எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, March 20, 2022

கொடவர்களைத் துரத்தும் துருக்க வீரர்கள்! ஶ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்!

 சிங்கழகர் சொன்ன வரலாற்றைக் கேட்டுக் கொண்டிருந்த வல்லபனுக்கு ஆச்சரியமும் வருத்தமும் ஒரு சேரத் தோன்றிக் கொண்டிருந்தது. ஆரம்பத்தில் அரங்க நகரிலிருந்து அரங்கனைத் தூக்கிக் கொண்டு கிளம்பிய அறுபது பேரில் இன்று மீதம் இருப்பவர்கள் சொல்பமே. ஆனாலும் ஏதோ ஒரு நம்பிக்கை அவர்களை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது.  நம்பிக்கை அவர்களைக் கைவிடவில்லை. அரங்கனை எப்படியானும் காப்பாற்றியே ஆகவேண்டும் என்னும் அவர்களுடைய தீவிரமான முடிவு ஓர்  சமுதாயத்தின் நம்பிக்கையையே கட்டிக் காத்துக் கொண்டிருந்தது.  ஓர் அருமையான சமுதாயத்தின் நம்பிக்கையாக ஒளிர்ந்து கொண்டிருந்தவன் அந்த அரங்கன். இவனைக் காப்பாற்ற எத்தனை பேர் கஷ்டப்பட்டிருக்கிறார்கள்! இதை நீனைக்க நினைக்க வல்லபன் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

சிங்கழகரைப் பார்த்துக் கண்கள் கலங்கிய வண்ணம் தன் மனம் எவ்விதம் துன்பத்தால் குமுறுகிறது என்பதைச் சொன்னான் வல்லபன். அதற்குச் சிங்கழகர் வல்லபனின் நல்ல உள்ளத்தையும் நேர்மையான நடத்தையையுமே அது குறிப்பதாகச் சொன்னார்.  நல்ல ஆத்மாக்களுக்கே இப்படி எல்லாம் தோன்றும் எனவும் அரங்கனைத் தேடிக் கண்டு பிடிப்பாரில்லாமல் தாம் இத்தனை ஆண்டுகளாக வருந்திக் கொண்டிருந்ததையும் சொன்னார். இப்போது இவர்கள் இருவரையும் பார்த்ததும் தம் மனம் கொண்ட ஆறுதலையும் எடுத்துச் சொன்னார். பின்னர் அவர் அவர்கள் இருவரிடமும் மேலே நடந்தனவற்றையும் தாம் சொல்லப் போவதாகவும் அதையும் கேட்கும்படியும் சொல்லிவிட்டு மேலே தொடர்ந்தார்.

அஞ்சனாத்ரி மலையடிவாரத்தில் உள்ள காட்டில் அடர்ந்து வளர்ந்து கிடந்த புதர்களின் மறைவிலே நின்றவண்ணம் சிங்கழகர் பரிதவித்துக் கொண்டிருந்தார். துருக்கிப் படைகள் பேர் ஆரவாரத்தோடு காட்டை ஊடுருவிக் கொண்டு முன்னேறிக் கொண்டிருந்தன. காட்டில் தோன்றிய பேர் ஆரவாரத்தால் கலங்கிய பக்ஷிகளும், மிருகங்களும் அங்கும், இங்குமாக ஓடி அலைக்கழிக்கப்பட்டன.  இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சிங்கழகருக்கோ செய்வது என்ன என்று தெரியாமல் கலக்கம் ஏற்பட்டது.  கண்ணீர் பெருக்கிய வண்ணம் இனி தாம் செய்வது எதுவும் இல்லை; என்ன நடக்கப் போகிறதோ நடக்கட்டும். வேறே வ்ழி இல்லை என நினைத்தவராய் அந்தப் புதர்களிலேயே மறைந்து அமர்ந்து கொண்டு விட்டார்.

படை வீரர்கள் அடிவாரக்காட்டை அடைந்து சூழ்ந்து கொண்டு விட்டார்கள். அவர்கள் அங்கும் இங்குமாகத் தங்கள் பார்வையைச் செலுத்திக் கொண்டு ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். இவர்கள் அடிவாரத்தைச் சூழ்ந்து கொண்டிருப்பதையும்  தங்களைத் தேடிக் கொண்டிருப்பதையும் மேலே ஏறிக் கொண்டிருந்த மூன்று கொடவர்களுக்கும் தெரியாது.  ஆபத்து இனித் தொடரப் போவதில்லை என்று நினைத்த வண்ணம் கவலை இல்லாமல் ஆனால் வேகமாக மலை மேல் ஏறிக் கொண்டிருந்தனர். போகும் வழியெல்லாம் புதர்கள் நிறைந்து காணப்பட்டது. ஆனால் மேலே ஏற ஏற ஆங்காங்கே பாறைக்கற்களும், தரையெல்லாம் கற்கள் நிரம்பியனவாகவும் காணப்பட்டன. கொஞ்ச தூரத்துக்கு ஒரே வெட்டவெளியாகவும் இருந்தது. அந்த வெட்டவெளியிலே அரங்கனைத் தூக்கிக் கொண்டு அவர்கள் சென்றதைக் கீழே இருந்த வீரர்களில் சிலர் பார்த்துவிடவே ஒரே கூக்குரல். கோஷம். திடீரென எழுந்த பெரிய ஆரவாரத்தைக் கேட்ட கொடவர்களும் திரும்பிப் பார்க்க மேலிருந்து கீழே படைவீரர்கள் அடிவாரத்தைச் சூழ்ந்து கொண்டுஇருப்பதைக் கவனித்து விட்டார்கள். 

உடனே அரங்கனைத் தூக்கிக் கொண்டு ஒரே ஓட்டமாக அந்தப் பெரிய பரந்த வெளியைக் கடக்கத் தொடங்கினார்கள். மீண்டும் வெகு விரைவில் மறுபடி புதர்கள் சூழ்ந்த அடர்ந்த காட்டுப்பகுதிக்கு வந்ததும்  இனி திருப்பதி மலை மேல் ஏறி அரங்கனைக் காப்பாற்றுவது கஷ்டம் என்பதோடு கோயிலுக்கும் அவர்களால் தீங்கு ஏற்பட்டுவிடும் எனப் பயந்த கொடவர்கள் அருகிலுள்ள மலை முகட்டின் மேலே ஏறி எங்கானும் மறைந்து கொள்ளலாம் என நினைத்தனர். அதற்குள்ளாகக் கீழே என்ன நடக்கிறது எனக் கவனித்த கொடவர்களுக்குப் படை வீரர்கள் தங்களில் ஒரு பிரிவினரை மலை மேல் ஏறிக் கொடவர்களைத் தொடரும்படி ஆணை இட்டுக் கொண்டிருந்ததையும் அதன்படி வீரர்கள் மலைமேல் ஏறத் தொடங்குவதையும் கண்டனர்.  இனி என்ன செய்யலாம் எனக் கவலையுடன் சிந்தனையில் ஆழ்ந்தனர். 

