எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Thursday, March 26, 2009

கண்ணனின் ஆட்சியில் பதினைந்து நாட்கள் தொடர்ச்சி - பேட் துவாரகா!

துவாரகையில் இருந்து ருக்மிணி கோயில் சென்றுவிட்டு அங்கிருந்து 35 கிமீட்டர் தூரமுள்ள ஓகாவை அடைகின்றோம். வழியில் பல்வேறுவிதமான தொழிற்கூடங்கள், டாடாவின் மித்னாபூர் தொழில் கூடம் தாண்டி, கடற்படையின் குடி இருப்புகளைத் தாண்டி ஓகா வந்தடைகின்றோம். முக்கியத் துறைமுக வாயிலுக்குச் செல்லாமல் படகுகள் நிற்கும் இடம் சென்று நிற்கின்றார் ஆட்டோ ஓட்டுநர். தான் இங்கேயே காத்திருப்பதாயும், நம்மைச் சென்று வருமாறும் கூறுகின்றார். இந்தப் படம் துவாரகையில் இருந்து ஓகா துறைமுகம் வந்ததும், நாம் படகு ஏறும் இடத்தில் இருந்து "பேட் துவாரகா" தீவு தெரியும் இடம். தீவு போன்ற இந்த இடத்தில் மாளிகைகளில் கண்ணனின் பத்தினிகளோடு இருந்ததாய்ச் சொல்லப் படுகின்றது. ஒரு தீவில் அமைந்த காரணத்தாலும் இது பேட் துவாரகா என அழைக்கப் படுகின்றது. பாரதம் நடைபெற்ற காலத்தில் ஸ்ரீகிருஷ்ணன் துவாரகையில் வாசம் செய்த காலகட்டத்தில் இங்குள்ள துறைமுகம் சங்குத் துறைமுகம் என அழைக்கப் பட்டிருக்கின்றது. இங்கு கிடைக்கும் சங்குகளின் நாதம் பற்றிய குறிப்புகள் பாரதத்திலும், பாகவதத்திலும் சொல்லி இருப்பதாய்ச் சொல்கின்றனர். நாம் அறிந்த வரையில் பிரபாஸ க்ஷேத்திரம் என அழைக்கப் பட்ட சோம்நாத்திற்கு அருகே உள்ள இந்தப் பகுதியில் தான் ஸ்ரீகிருஷ்ணர் தன் குருவான சாந்தீபனியின் குமாரனை நாகதேவதைகளிடமிருந்து மீட்டு வரச் சென்றார்.

இங்கே அவ்விதம் செல்லும்போது தான் புண்யாஜனா என்னும் அசுரக் குலத்து கடல்கொள்ளையன் ஆன பாஞ்சஜன்யனிடமிருந்து அவன் சங்கை அபகரிப்பதாய் நாம் இன்னும் சிலநாட்களில் பார்க்கப் போகின்றோம். அந்தச் சங்கே ஸ்ரீகிருஷ்ணன் கையில் "பாஞ்ச ஜன்யம்" என்ற பெயரில் இருந்ததையும் பார்ப்போம். இப்போது பேட் துவாரகா செல்வதற்காக இதோ காத்திருக்கும் விசைப் படகில் ஏறுகின்றோம். கூட்டம் அதிகம் தான். நவ பிருந்தாவன் அனுபவம் நெஞ்சில் அலை மோதுகின்றது. சென்ற வருஷம் ஜனவரியில் நவ பிருந்தாவன் சென்றபோது படகில் அளவுக்கதிகக் கூட்டத்தை ஏற்றிவிட்டு முதலை மடுவில் படகின் முக்கிய அச்சு மாட்டிக் கொண்டு வெளிவராமல் தவித்ததும், பின் ராகவேந்திரர் அருளால் மீண்டு வந்ததும் ஒரு க்ஷண நேரம் நெஞ்சில் வந்துசெல்கின்றது.
இங்கே காக்கும் கடவுளே அல்லவா காக்கப் போகின்றான். படகில் உட்கார இடம் கிடைக்கவில்லை. உள்பக்கம் போட்டிருக்கும் அமரும் இடங்கள் பூராவும் நிரம்பி வழிந்து, வெளியிலும் சுற்றி உட்கார்ந்து, ஏறும், இறங்கும் படிகள், பக்கச் சுவர்கள் என நிரம்பி வழியும் கூட்டம். படகுக்காரர்கள் வந்து ஒரு மாதிரி இடம் ஏற்படுத்திக் கொடுத்து அமரச் சொல்கின்றனர். அதுக்கு நிற்பதே பரவாயில்லை போல் இருக்கு. நல்ல வெயில் அப்போது பார்த்துச் "சுளீரென" அடிக்கிறது. பிரயாணிகளில் சிலர் தாங்கள் வாங்கி வந்திருந்த தின்பண்டங்களை வாரி இறைக்கின்றனர்.
நீர்க்காக்கைகள் அல்லது புறாக்கள்?? பெயர் தெரியவில்லை, ஆனால் கடல் பறவைகள், ஒருவேளை கடல்புறாவோ? இருக்கலாம். அவை கூட்டமாய் வந்து கொத்துகின்றன, பிஸ்கட், சாக்லேட், கடலை போன்றவற்றை. அனைவரும் ஆர்ப்பரிக்கின்றனர். படகும் மெல்ல, மெல்லக் கயிற்றிலிருந்து விடுபட்டு நகர ஆரம்பிக்கின்றது.இவை அகழ்வாராய்ச்சியின் போது கிடைத்ததாய்ச் சொல்லப் படுபவை. கண்ணன் இருந்த துவாரகையின் அழிந்த மிச்சங்கள்.பல்வேறு விதமான கட்டிட அமைப்புகளும், தெரு அமைப்புகளும் கிடைத்துள்ளன எனச் சொல்லுகின்றனர். கடலுக்கு அடியில் ஒரு காட்சிசாலை அமைக்கும் எண்ணமும் மத்திய அரசுக்கு இருந்ததாய்ச் சொல்லப் படுகின்றது. அப்படி அமைக்கப் பட்டால் உலகிலேயே(?) முதல் காட்சி சாலையாய் இருக்கக் கூடும்.எழுத்துக்கள் போல் தோற்றமளிக்கும் லிபிகள். இவை எல்லாம் இன்னமும் ஆய்வில் இருக்கின்றன. இதோ, தெரிகின்றதே, இது தான் பேட் துவாரகா மாளிகையின் ஒரு பக்கக் கதவு. முன்பு வந்தபோது இத்தனை இடிபாடுகள் இல்லை. இப்போது பூகம்பத்தினாலும் பல வருடங்கள் சென்றதாலுமோ என்னமோ? இடிபாடுகள் நிறையக் காண முடிகின்றது. முக்கிய மண்டபத்தில் உயரமான நாலுபக்கச் சுவர்களும் இடிந்து விழுந்து பெரிய கூடம் போன்ற அமைப்பு இப்போது நடுவில் திறந்த முற்றம் போல் மாறி இருக்கிறது. நாளை கண்ணனைக் காண்போம். அம்மா எதிரேயே இருந்து பிள்ளையைப் பார்த்துக் கொண்டிருப்பாள்.

5 comments:

தி. ரா. ச.(T.R.C.) said...

போற்றிப் பாதுகாக்கப் படவேண்டிய சின்னங்கள் இப்படி அழிவதக் கேட்கும்போது மனத்ற்கு வருத்தமாக இருக்கிறது.கண்ணன் எப்போ வருவான்/ கண்ணனைக் காண்பதெப்போ கார்மேக வண்ணனைக் காண்பதெப்போ என்று பாடினால்தான் வருவானோ.

திவாண்ணா said...

// முன்பு வந்தபோது இத்தனை இடிபாடுகள் இல்லை. இப்போது பூகம்பத்தினாலும் பல வருடங்கள் சென்றதாலுமோ என்னமோ//

ஓஹோ! முன்னேன்னா? போன ஜன்மமா?
:-)))

Geetha Sambasivam said...

வாங்க சார், உடம்பு தேவலையா? ஆனால் இப்படியாவது நேரம் கிடைச்சுத் தான் ஓய்வு எடுத்துக்கணும் போலிருக்கே! :(((((((((((

Geetha Sambasivam said...

வாங்க திவா, முன்னேன்னா, முன்னே தான், போன ஜன்மம்னே வச்சுக்குங்களேன்.

Geetha Sambasivam said...

அடதிவா, சிரிப்பான் போட மறந்துட்டேனே! :)))))))))))))))))