என்ன கொடுமை. இடுப்புக்குக் கீழ் இரு கால்களும் தனக்கு இயங்கவில்லை என்பதைக் கண்டு கொண்டார் சிங்கழகர். திகைத்துப் போனவராகக் கொஞ்சம் சாய்ந்தாற்போல் எழுந்து கொண்டு இரு கால்களையும் நோக்கினால் மூட்டு வரை நீலம் பாரித்திருந்தது இரு கால்களிலும். அப்போது தான் அவருக்கு நினைவில் வந்தது. தாசர்களின் கடைசிக் கிரியைக்காக அவர்கள் உடல்களைத் தேடிக் கண்டு பிடிக்கையிலும் அதன் பின்னர் புதர்களை ஊடுருவிக்கொண்டு அவர்களுக்குக் கடைசிக் கிரியைகள் செய்யச் சென்றபோதும் அவ்வப்போது "சுருக்" "சுருக்" என ஏதோ குத்திக் கொண்டே இருந்தது. கூடவே காலில் வலியும் தோன்றியது. முள் செடிகள் குத்திக் காலில் வலி தோன்றியதாக நினைத்தவண்ணம் அப்போதே அதை என்ன என்றே பார்க்கவில்லை. இப்போது அவருக்குப் புரிந்தது ஏதோ விஷச் செடிகளின் முட்களோ, அல்லது விஷப்பூச்சிகளோ, விஷ ஜந்துக்களோ தன் கால்களைக் கடித்திருக்க வேண்டும். அது தான் கால்கள் மூட்டு வரை நீலம் பாரித்துவிட்டது என நினைத்தவண்ணம் கால்களைப் பார்த்தவர் மனதில் அதிர்ச்சியே மேலோங்கியது.
கால்கள் கட்டையாகிவிட்டன. தமக்கு இனி எழுந்து நடக்க முடியாது என்பதை உணர்ந்ததும் அவருக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. உதவி இல்லாமல் தன்னால் இனி எங்கேயும் போகமுடியாது என்பதைப் புரிந்து கொண்டவராக எங்கோ சென்ற சீராம தாசர் வரட்டும். அதுவரை இங்கேயே காத்திருக்க வேண்டியது தான் என நினைத்த வண்ணம் அங்கேயே அன்று பகல், இரவு முழுவதையும் கழித்தார். இரண்டாம் நாள் பொழுது புலரும்போதே இனி இந்தக் காட்டில் இருப்பதில் எந்தவிதப் பலனும் இல்லை என்பதைப் புரிந்து கொண்டார். சீராமதாசர் இனியும் வருவார் என எண்ணுவதும் வியர்த்தமானது. காட்டை விட்டு உடனே வெளியேறாவிட்டால் ஆட்கொல்லி மிருகங்களால் ஆபத்துத் தான் வந்து சேரும் என்று எண்ணிக் கொண்டு தவழ்ந்த வண்ணம் மெல்ல மெல்ல அந்தக் காட்டில் ஊடுருவிக் கொண்டு செல்லலானார். பசி, சோர்வு! இரண்டும் அழுத்தியது அவரை. அப்படியே தவழ்ந்த வண்ணம் மேலும் மூன்று நாட்களும் கழிந்து விட்டன. காடு எங்கே முடிந்து நகரம் ஆரம்பிக்கிறது எனத் தெரியவில்லை அவருக்கு. மயங்கிக் கிடந்தார்.
அப்போது அங்கே வேட்டைக்கு வந்த செஞ்சு இனத்தைச் சேர்ந்த மலைவாழ் மக்களில் ஒருவர் அவரைக் கண்டு கொண்டார். அவர்கள் அவர் இன்னமும் உயிருடன் இருப்பதைக் கண்டுத் தண்ணீர் அருந்தக் கொடுத்ததோடு அல்லாமல் பசியுடனும் இருப்பதை அறிந்து கொண்டு தங்களிடம் இருந்த பழங்கள், தேன் போன்றவற்றைச் சாப்பிடக் கொடுத்தனர். பிறகு மெல்ல அவரிடம் பேச்சுக் கொடுத்து அவருடைய விருத்தாந்தங்களைக் கேட்டு அறிந்து கொண்டனர். அவர்களில் தலைவனாக இருந்தவன் ஒரு டோலாவைக் கொண்டு வரும்படி மற்றவர்களைப் பணித்தான். உடனே ஒருவன் சென்று எங்கிருந்தோ ஒரு டோலாவைக் கொண்டு வந்தான். அந்த டோலாவில் சிங்கழகரை அவர்கள் ஏற்றினார்கள். நான்கு பேர் அவருடைய டோலாவைத் தூக்கிச் சென்று காட்டைக் கடந்து நாட்டுக்கு அருகே ராஜபாட்டையில் இறக்கி விட்டார்கள். அங்கேயே விடப்பட்ட சிங்கழகர் செஞ்சு வேடர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு அவ்வழியாக வந்த போக்கு வண்டிகளில் மாறி மாறிப் பயணம் செய்து கடைசியில் ஒரு வழியாகக் காஞ்சிபுரத்துக்கு வந்து சேர்ந்தார். முற்றிலும் மரத்துப் போயிருந்த தம் கால்களுக்கு அங்கேயே வைத்தியரிடம் வைத்தியம் பார்த்துக் கொண்டு காஞ்சி நகரிலேயே வசிக்கலானார்.
இதைச் சொல்லி முடித்த சிங்கழகர் இப்போது முற்றிலும் தன்னை வேற்று மனிதனாகப் பாவித்துக் கொண்டு, "அவர் இவ்விதம் பதினெட்டு ஆண்டுகள் இந்தக் காஞ்சியில் வசித்துவிட்டார் அப்பா! அவருடைய ஆசைகள், எண்ணங்கள் , மனோரதங்கள் ஆகியவை இந்தப் பதினெட்டு ஆண்டுகளில் சுக்குச் சுக்காய்ச் சிதறிவிட்டன. இப்போது கேவலம் ஓர் நடைப்பிணம்!" என்று சொல்லிய வண்ணம் முட்டிக் கொண்டு வரும் கண்ணீரை அடக்க முடியாமல் கேவிய வண்ணம் தம் கதையைச் சொல்லி முடித்தார் சிங்கழகர்.
இளைஞர்கள் கற்சிலை போல் அப்படியே அமர்ந்திருந்தார்கள். மஞ்சரியும் செய்வதறியாது திகைத்துப் போய் உட்கார்ந்திருந்தாள். புராண இதிகாசக் கதை ஒன்றைக் கேட்டது போன்ற உணர்வில் இருந்தனர் வல்லபனும், தத்தனும். அதன் சோகமான முடிவு அவர்கள் மனங்களை அசைத்துவிட்டது. துக்கம் அந்த அறையைச் சூழ்ந்து கொண்டது. ஓரளவுக்குத் தம்மைத் தேற்றிக் கொண்ட சிங்கழகர் அவர்களைப் பார்த்து, "பிள்ளைகளே!" என அழைத்தார். சோகமான மன நிலையிலிருந்த இருவரும் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தார்கள். சிங்கழகர் மேலும் சொன்னார். " நீங்கள் கேட்டது ஒரு சோக காவியம். அதனால் உங்கள் மனங்கள் பாதிக்கப்பட்டிருக்கும். இந்த நிலையில் நீங்கள் எங்கும் போக வேண்டாம். இங்கேயே இந்தக் குடிலிலேயே தங்குங்கள். என் மனதின் பாரமும் சற்று நீங்கட்டும். அதன் பின்னர் நான் மேலும் கொஞ்சம் உங்களுடன் உரையாடுவேன்." என்றார். இருவரும் மௌனமாக இருக்க சிங்கழகர் மெள்ள எழுந்திருந்து விந்தி விந்தி நடந்து புழக்கடையில் உள்ள நந்தவனத்துக்குச் சென்றார். இளைஞர்கள் அப்படியே அமர்ந்திருக்க அவர்கள் காதுகளில் திடீரென ஓர் விசும்பலும், கேவலும் கேட்க நிமிர்ந்து பார்த்தார்கள். மஞ்சரி தான் விசும்பி விசும்பி அழுது கொண்டிருந்தாள்.
No comments:
Post a Comment