எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, September 08, 2015

ஶ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்! அரங்கன் பட்டினி கிடக்கிறான்!

அரங்கனோடு சேர்ந்து கொள்ள மேலும் அரங்கமாநகரிலிருந்து வந்தவர்களில் சில நாட்டியப் பெண்களும் இருந்தனர். அவர்கள் அனைவரும் துருக்க வீரர்களிடம் மாட்டிக்கொள்ள ஒருத்தி மட்டும் எப்படியோ தப்பி அரங்கனைத் தேடிச் செல்லும் இருவருடன் சேர்ந்து கொண்டாள். இருவருமே இளைஞர்கள். தங்களுடன் ஓர் இளம்பெண் சேர்ந்து கொண்டது உள்ளூரப் பிடிக்கவில்லை என்றாலும் வேறு வழியில்லாமல் அவளையும் அழைத்துக் கொண்டு நடந்தனர். வழியில் சத்திரம் ஒன்றில் தங்கியபோது அந்தப் பெண்ணைத் தேடிக் கொண்டு வந்த துருக்க வீரர்களிடமிருந்து அவளைக் காக்கவேண்டி நெற்குதிருக்குள் அவளை மறைத்தனர். பின்னர் துருக்க வீரர்கள் திரும்பியதும் அங்கிருந்து தப்பியவர்கள் அந்தப் பெண்ணுக்கு ஆண் வேடம் போட்டு அழைத்துச் சென்றனர். இருந்தும்  மீண்டும் டில்லி சுல்தானின் வீரர்களின் தலைவன் ஒருவனிடம் மாட்டிக் கொள்ள விரர் தலைவன் அவளைப் பெண் என அடையாளம் கண்டு பிடித்தாலும் என்ன காரணத்தாலோ விட்டு விடுகிறான். 

மூவரும் உள்ளூரக்கலக்கத்துடன் மேலே நடக்க பாண்டியனுக்கு உட்பட்ட வாணாதிராயர் பரம்பரையார் அவர்கள் திருவரங்கத்திலிருந்து வருவதைக் கேள்விப் பட்டு எதிர்கொண்டு அழைத்தனர். இரு இளைஞர்களையும் ஓர் இளம்பெண்ணையும் பார்த்துத் திகைக்க இளம்பெண் தன்னுடைய மனைவி என அவர்களில் தலைவன் ஆன இளைஞன் கூற விட்டு விடுகின்றனர். ஒரு வாரம் அங்குமிங்கும் அலைந்தவர்கள் ஒரு வழியாக அரங்கன் போன பாதையைக் கண்டுபிடித்தனர். விரைவில் அரங்கன் ஊர்வலத்தையும் கண்டனர். பல்லக்கில் எவ்வித நகைகளும் இல்லாமல் தன் பரிமள கஸ்தூரி மணம் மட்டும் சுற்று வட்டாரம் முழுதும் மணக்கக் காட்சி அளித்த அரங்கனைப் பார்த்துக் கண்ணீர் விட்டனர். அதோடு ஆரம்பத்தில் அரங்கனோடு சேர்ந்து வந்திருந்த கூட்டமும் குறைந்து போயிருந்தது. பெட்டகங்கள் கொள்ளை அடிக்கப்பட்ட விபரமும் அதிலிருந்து உடல் நலம் சரியில்லாமல் மனம் கலங்கிப் படுத்திருந்த பிள்ளை உலகாரியரையும் கண்டு விசனப்பட்டார்கள். 

அவர்கள் திருவரங்கத்திலிருந்து வருவதைக் கேள்விப் பட்ட பிள்ளை உலகாரியர் டில்லி வீரர்கள் அரங்கமாநகரை விட்டுச் சென்றுவிட்டனரா என விசாரித்தார். அவர்கள் அங்கேயே நிரந்தரமாகத் தங்கி இருப்பதை இளைஞன் கூறக் கேட்ட பிள்ளை உலகாரியர் அரங்கனுக்கு இப்படி ஒரு சோதனையா என மனம் வேதனைப்பட்டார்.  வந்தவர்கள் பல்லக்கின் அருகே சென்று பார்க்க, பல்லக்கு இருந்த கோலம் அவர்கள் மனதைப் பதற அடித்தது. ராஜகிளி, "அரங்கா! அரங்கா!" என்று சோகமாகக் கூறித் தன் இறக்கைகளைப் படபடவென அடித்துக் கொண்டது. பல்லக்கைச் சுற்றி இருந்த சித்திரத் துணிகள் கிழிந்து போய் இருந்தன. விதானங்கள் உடைபட்டு ஆங்காங்கே தூசியும் மண்ணும் கலந்து பல்லக்கின் ஒளியே குறைந்து காணப்பட்டது. அப்போது வந்தவர்கள், பெருமாளுக்கு விளக்காவது வைக்கக் கூடாதா எனக் கேட்க, எண்ணெய் இல்லாக் கொடுமையைச் சொல்லி அரற்றினார்கள் அரங்கனின் பரிசனங்கள். அதற்குள்ளாக இன்னொருவர் பல்லக்கின் திரையைத் திறந்து அழகிய மணவாளரின் தரிசனத்தைக் காட்ட அதைக் கண்ட மூவரும் திகைத்து உறைந்து போனார்கள்.

தங்கக்கீரீடம் தாங்கி, அதுவும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான கிரீடமாக இருக்கும். நெற்றியில் நீலக்கல், வைரக்கல்லினால் ஆன திருநாமம், காதுகளில் கர்ணப்பூக்கள், மார்பில் பொன்னாபரணங்களும், ரத்தின ஆபரணங்களும் புரள, தங்கப்பூணூல் ஒளி வீச, கை,கால் இடைகளிலும் பொன் ஆபரணங்களைப் பூண்டு சர்வாபரண பூஷிதராய்க் காட்சி அளிக்கும் அரங்கன் இன்று படு ஏழையாகக் காட்சி அளித்தார். அரையில் சின்னப் பருத்தி வேட்டி. கையால் நெய்யப்பட்ட நூலினால் ஆன பூணூல், தலையில் கிரீடம் இல்லை! காதுகளில் ஆபரணங்களோ, திருமார்பில் ஆபரணங்களோ கிடையாது! கைகள், கால்கள், இடை எங்கும் ஆபரணம் எதுவும் இல்லாமல் வெறுமையாகக் காட்சி அளித்தார். அரங்கனின் நிலைமை பரிதாபகரமாக இருந்ததோடு அல்லாமல் மேலும் வருத்தத்தை அளிக்கும் சொல்லைக் கூறினார் அங்கிருந்த ஒருவர். காலையிலிருந்து பெருமாளுக்கு அமுது செய்யவே இல்லை என்றும் அமுது செய்ய வேண்டிய பொருட்கள் எதுவும் இல்லை என்றும் கூற வந்தவர்கள் கண்களில் கண்ணீர் மழையெனப் பெயதது. 

