எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, March 07, 2009

சிங்கங்களைத் தேடிக் காட்டுக்குச் சென்றோம்! அஹோபிலம் 5

இந்த மலைப் பகுதி கிழக்குத் தொடர்ச்சி மலையைச் சார்ந்தது என்றாலும், இரு மலைகளாய் இருக்கின்றன. இவ்விரண்டு மலைப்பகுதிகளிலுமே நவ நரசிம்மர் ஆலயங்கள் அமைந்துள்ளன. தெலுங்கில் நல்லமலை என அழைக்கப் பட்டிருக்கின்றது. நல்ல என்றால் கறுத்த என்ற பொருள் எனச் சொல்கின்றனர். மரங்களால் சூழ்ந்து அடர்ந்த காடாக இருள் அடர்ந்து கருங்கானகமாய் இருந்த காரணத்தால் இந்தப் பெயர் வந்தது எனச் சொல்கின்றனர். இப்போதும் மரங்கள் அடர்ந்தேதான் காணப் படுகின்றது. காட்டு மிருகங்களும் இருப்பதாய்ச் சொல்லுகின்றனர். மலையின் ஒரு பகுதி கருடாசலம் எனவும் மற்றொரு பகுதி வேதாசலம் எனவும் அழைக்கப் படுகின்றது.

ஹிரண்யனுக்காக நரசிம்ம அவதாரம் எடுக்கத் தன்னிடத்தை விட்டு ஸ்ரீமந்நாராயணன் வந்ததால் அவர் பிரிவைத் தாங்க முடியாமலும், அவருக்குச் சேவை சாதிக்க முடியாமலும் தவித்த கருடாழ்வார் அவர் இருக்குமிடம் தேடி வந்தார். நரசிம்மமோ? ஒளிந்து வேடிக்கை காட்டியது. தன் பக்தனுக்காக க்ஷண நேரம் கூடத் தாமதிக்காமல் தூணைப் பிளந்து கொண்டு வெளிப்பட்ட நரசிம்மத்தின் பெருமையை உணர்ந்த கருட பகவான், தானும் அவரைத் தரிசிக்க வேண்டிப் பிரார்த்தனை செய்தார். பிரார்த்தனை மட்டும் போதாது என உணர்ந்து தவம் இருக்க ஆரம்பித்தார். கருடன் தவம் இருந்த மலையே கருடாத்திரி எனவும் கருடாசலம் எனவும் அழைக்கப் படுகின்றது. வேதாத்திரி மலையின் ஒரு பக்கம் இருந்து எதிரே நோக்கினோமானால் கருடனின் மூக்கும், இருபக்கமும் விரிந்த சிறகுகள் போல மலைச் சிகரங்கள் இருப்பதையும் காணலாம்.ஹிரண்யனைக் கொன்ற அதே மடியின் மேலே சாட்சாத் ஸ்ரீ என்னும் அந்த மஹாலக்ஷ்மியை இருத்திய மலைக்குன்றமே வேதாத்திரி மலைத் தொடராகும். இவ்விரண்டு மலைத் தொடர்களும் சேர்ந்தே அஹோபிலம் என அழைக்கப் படுகின்றது. இவற்றின் நடுநாயகமான குன்றே ஸ்ரீஜ்வாலா நரசிம்மர் எனப் படும் உக்கிர நரசிம்மர் ஹிரண்யனை வதைத்த இடமாகும். அதற்கும் போவோம். கொஞ்சம் காத்திருக்கணும். இரு மலைகளின் உயரத்திலும், மாபெரும் குகையில் நரசிம்மமாய் அவதரித்த இறைவனைக் கண்டு கருடன் பரவசம் அடைந்து "அஹோபிலம், மஹாபலம்" எனத் துதித்து வணங்கியதாயும் அதனாலும் அஹோபிலம் எனப் பெயர் ஏற்பட்டதாயும் சொல்கின்றனர். தவிர நரசிம்ம அவதாரச் சிறப்பைப் போற்றித் தேவாதிதேவர்களும் வந்து அவர் திருவடி போற்றி வணங்கி, "அஹோ!! பலம்!!!, அஹோ!!! பலம்!!!!" என வியந்து பாராட்டியதாலும் அஹோபலம் என்பது நாளடைவில் திரிந்து அஹோபிலம் எனப்பட்டதாகவும் அறிகின்றோம். பிலம் என்றாலேயே குகை எனப் பொருள். குகைகளுக்குள்ளேயே இங்கே நரசிம்மரைக் காணமுடியும்.

இறைவன் தன் பக்தனுக்காக விரும்பி எடுத்த வடிவம் நரசிம்ம வடிவம். அதனாலேயே சிங்கவேள் எனத் தமிழில் சொல்லுகின்றனர். சிங்கமாய் விரும்பி வேட்கையுடன் வந்த குன்றம் இது என்பதாலும் சிங்கவேள் குன்றம் எனப் பெயர் ஏற்பட்டதாய்த் தெரிய வருகின்றது. மேலும் ருத்ர ரூபமாய் மட்டுமே அறிந்த நரசிம்மரின் வேறு பல தோற்றங்களையும் கொண்டது இந்த நவநரசிம்மர்களின் சந்நிதிகள். கீழ் அஹோபிலத்தில் பிரஹலாத வரதரின் ஆலயம். மேல் அஹோபிலத்தில் (இதற்குப் பேருந்து, கார், வேன்கள் செல்லும்) மலைச்சாரலில் ஆலயம் அஹோபில நரசிம்ம ஆலயமாகப் பிரதான ஆலயமாய் இருக்கின்றது. மலைச்சாரலில் அதன் மடிப்புகளில் ஒளிந்துள்ள மறைவான குகைப் பகுதிகளிலேயே மற்ற நரசிம்மர்களின் ஆட்சி நடந்து வருகின்றது. மேல் அஹோபிலம் வரையிலும் தனியார் வாகனங்கள் அல்லது பேருந்துகளில் செல்லமுடியும். அதன் பின்னர் நம்மை அந்த நரசிம்மரே அழைத்துச் செல்லவேண்டும்.

2 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

அஹோபிலம் ஸ்ரீ அழகிய சிங்கர் மடம் பற்றியும் கொஞ்சம் சொல்ல வேண்டுகிறேன்.

Geetha Sambasivam said...

மடம் பத்தி இன்னிக்கு எழுதிடறேன் மெளலி.

நன்றி விஜி, தங்கள் வரவுக்கு.