மலை முகடுகளைக் கூர்ந்து சுற்றிச் சுற்றிப்பார்த்தனர் மூவரும். மூவரின் பெயர்களும் முறையே திருக்குருகூர் தாசர், திருவில்லிபுத்தூர் தாசர், சீராம தாசர் ஆகியோர் ஆகும். திருக்குருகூராரின் மைத்துனர் திருவில்லிபுத்தூர் தாசர் ஆவார். குருகூர் தாசரின் மகன் சீராம தாசர் ஆவார். இப்போது மேலே ஏறிக்கொண்டிருக்கும் படை விரைவில் அவர்கள் இருக்குமிடம் வருவதற்குள்ளாக ஏதேனும் செய்ய வேண்டுமே. ஆகவே மூத்தவரான திருக்குருகூர் தாசர் (அரங்கத்தை விட்டுக் கிளம்புகையில் அறுபத்திரண்டு வயசில் இருந்தவருக்கு இப்போது எண்பத்தி இரண்டு வயது ஆகிவிட்டது. நல்ல மூப்பு) அவர் மற்ற இருவரையும் பார்த்துத் தப்புவதற்கு எப்படியேனும் வழி தேடவேண்டும் என்று சொல்லிச் சுற்றிச் சுற்றிப் பார்த்தார்.  அந்த மலை முகடு மூன்று பக்கங்களிலும் சரிவாகக் காணப்பட்டது. நான்காவது பக்கம் செங்குத்தாகப் பாம்பு படமெடுத்தாற்போல் காணப்பட்டதையும் கவனித்தவருக்கு அந்தச் செங்குத்தான மலைமுகட்டில் ஏறுவது கஷ்டம் என்பதால் படை வீரர்கள் அந்தப் பக்கம் யாரையும் ஏவவில்லை என்பதையும் கண்டு கொண்டார். 


Tuesday, March 15, 2022

சிங்கழகரின் அனுபவங்கள்! தொடர்ச்சி 3!

 கிட்டத்தட்டப் பத்து மாதங்களுக்கும் மேல் ஆகிவிட்டது தொடர்ந்து எழுத.  போன வருஷம் ஜூன் மாதம் உடம்பு முடியாமல் போனதில் இருந்து எத்தனையோ முறை முயன்றும் இதை எழுத முடியவில்லை. இன்னிக்கு எப்படியானும் எழுதிடணும் எனக் காலையிலிருந்தே முயன்று பார்த்துவிட்டு ஒரு வழியாக இப்போ உட்கார்ந்திருக்கேன். நல்லபடியாகத் தொடர அந்த அரங்கன் தான் அருள் செய்யணும். பங்குனித் திருவிழா நடந்து கொண்டிருக்கிறது. அரங்கன் உறையூருக்குப் போயிருக்கான். கமலவல்லியைத் திருமணம் செய்து  கொள்ள. நேற்று எங்க தெருவழியாகத் தான் போயிருக்கான். ஆனால் முன் அறிவிப்பு இல்லாததால் எங்களுக்கெல்லாம் தெரியலை. நான் அரங்கனைப் பார்த்தே சுமார் இரண்டரை வருஷங்கள் ஆகின்றன. :(

*************************************************************************************

துருக்கியர் எங்களைப் பார்த்துவிட்டனர் என்பது அவர்கள் கூக்குரலில் இருந்தும் அவர்கள் ஓடி வருவதில் இருந்தும் புரிந்தது. என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்த எங்களை மாலழகர் என்பார் பார்த்துவிட்டு," எனக்கு மல் யுத்தமும் தெரியும், சிலம்பமும் தெரியும்.  ஆகவே வருபவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன். அவர்கள் உங்களைத் தொடராமல் நான் இங்கேயே தடுத்து நிறுத்துகிறேன். நீங்கள் அனைவரும் அரங்கனைத் தூக்கிக் கொண்டு விரைவில் வெகுதூரம் போய்விடுங்கள்!:" என்றார். அது தானே ஒரே வழி. ஆகவே நாங்களும் மாலழகரை அங்கே தனியாக விட்டுவிட்டு அரங்கனைத் தூக்கிக் கொண்டு காட்டு வழியில் விரைந்தோம். இங்கே மாலழகருக்கும் வீரர்களுக்கும் கடுமையான போர். என்றாலும் தனக்குத் தெரிந்த சிலம்ப வித்தையை வைத்துக் கொண்டு மாலழகர் அவர்கள் தன் மேல் வாள் வீசுவதைக் கூடியவரை தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தார்.  என்றாலும் ஆயுதங்கள் இருந்தமையால் அவர்கள் விரைவில் மாலழகரைக் குற்றுயிராகக் கீழே தள்ளினார்கள்.

பின்னர் அவர்கள் மாலழகரிடம் அவர் யார் எனவும், எங்கே போய்க் கொண்டிருக்கிறார் எனவும் விசாரித்தார்கள்.  உடல் உபாதை பொறுக்க முடியாத மாலழகர் "அரங்கா! அரங்கா!" எனப் புலம்ப ஆரம்பிக்க அவர்களோ இவர்கள் அந்த அரங்க விக்ரஹத்தைத் தான் தூக்கிக் கொண்டு ஓடுகிறார்கள் போலும். கூடவே கையில் வைத்திருந்த மூட்டைகளில் அரங்கனின் ஆபரணங்களும், வைர, வைடூரியங்களும், ரத்தினங்களுமாக இருக்க வேண்டும். வாருங்கள் விரைவில் சென்று அவர்களைப் பிடிப்போம் என அவர்களில் ஒருவன்மற்றவர்களைத் துரிதப்படுத்த  இன்னொருவன் நாம் தனியாகப் போவதை விடக் கோட்டைக்குள் சென்று மற்றப்படை வீரர்களையும் அழைத்துச் சென்றால் விரைவில் அவர்களைப் பிடித்துவிடலாம் என்று யோசனை சொல்ல அதன் பேரில் அவர்கள் அனைவரும் கோட்டைக்குச் செல்ல ஆயத்தம் செய்தார்கள். போகிற போக்கில் ஏற்கெனவே காயங்களால் ரத்தம் கொட்டிக் கொண்டிருந்த மாலழகரின் கால்களையும்  வெட்டி விட்டார்கள்.

அப்போது சிங்கழகர் மேலும் தொடர்ந்து, "மேற்சொன்ன சம்பவம் நடந்த போது நான் மற்ற இருவருடனும் அரங்கனைத் தூக்கிக் கொண்டு சென்று கொண்டிருந்தேன். அரங்க விக்ரஹம் ரொம்பக் கனமாக இருந்தபடியால் மாறி மாறித்தோளில் வைத்துத் தூக்கிக் கொண்டு சென்றோம். ஒரு குறிப்பிட்ட தூரம் சென்றதும் நான் மற்றவர்களைப் பார்த்து அங்கேயே சிறிது நேரம் ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு நான் மட்டும் போய் மாலழகர் கதி என்ன எனப் பார்த்து வருவதாகச் சொன்னேன். பின்னர் நான் விரைந்து வந்து மாலழகரைத் தேடிக் கொண்டு அவர் கீழே விழுந்து கிடக்கும் இடம் வந்து அவரைப் பார்த்து மனம் நொந்து போனேன். இரண்டு கால்களும் வெட்டப்பட்டுக் குற்றுயிராக இருந்த மாலழகரின் உயிர் பிரியும் தருவாயில் இருந்தார்.  கண்ணீருடன் அவரருகே சென்று அவர் தலையைத் தூக்கி என் மடியில் வைத்துக்கொண்டு அவரை அழைத்தேன். மிகச் சிரமப்பட்டுக் கண் திறந்து பார்த்த அவர் என்னிடம்,"சீக்கிரம், சீக்கிரம் விரைந்து செல்லுங்கள். அந்தப் போக்கிரிகள் அரங்கன் உங்களிடம் இருப்பதை எப்படியோ கண்டு கொண்டார்கள். படை வீரர்களை அழைத்துக் கொண்டு தேடுதல் வேட்டை நடத்தி உங்களைக் கண்டு பிடித்துவிடப் போகிறார்கள். விரைந்து சென்று அரங்கனையும் மற்றவர்களையும் காப்பாற்றுங்கள்!" எனக் கை கூப்பி வேண்டிக் கொண்டார்.  உடனே அவர் உயிர் உடலில் இருந்து பிரிந்து சென்றது.

அவர் உடலை அங்கே இருந்த பள்ளத்தில் விட்டுவிட்டுச் செடி, கொடி, கம்புகள், இலைகள், தழைகளால் மூடினேன். பின்னர் விரைவாக மற்ற இருவரையும் அரங்கனோடு விட்டு விட்டு வந்த இடம் நோக்கி ஓடினேன். அவர்களிடம் மாலழகர் கூறிய விஷயத்தைக் கூறிவிட்டு படை வீரர்கள் அங்கே அவர்களைத் தேடிக் கொண்டு வந்து சேர்வதற்குள்ளாக நாம் வெகு தூரம் போய்விட வேண்டும் என்றும் சொன்னேன். இம்மாதிரித் திக்குத் தெரியாமல் பல காத தூரம் ஓடிய எங்கள் கண்களில் பட்ட அஞ்சனாத்ரி மலை மனதில் ஆறுதலையும் நிம்மதியையும் தந்தது. மலை மேல் ஏறி மேலே போய்விட்டால் இந்த வீரர்களிடமிருந்து தப்பிக்கலாம் என நினைத்து அதைச் சொல்வதற்குள் மற்றக் கொடவர்கள் என்னிடம்,  அவர்கள் அரங்கனைத் தூக்கிக் கொண்டு மலை மேல் ஏறுவதாகவும் என்னைக் கீழேயே இருந்து வீரர்கள் வருவதைக் கண்காணிக்கும்படியும் சொன்னார்கள்.  சுமார் 3 நாட்கள் வரை பார்த்துவிட்டு எவராலும் தொந்திரவு நேராது என்பது உறுதியானதும் என்னையும் மேலே வந்து அவர்களுடன் சேர்ந்து கொள்ளச் சொன்னார்கள்.  சரி என ஒத்துக்கொண்டு அவர்களை மலை மேல் ஏறச் சொல்லிவிட்டு நான் மட்டும் பாறைகளுக்கும் புதர்களுக்கும் நடுவில் இருந்த குகை போன்ற இடத்தில் மறைந்து கொண்டேன். சில நாழிகைகளிலேயே பேரிரைச்சல் கேட்டது.  சற்று வெளியே வந்து எட்டிப்பார்த்தால் துருக்க வீரர்கள் காட்டிலிருந்து வெளியே ஓடி வந்து அஞ்சனாத்ரி மலையை நோக்கி ஓடிக் கொண்டிருந்தனர். திடுகிட்ட நான் என்ன செய்வது எனத் தெரியாமல், "அரங்கா! அரங்கா!" எனப் புலம்பத் தொடங்கினேன்.

Saturday, June 26, 2021

சிங்கழகரின் அனுபவங்கள் தொடர்ச்சி! ஶ்ரீரங்க ரங்க நாதரின் பாதம் பணிந்தோம்.

 அன்றைக்குச் சுமார் பதினெட்டு ஆண்டுகள் முன்னர் ஶ்ரீரங்க நகரில் இருந்து அரங்க விக்ரஹத்தோடு புறப்பட்ட கோஷ்டி கர்நாடகத்தின் மேல்கோட்டையை அடைந்து அங்குள்ள திருநாராயணபுரத்தில் அரங்கனை எழுந்தருள வைத்துக் கொண்டு பலரும் அங்கேயே அரங்கனுடன் தங்கிவிட்டார்கள் என்றார் சிங்கழகர். தாமும் அவர்களில் ஒருவனாக அப்போது இருந்ததாகவும் சொன்னார். மொத்தம் அறுபது பேர் கிளம்பியதில் யாத்திரையின் கடுமையான சோதனைகளில் பலரும் திசைமாறிப்பல்வேறு திக்குகளிலும் போய்விட சிலர் ஆங்காங்கே தங்கி விட எஞ்சிய சிலருடன் கன்னடத்தின் மேல்கோட்டையில் அரங்கனுடன் சிலர் தங்கினார்கள். அவர்களில் சிங்கழகரும் ஒருவராக இருந்தார்.  சில ஆண்டுகளின் பின்னர் ஹொய்சள மன்னன் மதுரை சுல்தானுடன் சண்டை இடுவதாகத் தகவல்கள் கிட்ட மேல்கோட்டையிலிருந்து கிளம்பி கொங்கு வழியாகச் சத்தியமங்கலத்தை வந்தடைந்தனர் சிலர். அவர்களில் சிங்கழகரும் ஒருவர். ஆனால் அந்தப் போரில் ஹொய்சள மன்னன் கொல்லப்பட்டு ஹொய்சளப்படைகள் தோல்வி அடைய மீண்டும் மேல்கோட்டையை நோக்கிச் சென்றுவிட்டனர் அனைவரும். 

சுல்தானியர்களோ தமிழர்களின் இந்தத் திடீர் எழுச்சியைச் சகிக்காமல் மேலும் கோபம் கொண்டு அக்கம்பக்கம் நாடுகளையும் குறிப்பாக ஹொய்சள நாட்டையும் கோயில்களையும் சூறையாடினார்கள். அவர்கள் அப்படியே அரங்க விக்ரஹம் மேல்கோட்டையில் இருக்கும் செய்தியைத் தெரிந்து கொண்டு அங்கே வருவார்கள் என்னும் செய்தி மேல்கோட்டையில் பரவியது. பீதி அடைந்த அவர்கள் அரங்கனை எழுந்தருளப் பண்ணிக் கொண்டு வேறெங்காவது இன்னமும் தூரமாகப்போய்விட எண்ணினார்கள். ஆனால் வடக்கே செல்ல முடியாது. ஏனெனில் வடக்கே பெரும்பாலும் துருக்கியரே ஆண்டு வந்தனர். ஆகவே கிழக்கே செல்லலாம் என நினைத்துத் திருமலை/திருப்பதி நோக்கிப் போய் அங்கேயே தங்கத் தீர்மானம் செய்தனர் அவர்கள் அனைவரும்.  இவர்கள் இப்போது ஐந்து பேர்களாகக் குறைந்து விட்டனர். திருவரங்கத்திலிருந்து கிளம்பிய போது அறுபது பேர்களாக இருந்தவர்கள் இப்போது ஐந்து பேர்களாகக் குறைந்து விட்டனர். இவர்களில் சிங்கழகர் தவிர இன்னொருவர் மாலழகர். மற்ற மூவரும் பந்துக்களான கொடவர்கள் குருகூர் தாசர், சீராம தாசர், வில்லிப்புத்தூர் தாசர் ஆகியோர்.  சீராம தாசர் குருகூர் தாசரின் மகன். வில்லிபுத்தூர் தாசரோ சீராம தாசரின் தாய் மாமன் ஆவார்.

அரங்கனின் பொன் நகைகள், எஞ்சி இருந்த அணிமணிகள், ஆடைகள் என அனைத்தையும் ஓர் சுமையாகக் கட்டி ஒருவர் எடுத்துக் கொண்டோம். அரங்க விக்ரஹம் கனமாக இருந்ததால் மாறி மாறி அவரைத் தங்கள் தோள் மேல் வைத்துக் கொண்டு சென்றோம்.வழியெங்கும் கலவரமாக இருந்ததால் மிகவும் கவனமாக வழி நடந்து ஆங்காங்கே வைணவர்களாகத் தேடித்தேடி அவர்கள் உதவிகளைப் பெற்று இரவுகளில் ரகசியமாகத் தங்கிக் கொண்டு நாற்பது நாட்கள் கழித்துச் சந்திரகிரிக்கோட்டையை அடைந்தோம். என்ன துரதிருஷ்டம்! சந்திரகிரிக்கோட்டையும் சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கவே கோட்டையைத் தவிர்த்துவிட்டுக் காட்டு மார்க்கத்தில் இறங்கிப் பிரயாணப்படும்போது அங்கிருந்த தனிப்பாதையில் மூன்று துருக்கிய வீரர்கள் காவலுக்கு இருந்தவர்கள் எங்களைப் பார்த்துவிட்டார்கள், என்ன செய்வது எனப் புரியாமல் திகைத்தோம்.

Wednesday, June 23, 2021

சிங்கழகரின் அனுபவங்கள்! ஶ்ரீரங்க ரங்கநாதரின் பாதம் பணிந்தோம்!

 சத்திரத்துக்குத் திரும்பினாலும் தத்தன் கண்களின் எதிரே மஞ்சரியின் முகமே அடிக்கடி தோன்றிக் கொண்டிருந்தது. இன்னும் கொஞ்சம் தயவாக ஆறுதலாக அந்தப் பெண்ணிடம் நடந்து கொண்டிருக்கலாமோ என நினைத்துக் கொண்டான் தத்தன். மறுநாள் காலையில் கட்டாயமாய் அந்தப் பெண்ணைப் போய்ப் பார்த்து ஆறுதலாக நாலு வார்த்தைகள் பேச வேண்டும் என தத்தன் நினைத்துக் கொண்டான். மறுநாள் காலையில் இருவருமே மஞ்சரியின் மாமா வீடு சென்றனர்.  மஞ்சரி அவர்களைக் கண்டதுமே மிகுந்த உற்சாகத்துடன் அவர்களுக்கு உபசரணைகள் செய்தாள். ஓர் பெரிய கிண்ணம் நிறையக் காய்ச்சிப் பக்குவமாய் நாட்டுச் சர்க்கரை சேர்த்த பசும்பாலை இதமான சூட்டுடன் குடிக்கக் கொடுத்தாள். 

சற்று நேரம் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்த இளைஞர்கள் இருவரும் பின்னர் மெதுவாக சிங்கழகரிடம் தாங்கள் இருவரும் அரங்கனைக் கண்டு பிடிக்கும் வேலையில் இருப்பதாகவும் அரங்கனை எங்கே கண்டு பிடிக்க முடியும் என்பது பற்றி அவருக்கு ஏதேனும் தெரியுமா என்றும் கேட்டார்கள். இதைக் கேட்ட சிங்கழகர் கண்களில் மாலை மாலையாகக் கண்ணீர் பெருகியது. எழுந்து வந்த அவர் இளைஞர்களைத் தழுவிக் கொண்டு கண்ணீர் மழை பொழிந்தார். இக்காலத்தில் அரங்கனை நினைப்பாரும் இருக்கிறார்களே எனச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்.  அரங்கன் என ஒருத்தர் இருந்ததையே பலரும் மறந்திருக்கையில் இளைஞர்களான இவர்கள் இருவரும் அவன் இருக்கும் இடத்தைத் தேடிக் கொண்டு செல்வதை அறிந்து மிகவும் மனம் மகிழ்ந்து அவர்களுக்கு ஆசிகள் வழங்கினார். அவர்கள் யாரெனக் கேட்டார். வல்லபனின் தந்தை பற்றி அறிந்ததுமே அவருக்குள் ஆனந்தம் பொங்கிற்று. தான் வல்லபனின் தந்தையை நேரில் பார்த்திருப்பதாகவும், அவர் வீரத்தைக் குறித்தும் அறிந்திருந்ததாகவும் சொன்னார்.

வல்லபன் பார்க்கத் தன் தந்தையையே சாயலில் உரித்து வைத்தாற்போல் இருப்பதையும் சொன்னார்.  வல்லபனின் தந்தை அரங்க நகரையும், அரங்க நகரத்து மக்களையும், அரங்கனையும் கொடியோர் கைகளில் இருந்து பாதுகாக்கப் பட்ட பாட்டை நினைவு கூர்ந்தார் அந்தக் கிழவர். அதோடு இல்லாமல் வல்லபனின் தாய் வாசந்தியைப் பற்றியும் மிகவும் புகழ்ந்து சொன்னதோடு அல்லாமல் வல்லபனைக் குறித்துப் பெருமிதமும் கொண்டார். இப்போதுள்ள நிலைமையில் நாடுகளெல்லாம் அழிந்து நம் சமயங்கள் எல்லாம் சீரழிந்து வரும் இந்தச் சமயத்தில் அரங்கனை நினைப்பாரும் உண்டோ! அவனைத் தேடுவாரும் உண்டோ எனச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்.  வல்லபன் அவரிடம் அரங்கனைத் தூக்கிக் கொண்டு கோட்டையிலிருந்து புறப்பட்டஐவரில் சிங்கழகரும் ஒருவர் எனத் தான் அறிந்திருப்பதைக் குறித்துக் கூறினான்.ஆகவே சிங்கழகருக்கு நேர்ந்ததை எல்லாம் அவர் நினைவில் இருக்கிறபடி அப்படியே கூறினால் அதிலிருந்து அரங்கன் குறித்து ஏதேனும் தகவல்கள் கிடைக்கலாம் என்றான் வல்லபன்.  சிங்கழகரும் அதை ஒப்புக் கொண்டு தன் நினைவில் இருந்தவரையிலும் எல்லாவற்றையும் வல்லபனுக்கும் தத்தனுக்கும் எடுத்துக் கூறலானார். 

Wednesday, June 09, 2021

மஞ்சரியின் மாமன்! ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

 சிறிது நேரத்தில் வல்லபனுடன் அங்கே வந்த தத்தன் மஞ்சரியை அழைத்துக் கிளம்பும்படி சொன்னான். எங்கே செல்லவேண்டும் என ஆச்சரியத்துடன் கேட்ட மஞ்சரியிடம் அவள் தாய் மாமன் வீட்டிற்கு எனச் சொன்னான் தத்தன். நேற்றுக் கேட்டதற்கு மாமன் கிடைக்கவில்லையே என தத்தன் சொன்னதை நினைவூட்டின மஞ்சரியிடம் தத்தன் முதலில் பெற்றோர் இல்லை என்பதை அவளிடம் சொல்லி மனதளவில் அவளைத் தயார் செய்ய வேண்டி இருந்ததாய்ச் சொன்னான். அதன் பின்னர் அவள் தாய் மாமன் வீட்டிற்கு அவளை அழைத்துச் செல்ல இருந்ததாயும் சொன்னான். மஞ்சரியின் கண்கள் நீரை ஆறாய்ப் பெருக்கின. உள்ளுக்குள் அவள் குமுறுகிறாள் என்பதை நிலை குத்திய அவள் பார்வையும் துடிக்கும் உதடுகளும் வெளிப்படுத்தின. அவள் வாய்விட்டு அழட்டும் என தத்தன் நினைத்தான். சில வினாடிகளில் அவள் குமுறிக் குமுறி வாய்விட்டுக் கதறினாள். 

தன் பாட்டனார் தன்னிடம் இந்த உண்மையைச் சொல்லாதது குறித்தும் சொல்லி இருந்தால் தான் ரொம்பவே வேதனைப் பட்டிருப்போம் என்பதால் தன் நன்மையைக் கருதியே பாட்டனார் சொல்லவில்லை எனத் தான் புரிந்து கொண்டதாகவும் சொன்னாள் மஞ்சரி. ஆனாலும் அதனால் ஏற்பட்ட தீமையும் உண்டு எனச் சொன்ன மஞ்சரியை தத்தன் நிமிர்ந்து பார்த்தான். அவன் முகத்தில் தென்பட்ட ஆச்சரியக் குறியைக் கண்ட மஞ்சரி தான் தன் பெற்றோர் இருப்பதாகவே கருதி ஆசைகளை வளர்த்துக்கொண்டதையும் பெற்றோருடன் சேர்ந்து வாழப் போகும் வாழ்வை நினைத்துக் கண்ட கனவுகளையும் சொல்லி இப்போது அனைத்தும் சுக்கு நூறாக நொறுங்கி விட்டதால் அவள் தாத்தா சிறு வயதிலேயே அவளுக்கு உண்மையை எடுத்துச் சொல்லி அவளைத் தயார் செய்திருக்க வேண்டும் என்றும் சொன்னாள். சிறிது நேரம் அவளை அழவிட்ட தத்தன் அவளை மாமன் வீட்டிற்காகக் கிளம்பச் சொல்ல அவளும் தன் உடைமைகளை எடுத்துக்கொண்டு அவனுடன் கிளம்பினாள்.

சிங்கழகர் என அழைக்கப்பட்ட வயது முதிர்ந்த மஞ்சரியின் தாய் மாமன் ஒரு நந்தவனத்திற்கு அருகே உள்ள மண் வீட்டில் வசித்து வந்தார். விஷக்கடியினால் ஏற்பட்ட வியாதிகாரணமாக அவரால் அதிகம் நடமாட முடியாது. சுமார் அறுபது பிராயங்கள் ஆன அவர் மஞ்சரியையும் தத்தன்.வல்லபன் இருவரையும் பார்த்ததும் வியப்படைந்தார். யாரோ அதிதிகள் என எண்ணிக்கொண்டு அவர்களை உபசரித்து ஆசனங்களில் அமர வைத்து என்ன செய்ய வேண்டும் என்றும் விண்ணப்பம் செய்தார். தத்தன் அவரிடம் மஞ்சரியைக் காட்டி அவருடைய சகோதரியின் பெண் தான் இந்தப் பெண் என்பதையும் சொல்லி அவள் பாட்டனார் வளர்த்து வந்ததையும் பெற்றோர் குலதெய்வம் கோயிலுக்குச் செல்லும் போது அந்நியப் படையெடுப்பில் கொல்லப்பட்ட விபரத்தையும் இது நாள் வரை மஞ்சரிக்கு அது விஷயம் தெரியாது என்பதையும் சொன்னான். பின்னர் அவர் இங்கே இருக்கும் விஷயத்தை மஞ்சரியின் தாத்தா மூலம் அறிந்து கொண்டதாகவும் அவர் காலம் ஆகிவிட்டதால் மஞ்சரியைத் தானும் வல்லபனும் பொறுப்பெடுத்துக் கொண்டு காஞ்சிகுக் கூட்டி வந்து அவரிடம் ஒப்படைக்க எண்ணியதையும் சொன்னான்.

சிங்கழகருக்கு ஒரு புறம் வியப்பு! மகிழ்ச்சி! இன்னொரு புறம் சோகம்! வருத்தம். அவருக்கும் தன் சகோதரி குடும்பம் குறித்த தகவல்களே இல்லாமல் இருந்ததில் இப்போது விஷயங்களைத் தெரிந்து கொண்டு ஒரு பக்கம் சந்தோஷம் அடைந்தாலும் இன்னொரு பக்கம் துக்கமும் மேலிட்டது. மஞ்சரியைப் பார்த்துப் பார்த்துக் கண்ணீர் உகுத்தார். அவளைத் தன் கைகளால் தொட்டு ஆசீர்வதித்தார். துணை இல்லாமல் பற்றில்லாமல் வாழ்ந்து கொண்டிருந்த தனக்கு இப்போது துணையோடு வாழ்க்கையில் பற்றும் ஏற்பட்டு விட்டதாய்ச் சொன்னார்.இனி தன் வாழ்க்கையை மஞ்சரிக்காக வாழ வேண்டும் எனவும் சொன்னார். இது ஒரு சுமை தான் தனக்கு என்றாலும் சுகமான சுமை அதிலும் சொந்தமான ஒரு சுமை. தன் கடமை எனவும் சொல்லிக் கொண்டார். மஞ்சரியைத் தன் பொறுப்பில் வைத்துக் கொள்வதாக உறுதியும் அளித்தார்.

சிறிது நேரம் சம்பிரதாயமான பேச்சு வார்த்தைக்குப் பின்னர் தத்தனும் வல்லபனும் சத்திரத்துக்குக்கிளம்ப "ஐயா!" என மஞ்சரி அவர்களை அழைத்தாள். வல்லபனுக்குப் புரிந்தது அவள் தத்தனோடு தனியாகப் பேச விரும்புகிறாள் என்பது. ஆகவே அவன் தத்தனிடம் அவனைப் போய்ப் பேசச் சொல்லிவிட்டுத் தான் ஒதுங்கி நின்றான். மஞ்சரி தத்தன் வரவும் அவனிடம், இப்படித் தன்னை முன்பின் தெரியாத ஓர் இடத்தில் நிர்க்கதியாக விட்டுச் செல்வதைக் குறித்துக் குறை கூறினாள். அவள் கண்கள் கண்ணீரால் நிரம்பியது. தத்தன் திடுக்கிட்டான். மஞ்சரியோ மேலும் அவளை விட்டுவிட்டு அவர்கள் சீக்கிரம் கிளம்பியதற்கும் ஆக்ஷேபம் தெரிவித்தாள். என்னதான் தன் மாமன் அங்கே இருந்தாலும் இந்த முன்பின் தெரியாத புதிய இடம் தனக்குப் பாந்தமாக இல்லை எனவும் தத்தன் தான் சொந்தம் போலவும் மாமன் அந்நியராகவும் தெரிவதாய்ச் சொன்னாள்.  தத்தனையும் வல்லபனையும் விட்டுப் பிரியக் கஷ்டமாக இருப்பதாகவும் அதிலும் தத்தனோடு நிரந்தரப்பிரிவு ஏற்பட்டு விடுமோ என அஞ்சுவதாகவும் அதை நினைத்து வருந்துவதாகவும் சொன்னாள். தத்தனால் பேச முடியவில்லை. அவளைச் சமாதானம் செய்யப் பல நல்ல வார்த்தைகளைச் சொல்லி வாக்குறுதிகளைக் கொடுத்து மெல்ல மெல்ல அவளைச் சமாதானம் செய்ய முற்பட்டான். தானும் வல்லபனும் நாளையும் வருவோம் எனவும் காஞ்சியில் இருக்கும்வரை தினம் வந்து பார்த்துவிட்டுச் செல்வதாயும் வாக்குறுதி அளித்தான்.

Friday, June 04, 2021

மஞ்சரியின் பெற்றோர்! ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

 இரவில் நேரம் சென்று வந்த தத்தனிடம் அந்தப் பெண் மஞ்சரி உரிமையுடனும் சலுகையுடனும் கடிந்து கொண்டது வல்லபன் காதில் விழ அவன் வியப்பின் எல்லைக்கே போனான். தத்தன் என்ன சொல்கிறானோ எனக் கவனித்துப் பார்த்தவனுக்கு தத்தன் வாயைத் திறக்காமல் மௌனமாக இருந்தது உறுத்தியது. ஆனால் அந்தப் பெண் விடாமல் தன் மாமனைக் கண்டு பிடித்தானா தத்தன் என்பதை அவனிடம் விசாரிக்க அதற்கும் தத்தன் சிறிது நேரம் கழித்தே தன்னால் கண்டு பிடிக்க முடியவில்லை என்பதைச் சொன்னான். தத்தனுக்கு என்ன ஆயிற்று என வல்லபன் யோசித்தான். மஞ்சரி தத்தனிடம் மேலும் மேலும் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தாள். தன் மாமன் எங்கிருப்பார் என்பது குறித்தும் தத்தனுக்குத் தெரியாது என்பதைக் கேட்டறிந்தவள் தன்னையே நொந்து கொண்டாள். 

காஞ்சிக்குப் பெற்றோர்களைக் கண்டு அவர்களுடன் சேரலாம் என நினைத்திருந்த தன் எண்ணத்துக்கு மாறாக எல்லாம் நடப்பதைக் கண்டு மனம் வருந்தினாள் மஞ்சரி.  தத்தன் வல்லபனைத் தேடி வந்து அவனுடன் இனிச் செய்ய வேண்டியவை குறித்து ஆலோசித்தான். இரவு முழுவதும் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.  காலை விடிந்ததும் தத்தன் மஞ்சரியைத் தேடிக் கொண்டு வந்தான். அவள் வெளியே செல்லத் தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தாள். மஞ்சரியைப் பெயர் சொல்லி தத்தன் அழைக்கவும் அதிலேயே மகிழ்ந்து போன மஞ்சரி ஆவலுடன் அவனைப் பார்த்தாள். தத்தன் அவளை அமரச் சொல்லித் தானும் அவளருகே சற்றுத் தள்ளி அமர்ந்து கொண்டான். மஞ்சரியிடம் ஒரு முக்கியமான விஷயம் பற்றிக் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்றான் தத்தன்.  பின் மெல்ல மெல்ல அவள் தாத்தா தன்னிடம் கூறினவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக மஞ்சரியிடம் எடுத்துச் சொன்னான் தத்தன். கடைசியில் மஞ்சரியின் பெற்றோர் இப்போது உயிருடன் இல்லை எனவும் அவர்கள் இறந்து பல காலம் ஆகிவிட்டது என்றும் சொன்னான். 

மலர்ந்த முகத்துடன் அந்தக் காலை வேளையில் அன்றலர்ந்த மலர்போல விகசிப்புடன் இருந்த மஞ்சரிக்கு மெல்ல மெல்ல முகம் மாறி வெளிறிப் போய்விட்டது.  சிலை போல் அமர்ந்திருந்த மஞ்சரியின் கண்கள் கண்ணீரை வடித்துக் கொண்டிருந்தன. அது ஒன்றே அவள் உயிருள்ள பெண் என்பதைக் காட்டிக் கொண்டிருந்தது.  அவள் அழுது முடித்து மெல்ல மெல்லத் தேறட்டும் எனக் காத்திருந்தான் தத்தன். பின்னர் அவளைப் பார்த்து அவள் பெயர் சொல்லி, "மஞ்சரி, மஞ்சரி!" என அழைத்தான். ஆனால் அவளோ நிமிரவே இல்லை. தலை குனிந்தபடியே அப்படியே அசையாமல் வீற்றிருந்தாள்.  தத்தனுக்குள் இரக்கம் மீதூறியது. மெல்ல அவளைத் தொட்டு அசைத்து தன்னைப் பார்க்கும்படி சொன்னான். அவள் சோகத்தில் கசிந்த கண்களுடன் மெல்ல நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். மிகுந்த இரக்கத்துடன் சோகம் ததும்பிய அவள் முகத்தைப் பார்த்த தத்தன் கண்களிலும் கண்ணீர் பெருகியது.

"இதோ பார் மஞ்சரி! நாட்டைப் பீடித்திருக்கும் பீடைகள் இன்னமும் விலகவில்லை. நாம் இன்னமும் அந்நிய ஆட்சியில் இருக்கிறோம். நாட்டில் நடந்த இந்த மோசமான படையெடுப்புக்களில் எத்தனையோ மக்கள் உயிரைத் தியாகம் செய்திருக்கின்றனர். பெற்றோர்கள் குழந்தைகளை இழந்தும், குழந்தைகள் பெற்றோரை இழந்தும் வாழ்கிறார்கள். இறந்தவர்கள் அனைவருமே நம் அரங்கனுக்காகவும் தமிழ் பேசும் மக்களுக்காகவும் உயிரைத் தியாகம் செய்தவர்கள்.  சொர்க்கத்தில் இடம் பெற்றவர்கள். ஆகவே உன் பெற்றோரும் சொர்க்கத்திற்குத் தான் போயிருப்பார்கள்.  நீ அவர்களை நினைத்துக் கவலை கொள்ளாதே! மனதைத் தேற்றிக் கொள்!" என்றான்.

மஞ்சரி அவனிடம், "ஐயா! இந்தக் காஞ்சிக்கு வந்து சேர்ந்ததும் ஒருவழியாகப் பெற்றோர்களிடம் சென்று விடுவேன் என நம்பிக் கொண்டிருந்தேன். இப்போது தங்கள் செய்தியிலிருந்து எனக்கு அந்த பாக்கியம் இல்லை; நான் பெற்றோர்களைச் சிறு வயதிலேயே இழந்துவிட்டேன் என்பதைப் புரிந்து கொண்டேன்.  என் நினைப்பெல்லாம் பெற்றோர்களைச் சென்று அடைவதில் இருந்தது. நினைப்பிலேயே அவர்களை அடைந்து நினைப்பிலேயே அவர்களை இழக்கவும் செய்திருக்கிறேன்.  இப்போது இந்த நினைவுக்கள் என்னை விட்டு அழிய வேண்டும். அதற்கு நான் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் எல்லாமே கனவும்களும் நினைவுகளுமாகப் போய்விட்டன." என்று கண்ணீருடன் கூறினாள். அவள் மன முதிர்ச்சியும் பேச்சும் தத்தனை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. இத்தனை சிறிய வயதில் எவ்வளவு மன முதிர்ச்சி என நினைத்துக் கொண்டான். அவளைச் சமாதானம் செய்ய முயன்றான்.  ஆனால் நேற்றுத் தான் சொன்ன ஒரு சிறு பொய் அவளை என்ன செய்யப் போகிறதோ எனக் கவலை கொண்ட தத்தன் அவளை விரைவில் அதற்குத் தயார் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் வல்லபனைப் பார்க்க எழுந்து சென்றான்.

Friday, May 28, 2021

வல்லபனின் கேள்விகள்! ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

 தத்தன் தனியாக விசாரிக்கப் போயிருப்பதைப் பற்றிக் கவலைப்பட்ட அந்தப் பெண் மஞ்சரி அவனுக்கு ஏதேனும் நேர்ந்துவிடுமோ எனக் கவலையையும் தெரிவித்தாள். குறுகிய காலத்தில் தத்தன் மேல் அந்தப் பெண் காட்டும் ஈடுபாட்டையும், அன்பையும் கண்ட வல்லபன் ஆச்சரியப் பட்டான். அவர்கள் பயணத்தின்போதும் வரும் வழியெல்லாம் அவள் தத்தனுடைய சௌகரியங்களையும், அவன் உடல் நிலை மீதும் மிகுந்த கரிசனம் காட்டினாள்.  அவனுக்குத் தவறாமல் மருந்துகள் கொடுப்பது, சரியாக உணவு உண்டானா எனக் கவனிப்பது, அவன் துணிகளைத் தோய்த்து உலர்த்தித் தருவது என அவள் காட்டிய ஈடுபாடு வல்லபனுக்குள் ஆச்சரியத்தையும் தோற்றுவித்திருந்தது. வல்லபனுக்கு ஒரு பெண் ஒரு ஆண்மகன் மேல் அன்பும், பாசமும் கொண்டு விட்டால் அவனுக்காக எது வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பதைக் குறித்து வியப்பு ஏற்பட்டது. அதோடு அந்தப் பெண் அந்த ஆண்மகனிடம் காட்டும் ஈடுபாடும் சேவைகளும் இனிமையானவை என்று எண்ணும் அதே சமயம் அதன் மூலம் அவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் ஏற்படும் வேதனைகளையும் எண்ணினான். தானும் மகரவிழியாள் எங்கே இருக்கிறாள் என்பதே தெரியாமல் அவதிப்படுவதையும் அதனால் தன் மனதில் எழும் வேதனைகளையும் நினைத்துப் பெருமூச்செறிந்தான்.

