எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, August 27, 2014

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம் --திருக்கோயில் வழிபாட்டு முறைகள்! பகுதி 5




முன் சொன்ன பத்து வகைத் தொகுப்பான அந்தணர் குழுவினருடன், ஶ்ரீராமாநுஜர் ஏகாங்கிகள் என்னும் நான்கு உதவியாளர்களையும் சேர்த்தார்.  இவர்கள் சந்நிதி வாசலில் நின்று கொண்டும், திரை போடும்போதும் கர்பகிரஹத்தைப் பாதுகாக்கும் உரிமை பெற்றவர்களாக இருந்தனர்.  அனுமதி பெறாமல் உள்ளே நுழைபவர்களைத் தடுத்து நிறுத்தும் உரிமையும் இவர்களுக்கு இருந்தது.  கோயிலின் நித்திய, நைமித்திக வழிபாட்டுக்கு உரிய நிவேதனங்கள், நறுமணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டதும் அதைப் பாதுகாப்பதும் இவர்கள் கடமை.

இவர்களைத் தவிர, "சாத்தாத முதலிகள்" எனப்படும் எட்டு வைணவத் துறவிகளும் ஶ்ரீராமாநுஜரால் நியமிக்கப்பட்டு, அவர்கள் கொடி பிடித்தல், பொன், வெள்ளி விளக்குகள் ஏந்துதல் ஶ்ரீராமாநுஜரின் வாட்படையைத் தாங்குதல், திருக்கோயிலின் அர்ச்சகர்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்க மெய்க்காவல் புரிதல் ஆகிய பணிகளை மேற்கொண்டனர்.                  

அடுத்து வேத்திரபாணிகள் என்னும் குழுவினர் கோயிலுக்கு வெளியே இருந்து எடுத்துச் சேர்க்கப் பெற்றார்கள்.  சுவாமி கர்பகிரஹத்திலிருந்து உலாக்கிளம்பும்போதும், உலாவை முடித்துக் கொண்டு திரும்பி வருகையிலும் ஒழுங்கும், அமைதியும் நிலவும் வண்ணம் பார்த்துக்கொள்வது இவர்கள் கடமையாகும்.  சுவாமி திருவுலாக்கிளம்பும் முன்னர் இவர்கள் ஓங்கிய குரலில் வாழ்த்துப் பாராட்டு ஒலிகளை எழுப்புவார்கள்.  வேத பாராயணம், ப்ரபந்தம் ஓதுதல் ஆகியவை நடைபெறும்போது அமைதி நிலவும் வண்ணம் பார்த்துக்கொள்வார்கள்.  சுவாமியின் வழிபாட்டில் தினமும் திருப்பதிகம் ஓதும் குழுவினருக்கு வழி அமைத்துக் கொடுத்தலும் இவர்கள் கடமையாக இருந்தது.

மேற்சொன்ன அந்தணர்கள் அல்லாத எல்லாக் குழுவினர்களையும் தவிரக் கூடுதலாக ஶ்ரீராமாநுஜர் உழுதொழில் புரியும் வேளாளர்களையும் கோயில் பணிகளில் நியமித்திருந்தார்.  இவர்கள் தானியங்களை அளந்து தினப்படிக்குக் கொடுப்பது, முதல் பிரகாரத்தில் காவல், கோயில் கணக்குகள் ஆகியவற்றைப் பார்த்தனர்.  கருவூலத் தலைமை அலுவலர் ஒரு வேளாளராகத் தான் இருக்க வேண்டும் என்பது அநேக வாத, பிரதிவாதங்களின் மூலம் முடிவு செய்யப் பெற்றதாகக் கோயில் ஒழுகு கூறுகிறது.

இதைத் தவிரவும் பல சின்னச் சின்னப் பதவிகள் பார்ப்பனர் அல்லாதவர்களுக்குக் கொடுக்கப் பட்டது.  அவற்றில் வழிபாட்டுக்குரிய பொருட்களைச் சேமித்தல், உப்பு, மிளகு, மசாலை போன்ர பொடிவகைகள் தயாரிப்பது, கோயில் கதவுகளில் முத்திரை இடுவதற்குக் களிமண், அரக்கு போன்றவை தயாரித்தல் ஆகியவை ஆகும்.

மூன்றாம் தொகுதியினர் தெய்விக நடனம் புரியும் தேவதாசிகள்.  இவர்கள் பதவி இன்றைய நாட்களில் மிகவும் கொச்சைப்படுத்தப்பட்டு இவர்களும் கேவலப் படுத்தப் பட்டுவிட்டார்கள்.  ஆனால் உண்மையில் இவர்கள் இறைவனுக்கன்றி வேறெவருக்கும் கட்டுப்பட்டவர்கள் அல்ல. 11 ஆம் நூற்றாண்டில் தஞ்சையில் மிகுதியாக வாழ்ந்து வந்த இவர்கள் 19- ஆம் நூற்றாண்டின் இறுதியில் அறவே ஒழிக்கப்பெற்றனர்.  ஆனால் இவர்கள் கடமைகள் அனைத்தும் இறைவனோடு தொடர்புடையவை ஆகும்.  தினம் இறைவனுக்கெதிரே அவன் மட்டுமே பார்க்கும்படி நடனம் ஆடி இறைவனை மகிழ்விக்கும் பேறு வாய்க்கப் பெற்றவர்கள்.  இவர்கள் பணி மிகப் புனிதமான ஒன்றாகும். கோயிலொழுகு புத்தகங்களில் திருக்கோயில் தல வரலாற்றில் இவர்களுக்கு மிக உயர்வான இடம் கொடுத்துச் சிறப்பிக்கப் பெற்றிருக்கின்றனர்.

ஏற்கெனவே வெள்ளையம்மாள் என்னும் தேவதாசி தன் உயிரைக் கொடுத்து அரங்கன் கோயிலைக் காப்பாற்றியது குறித்துப் படித்தோம் அல்லவா!

2 comments:

ஸ்ரீராம். said...

சமீபத்தில் படித்த கிருஷ்ணப்ப நாயக்க்கன் கௌமுதியில் கூட ஒரு தேவதாசி பற்றிப் படித்தேன்.

Geetha Sambasivam said...

பகிர்ந்துக்குங்க ஶ்ரீராம்.