எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Thursday, August 02, 2018

ஶ்ரீரங்கரங்க நாதனின் பாதம் பணிந்தோம்! அரங்கன் எங்கே போகிறான்?

கிருஷ்ணாயி என்ன சொல்ல வருகிறாள் என்பதை மன்னர் புரிந்து கொண்டார். மதுரைத் தளபதி தன்னிடம் வாலாட்டினால் தான் நேரடியாக தில்லி சுல்தானுக்குத் தகவல் தெரிவித்துவிடுவதாகச் சொல்லி அவனை மிரட்ட வழி இருப்பதை ராணி சுட்டிக் காட்டினாள். அதை மன்னரும் புரிந்து கொண்டார். மதுரைத் தளபதிக்குத் தற்போது ஓலை அனுப்ப வேண்டாம் எனவும், அப்படி அவன் ஏதேனும் தொந்திரவு கொடுத்தால் தில்லி சுல்தானிடம் அவனைப் பற்றிய செய்திகளைத் திரித்துச் சொல்லி சுல்தானுக்கு அவன் மேல் கோபம் வரும்படி செய்துவிடலாம் எனவும் இருவரும் பேசி முடிவு எடுத்துக் கொண்டனர்.
****************************
இங்கே அரங்கன் ஊர்வலம் மதுரையைக் கடந்து மேலும் ஒரு மாதம் அங்குமிங்குமாகப் பயணம் செய்து திருநெல்வேலியையும் கடந்து ஒருவழியாக நாஞ்சில் நாட்டின் நாகர்கோயிலை அடைந்தது. சேர நாட்டோடு அப்போது நாஞ்சில் நாடும் சேர்ந்து இருந்ததால் அதுவரைக்கும் தில்லி வீரர்களும் வராததால் அனைவரும் பல மாதங்கள் கழித்துக் கொஞ்சம் சுதந்திரக் காற்றைச் சுவாசித்தனர். அதனாலேயே அனைவருக்கும் தைரியமும் வந்தது போல் இருந்தது. ஒரு மாதம் போல் அங்கே தங்கினார்கள். வெவ்வேறு திசைகளுக்குத் தப்பிப் போயிருந்த மற்றவர்களும் அங்கே வந்து சேர வேண்டும் என எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அந்த வருஷம் நாகர்கோயிலிலும்  அரங்கன் மட்டுமின்றித் தமிழ்நாட்டின் பிற ஊர்களிலிருந்தும் மூல விக்ரஹங்களும், அர்ச்சாவதார விக்ரஹங்களும் வந்து சேர்ந்திருந்தன. ஊரே கோலாஹலமாகக் காட்சி அளித்தது. நாகர்கோயிலுக்குக் கொண்டு வரப்படாத விக்ரஹங்கள் சம்பந்தப்பட்ட ஊர்களின் குளங்களிலோ, கோயில்களுக்குள்ளே நந்தவனத்திலோ ஆழமாய்க் குழி தோண்டிப் புதைக்கப்பட்டன.

இங்கே வந்திருந்த விக்ரஹங்களோடு அவற்றைச் சேர்ந்த பரிவாரங்களும், விக்ரஹங்களுக்கு தினப்படி ஆராதனை செய்யும் அர்ச்சகர்களும் வந்திருந்தனர். அவரவர் கோயில் வழக்கப்படி அவரவர் விக்ரஹங்களுக்கு ஆராதனைகளை நடத்தினார்கள். அங்கே அரங்கனைத் தவிர்த்து மதுரை மீனாக்ஷியும் அடைக்கலம் தேடி வந்திருந்தாள். ஆனாலும் அந்தக் கூட்டத்தார் அவரவர் விக்ரஹங்களுடன் வந்த மனிதர்களுடனேயே கலந்து பழகினார்கள். அனைவரும் சேர்ந்து பழகவில்லை. என்றாலும் பிரச்னைகள் ஏதுமில்லாமல் மேலும் இரண்டு மாதங்கள் கழிந்தன. இனி இங்கே தங்கினால் அரங்கனுக்கு ஆபத்து நேரிடும் என நினைத்த ஊர்வலத்தார் அக்கம்பக்கம் நிலைமையை விசாரித்ததில் அரங்கன் விக்ரஹத்தைக் குறி வைத்தே வேட்டை நடத்தப்படுகிறது என்பதைத் தெரிந்து கொண்டு அஞ்சினார்கள். இங்கேயே மேலும் தங்கினால் எப்படியும் தெரிந்து கொண்டு வந்துவிடுவார்களே எனக் கவலை கொண்டார்கள். ஆகவே அங்கிருந்து கிளம்புவதற்கான நாளை நிச்சயித்துக் கொண்டு சேர நாட்டுக்குள்ளேயாவது கொங்கு நாடு வழியாவது போக முடிவு செய்தனர்.