இப்போது அந்த மகர விழியாள் இங்கே இருந்திருந்தால்? இதை எண்ணிய வல்லபனுக்குத் தனக்கு அவள் இப்படி எல்லாம் சேவைகள் செய்திருப்பாளா என எண்ணிப் பார்க்க அந்த எண்ணங்களே அவனுக்கு இன்பமயமாக இருந்தன. ஆனால் அவை உண்மையில் நடக்காது எனவும்,அ வள் யாரோ அரச குடும்பத்து வாரிசு எனவும் என்னதான் அவள் தன்னைக் காதலித்தாலும் திருமணம் என வந்தால் அவள் தன்னைத் திருமணம் செய்து கொள்வது நடக்காத ஒன்று என்பதும் வல்லபனுக்குப் புரிந்தது. இதனால் ஏற்பட்ட மன வேதனையில் அவனுக்கு தத்தன் மேல் கொஞ்சம் பொறாமை கூட ஏற்பட்டது. ஆனால் உடனே தன்னைச் சமாளித்துக் கொண்டான்.  என்றாலும் மீண்டும் மீண்டும் அவன் மனதினுள் மகரவிழியாளின் முகமே தோன்ற அவளைக் குறித்து மஞ்சரியிடம் கேட்டால் என்ன என்னும் எண்ணம் அவனுக்குள் எழுந்தது.  இப்போது இங்கே தத்தனும் இல்லை. ஆகவே இதுவே நல்ல தருணம் என நினைத்தான் வல்லபன். மேலும் அந்தச் சேவகர்கள் கூடவே அந்த மகரவிழியாளையும் அழைத்து வந்து தான் இருந்த இடத்திற்கு எதிரே அவளை வைத்திருந்ததை நினைவு கூர்ந்தான். ஆகவே மஞ்சரிக்கு அவளைப் பற்றித் தெரிந்திருக்கக் கூடும் என்னும் எண்ணம் அவனுக்குள் தோன்றியது.

உடனே அவன் மஞ்சரியிடம்,  நல்லூரில் அந்த சேவகர்கள் வந்தபோது தனியாக வந்தார்களா? அல்லது கூடவே ஒரு பெண்ணும் வந்தாளா என்று கேட்டான்.  அவள் ஏதானும் பார்த்தாளா என்று அறியவே அவன் கேட்டான். ஆனால் அதற்கு மஞ்சரி தான் அந்தப் பெண்ணைப் பார்த்ததோடு அல்லாமல் அவள் கூடவே இரண்டு நாட்கள் இருந்ததாயும், அந்தப் பெண் உடல் நலமில்லாமல் இருந்ததாயும் தெரிவித்தாள். அதனால் தான் அந்த சேவகர்கள் அங்கேயே தங்கி அவள் உடல் நலம் கொஞ்சம் சொஸ்தம் ஆனதும் கிளம்பினார்கள் என்றும் சொன்னாள்.  வல்லபன் மனம் பதைத்தது. எனினும் வெளியே காட்டிக் கொள்ளாமல் என்ன உடம்பு என விசாரித்தான். நல்ல ஜூரமாகவும் அதோடு வயிற்று வலியும் சேர்ந்து கொண்டதாக மஞ்சரி சொன்னாள். பிரக்ஞையே இல்லாமல் இருந்தவளை முதலில் ஆதுரசாலையில் சேர்த்ததாகவும், பிறகு அங்கே நடமாட்டம் அதிகம் இருந்ததால் வேறே தனி வீட்டுக்கு அவளைக் கொண்டு சென்றதாகவும், எவரும் அவளைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை என்றும் அவள் இருப்பதையே ரகசியமாக வைத்திருந்ததாகவும் சொன்னாள்.

தன்னையும், வைத்தியரையும் மட்டும் நெருங்க விட்டதாய்ச் சொன்ன மஞ்சரி தான் ஒரு பெண் என்பதால் இன்னொரு பெண்ணுக்கு வைத்தியம் செய்யும்போது நான் கூட இருப்பது அவளுக்கும் அனுகூலம் என நினைத்திருப்பார்கள் என்றும் சொன்னாள். ஆனால் வீட்டுக்கு அவளை எடுத்துச் சென்ற பின்னர் தன்னை அந்த வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை என்றும் போகும்போது தன்னையும் வைத்தியரையும் கடுமையான எச்சரிக்கைகளால் பயமுறுத்திவிட்டுப் போனதாகவும் சொன்னாள். அதோடு இல்லாமல் அந்த ஆதுரசாலைக்கு வருபவர்களைக் கண்காணித்துக் கொண்டும் இருந்தனர். அவர்கள் இதற்காக ஒரு நாடகமும் நடத்தியதாகச் சொன்னாள். வல்லபன் ஆவலுடன் என்ன நாடகம் எனக் கேட்க மஞ்சரி  மேலே சொன்னாள். அங்கே சேவகன் ஒருவன் காலில் அடிபட்டுக் கட்டுப் போட்டுக் கொண்டு படுத்திருப்பது போல் கிடந்தான். ஆனால் அவன் உண்மையில் அடிபட்டுக்கொண்டவன் எல்லாம் இல்லை. அந்தப் பெண் ஆதுரசாலையில் தனி அறையில் இருந்ததால் அங்கே வருபவர்களைக் கண்காணிக்க அந்தச் சேவகன் அங்கே வந்து படுத்துக் கொண்டான் எனவும் அவனுக்குத் துணையாகச் சிலர் அங்கேயே நடமாடிக் கொண்டிருந்தார்கள் என்பதையும் சொன்னாள். 

பின்னர் அந்தப் பெண்ணைப் பற்றி அவள் வர்ணித்தாள். அவள் அழகையும், கம்பீரத்தையும் பார்த்தால் அவள் ஓர் ராஜகுமாரியாகத் தான் இருக்க வேண்டும் என்றும் ஆனால் அந்தச் சேவகர்கள் அவள் யாரோ ஓர் பிரபுவின் பெண் என்றே சொன்னதாகவும் சொன்னாள். மேலும் அந்தப் பெண் எப்போதும் மயக்கத்திலேயே இருந்ததாகவும் அது இயற்கையாக இல்லை என்பதால் வைத்தியருக்கும் அவளுக்கும் பயம் ஏற்பட்டதாகவும் சொன்னாள். இருவருக்குமே அவளை இவர்கள் கடத்திச் செல்வது புரிந்து விட்டதாகவும் அதனாலேயே அவளை எப்போதும் மயக்க நிலையிலேயே வைத்திருந்ததாகவும் சொன்னாள்.  வல்லபன் அவள், அந்த மகரவிழியாள், பேசினாளா என்றும் எப்படிப் பேசினாள் என்றும் தீவிரமாகக் கேட்டறிந்ததைக் கண்ட மஞ்சரி சிரித்தாள். "உங்களுக்குத் தெரிந்தவளா?"என்று வல்லபனிடம் கேட்க அவனோ அவள் மீது தனக்கு ஓர் அனுதாபம் தோன்றியதாகவும் அதனால் கேட்டதாகவும் சொன்னான்.