எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, March 16, 2009

சிங்கங்களைத் தேடிக் காட்டுக்குச் சென்றோம் -அஹோபிலம் 9


மறுநாள் காலை எழுந்து இன்று சீக்கிரமே எழுந்து மலை ஏறவேண்டும் என முன்னேற்பாடு செய்து கொண்டதால் விடிகாலை 4 மணிக்கே எழுப்பி வெந்நீர் கொடுத்துக் குளித்துத் தயாராகச் சொல்லி இருந்தனர். ஆகவே நாங்களும் சீக்கிரமே தயார் ஆனோம். எனினும் இன்று மேல் அஹோபிலம் வரையில் பேருந்திலேயே செல்ல ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அதன் பின்னரே ஜ்வாலா நரசிம்மர், உக்ர ஸ்தம்பம், பார்கவ நரசிம்மர், கராஞ்ச நரசிம்மர் போன்றவர்களைத் தரிசனம் செய்து கொண்டு திரும்ப வேண்டும். மாலை கொஞ்சம் நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு இரவு சரியாக எட்டு மணிக்குச் சென்னை திரும்பவேண்டும் எனப் பயணத் திட்டம் அறிவிக்கப் பட்டது. காலை ஆகாரம் சற்றே தாமதம் ஆனதால் கிளம்பும்போதே கொஞ்சம் தாமதமும் ஆனது. என்றாலும் அனைவரும் கிளம்பி சென்னையில் இருந்து வரும்போது எந்த இருக்கையில் அமர்ந்தோமே அதே இருக்கைகளில் அமர்ந்து வருமாறு அறிவுறுத்தப் பட்டோம். அவ்வாறே அனைவரும் அமர்ந்ததும், வழிகாட்டியான சுப்பராயுடு, ஒருங்கிணைப்பாளரும், அமைப்பாளரும் ஆன திரு சுரேஷ் ஆகியோரும் ஏறிக் கொண்டனர். வண்டி கிளம்பியது.

கருடாத்ரி, வேதாத்ரி இரு மலைகளுக்கிடையே அமைந்துள்ள பவநாசினிக் கரையில் அமைந்துள்ள பள்ளத்தாக்கில் பவநாசினி நதிக்கரையில் கீழ் அஹோபிலத்தில் இருந்து எட்டு முதல் பத்து கிமீ தூரத்தில் அமைந்துள்ளது மேல் அஹோபிலம் கோயில். மலைப்பயணம் தான். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2,000 அடிக்கு மேல் உயரத்தில் இருப்பதாய்ச் சொல்கின்றனர். கீழ் அஹோபிலம் கோயிலையும், இந்த மேல் அஹோபிலம் கோயிலையும் தான் நவ நரசிம்மர்களிலேயே அதிகச் சிரமம் இல்லாமல் தரிசிக்க முடியும். ஆலயம் சம தளத்தில் அமையவில்லை. மலையில் இருப்பதால் குன்றுகளின் ஏற்ற இறக்கத்திற்கேற்றவகையிலேயே பரந்து அமைந்துள்ளது. மூலவர் சந்நிதி குகையின் அமைப்பில் உள்ளது. உக்ர நரசிம்மர். ஆனால் மூர்த்தி சிறியவர். மூர்த்தி சிறிதானாலும் இவரின் கீர்த்தி மட்டுமின்றி உக்ரமும் பெரியதாகவே உள்ளது. மூலவருக்கு அருகே உற்சவர் மஹாலட்சுமி சமேதராய் உள்ளார். மூலவரின் உக்கிரத்தைத் தணிக்கும் விதமாய் அருமைச் சீடன் பிரஹலாதன் நேரெதிரே கூப்பிய திருக்கரங்களுடன் காட்சி அளிக்கின்றான். இந்த உக்ர நரசிம்மரைச் சுயம்பு மூர்த்தி எனச் சொல்கின்றனர். ஹிரண்ய வதம் முடிந்ததும், இந்தக் குகையில் வந்து ஆக்ரோஷம் தணியாமல் இருக்கும்போதே அமர்ந்ததாயும், தேவாதி தேவர்களும், கருடனும் இங்கே வந்து தரிசித்ததாயும் சொல்கின்றனர். ஸ்ரீராமர் சீதையைத் தேடி அலைந்த போது இந்தச் சிங்கவேள் குன்றத்துக்கும் வந்ததாயும், நரசிம்மரை வழிபட்டதாயும் சொல்கின்றனர். மூலவர் இருக்கும் குகையிலேயே நாம் நுழையும் முன்னரே இடது பக்கமாய் ஒரு புறத்தில் ஆச்சரியத்திலும் ஆச்சரியமாய் ஒரு சிவலிங்கம். பக்கத்திலேயே ஸ்ரீராமர்.

ஆதிசங்கரர் காபாலிகர்களிடம் தன் கரத்தை இழந்து கராவலம்ப ஸ்தோத்திரம் இயற்றிய இடம் இதுவே எனப் படுகின்றது. தன் இழந்த கரத்தை அவர் மீட்டுக் கொண்டதும் இவரின் அருளாலேயே எனச் சொல்கின்றனர். ஆதிசங்கரர் தான் இங்கே வந்ததின் அடையாளமாய் சிவலிங்கத்தையும், நரசிம்ம சுதர்சன சக்கரத்தையும் பிரதிஷ்டை செய்துள்ளதாயும் சொல்கின்றார்கள். தாயார் ஆன செஞ்சுலக்ஷ்மியின் சந்நிதி தனியாய் அமைந்துள்ளது. இந்தச் சந்நிதிக்கு வெளியே, உள்ளது ஒரு தடுப்புப் பகுதி. உள்ளே நுழையும் முன்னரே இந்தத் தடுப்புப் பகுதியைத் தாண்டிக் கொண்டே செல்ல வேண்டும். அந்தப் பகுதியில் யாரும் தங்கள் பாதங்களை வைக்க வேண்டாம் என்பதற்காகவே வட்டமான ஒரு தடுப்பு. முன்னர் குகை போன்ற அமைப்பில் இருந்திருக்க வேண்டும்.உள்ளே பாதாளத்தில் இதே போன்ற ஒரு கோயில் இருந்ததாயும் சொல்கின்றனர். பதினாறாம் நூற்றாண்டில் அஹோபிலம் மடத்தைச் சேர்ந்த ஆறாம் ஜீயர் ஸ்ரீசெஷ்ட பராங்குச யதீந்திர மஹா தேசிக ஸ்வாமிகள் வழிபாடு நடத்த இந்தக் குகைக்குள்ளே இறங்கிச் சென்றதாயும், அங்கே வைகுந்தனைத் தரிசித்துவிட்டுப் பின்னர் அவர் வெளியே வரவே இல்லை எனவும், குகை பின்னர் மூடப்பட்டு இப்போது அவரின் அதிஷ்டானம் போல் சந்நிதிக்கே நேர் எதிரே இருப்பதாயும், அனைவராலும் வழிபாடுகள் நடத்தப் படுவதாயும் சொல்கின்றார்கள்.ஆலயத்தின் உள்ளே மிகக் குளுமையாகவே இருக்கின்றது. அங்கே அமைந்துள்ள ஒரு மண்டபத்தின் மேல் தளத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய ஒரு பதினாறு கால் மண்டபம். அந்த மண்டபத்தில் இருந்து சுற்றுப் புறக் காட்சிகளையும் மலைக்குன்றங்களையும் காண முடிகின்றது. கோபுர தரிசனமும் கிடைக்கின்றது. மனிதன் வந்து, வந்து போய்க் கொண்டிருந்தாலும் இயற்கையை இன்னும் இங்கே அழிக்கத் துணியவில்லை. இன்னமும் தனக்குள்ளே சில அதிசயங்களையும், ரகசியங்களையும் பொத்தி வைத்துள்ளது இந்த மலை. இதைப் பற்றி எங்களுக்குள் ஒரு சிறு விவாதம் நடந்தது.

மலை ஏறவும், நடந்து ஏறிச் செல்லவும் நல்ல பாதை போடவேண்டும் என ஒரு கட்சியினரும், கூடாது என எங்களில் சிலரும் சொல்லிக் கொண்டே இருந்தோம். நாங்க என்ன சொல்லி இருப்போம் என்பதை உங்கள் ஊகத்துக்கே விட்டு விடுகின்றேன். அதுக்குள்ளே ஒருங்கிணைப்பாளர் வந்து மலை ஏற வேண்டும் எனவும், நடைப்பயணம் தான் எனவும் கிட்டத் தட்ட 10 முதல் 15 கிமீட்டருக்கு மேல் நடக்க வேண்டும் எனவும், கடினமான, செங்குத்தான மலைப்பாதை ஆகவே முடியாதவ்ர்கள் இங்கேயே தங்கி விடலாம் எனவும் அறிவுறுத்தினார். திரும்பிச் செல்லவோ, அங்கேயே தங்கவோ யாருக்கும் இஷ்டமில்லை. அனைவரும் மலை ஏறவே விரும்பினோம். குடி நீர் பாட்டில்கள் தவிர, கைப்பைகள், சாப்பிட ஏதானும் என்று எடை குறைவாய் வைத்துக் கொள்ளும்படியும், பெண்கள் கூடியவரையில் புடவையை மேலே தூக்கிச் செருகிக் கொண்டு நடக்குமாறும் அறிவுறுத்தினார்கள். மலை ஏற்றத்தின் போது புடவை தடுக்கிக் கீழே விழுந்தால் பாறைகளில் காயம் படுவதோடு அல்லாமல், உயிரிழப்பும் ஏற்படலாம் என்பதால் திரும்பத் திரும்ப அறிவுறுத்துகின்றனர். அங்கேயே தடிக் கம்புகள் கொடுக்கின்றனர். அவற்றை வாங்கி அனைவருக்கும் கொடுக்கின்றார் வழிகாட்டி. தடிக் கம்புகளை மலையில் இருந்து கீழே இறங்கியதும் திரும்பிக் கொடுக்க வேண்டும். மலை ஏற்றத்தின் போது அந்தத் தடிக்கம்பு எவ்வளவு வசதியாக இருக்கும் என்பதைச் சொல்லவே வேண்டாம். அடுத்து ஜ்வாலா நரசிம்மர்.

2 comments:

வடுவூர் குமார் said...

wah! Explained nicely.

Geetha Sambasivam said...

வாங்க குமார், இந்தக் கட்டுரைக்குத் தானே பின்னூட்டம்? சந்தேகமாய் இருக்கே?