அவர்கள் கிளம்புகையில் குலசேகரன் அவர்களுடன் கிளம்பிப் போகவில்லை. அரங்கனைப் பத்திரமாக நாடு கடத்தி ஆகிவிட்டது. இனி அவன் கிருஷ்ணாயிக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும். குலசேகரன் மனம் சஞ்சலம் அடைந்தது. எனினும் தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றியே ஆக வேண்டும் என நினைத்த அவன் திருவண்ணாமலையை நோக்கித் தன் குதிரையைச் செலுத்தினான். பல ஊர்களையும் ஆறுகளையும் கடந்து வந்தான் அவன். அவன் மனம் ஹொய்சள மன்னரையே நினைத்து வருந்திக் கொண்டிருந்தது. சுமார் ஒரு மாதப் பயணத்துக்குப் பின்னர் அவன் திருவண்ணாமலை வந்து சேர்ந்தான்.  அங்கே வந்ததும் ஏதேதோ நினைத்துக் கவலையுடன் வந்த குலசேகரனுக்கு ஊரின் அமைதியும் எந்தவிதமான மாறுதலும் இல்லாமல் ஹொய்சள மன்னரின் கீழ் பத்திரமாக இருந்த ஆட்சியையும் பார்த்து வியந்தான். அதே சமயம் ஹொய்சள மன்னர் அங்கே இருந்த காரணத்தால் தான் மற்ற ஊர்க் கோயில் விக்ரஹங்களுக்கு ஏற்பட்ட கதி திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கு ஏற்படவில்லை என்பதையும் புரிந்து கொண்டான்.

வழக்கமான சத்திரத்தில் தங்கிக் கொண்டுக் கிருஷ்ணாயிக்குத் தகவல் அனுப்பி ஒரு மாதத்தை விரைவில் முடித்துக் கொண்டு தான் அங்கிருந்து கிளம்ப வேண்டும் என நினைத்தான். அன்று மாலை காற்றாட வெளியே சென்று கடைவீதிகளில் உலாவியபோது, அவனை "வீரரே!" என ஒரு குரல் அழைத்தது. திரும்பிப் பார்த்த குலசேகரன் அங்கே அபிலாஷிணியைக் கண்டான். அவனைப் பார்த்ததுமே அபிலாஷிணி அவன் எப்போது திரும்பினான் என்று கேட்டுவிட்டு விரைவில் அரண்மனைக்கு வரும்படி சொல்லி விட்டு ஓடி விட்டாள். ஓடும்போது அவள் வெட்கத்தால் தன் முகத்தை மூடிக் கொண்டு சென்றதைக் கண்ட குலசேகரன் மனம் நொந்து போனான். ஆனாலும் அவன் உடனே கிளம்பவில்லை. ஒரு நாழிகைக்கும் மேலாகக் கடைவீதிகளில் உலாத்திவிட்டு மெதுவாகவே சத்திரத்துக்குத் திரும்பினான். அங்கே அவனை எதிர்பார்த்து இரு வீரர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடன் அரண்மனைக்குச் சென்ற அவன் முதலில் மன்னரைக் காணவே விரும்பினான். ஆனால் மன்னர் வடக்கே சென்றிருக்கிறார் என்னும் தகவல் கிடைக்கவே அவன் மனம் ஏமாற்றத்தில் ஆழ்ந்தது.

இரு வீரர்களும் அவனை மிக வற்புறுத்தி அரண்மனை அந்தப்புரம் அழைத்துச் சென்றனர். அங்கே அவனைக் கண்ட கிருஷ்ணாயி முகம் மலர்ந்து வரவேற்றாள். சேடிகளை அழைத்து அவன் மேல் பன்னீர் தெளித்து மலர்மாரி பொழியும்படி செய்தாள். பின்னர் அவனை ஆசனத்தில் அமரச் செய்து சேடிகளில் நடனம் தெரிந்தவர்களைக் கொண்டு நடனங்கள் ஆடி அவனைச் சிறிது நேரம் மகிழ்வித்தனர்.  பின்னர் அனைவருக்கும் கிருஷ்ணாயி ஜாடை காட்ட அங்கிருந்து அனைவரும் வெளியேறினர். கிருஷ்ணாயியுடன் தனித்து விடப்பட்ட குலசேகரன் ராணிக்கு நன்றி தெரிவித்தான். ராணி அது தன் கடமை எனச் சொல்லிக் கொண்டே அவன் அருகே நெருக்கமாக அமர்ந்தாள்.  அவள் கண்களிலிருந்து எழுந்த பார்வையும் அவள் உடலில் இருந்து எழுந்த சுகந்தமான வாசமும் அவன் மனதை மயக்கியது.  அவனுக்கு உதவுவது அவள் உள்மன வேட்கை என்றும் சொல்லிக் கொண்டாள். குலசேகரன் அது தன் பாக்கியம் எனச் சொல்ல பாக்கியம் எனச் சொன்னால் போதாது என்று சொல்லிச் சிரித்தாள் ராணி.

"வீரரே, நான் ஓர் இளம்பெண்! நீர் ஓர் இளைஞர்! தனிமையான இடம்! மஹாராணியின் அந்தப்புரம். இப்போது நேரமோ இரவு! இந்த நேரத்தில் தனித்திருக்கும் இருவரும் என்ன செய்வார்கள்?" என்று கேட்டவண்ணம் அவள் மேலும் மேலும் நகர்ந்து அவன் மேல் சாய்ந்தாள். குலசேகரன் மனம் திடுக்குற்றது.

No comments: