் அவனைப் பார்த்தான். " நான் அவள் விழியில் எல்லாம் பிறழவில்லை. அந்தப் பெண்ணின் அழகோ, அவள் விழிகளின் அழகோ என்னைப் பிறழ வைக்கவில்லை!" என்று ஆவேசத்துடன் சொல்ல, தத்தன், "எப்படியாயினும் அந்தப் பெண்ணின் விஷயத்தில் நாம் குறுக்கிடுவது ஆபத்து!" என்று மீண்டும் எச்சரித்தான். வலுவில் சென்று ஆபத்தை வரவழைத்துக்கொள்வது நல்லதல்ல என்றும் சொன்னான். தீமையான ஒரு விஷயத்தைத் தடுப்பது வலுவில் சென்று ஆபத்தை வரவழைத்துக் கொள்வது ஆகாது என வல்லபன் தீர்மானமாகக் கூறினான். தத்தன் யோசனையில் ஆழ்ந்தான்.

No comments: