எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, August 22, 2014

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! திருக்கோயிலின் வழிபாட்டு முறைகள்! - பகுதி 2

நேற்றைய பதிவுக்கு ஹிட் லிஸ்ட் பயங்கரமா எகிறி இருக்கு.  ஆனால் ஒரு பின்னூட்டம் கூட இல்லை. :) அதனால் என்ன?  நம்ம வேலையைத் தொடர்வோம்.




2. இரண்டாம் வகையினர் திருமஞ்சனத்திற்காகத் தண்ணீர் கொண்டு வருபவர்கள் ஆகும்.  இவர்கள் திருப்பணி செய்வோர் என அழைக்கப் படுவார்கள்.  பெருமாளின் வழிபாட்டுச் சடங்குகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்த நீரை இவர்களே எடுத்து வருவார்கள்.  ஆன்மிகத் தலைவர்களாக இருந்து பின்னர் துறவிகளாக ஆகிய ஞானாசிரியர்களின் பரம்பரையில் வழிவழியாக வந்த சந்ததிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.  பரம்பரை முறையில் தேர்ந்தெடுக்கப்படும் இவர்கள் ஐந்து பேர்கள் மட்டுமே இருப்பார்கள்.  புனித இடங்களில் நீர் தெளித்துச் சுத்தம் செய்வது, திருவிழாக்கள், ஊர்வலங்கள், இறைவனுக்குக் குடைபிடிக்கும்போது ஆகிய நேரங்களில் பரிமள வாசனை கொண்ட நீரை இறைவனுக்கு நறுமணம் கமழும் பொருட்டு உயரச் சிதறுவிப்பது இவர்கள் வேலையாகும்.


 இதைத் தவிர திருவுலாக் காலங்களில் திருவுலா செல்லும் தெருக்களில் நீர் தெளிக்கும் ஆட்களை மேற்பார்வை பார்த்து அவர்கள் வேலையைச் சரிவரச் செய்கிறார்களா எனக் கண்காணிப்பதும் இவர்கள் வேலை ஆகும்.  ஊர்வலங்களை இவர்களே முன்னின்று நடத்துவார்கள். வேதம் ஓதும் பிராமணர்கள், ப்ரபந்தம் ஓதும் பிராமணர்கள் ஆகியோரு முன்னால் குடை பிடித்தல் பக்தர்கள் கொண்டு வரும் காணிக்கைப் பொருட்களைக் கோயிலின் சார்பில் பெற்றுப் பல்வேறு வகையான கோயில் அலுவலர்க்கு அவற்றைப் பிரித்துக் கொடுப்பதும் இவர்கள் முக்கிய உரிமையாகும்.  கோயில் தொடர்பான எந்தச் செய்தியையும் ஆராய்ந்து உணர பக்தர்கள் குழுவைக்கூட்டுவது, விவாதங்களை விசாரித்துத் தீர்ப்பளிப்பது ஆகிய முக்கியமான வேலைகளும் இவர்களுக்கு உண்டு. கோயில் யானைகளின் மீது வீதிகளை மேற்பார்வையிடும் உரிமையை ராமாநுஜர் காலத்தில் இவர்கள் பெற்றிருந்தனர் என்று கூறப்படுகிறது. ஆனால் பின்னர் இந்த உரிமையை விட்டுக் கொடுத்துவிட்டதாகவும் சொல்கின்றனர்.

3.  இதில் மூன்றாவதாக வருபவர்கள் ராமாநுஜரால் ஒரு தொகுதியாக மாற்றி அமைக்கப்பட்ட பிராமணர்கள்.  இவர்களை நம்பிகள் என அழைக்கின்றனர்.  நேரடியாக பெருமாளை வழிபடுவதற்கும், மூன்றாம் பிரகாரத்திலுள்ள சின்னச் சின்ன சந்நிதிகளிலுள்ள  தெய்வங்களை வழிபடவும் உரிமை பெற்றவர்கள்.  இவர்கள் இதற்கென்றே நியமிக்கப்பட்டவர்கள்.  தினம் தினம் கருவறையில் செய்யும் வழிபாட்டில் தூப, தீபங்கள் ஏந்தியும் இறைவனுக்கு ஆடை, அணிகலன்களைக் கழற்றியும், மீண்டும் மாற்றி அணிவித்தும் அழகு பார்க்கும் உரிமை இவர்களுக்கே உரித்தானது.  இறைவனுக்காகக் கொண்டு வரப்படும், தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம், பாயசம் ஆகியவற்றைப் பெற்றுக் கொள்வார்கள்.  ஆனால் இந்தக் கோயிலில் பெருமாள் யோக நித்திரையில் இருப்பதால் தேங்காய் உடைக்கும் வழக்கம் இல்லை.

தினம் தினம் நடைபெறும் திருமஞ்சனங்கள், விசேஷங்களின் போது நடைபெறும் சிறப்புத் திருமஞ்சனங்கள் ஆகியவற்றிற்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொடுப்பதும் இவர்கள் வேலை. தினம் காலை சுவாமிக்கு தந்த சுத்தி நடைபெற்றதும் கண்ணாடி எடுத்துக் கொடுப்பது இவர்கள் வேலை. கொடிக்கம்பத்தில் திருவிழாக் காலங்களில் கொடியேற்றுவதும், கதாயுதம், சங்கு, சக்கரம், விருதுக் கொடி போன்றவற்றைப் பாதுகாத்து எடுத்து அளிப்பதும் இவர்கள்  கடமை.



சுவாமி திருவுலாச் செல்லும் காலங்களில் அவரை வாகனங்களில் ஏற்றி அமர்த்தும் உரிமை இவர்களுக்கே உண்டு.  சுவாமிக்கு மேலே குடை பிடித்துச் செல்லும் உரிமை கொண்ட இவர்கள் சுவாமிக்குப் பூமாலைகள் சாற்றுவதோடு, பழைய மாலைகளைக் கோயிலின் பிரசாதமாகக் கோயில் ஆட்சித் தலைவருக்கு அளிப்பார்கள்.  மாலை வேளைகளிலும், சுவாமி கருவறை திரும்புகையிலும் காவலர்கள் சென்ற பின்னர் இவர்கள் உள்ளூர் மக்களோடு சேர்ந்து பூட்டி முத்திரை இடப்பட்ட பொற்கதவத்தைக் காவல் இருந்து காப்பார்கள்.  சுவாமியின் ஆபரணப் பேழைகளைப் பத்திரமாக வாங்கி வைத்திருப்பதோடு அவற்றிற்கெனச் சிறப்புப் பொறுப்பில் இருக்கும் அணிகல அலுவலர்களிடம் பத்திரமாக ஒப்படைப்பதும் இவர்கள் வேலை.

சுவாமி புறப்பாடாகி வருகையில் வேதங்களில் இருந்து சில பகுதிகளை ஓதுவதும் இவர்கள் வேலை என்பதோடு வாகனத்தைக் குறித்துப் புகழ்ந்து பாடல்களைப் பாடுவதும் இவர்கள் உரிமை.  இவர்களில் வயதானவர், அறிவுள்ளவர் பரமேஸ்வர சம்ஹிதையின் நுண்பொருளை இளைஞர்களுக்குக் கூறிப் பயிற்சி அளிப்பார்.

6 comments:

பார்வதி இராமச்சந்திரன். said...

அருமை!. பரமேஸ்வர சம்ஹிதையைப் பத்தியும் கொஞ்சம் எழுதுங்கள்!.. மிக்க நன்றி!

வல்லிசிம்ஹன் said...

ஏகப்பட்ட வேலைகள் தான். தந்த சுத்தி என்பது நான் நினைப்பதுதானா. இல்லை ஸ்ரீரங்கநாதரின் தினசரி உபசாரமா. இவ்வளவு முறைகள் படிக்கப் படிக்க அருமையாக இருக்கிறது.உங்கள் வழியாகப் படிக்கக் கிடைத்ததில் மிக மகிழ்ச்சி கீதா.

Geetha Sambasivam said...

அவ்வளவுக்கெல்லாம் எனக்கு ஏதும் தெரியாது பார்வதி! :)

Geetha Sambasivam said...

தந்த சுத்தி என்பது பல் தேய்ப்பது தான் வல்லி. :)

நெல்லைத் தமிழன் said...

நிறையபேர் பின்னூட்டம் இடவில்லை என்றெல்லாம் எண்ணாதீர்கள். இது எக்காலத்திலும் படிப்பதற்கு ஏற்றமாதிரி ஆவணப்படுத்தியுள்ளீர்கள். நன்றி. ஸ்ரீரங்கத்தில் தரிசனத்துக்கு வரும்போது, யாராவது, ஒவ்வொரு சன்னிதியையும், வாசலயும், மண்டபத்தையும் நன்றாக விளக்குவார்களா? அத்தகைய சர்வீஸ் செய்பவர்கள் இருக்கிறார்களா?

Geetha Sambasivam said...

அதெல்லாம் கவலைப்பட்டதே இல்லை, நெல்லைத் தமிழன். யாருமே படிக்காமல் இருந்தால் கூட இதைப் பதிந்து கொண்டிருப்பேன். என்ன ஒண்ணுன்னா தகவல்கள் திரட்டித் தொகுக்க வேண்டும். அதுக்கு நேரம் எடுக்கிறது! அதோடு மற்ற வேலைகள், ஆகையால் இம்மாதிரி கவனத்துடன் எழுத வேண்டியவற்றைத் தாமதம் ஆக்க நேரிடுகிறது! :)