எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, August 04, 2018

ஶ்ரீரங்கரங்க நாதனின் பாதம் பணிந்தோம்! கிருஷ்ணாயி கொடுத்த தண்டனை!

ராணி எவரையோ அழைத்து வரச் சொன்னதுமே அது ஹேமலேகாவாக இருக்கக் கூடாதே எனக் குலசேகரன் பயந்தான். அவன் பயந்தாற்போலவே அங்கே இரு சேடிகளுக்கு நடுவே சிறைப்பட்ட நிலையில் பரிதாபகரமான தோற்றத்தில் வித்வாம்சினியான ஹேமலேகா! அவள் நிலையைக் கண்ட குலசேகரன் பதறித் துடித்தான். எப்படிப் பட்ட பெண்!  அவளிடம் ஏதேதோ பேசவும், கேட்கவும் மனமும் உடலும் தவித்தன.  ஆனால் அவனுள் துக்கமே மேலோங்கியது! ஹேமலேகாவுக்கும் அவனைப் பார்த்ததும் அதே எண்ணங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும். அவள் கண்கள் ஓராயிரம் கதைகளைக் கூறாமல் கூறின. அவர்கள் இருவர் பார்வையையும் கண்களாலேயே இருவரும் பேசிக் கொள்வதையும் கவனித்த கிருஷ்ணாயி உடனே ஹேமலேகாவை அப்புறப்படுத்தும்படி ஜாடை காட்டச் சேடிகள் அவளை இழுத்துச் சென்றார்கள். குலசேகரனைப் பார்த்து, "ஏன் மௌனம்?" என ஏளனமாக வினவினாள்.

குலசேகரன் துக்கத்துடன் அவளைப் பார்த்து, "ராணி, அவள் ஓர் பண்டிதை! வித்வாம்சினி! அவள் என்ன பாவம் செய்தாள்! பாவம் அந்தப் பெண்! அவளை விட்டு விடுங்கள்! இவள் ஏன் ராணி வாசத்தில் வாழ வேண்டும்? அவளைச் சுதந்திரமாக விடுங்கள்!" என்று கெஞ்சினான்.

"அவளுக்கு என்ன குறை! ராணி வாசத்தில் சௌக்கியமாகத் தான் இருக்கிறாள். வேண்டிய கவிதைகளைப் புனையட்டுமே!" என்றாள் கிருஷ்ணாயி அலட்சியமாக.

"அதெப்படி  ராணி!அவளைச் சிறைப்பிடித்து வைத்துவிட்டுக் கவிதை புனைந்து வா என்றால் அவளால் புனைய முடியுமா? அவளை விட்டு விடுங்கள்! வெளியே உள்ள பரந்த இந்த பூமியில் அவள் முன்னைப் போல் தன்னிச்சையாகச் சஞ்சரிக்க விடுங்கள்!" என்றான் குலசேகரன்.

அதற்கு ராணி கிருஷ்ணாயி குலசேகரனுக்கு அவள் மேல் இத்தனை அன்பு எனில் அவன் அவளுக்காக ஓர் காரியம் செய்ய வேண்டும் என்று நிபந்தனை போட்டாள். என்ன நிபந்தனை என்று கேட்ட குலசேகரனிடம் அவன் தன்னுடன் இன்று முதல் ஓர் கணவனைப் போல் வாழ வேண்டும் எனவும் அவன் மூலம் தான் ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதாகவும் கூறினாள். ஆகவே இன்றிரவு மட்டுமின்றி தொடர்ந்து வரும் பல இரவுகளிலும் அவன் அங்கே தான் அவளுடன் இரவைக் கழிக்க வேண்டும் என்றும் கூறினாள்.  ஓரளவுக்கு அவள் எண்ணம் புரிந்திருந்தாலும் குலசேகரனால் அதை எதிர்கொள்ள முடியவில்லை. அவனால் எதுவும் பேசமுடியவில்லை. ராணியும் பேசவில்லை. வெகுநேரம் அமைதியில் சென்ற பின்னர் ராணி மெல்ல எழுந்தாள். அவனிடம் பிச்சை கேட்பது போல் இருகைகளையும் நீட்டி யாசித்தாள்.

"எனக்கு ஒரு குழந்தை வேண்டும்!"

பின்னர் அவள் தன்னையும் அறியாமல் மஞ்சத்தில் படுத்து முகத்தைப் புதைத்துக் கொண்டு அழுதாள். குலசேகரனால் பேசவும் முடியவில்லை. அவள் சொன்னதை ஏற்கவும் முடியவில்லை.  பின்னர் அவளைச் சமாதானம் செய்யும் நோக்கில், "ராணி!" என அழைத்துப் பேச முயன்றான். ஆனால் அவளோ கோபத்துடன் அவனை அங்கிருந்து வெளியேறும்படி கூறினாள். ஆனால் அவன் வெளியேறும் முன்னர் இரு வீரர்கள் அவனைப் பிடித்துக் கொட்டடியில் அடைத்தனர். அங்கே அவனுக்குச் சரிவர உணவு வழங்கவில்லை. என்றாலும் தாக்குப் பிடித்த குலசேகரனை ஒரு நாள் வரவழைத்த ராணி பல்சுவை விருந்துகளை அவனுக்கு அளித்து உபசரித்தாள். எனினும் மன்னருக்கு துரோகம் செய்யக் குலசேகரன் இணங்கவில்லை. ஆகவே இம்முறை ராணி ஹேமலேகாவையும்  குலசேகரன் அடைபட்டிருந்த கொட்டடியில் தனிக் கிடங்கில் போட்டு அடைத்து அவளுக்கும் உணவு கொடுக்காமல் தண்டனை கொடுத்தாள்.

இது குலசேகரன் காதுக்கு எட்டவே அவன் தன்னால் ஓர் அப்பாவிப் பெண் பசியும், பட்டினியுமாக இருந்து உயிரை விட்டால் பெண்பாவம் தன்னைச் சும்மா விடாது என மனம் குமுறிக்கொண்டு அரை மனதாக ஆட்களிடம் ராணியைப் பார்க்க வேண்டும் என்று சொல்ல அவர்களும் உடனே அவனை ராணியிடம் அழைத்துச் சென்றார்கள். அங்கே ராணியிடம் அவன் தான் ஏற்கெனவே நடைப்பிணமாகவே வாழ்வதாகவும் இனிமேலும் இந்த உடலின் புனிதத்தைக் காப்பாற்ற வேண்டியதில்லை என நினைப்பதால் தன்னை எடுத்துக்கொள்ளுமாறும் கூறிவிட்டு அங்கேயே விழுந்தான். ராணியின் முகத்தில் ஆனந்தம் தோன்றியது!

2 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தொடர்ந்து வாசிக்கிறேன்.

Geetha Sambasivam said...

நன்றி முனைவரே!