எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, March 23, 2009

சிங்கங்களைத் தேடிக் காட்டுக்குச் சென்றோம் - அஹோபிலம் 13

கராஞ்ச நரசிம்மரைத் தரிசிப்பது மிகவும் எளிது. மேல் அஹோபிலம் கோயிலுக்குச் செல்லும் வழியிலேயே வண்டிப் பாதையிலேயே சற்றே தள்ளி அமைந்துள்ளது. என்றாலும் செளகரியத்தை உத்தேசித்துக் கடைசியில் இங்கே தரிசனம் வைத்துக் கொள்ள முடிவு செய்யப் பட்டது. கருடாத்ரி மலையின் மேற்கே அமைந்துள்ளது கராஞ்ச நரசிம்மரின் ஆலயம். வாகனங்கள் வரும் சாலையில் அடர்ந்த மரங்களின் நிழலில் பார்த்தாலே ஒரு அருமையான சோலை போன்ற இடத்தில் அமைந்துள்ளது கராஞ்ச நரசிம்மரின் ஆலயம். ஆலயம் புதுசாய்த் தெரிகின்றது. விசாரித்ததில் அண்மையில் புதுப்பித்திருப்பதாய்ச் சொல்கின்றன. நுழைந்ததும் ஒரு மண்டபம் முகப்பிலேயே, சிற்ப வேலைப்பாடுகளுடன். மண்டபத்தைத் தாண்டினால் இடப்பக்கம் ஆஞ்சநேயர், கராஞ்ச நரசிம்மரைப் பார்த்தபடிக்குக் காட்சி அளிக்கின்றார். இரு கைகளையும் கூப்பியபடி காட்சி அளிக்கும் அஞ்சனை புத்திரன் சந்நிதிக்குச் சற்றுத் தள்ளி கராஞ்ச நரசிம்மர் சந்நிதி. நரசிம்மரை ஒரு கணம் பார்த்துவிட்டுத் திகைப்புடன் மீண்டும் பார்க்கின்றோம். என்ன இது? வில்லா? ஆம் வில்லே தான். கையில் வில் ஆயுதத்துடன் நரசிம்மரா? வியப்பிலும் வியப்பாய் உள்ளதே?

ஆம், வில் ஆயுதத்துடனேயே நரசிம்மர் காட்சி அளிக்கின்றார். யாருக்காக?தன் அருமைத் தோழனும், தொண்டனும் ஆன ஆஞ்சநேயனுக்காக. ஆஞ்சநேயருக்காக நரசிம்மர் ஏன் வில் தரிக்க வேண்டும்? ஆஞ்சநேயர் இந்த மலைக்கு வந்து கருங்காலி மரத்தின் கீழே ராமரை நோக்கித் தவம் இருந்தார். கருங்காலி மரம் தான் கராஞ்ச விருக்ஷம் எனப் படுகின்றது. ஸ்ரீமந்நாராயணன் தன் பக்தனோடு சற்றே விளையாட நினைத்தான். நரசிம்மன் அழகிய சிங்கராய்க் காட்சி அளித்தான், ஆஞ்சநேயர் முன்னே. ஆஞ்சநேயர் அசரவில்லை. “எனக்கு வேண்டியது ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் தரிசனம். நீ யார் சிங்க முகத்துடன்?” என்று கேட்டார். நரசிம்மம் பதில் சொன்னது. “இது என்னுடைய இடம். நரசிம்ம க்ஷேத்திரம். இங்கே நீ நரசிம்மரைத் தான் காண முடியும். நானும், ராமனும் ஒன்றே! என்னில் ராமனைக் காண்பாயாக!” என்று சொல்கின்றார். ஆஞ்சநேயர் நம்மளைப் போல பிடிவாதக் காரர். (பிள்ளையார் தான் வரணும்னு நான் சொல்லி இருப்பேன்) ஒத்துக்கவே இல்லை.

“ஆஹா, நீ என்ன சிங்க முகத்தோடும், மனித உடலோடும் வந்து நீயும், ஸ்ரீராமனும் ஒன்றே என்கின்றாய்? யாரை ஏமாத்தப் பார்க்கிறாய்? என் ஸ்ரீராமன் எத்தனை அழகு? எவ்வளவு செளந்தரியம்? ,முகத்தில் என்ன சாந்தம்? கண்களின் கருணையைச் சொல்லவும் முடியுமோ? இது என்ன உன் கைகளில் இவ்வளவு நீண்ட நகங்கள்? இவை எல்லாம் என் ஸ்ரீராமனுக்கு இல்லவே இல்லையே? மேலும் தன் கைகளைப் போன்ற நீண்ட வில்லைத் தரித்துக் கொண்டு, என் ஸ்ரீராமன் இன்னமும் தனக்கு அழகு சேர்த்துக் கொண்டல்லவோ காண்பான்? வில்லில்லாமல் அவனைக் காணவும் முடியுமோ? என் ராமனையே நான் காண விரும்புகின்றேன்.” எனச் சொல்ல, நரசிம்மர், “ஆஞ்சநேயா, உன் பக்தியை நான் மெச்சுகின்றேன். நானே நாராயணன், நானே நரசிம்மன், நானே ஸ்ரீராமன், என்னை நன்றாய்ப் பார்ப்பாயாக! என்னில் ஸ்ரீராமனைக் காண்பாய் நீ!” என்று சொல்லவும், உடனேயே ஆஞ்சநேயர் கண்களில் வில்லும், அம்பும் ஏந்திய ஸ்ரீராமன் தென்பட்டான். ஆஞ்சநேயர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அங்கே ஒரு கணம் ஆதிசேஷன் படமெடுத்துக் குடை பிடிக்க ஸ்ரீமந்நாராயணன், தோன்ற, உடனேயே அதே ஆதிசேஷன் படமெடுத்த குடைக்கீழேயே நரசிம்மர் வலக்கையில் சக்ரத்தோடும், இடக்கையில் வில்லோடும் காட்சி அளிக்கின்றார். ஆஞ்சநேயருக்கு உண்மை புரிந்தது.இந்த வித்தியாசத் திருக்கோலத்தோடேயே கராஞ்ச நரசிம்மர் காட்சி அளிக்கின்றார். கராஞ்ச நரசிம்மர் சந்நிதியிலும் ஆரத்தி முடிந்து பக்தர்கள் அனைவருக்கும் சடாரி, துளசி, தீர்த்தம் பிரசாதம் வழங்கப் படுகின்றது. மணியும் மூன்றுக்கு மேல் ஆகிவிட்டது. அனைவரும் காலை ஆகாரம் என்று பெயரளவில் சாப்பிட்டதே. இப்போது தான் எல்லாருக்கும் பசி, சாப்பாடு என்ற உணர்வே ஏற்பட்டது. கராஞ்ச நரசிம்மர் கோயில் இருந்து வரும் வழியில் தென்படும் நூற்றுக்கால் மண்டபம் மிகப் பழமை வாய்ந்ததாய்த் தென்படுகின்றது. ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்னே இங்கே முதலாம் ஜீயர் ஸ்ரீமத் சடகோப யதீந்திர மஹாதேசிகர் பல்வேறு விதமான சொற்பொழிவுகளை நிகழ்த்தி இருப்பதாய்ச் சொல்கின்றனர்.

கராஞ்ச நரசிம்மர் கேதுவினால் ஏற்படும் தோஷங்களைப் போக்கும் வல்லமை கொண்டவர். இவர் ஞானம், வைராக்கியம், தீவிர பக்தி ஆகியவற்றை அருளுவார். ஞானிகள், மருத்துவ மாமேதைகள் உருவாவதற்கும் இவரின் கடாட்சம் தேவை என்று சொல்லப் படுகின்றது. கருடாத்திரி மலையின் மேற்குப் பகுதியில் கருங்காலி மரத்தினடியில் எழுந்தருளி இருக்கும் இவரைத் தரிசித்துவிட்டுப் பின்னர் விடுதிக்குத் திரும்பி ஓய்வெடுத்துக் கொண்டு, இரவு எட்டு மணிக்குப் பேருந்து அங்கிருந்து கிளம்பி சென்னை வந்தடைகின்றது. இத்துடன் அஹோபிலப் பயணம் முடிவடைந்தது.

1 comment:

குமரன் (Kumaran) said...

உங்களோடு சேர்ந்து நாங்களும் அஹோபிலம் சென்று வந்தோம் அம்மா. நன்றி.