அனைவரையும் காத்து ரக்ஷிக்கும் அரங்கனுக்கா இந்நிலைமை? இது என்ன கொடுமை! அரங்கனின் பொருட்களைக் கூடக் களவாடும் மனிதர்கள் இருக்கிறார்களா? மனிதர்கள் செய்யும் இந்தக் கொடுமையை அரங்கன் ஏன் கண்டிக்கவில்லை? தண்டிக்கவில்லை? ஏனெனில் இது அவன் செயல் அன்று! மனிதர்கள் செய்யும் கொடுமை! அவர்களின் விதியால் விளைந்த இந்தக் கர்ம பலனை அவர்கள் அனுபவித்தே தீர வேண்டும். அரங்கனுக்கு அதனால் எவ்விதக் குறையும் இல்லை. அவன் இதற்கு எதுவும் செய்ய இயலாது. அவர்களாகத் திருந்தி வந்தால் தான் உண்டு. அதற்கும் காலம் கனிய வேண்டும். அவன் விதியை மீறி எதுவும் செய்யும் அதிகாரமோ, எண்ணமோ அரங்கனுக்குக் கிடையாது. ஆகையால் அனைத்தையும் பொறுத்துக் கொண்டு இருக்கிறான்.  

திருவரங்க ஊரை மட்டுமின்றிச் சுற்று வட்டாரம் முழுதையும் அரங்கன் தான்பரிபாலிப்பாதாக அங்குள்ள மக்கள் நம்பிக்கை. அவருக்கில்லாத சொத்தா? ஆனால் அனைத்தையும் துறந்து இதோ ஒரு துறவி போல் ஒரு காலம் அமுது செய்விக்கக் கூட வழியில்லாமல் அரங்கன் நிற்கையில் மனிதர்களான நாமெல்லாம் எம்மாத்திரம்!

Friday, September 04, 2015

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! அரங்கனைத் தொடர்ந்து!

இனி மேலே நடந்தால் தான் விழுந்துவிடுவோம் என்பதால் தேசிகர் அங்கேயே நின்று விட்டார்.  இரவு முழுவதும் அங்கேயே காத்திருந்தார்.  மறுநாள் காலை எழுந்து பார்த்ததும் தான் இரண்டே அடி தூரத்தில் இருந்த பள்ளத்தாக்கைப் பார்த்து விட்டு தேசிகர் தாம் தெய்வாதீனமாகத் தப்பித்ததை நினைத்து வியந்தார். பின்னர் சிறுவர்களையும் அழைத்துக் கொண்டு தம் சீடரைக் கூப்பிட்ட வண்ணம் பள்ளத்தாக்கின் கரையோரமாகவே நடந்து சென்றார். சற்று நேரத்தில் அவர் குரலுக்குப் பதில் குரல் வந்தது. தூரத்தில் அக்கரையிலிருந்து வந்த குரலைக் கேட்ட வண்ணம் மேலும் நடந்தார். அதே போல் எதிர்க்கரையிலிருந்த பிரமதந்திரரும் குரல் கொடுத்துக் கொண்டே வர இருவரும் ஒரு நாழிகை நடந்து பள்ளத்தாக்கு முடிவடையும் இடத்தில் மேற்குக் கரை ஓரமாக ஒன்று சேர்ந்தனர். இருவரும் ஒருவருக்கொருவர் ஆரத் தழுவிக் கொண்டு தங்கள் விருத்தாந்தஙகளையும் பகிர்ந்து கொண்டனர்.

பின்னர் பிரமதந்திரர்  டில்லித் துலுக்க வீரர்கள் அரங்கன் ஊர்வலத்தைத் தேடிச் சென்று கொண்டிருப்பதாயும் ஆகவே தாங்கள் இருவரும் அந்த ஊர்வலத்தைத் தொடர்ந்தால் அவர்களிடம் மாட்டிக்கொள்ள நேரிடும் என்றும் தெரிவித்தார். பின்னர் இருவரும் ஆலோசித்து மேற்குத் திசை நோக்கிப் பயணப்பட்டனர். இப்படி அரங்கனைத் தேடிச் சென்றவர்களும், அரங்கனோடு சென்றவர்களும் விதி வசத்தாலும், பிராண பயத்தாலும் பிரிந்து ஒவ்வொரு திசை நோக்கிப் பயணப்பட்டனர். கள்வர் பற்றில் விட்டுப் பிரிந்த அரங்கனைத் தேடிப் போவோமா?

முதலாவது கள்வர் பற்றை விட்டுச் சென்ற திருவரங்கன் ஊர்வலத்திற்கு இரண்டு, மூன்று நாட்கள் வரை எவ்விதத் தொந்திரவும் எங்கிருந்தும் வரவில்லை. பிள்ளை உலகாரியரும் பெருமாளின் பல்லக்கிற்குச் சிறிது தூரம் முன்னாலேயே தமது சீடர்களோடு சென்றார். அப்போது மூன்றாம் நாள் மாலையில் அனைவரின் தலைக்கு மேலும், 'கீ, கீ" எனக் கிளி கத்தும் சப்தம் கேட்கவும் அனைவரும் மேலே அண்ணாந்து பார்த்தனர். அப்போது கூரக் குலோத்தமதாச நாயனார் என்பவர் உலகாரியரைப் பார்த்து, :சுவாமி இது அரங்கனுடனேயே வரும் ராஜகிளியைப் போல் தெரிகிறது. நம்மை இனங்கண்டு அழைக்கிறது போலும்!" என்றார். மீண்டும் கிளி என்ன செய்கிறது என்று பார்த்தால், கிளி, "கீ, கீ" என்று கத்தியவண்ணம் பின்னோக்கிப் பறந்தது. அதைப் பார்த்த பிள்ளை உலகாரியர் அரங்கனுக்கு ஏதோ நிகழ்ந்திருப்பதால் கிளி தங்களை அழைக்கிறது எனப் புரிந்து கொண்டார். ஆகவே அவரும் திரும்பி விரைந்து பின்னோக்கிச் சென்றார்.

அரங்கன் பல்லக்கோடு வரும் ஊர்வலத்தை அடைந்த பிள்ளை உலகாரியர் திகைத்து நின்றார். மாபெரும் கள்வர் கூட்டம் அரங்கனையும், அரங்கனோடு வந்தவர்களையும் சூழ்ந்து கொண்டிருந்தது. பரிசனங்களில் மூவர் கள்வரால் அடிபட்டுக் கீழே விழுந்து கிடந்தனர். கள்வர் தலைவன் கைகளில் ஆயுதபாணியாய் நின்றிருந்தான். வலக்கையில் வேலாயுதம் தூக்கிய வண்ணம் இருக்க தன் ஆட்களைப் பெட்டகங்களைத் தூக்கி எடுக்கச் சொல்லி ஆணை பிறப்பித்துக் கொண்டிருந்தான். அவர்களும் பெட்டகங்களைத் தூக்க முயன்று கொண்டிருந்தனர். உலகாரியர் அவனைப் பார்த்து இது அரங்கனின் சொத்துக்கள் என்றும் இவற்றைக் கொள்ளையடித்துச் செல்வது மகா பாபம் என்றும் கூறக் கள்வர் தலைவனும் பாபம் தான் என்றாலும் அதைப் பார்த்தால் நாங்கள் பிழைக்க வழி என்ன என்றும் கேட்டான்.

மேலும் இது தன் எல்லைக்குள் வந்த சொத்துக்கள் என்றும் இவற்றை அபகரிப்பது தன் உரிமை என்றும் சொன்னான். கள்வர்களான அவர்கள் இந்தக் காட்டைப் பங்கு போட்டுக் கொண்டு ஆட்சி செய்வதாகவும், இது அவன் எல்லைக்குள் வந்த சொத்தென்பதால் அவற்றைப் பறித்துக் கொள்வதாயும் திட்டவட்டமாய்க் கூறினான். உலகாரியரும் தம்மால் இயன்ற அளவு நியாயங்களை எல்லாம் எடுத்துச் சொல்லிப் பார்த்தார். கள்வர் தலைவன் கேட்பதாக இல்லை. மனம் வேதனை அடைந்து பொறுமை இழந்த உலகாரியர் தம்மிடம் இருந்த ஒன்றிரண்டு ஆபரணங்களான காதுக்கடுக்கன்கள், கைத் தோடாக்கள், மோதிரங்கள் ஆகியவற்றையும் கழற்றி வீசினார். சற்றும் கவலை கொள்ளாமல் அவற்றையும் எடுத்துக் கொண்டான் கள்வர் தலைவன். அனைத்தையும் பறித்துக் கொண்ட பின்னரும் அவ்விடம் விட்டுப் போகாமல் பல்லக்கின் திரையை விலக்கி அரங்கனைப் பார்த்தான் கள்வர் தலைவன்.

உலகாரியர் மன வருத்தத்துடன் அதான் எல்லா ஆபரணங்களையும் பறித்துக் கொண்டு விட்டாயே! இன்னும் என்ன என்று கோபமாய்க் கேட்க அரங்கன் மேல் சாத்தி இருந்த நகைகளையும் கேட்டான் அவன். அவற்றையும் கழற்றிக் கொடுக்கச் சொல்லி உலகாரியர் சொல்ல பட்டாசாரியர்கள் கண்ணீர் வடித்துக் கொண்டே கழற்றிக் கொடுத்தனர். பின்னரும் போகாமல் நின்றுகொண்டிருந்த கள்வர் தலைவனைப் பார்த்து,இன்னும் என்ன வேண்டும் எனக் கோபமாய்க் கேட்க, நாச்சிமார்களின் தாலிகளும், பெருமாளின் தங்கப்பூணூலும் இருக்கின்றனவே. ஒன்றுவிடாமல் கொடுத்துவிடுங்கள் என்று கள்வர் தலைவன் நெஞ்சில் ஈரமே இன்றிக் கூறினான். அழுது கொண்டே அனைத்தையும் கழற்றிக் கொடுத்தனர். கள்வர்களில் சிலருக்கு உலகாரியர் மேல் தனி மரியாதை இருந்தது. அவர்கள் மட்டும் ஒன்றுகூடி இவர் ஒரு மகான் இவருக்குத் தக்க மரியாதை செய்ய வேண்டும் என்று பேசிக் கொண்டு ஒரு தட்டில் தங்கக் காசுகள், கனி வர்க்கங்கள் என்று குவித்து எடுத்து வந்து அவருக்குக் காணிக்கை செலுத்த உலகாரியர் வெறுப்புடன் அவற்றை மறுத்துவிட்டு மேலே நடந்தார்.  அனைத்தையும் கள்வர்களிடம் இழந்த அரங்கனும் தன் மக்களைத் தொடர்ந்தான்.

Sunday, August 30, 2015

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! அரங்கனைத் தொடர்ந்து!

அரங்கனுக்கு அன்றைய நிவேதனப் பொருட்களைத் தேடிக் கொண்டு வந்து கொடுத்தான் கள்வர் தலைவன். ஊர்வலம் மேலே செல்ல வேண்டிய வசதிகளையும் செய்து கொடுத்தான். அந்தக் காட்டின் எல்லை வரை கூடவே வந்து செல்லும் வழியில் உள்ள பல்வேறு கள்வர் பற்றுக்களிலிருந்தும் அவர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொண்டு செல்லும்படியாக அறிவுரை கூறினான். 
*********************************************************************************

இங்கே ஶ்ரீரங்கத்தில்  உயிரற்ற சடலங்களுக்கு அடியில் மறைந்திருந்த வேதாந்த தேசிகர் வெகு நேரம் அப்படியே கிடந்தார். இரவு வந்து வெகுநேரம் ஆனபின்னர் மெல்ல மெல்ல எழுந்து அமர்ந்தார். இதைக் குறித்த பதிவு 

சுதர்சன ஆசிரியரின் குழந்தைகளையும் எழுப்பினார்.  மண்ணுக்கு அடியில் புதைத்து வைத்திருந்த சுருதப்பிரகாசிகையையும் எடுத்துக் கொண்டார்.  மெல்ல மெல்ல சப்தம் செய்யாமல் கோபுர வாயிலுக்கு வந்தார். யாரும் இல்லை என்பதை நிச்சயம் செய்து கொண்டு வெளியேறித் தென் காவேரிக்குச் சென்றார். காவேரிக்கரையில் மேற்குப் பார்த்து மறைந்து மறைந்து நடந்தார். வெகுதூரம் போய் உறையூருக்கு அப்பால் கரையேறினார். ஒரு வயலில் இரு குழந்தைகளோடு படுத்து இரவைக் கழித்தார். காலையில் அருகிலிருந்த கிராமத்தை அடைந்தபோது அங்கிருந்த கிராமவாசிகள் அவரைச் சூழ்ந்து கொண்டனர். அவர்களில் ஶ்ரீரங்கத்திலிருந்து தப்பி வந்தவர்களும் இருந்தனர். அரங்கத்தில் நடந்ததை எல்லாம் அவர்களுக்கு எடுத்துச் சொன்னார். அனைவரும் கண்ணீர் பெருக்கினார்கள். அரங்கனோடு தாங்களும் போக தேசிகர் தங்களை அனுமதித்திருக்கலாம் என அவர்களில் சிலர் கூற, கூட்டமாக அரங்கனோடு  செல்வது ஆபத்து என்றார் தேசிகர். 

அரங்கமாநகரே பாழாகிவிட்டதாகவும், தமிழ் பேசும் மக்கள் வாழும் இந்த நாடே இருள் சூழ்ந்து இருப்பதாகவும் அனைவரும் க்ஷேமமாக இருக்க அரங்கனைப் பிரார்த்திப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் கூறினார். அனைவரும் ஓவென்று அலறித்துடித்து அழுதனர் அந்த சோகத்தைக் கண்ட தேசிகர் வாயிலிருந்து அப்போது ஒரு ஸ்லோகம் வந்தது. "அபீதிஸ்தவம்" எனும் பெயரில் தற்போது வழங்கப்படும் அந்த ஸ்லோகம் 28 பாக்களால் ஆனது என்றும், இப்போதும் கிடைப்பதாகவும், கஷ்டங்கள் நீங்கவும் மனோபயம் அகலவும் மக்கள் இதைப் பாராயணம் செய்வார்கள் என்றும் தெரியவருகிறது. இந்தப் பாடலிலேயே யவனர்கள் என வெள்ளையரையும் தேசிகர் குறிப்பிட்டிருப்பதால் பின்னாட்களில் ஆங்கிலேய ஆட்சி ஏற்படப் போவதை தீர்க்கதரிசனமாகச் சொல்லிவிட்டார் என்பவர்கள் உண்டு.

அன்று முழுதும் அங்கே பிரார்த்தனைகள் செய்த வண்ணம் உபவாசமாக இருந்த தேசிகர் மறுநாள் அந்த இரு இளம்பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு கிழக்கே தொண்டைமான் காட்டுக்கு வந்து சேர்ந்தார். அங்கே வழி நெடுகக்காணக்கிடைத்த துளசிதளங்களை வைத்து வழி கண்டு பிடித்து மேலே நடந்தார். சிறிது தூரம் வரை காணப்பட்ட துளசிதளங்கள் அதன் பின்னர் அங்குமிங்கும்  சிதறிக் காணப்பட்டது. அதற்கப்புறம் சிறிது தூரத்தில் துளசி தளங்களையே காணமுடியவில்லை. தேசிகர் தாமாக ஒரு வழியைக் குறி வைத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினார். நேரம் ஆக ஆக காட்டின் அடர்த்தி அதிகம் ஆகி வந்தது. இருட்டு அப்பிக் கொண்டது. போகும் வழி புரியவில்லை. காட்டையே சுற்றிச் சுற்றி வருவது போல் இருந்தது அவருக்கு. வந்த வழி கூடத் தெரியவில்லை. அதனால் திரும்பிப் போகவும் முடியவில்லை. மேலும் சற்றுத் தூரம் நட்ந்தவர் ஒரு மரத்தடியில் கிடந்த  முழு மனித எலும்புக்கூடுகளைக் கண்டு திகைத்தார்.

அதோடு மட்டுமல்லாமல் அங்குள்ள மரங்களின் தாழ்ந்த கிளைகளில் புடலங்காய் காய்த்துத் தொங்குவதைப் போல் பாம்புகள் தொங்கிக் கொண்டிருந்தன. பின்னர் செய்வதறியாமல் வேறு திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தார். செல்லும்போதே ஜீயரை அழைத்துக் கொண்டு சென்றார். அவரது சீடரான பிரம்மதந்திர சுதந்திர ஜீயரை அழைத்தால் குரலை அடையாளம் கண்டு கொண்டு பதில் கொடுப்பார் என நம்பினார். அவரது குரல் தான் எதிரொலித்ததே தவிர பதில் ஏதும் கிட்டவில்லை. அந்த மாபெரும் பள்ளத்தாக்கில் விழுந்து விடுவோமோ எனப் பயந்து அங்கேயே நின்றார். இருள் சுற்றுவட்டாரத்தை விழுங்கிக் கொண்டு வந்து அவர் இருக்கும் இடத்தையும் விழுங்கியது.

Saturday, August 29, 2015

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! அரங்கனைத் தொடர்ந்து!

இங்கே

அரங்கனைக் கள்வர்கள் நடுவே விட்டு விட்டு வந்து மாதங்கள் மூன்று ஆகிவிட்டன. அரங்கன் என்ன ஆனான் என்பதைப் பார்ப்போமா?

சுற்றி வளைத்துக்கொண்ட கள்வர்களின் தலைவன் அவர்கள் சொல்வதை நம்பாமல் பெட்டகங்களைத் திறந்து காட்டச் சொன்னான். முதல் பெட்டகத்தில் அரங்கனின் நகைகள், அணிமணிகள், ஆபரணங்கள், வைரங்கள், பதக்கங்கள், ரத்தின ஹாரங்கள், முத்து நகைகள், பவள மாலைகள் வெள்ளியிலும், பொன்னாலும் செய்யப்பட்ட கங்கணங்கள் எனக் காணப்பட்டன. அவற்றைக் கண்ட கள்வர் தலைவன் கண்களில் வெறியே மிகுந்தது. மிகவும் ஆசையுடன் அவற்றைத் தன் கைகளால் துளாவிப் பார்த்தான். அப்போது அவன் பின்னே பிள்ளை உலகாசிரியர் வந்து அவனை "அப்பா!" என அழைத்தார்.  அவனையே பார்த்துக்கொண்டு வந்த அவர் மேல் சந்தேகம் கொண்ட கள்வர் தலைவன் தன் இடையிலிருந்து வாளை உருவினான். கைகளில் பாதுகாப்பாகப் பிடித்துக் கொண்டான்.

அதைக் கண்டு பயப்படாமல் பிள்ளை உலகாரியர், "அப்பா, உன் வாளைக் கண்டு நான் பயப்படவில்லை. எதிர்வாளைக் கொண்டு வரவும் மாட்டேன். வீரனான நீ வாயால் பேசாமல் வாளை உருவி வாளால் பேசப்பார்க்கிறாயே!" என்று சொன்னார். அவர் மேல் கோபம் வந்தாலும் கள்வர் தலைவனுக்கு ஒரு மரியாதையும் இருந்தது. அது அவர் கண்களில் தெரிந்த ஒளியாலா அல்லது முகத்தின் தேஜஸாலா என்று விவரித்துச் சொல்ல முடியவில்லை. ஆனாலும் அவரை விடக் கூடாது எனத் தீர்மானித்து, "யார் நீங்கள்? எந்த அரசனுக்கு இந்தக் கப்பம் கொண்டு செல்கிறீர்கள்?" என்று வினவினான்.  பிள்ளை உலகாரியர் அவனுக்கு பூலோக வைகுண்டமாம் ஶ்ரீரங்கத்தைப் பற்றி எடுத்துச் சொன்னார். அங்கே உறையும் ரங்கநாதனைக் குறித்து வர்ணித்தார். அத்தகைய ரங்கராஜனின் பக்தர்கள் தாங்கள் எனவும் இந்தச் சொத்தெல்லாம் அரங்கனின் சொத்துக்கள் என்றும் எடுத்துச் சொன்னார்.

நல்லவேளையாகக் கள்வர் தலைவன் அரங்கனைக் குறித்துக் கேள்விப் பட்டிருந்தான். ஆனால் அவருடைய சொத்துக்கள் ஏன் காட்டுக்கு வரவேண்டும் என அவனுக்குப் புரியவில்லை. அதோடு இவர்கள் அவனை ஏமாற்றுவதாகவும் நினைத்தான். அரங்கன் சொத்துக்களை இவர்கள் திருடிக் கொண்டு ஓடுவதால் தான் நேர்வழியில் செல்லாமல் குறுக்கு வழியில் இந்தக்காட்டுக்குள் வந்திருக்கின்றனர் என்றே நினைத்தான். அப்படியே அவர்களிடம் கேட்கவும் செய்தான். அதற்குப் பிள்ளை உலகாரியர் ஶ்ரீரங்கத்துக்குள் அந்நியர்கள் புகுந்ததை அவன் அறியவில்லை என்று புரிந்து கொண்டார்.

அந்நியப் படையெடுப்பையும் அரங்க நகரையே அவர்கள் பாழாக்கியதையும் எடுத்துச் சொன்னார். அரங்கனின் சொத்துக்களுக்காக அவர்கள் சுற்றி அலைவதையும் அரங்கனையே ஒரு முறை எடுத்துச் சென்றதையும் மறுமுறையும் எடுத்துச் செல்லாமல் இருக்கும்பொருட்டே அரங்கனையே அவர்கள் எடுத்துக் கொண்டு அவன் சொத்துக்களோடு தென்னாட்டை நோக்கிப் போவதையும் கூறினார். அரங்கன் இப்போது இந்தக் காட்டுக்குள் தான் இருக்கிறான் என்றும் கூறினார். அரங்கன் காட்டுக்குள்ளே இருப்பது தெரிந்ததும் கள்வர் தலைவன் ஆச்சரியம் அடைந்தான். பதட்டத்துடன், "எங்கே அரங்கன்? எங்கே அரங்கன்?" என்று கேட்டான். பரிசனங்களுக்குப் பிள்ளை உலகாரியர் சமிக்ஞை செய்ய அவர்களும் திருச்சின்னங்களை ஊதிக்கொண்டும், பிரபந்தங்களைப் பாடிக் கொண்டும் திருப்பல்லக்கில் அரங்கனை எழுந்தருளப் பண்ணிக் கொண்டு வந்தனர்.

அரங்கனை நேரில் கண்ட கள்வர் தலைவன் திகைத்து நின்றான். அரங்கன் இருக்கும் இடம் தேடிக் கொண்டு அனைவரும் செல்வார்கள். ஆனால் அவன் இருக்கும் இடம் தேடிக் கொண்டு அந்த அரங்கனே வந்திருக்கிறானே!  இது நம் பூர்வ புண்ணியம் தான் என மகிழ்ச்சியுற்றான். அப்போது அங்கிருந்தவர்களில் ஒருவர் அரங்கனுக்குக் கற்பூர ஆரத்தி காட்டினார்.  அதி மோகனமாகப் புன்முறுவலுடன் காணப்பட்ட அழகிய மணவாளரைக் கண்டு வியந்தான் கள்வர் தலைவன்.  அவன் கண்களில் கண்ணீர்  சுரக்கத் தன் வாளைக் கீழே போட்டுவிட்டு சாஷ்டாங்கமாகக்  கீழே விழுந்து நமஸ்கரித்தான். ரங்கா, ரங்கா என்று கூவினான். பாபம் செய்ய இருந்தேனே! எனப் புலம்பினான். தங்கள் எல்லை வரை அரங்கனுக்கு எவ்விதத் தீங்கும் நேராமல் காப்பதாக வாக்களித்தான்.

Friday, May 15, 2015

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! அரங்கனின் தெப்போத்சவம்! சில தகவல்கள்!

அரங்கனின் தெப்போற்சவம் குறித்துக் கிடைத்த சில தகவல்களை இப்போது பகிர்ந்து கொள்கிறேன்.  பாண்டியர்களின் காலத்தில் இது ஆரம்பித்திருக்கிறது. திருப்பள்ளியோடத் திருநாள் என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வந்தது. "பொன் வேய்ந்த பெருமாள்" என்னும் பட்டப்பெயர் கொண்ட சுந்தரபாண்டியன் காலத்தில் சித்திரை மாதம் தான் நடைபெற்று வந்திருக்கிறது. அப்போது காவிரியில் இப்போது போல் இல்லாமல் நீர் நிறைய ஓடிக் கொண்டிருந்த காலம். ஆகவே திருக்காவிரியில் பெரியதாக ஊருணி ஒன்று எடுப்பித்து அதிலே காவிரி நீரைப் பாய்ச்சி முத்துக்கள், பவளங்கள் பதித்த திருக்காவணம் (இங்கே காவணம் என்னும் சொல் பந்தலைக் குறிக்கும். முன்னாட்களில் பந்தல் என்னும் சொல் யாரேனும் இறந்தால் அந்த வீடுகளில் போடுவதை மட்டுமே குறிப்பிடப் பட்டிருக்கிறது.  திருமணம், விழாக்கள் போன்ற சுபகாரியங்களுக்குப் போடுவதைக் காவணம் என்றோ கொட்டகை என்றோ அழைத்து வந்திருக்கிறார்கள். இங்கே இறைவனுக்காகப் போடப் பட்டதால் திருக்காவணம் என்றாகி விட்டது.) கட்டி இருக்கின்றனர். பின்னர் திருப்பள்ளி ஓடம் பொன்னாலே பண்ணுவித்து அதிலே உபய நாச்சிமார்களுடன் அரங்கன் (அப்போதைய பெயர் அழகிய மணவாளர்) எழுந்தருளி தெப்போத்சவம் கண்டிருக்கிறான்.

பின்னர் மெல்ல மெல்ல ஆடி மாதம் பதினெட்டாம் பெருக்கன்று நடைபெற்று வந்திருக்கிறது. அப்படி ஒரு சமயம் திருப்பள்ளி ஓடத்திலே தெப்பத்திருநாள் கண்டருளும் சமயம் ஒரு சில மாந்திரீகர்களுடைய துர்மந்திரப் பிரயோகங்களால் தெப்பம் காவிரியின் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டது. அப்போது ஶ்ரீரங்கத்தில் வாழ்ந்து வந்த கூரநாராயண ஜீயர் சுவாமிகள் தம்முடைய வலக்கரத்தில் அணிந்திருந்த திருப்பவித்திரத்தை வலமாகத் திருப்பத் திருப்பள்ளி ஓடம் வெள்ளத்தை எதிர்த்து நிலை கொண்டது. சுதர்சன சதகம் இயற்றி ஶ்ரீசுதர்சனரையும் வேண்டினார். (இங்கே திருக்காவிரி என்று சொல்வது வட திருக்காவிரி அதாவது கொள்ளிடம் ஆகும்). அதன் பின்னர் அழகிய மணவாளப் பெருமாள் பிரச்னைகள் ஏதுமின்றி ஆஸ்தானம் கண்டருளினார்கள். இதன் பின்னர் அழகிய மணவாளரை அவ்வளவு தொலைவு அழைத்துச் சென்று தெப்போத்சவம் காண்பதில் உள்ள சிரமங்களை நினைத்துக் கூர நாராயண ஜீயர் அவர்கள் கோயிலுக்கு மேற்கே பெரியதாக ஓர் குளத்தை வெட்டச் செய்தார். அதிலே திருப்பள்ளி ஓடத்திருநாளை நடத்த ஆரம்பித்தனர். அதிலிருந்து தெப்பத்திருநாள் நடைபெறும்போதெல்லாம் விட்டவன் விழுக்காடு என்னும் பெயரில் பிரசாதம் ஶ்ரீரங்கநாராயண ஜீயர் மடத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

கூரநாராயண ஜீயருக்குப் பின்னர் கி.பி.1489 ஆம் ஆண்டில் கந்தாடை ராமாநுஜ முனி காலத்தில் அடையவளைந்தான் தெருவுக்கு மேற்கே அமைந்துள்ள குளத்தைச் சீரமைத்து மைய மண்டபமும் கட்டுவிக்கப் பட்டது. இந்தக் கந்தாடை ராமாநுஜ முனி என்பவர் விஜயநகர சாளுவர்கள் வீர நரசிம்மன் என்பவனுடைய தமையன் ஆவார். இவர் திருக்கோயிலின் கந்தாடை அண்ணனைத் தம் குருவாக ஏற்றதால் கந்தாடை ராமாநுஜ முனி என அழைக்கப்பட்டார். இவரும் இவருடைய சீடர்களும் திருவரங்கக் கோயில் வரலாற்றில் தனி இடம் பெற்றவர்கள். தற்காலத்தில் கந்தாடை மடத்தின் பட்டத்தை யாரும் அலங்கரிப்பதில்லை. முன்னர் கந்தாடை ராமாநுஜருக்கு மரியாதை செய்யும் பொருட்டு அவருக்கு அழகிய மணவாளர் சேவை சாதித்துக் கொண்டிருந்தார். தற்சமயம் இந்த மரியாதை நடைபெறுவதில்லை.

முதலில் சித்திரை மாதத்திலும் பின்னர் ஆடி மாதத்திலும் நடைபெற்று வந்த தெப்போற்சவம் விஜயநகரச் சக்கரவர்த்தியான கிருஷ்ணதேவராயர் காலத்தில் மாசி மாதம் நடைபெற்ற பிரம்மோத்ஸவத்தின் ஒரு வகை என்று சொல்கின்றனர். இத்திருநாள் இப்போது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது.  பின்னர் கி.பி. 1535 ஆம் ஆண்டிலும், 1536 ஆம் ஆண்டிலும், 1539 ஆம் ஆண்டிலும் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் மூலம் இந்தத் தகவல்கள் தெரிய வந்துள்ளன. கல்வெட்டுக்களைப் பொறித்தது துளுவ வம்சத்து அரசன் ஆன அச்சுததேவ ராயர் காலத்தில் ஆகும். இதில் திருநாளின் இரண்டாம் நாளன்று விடாய் ஆற்றிக்கு அழகிய மணவாளப்  பெருமாள் அக்கச்சி அம்மன் தோப்புக்கு எழுந்தருளி இருந்திருக்கிறார். ஆறாம் திருநாளன்று தெப்போத்சவம் கண்டருளி இருக்கிறார். இந்தக் கல்வெட்டுக்கள் இப்போதும் ஶ்ரீரங்கம் கோயிலின் இரண்டாம் திருச்சுற்றில் மேற்குப் பக்கச் சுவரில் உள்ள நாயக்கர் சிலைகளுக்கு முன்பு உள்ளதாகத் தெரிய வருகிறது.

பிரம்மோத்சவம் போலவே இந்தத் தெப்போத்சவத் திருநாளும் நடைபெறுவதால் ஒன்பது நாட்களிலும் அழகிய மணவாளப் பெருமாள் திரு வீதி உலா வருகிறார். இப்போது எட்டாம் நாளன்று தெப்போத்சவமும் ஒன்பதாம் நாளன்று ஶ்ரீசடாரிக்குத் தெப்பக்குளத்தில் தீர்த்தவாரியும் நடைபெற்று அன்றிரவு பந்தக்காட்சியும் நடக்கும். தெப்போத்சவம் திதிகளின் அடிப்படையில் கொண்டாடப்படுவதால் இதற்குக் கொடியேற்றுவது இல்லை என்று சொல்லப்படுகிறது. மேலும் நம்பெருமாளாகிய அழகிய மணவாளர் காலை வீதி உலாவில் பல்லக்கில் மட்டுமே எழுந்தருளுவார். வாகனங்கள் கிடையாது.  இதுவும் கிட்டத்தட்ட ஒரு வசந்தோத்சவம் போலவே கொண்டாடப் படுகிறது.  திருவிழாவின் நான்காம் நாள் மாலை வெள்ளி கருடனின் நம்பெருமாள் சேவை சாதிக்கிறார். மாசி மாத கருட சேவையை மிகவும் சிறப்பாகச் சொல்கின்றனர்.

தகவல்கள் உதவி: ஶ்ரீரங்க பங்கஜம்

Monday, May 04, 2015

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! அரங்கனைத் தொடர்ந்து!

திருவரங்கத்திலிருந்து கிளம்பிய அரங்கன் ஊர்வலம் பின்னால் வருபவர்களுக்காகத் துளசிச் செடியின் இலைகளையும், சின்னச் சின்னக் கிளைகளையும் ஒடித்துப் போட்டுக் கொண்டே சென்றாலும் பலருக்கும் திசை மாறித்தான் போயிற்று. ஆகவே மேற்கே ஒரு குழுவும், கிழக்கே ஒரு குழுவுமாகச் சென்றனர். அரங்கனோடு சேர்ந்து போனவர்களோ திருச்சிராப்பள்ளி நகரைக் கடந்து தொண்டைமானின் பிரதேசத்தில் சென்று கொண்டிருந்தது. அந்த இடத்தைத் தொண்டைமான் காடு என அந்நாட்களில் அழைத்தனர்.  வேதாந்ததேசிகர் இன்னமும் வந்து சேர்ந்து கொள்ளாதது குறித்து அனைவரும் கவலையிலும் ஆழ்ந்திருந்தனர்.

ஆனால் அந்தப் பகுதியில் வெகுநேரம் தங்க முடியாது. ஏனெனில் கள்வர் பயம் அதிகம். ஆனாலும் பிரதான சாலைகளின் வழி சென்றால் தாங்கள் கண்டுபிடிக்கப்படுவோம் என்னும் அச்சம் காரணமாகச் சுற்று வழியாகவே சென்றனர். வசதி படைத்தவர்கள் பல்லக்குகள், குதிரைகள் ஆகியவற்றில் பயணம் மேற்கொள்ள அதிகமான பயணிகள் கால்நடையாகவே சென்றனர். அவர்களில் சிலர் குழுக்குழுவாகப் பிரிந்து சென்றவர்கள் ஆங்காங்கே இடையில் தென்பட்ட தலங்களில் தங்கினார்கள். ஆனால் அரங்கனும், அவனுடன் சென்றவர்களும் மட்டும் எங்கும் நிற்காமல் தொடர்ந்து சென்று கொண்டே இருந்தனர். இரு தினங்கள் சென்றும் ஶ்ரீரங்கத்திலிருந்து தகவல் ஏதும் இல்லை. ஆகவே சற்றுத் தங்கிச் செல்லலாம் என ஒரு இடத்தில் தங்கி விட்டார்கள்.

தங்கிய இடத்தில் இரவைக் கழித்த மறுநாள் ஶ்ரீரங்கத்திலிருந்து இரு ஆட்கள் வந்து சேர்ந்து கொண்டனர். ஶ்ரீரங்கத்தில் நடந்த கோர யுத்தம் பற்றியும் நகரமே பற்றி எரிந்ததையும், எல்லோரையும் கொன்று அழித்துவிட்டார்கள் என்பதையும் அவர்கள் விபரமாகச் சொல்லவே அனைவர் மனமும் துக்கத்தில் ஆழ்ந்து போயிற்று. திகைத்துப் போன உலகாரியரை அவர் சீடரான கூர குலோத்தமதாசர் தேற்றிச் சமாதானம் செய்து அனைவரும் விரைவில் அவ்விடத்திலிருந்து அகல வேண்டும் எனவும், இல்லை எனில் டில்லிப் படைகள் விரைவில் வந்து பிடித்துக் கொள்வதோடு அரங்கனையும் கைப்பற்றி விடுவார்கள் எனவும் சொல்ல உடனே அந்த இடத்திலிருந்து அந்த ஊர்வலம் அகன்றது.

மாலை மங்கும் நேரத்தில் தங்கும் இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கையில் ஈட்டிகளைத் தாங்கிய வண்ணம் வலுவான தேகத்துடனும் கொடிய மீசைகளுடனும் முப்பது கள்வர்கள் சூழ்ந்து கொண்டுவிட்டனர். தொண்டைமான் காட்டுப்பகுதியே கள்வர்களுக்குப் பிரசித்தம். வழிப்பறி செய்வதில் நிபுணர்கள் அவர்கள். ஊர்வலத்தில் வந்தவர்கள் அனைவரும் செய்வதறியாது திகைத்து நின்றிருந்தனர்.  கள்வர்கள் அனைவரும் அவர்களை நோட்டம் விட்டுப் பெட்டகங்கள் வைத்திருப்பதையும் கண்டுகொண்டனர். அந்தப் பெட்டகங்களில் என்ன இருக்கிறது என்று விசாரணையும் செய்ய ஆரம்பித்தனர்.

அரங்கனின் பொருட்கள், அவன் நகை நட்டுக்கள் என்று சொல்ல, என்ன அரங்கனா? அவன் எந்த ஊர்க்காரன்? எந்த நாட்டுக்கு ராஜா? என்றெல்லாம் கேலி பேசினார்கள். அரங்கம் என்ன, இந்த உலகுக்கே அவன் தான் ராஜா! திருவரங்கத்தில் கோயில் கொண்டிருக்கிறான், ரங்கராஜன் எனப் பரிசனங்கள் சொல்ல, உலகையே காப்பவன் இங்கே இந்தக் காட்டுக்குள் நாங்கள் வசிக்கும் இடம் ஏன் வந்தான்? பெட்டகங்களைத் திறவுங்கள் எனக் கள்வர் தலைவன் கட்டளை இட்டான். பயந்து கொண்டே பெட்டகங்களைப் பரிசனங்கள் திறந்து காட்டினார்கள்.  பொன்னும், மணியும், முத்தும், பவளமும், வைர வைடூரியங்களும், தங்கத்தினாலும், வெள்ளியினாலும் செய்யப்பட்ட ஆபரணங்களும் கண்களைக் கவர்ந்தன அவற்றை ஆசையுடன் தன் கைகளால் எடுத்துப் பார்த்தான் கள்வர் தலைவன்.

Saturday, May 02, 2015

ஶ்ரீரங்கரஙகநாதனின் பாதம் பணிந்தோம்! அரங்கமாநகருள்!

அங்கிருந்த அனைவரும் அதிசயித்து நிற்க அந்தப் பெண் மேலே பேசினாள். ஶ்ரீரங்கத்து மனிதர்களிடம் கருணை வைக்குமாறு உல்லூக்கானை வேண்டினாள். ஆனால் உல்லூக்கானோ இங்கிருப்பவர்களைத் தான் கொல்லாமல் விட வேண்டுமானால் ஶ்ரீரங்கத்துச் செல்வம் அனைத்தும் தன் காலடியில் வந்து விழ வேண்டும் என்றான். அதற்கு அந்தப் பெண் அனைத்தையும் பாண்டிய நாட்டு வீரர்கள் கொள்ளை அடித்துச் சென்றுவிட்டதாய்க் கூறினாள். மிச்சம், மீதி இல்லை என்னும் அவளைப் பார்த்து இத்தனையையும் பார்த்துக் கொண்டு உன் தெய்வங்கள் எல்லாம் கையைக் கட்டிக் கொண்டு சும்மா உட்கார்ந்திருந்தனவா? அவை எல்லாம் கல்லாலும், உலோகங்களாலும் ஆன சிலைகள் தானே எனக் கேலி செய்தான் உல்லூக்கான். அதற்கு அந்தப் பெண் அந்த அணிமணிகளை விக்ரஹங்களுக்கு அளித்து அழகு பார்த்ததே இந்த மானுடர்கள் தானே! தெய்வங்கள் அவற்றைக் கேட்கவில்லையே! ஆகவே அவர்களுக்கு இந்த அணிமணிகள் இருந்தாலும் ஒன்று தான்; இல்லை என்றாலும் ஒன்று தான் என்று சொன்னாள்.

ஆனாலும் அரங்கத்து ஆட்கள் இன்னமும் ஏன் தன்னோடு போரிடத் தயாராக இருக்க வேண்டும்? மிச்சம், மீதி இருப்பதைப் பாதுகாக்கவே அவர்கள் போரிடுகின்றனர் என்றூ உல்லூக்கான் சந்தேகத்துடன் அவளிடம் சொன்னான். உள்ளே வேறேதும் இல்லை என்றும் அவர்கள் அனைவரும் தங்களைக் காத்துக் கொள்ளவே தயாராக இருக்கிறார்கள் எனவும், அவர்களை ஒன்றும் செய்ய வேண்டாம் என்றும் அந்தப் பெண் வேண்ட, உல்லூக்கான் தான் உள்ளே போய்ப் பார்க்க விரும்புவதாகச் சொல்கிறான். அந்தப் பெண்ணும் அந்த ஆட்களை ஏதும் செய்யக் கூடாது; இனி யாரையும் கொல்லக் கூடாது என்றெல்லாம் உல்லூக்கானிடம் வாக்குக் கேட்கிறாள்.  அப்படியே அங்கே காவலுக்கு இருந்த வீரர்களை எல்லாம் அப்பால் போகச் சொல்லி உல்லூக்கான் கட்டளையிட இத்தனை நேரம் வீரர்களுக்காகப் பேசிய அந்தப் பெண் மயங்கி விழ அவளை மருத்துவரிடம் தூக்கிச் சென்றனர். பிழைப்பாளோ அல்லது அரங்கனுக்காக அவள் உயிரையும் கொடுக்க நேருமோ தெரியாது!

காவலிருந்து வீரர்கள் அமைதியாக வெளியேற டில்லி படைகள் உள்ளே சென்று ஒவ்வொரு தூணையும், சிற்பத்தையும் கல்சுவரையும், மண்டபத்தையும் உடைத்துத் தோண்டிப் பார்க்கின்றனர். எதுவும் கிடைக்கவில்லை. உல்லூக்கானுக்குத் தக்வல் போகிறது. அவனுக்கு அப்படியும் சந்தேகம். இங்கிருக்கும் பொருட்கள் அவ்வளவு எளிதில் வெளியே சென்றிருக்க முடியாது. எப்படிக் கண்டு பிடிக்கலாம் என யோசிக்கிறான்  பின்னர் அரங்க நகரிலே சிறு படை ஒன்றை நிறுத்திவிட்டு மற்ற வீரர்களை அழைத்துக் கொண்டு காவிரியைக் கடந்து மதுரை போகக் கிளம்புகிறான். அலங்கோலமாய்க் கிடந்தது அரங்கமாநகரம். ஆங்காங்கே உயிரற்ற உடல்கள் கிடக்க, வீடுகள் சிதிலமடைந்து விழுந்து கிடக்க, கோயிலின் மண்டபங்கள், தூண்கள், சிற்பங்கள்  உடைந்து கிடக்கப் பெரும் சூறாவளி அடித்து ஓய்ந்த்து போல் காணப்பட்டது அரங்கமாநகரம்.